Chapter 24

0Shares

மகேஷ்வரனின் வீட்டில் சொந்த பந்தங்களும், ஊராரும் திரண்டு இருந்தனர்.. அவருடைய வீட்டில் ஏதோ ‘ஹோமம்’ வளர்த்து பூஜை செய்யப் போவதற்கான அறிகுறி தெரிந்தது.. ஊர் மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்..

“ஏன்ப்பா ராமசாமி.. என்னப்பா விசேஷம்..?”

“என் வீட்டில் ஒரு விசேஷம் நடத்தப் போகிறேன்.. எல்லாரும் குடும்பத்தோட வந்திரனும்னு சொல்லி அழைச்சான்.. என்னன்னு சொல்லலையே.. உனக்கு ஏதாவது தெரியுமா..?”

“நீ என்கிட்ட கேட்டதைத்தான்.. நான் இதுவரைக்கும் மத்தவங்ககிட்ட கேட்டுக்கிட்டு இருந்தேன்.. ஒருவேளை.. பெண்ணின் கல்யாணமாய் இருக்குமோ..?”

“அதுக்குத்தான் இன்னும் ஆறு நாள்கள் பாக்கி இருக்கே.. ஊர் முழுக்க அழைப்பு வைச்சிருக்காங்களே.. நீ அதைப் பார்க்கலியா..?”

எல்லாரும் என்ன விசேஷம் என்று புரியாமல் பேசிக் கொண்டு இருக்கையில்.. மகேஷ்வரன், காயத்ரியுடன் மனையில் அமர்ந்தார்.. துரைசிங்கத்தை அழைத்தார்.. அருகில் அமரச் சொன்னார்.. புரோகிதர் மந்திரம் ஓத.. அவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்..

“எனக்கு மகன் இல்லை.. ஒரே மகள் மட்டும்தான்.. அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து, புருசன் வீட்டிற்கு அனுப்பிவிடப் போகிறேன்.. எனக்குக் கொள்ளி போடவும், எனக்குப் பின்னால் என் மகளுக்கு அண்ணனாக இருந்து.. பிறந்த வீட்டுச் சீர் செய்யவும் எனக்கு மகன் வேண்டும்… அதனால், என் தங்கச்சி மகன் துரைசிங்கத்தை என் மகனாக தத்து எடுத்துக்கொள்ளப் போகிறேன்..

இன்றிலிருந்து இவன் என் மகன்.. என் மகள் கஸ்தூரிக்கு அண்ணன்.. என் சொத்தை இரு பங்காகப் போட்டு, ஒரு பங்கை கஸ்தூரிக்கு கொடுத்துவிட்டு.. மறுபங்கை துரைசிங்கத்திற்கு கொடுக்கிறேன்..”

துரைசிங்கத்தால் நடப்பதை நம்ப முடியவில்லை.. ஒருவன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு, களவு செய்ய வந்தவனை காவலுக்கு அமர்த்தி அடியோடு அவனைத் திருத்தி விட்டார் மகேஷ்வரன்..

அடையாளம் இல்லாமல் அலைந்தவன்.. அவருக்கு வாரிசு ஆனான்.. முப்பது ஏக்கர் பூமிக்கு சொந்தக்காரனாக மாறினான்.. மனக்கசடு எல்லாம் மறைய மகேஷ்வரனை கையெடுத்துக் கும்பிட்டான்..

ஊரையே அடைத்துப் பந்தல் போட்டு.. மூன்று நாள்கள் திருமண விருந்து போட்டு.. வெகு விமரிசையாய் சரவணன்-கஸ்தூரி திருமணம் நடைபெற்றது..

நிற்காமல் ஓடி.. ஓடி.. வேலை செய்தான் துரைசிங்கம்.. மணப் பெண்ணின் அண்ணனாக அவன் சரவணனுக்கு பாதபூஜை செய்து, கைவிரலில் மோதிரம் போட.. சரவணன் கஸ்தூரியைப் பார்த்தான்..

‘பரவாயில்லை… மாமா நல்ல வேலை செய்திருக்கிறார்’ என்று அவன் பார்வை கூறியது..

“சரண்.. உன்னையும், கஸ்தூரியையும் பக்கத்தில் வைத்துப் பார்த்தால் கட்சிக் கொடி போலவே இருக்கிறது..” என்று கிண்டல் செய்தாள் ஷாஷா..

“ஏன்.. அப்படிச் சொல்கிறாய்..?”

“நீ கறுப்பு.. கஸ்தூரி சிவப்பு.. வேறு எப்படி இருக்கும்..?”

“உன்னை..”

சரவணன் கையை ஓங்க.. ஷாஷா சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள்.. புன்னகையுடன் கஸ்தூரி.. சரவணனை ஏறிட்டாள்..

“என்னடி அப்படிப் பார்க்கிற..?”

“இவளையா நான் சந்தேகப்பட்டேன்..?”

“இவளைத்தான் சந்தேகப்பட்டாய்..”

“என்னை மன்னிச்சிடுங்க..”

“மன்னிப்பதா..! ஊஹூம்.. உன்னை எப்படியெல்லாம் தண்டிக்கப் போகிறேன் தெரியுமா..? இன்றைக்கு இரவில்.. அதை நன்றாக தெரிந்துகொள்வாய்..”

சொன்னதைச் செய்தான் சரவணன்.. அவன் கொடுத்த அன்புத் தண்டனைகளில் மயங்கிப் போய்.. அவனைச் சரணடைந்தாள்.. கஸ்தூரி.. காதலாகி.. காமமாகி கலந்து உருகிய பின்.. விடியலின் அருகாமையில் அவளது முடிகோதி அவன் கேட்டான்..

“என்னடி.. தூக்கம் வரலையா..?”

“ம்.. நான் காதலில் தோற்றுப் போய்டுவேனோன்னு நினைத்தேன்.. என் மனதை உங்களிடம் சொல்லச் சொல்லி.. காற்றிடம் சொல்வேன்..”

“காற்றிடம் சொல்வாயா..?”

“ஆமாம்.. எங்கும் பரந்து நிறைந்திருக்கும் காற்றோடு நான் தூதுவிட்டேன்.. அது உங்களிடம் என்ன சொல்லியதோ… தெரியவில்லை..! என் காதல் ஜெயித்து விட்டது..”

காற்றோடு தூது விட்டவள்.. மனம் நிறைய அவன் மார்பில் சாய்ந்தாள்.. மணம் வீசும் மலராக..!

– முற்றும் –

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link