Chapter 03
ஏஸியின் குளிர் அறையில் நிறைந்திருந்தது.. இதமான நறுமணம் அறையில் கமழ்ந்து கொண்டிருந்தது.. கட்டிலின் மெத்தையின் மேல் மலர்கள் தூவப்-பட்டிருந்தன.. மனதில் மயக்கத்தைக் கிளப்பும் அந்த சூழலில் அர்ஜூன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்..
அறைக்கதவு திறந்தது.. அவன் திரும்பிப் பார்க்கவில்லை.. ‘அந்த மூஞ்சியை பார்க்க வேறு செய்யணுமா..?’
மெல்லிய கொலுசின் ஒலி அவனை சமீபித்தது.. அவன் எரிச்சலுடன் முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்துவிட.. தர்ஷிணியும் அவனுக்கு புறமுதுகு காட்டி அமர்ந்தாள்..
“அர்ஜூன்.. டேய்.. அர்ஜூன்..”
தமிழ்செல்வி கதவைத்தட்ட முனைய – தாழிடப்படாத அறைக்கதவு ‘பப்பரப்பா..’ என்று திறந்து கொண்டது.. அவள் அதிர்ந்து பின்வாங்கினாள்..
“ஏண்டா.. மடையா.. கதவைச் சாத்தித் தாழ்போட்டுக்கணும்கிற அறிவு இல்லையா..?”
‘இவள்தானே உள்ளே வந்தாள்.. இவள் தாழிடாமல் விட்டால் பேச்சு எனக்கா..?’
அர்ஜூன் தர்ஷிணியை முறைத்துக் கொண்டே எழுந்து அறைவாசலுக்குச் சென்றான்..
“என்னம்மா..?”
“ஏண்டா அதட்டறே.. தர்ஷிணி பாலை வைத்து விட்டு வந்து விட்டாள்.. அதைக் கொடுத்து விட்டுப் போக வந்தேன்..”
“இப்போ.. இது ஒன்றுதான் குறைச்சல்..”
“ஏண்டா அலுத்துக் கொள்கிற..? உன் அப்பாவும் உன்னைப் போல்தான் ஆரம்பத்தில் புலம்பினார்.. அதற்குப் பின்னால் சரியாகி விடவில்லையா..?”
‘அதற்குப் பழிவாங்கத்தான் இவளை என் தலையில் கட்டி வைத்தாரா..?’
“இதைச் சொல்லத்தான் வந்தீங்களா..? கொடுங்க..”
“இப்பவாவது ஒழுங்காய் தாழ் போட்டுக்கோடா..”
அர்ஜூன் மொணமொணவென்று வாய்க்குள் முணுமுணுத்தபடி அறைக்கதவை மூடித் தாழிட்டான்.. கோபத்துடன் கையிலிருந்த பால் தம்ளரைப் பார்த்தான்..
‘இதை அவள் கண்ணில் வேறு காட்டணுமா..?’
ஒரே மூச்சாய் கையிலிருந்த பால் தம்ளரை காலி செய்தவன் கட்டிலுக்கு வந்தான்.. அவளை முறைத்தான்.. அவள் சளைக்காமல் பதிலுக்கு முறைத்தாள்..
“உன் மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்காது.. அது உனக்குத் தெரியுமா..? தெரியாதா..?”
“நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேட்கறீங்க.. இது உங்களுக்குத் தெரியுமா..? தெரியாதா..?”
அர்ஜூனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை..
‘என்னடா ஆச்சர்யம் இது.. இவள் மரியாதையாய் ‘ங்க..’ போட்டுக் கூப்பிடுகிறாள்.. எப்போதும் ‘வா.. போ..’ இல்லேன்னா சண்டை முற்றி ‘வாடா.. போடா..’தானே.. ஏன் இப்போது மட்டும் ‘வாங்க.. போங்க..’ என்கிறாள்.. இதுதான் மஞ்சள் கயிறின் மகிமையா..?’
அவள் ‘வாங்க’ போட்டவுடன் அவனுக்கு ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் போல் தோன்றி விட்டது..
அவளைக் காலில் இருந்து தலைவரை நிறுத்தி.. நிதானமாகப் பார்த்தான்..
‘ம்ம்.. அழகாகத்தான் இருந்து தொலைக்கிறாள்..’ என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டே மீண்டும் அவளைப் பார்த்து வைத்தான்.. அவள் முகம் கடுத்தாள்..
‘என்ன மாதிரிப் பார்க்கிறான் ராஸ்கல்..’
அவள் மனதிற்குள் தன்னை மரியாதையாய் விளிப்பது தெரியாமல், அவள் கழுத்தில் கிடந்த தாலியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்..
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள்.. கடைசியில் பொறுமையிழந்தவளாய்..
“என்ன பார்வை வேண்டிக்கிடக்கு..” என்று சிடுசிடுத்தாள்..
“அப்படியெல்லாம் கனவு காணாதே.. எனக்கு ஒன்றும் வேண்டிக் கிடக்கவில்லை..” என்று அலட்சியமாக அர்ஜூன் கூறினான்..
“கனவு காண்கிறேனா..? யார்.. நானா..?”
“இந்த ரூமில் நீயும், நானும்தானே இருக்கிறோம்..?”
“ஹலோ.. நீங்க என்ன பெரிய மன்மதனா..?”
“நான் அப்படிச் சொல்லிக் கொண்டேனா..?”
“சொல்லிக் கொள்ளவில்லை.. மனதில் அப்படி நினைத்துக் கொண்டிருக்கீங்க..”
“அப்படியெல்லாம் நினைக்கவில்லையம்மா.. நான் மன்மதனாக இருந்திருந்தால்.. எனக்கு ரதிதானே பெண்டாட்டியாக வந்து வாய்த்திருப்பாள்..? உன்னை மாதிரி விடியா மூஞ்சியா பெண்டாட்டியாய் வந்து வாய்த்திருப்பாள்..?”
“என் மூஞ்சி விடியா மூஞ்சின்னா.. உங்கள் மூஞ்சி என்ன மூஞ்சி..?”
“அதை நீதான் சொல்லேன்..”
“ம்ம்.. இஞ்சி தின்ற குரங்கின் மூஞ்சி..”
“ச்சு.. ச்சு.. ச்சு..”
“இப்போது எதற்கு பல்லியைப் போல் சத்தம் போடுறீங்க..?”
“உன் உவமையை ரசித்தேண்டி..”
அர்ஜூன் ரசித்து அவளை ‘டீ’ போட்டான்.. அவள் அதிர்ச்சியுடன் கண்களை அகல விரித்தாள்..
“என்னது.. ‘டீ’யா..?”
“ஆமாண்டி.. என் பெண்டாட்டீ..”
“அர்ஜூன்.. மரியாதை கொடுத்து, மரியாதை வாங்க வேண்டும்..”
“என்னால் அது முடியாதுங்கறேன்.. இப்போ நீ அதுக்கு என்னாங்கிற..?”
“எனக்கும் பதில் பேசத் தெரியும்..”
“பேசு.. நீ பேசாத ஆளா..? நான்தான் அதைக் கேட்காத ஆளா..? பேசு.. வாடா.. போடான்னு பேசு.. அதுக்குத்தானே நான் கெஞ்சக் கெஞ்சக் கேட்காமல் உன்னைப் பிடித்து என் தலையில் கட்டி விட்டிருக்கிறார் என் ஆருயிர் அப்பா..”
தர்ஷிணி, அவனை ‘வாடா.. போடா..’ என்று அழைக்க முடியாமல் தவித்தாள்.. அர்ஜூன், அவள் கோபம் அதிகரித்துத் தன் கைகளைப் பிசைந்து கொள்வதை வேடிக்கை பார்த்தான்..
“என்னடி.. நம்பியார் மாதிரி கைகளைப் பிசைகிற.. இங்கே நின்று வெறும் கையைப் பிசைவதற்கு சமையல் ரூமிற்கு போய் சப்பாத்திக்கு மாவு பிசைந்தேன்னு வை.. சப்பாத்தி சூப்பர்.. சூப்பராக வரும்..”
“யு.. யு..”
“சொல்லு.. சொல்லு..”
“கதவைத் திறந்து விட்டால் பேசாமல் சமையல்கட்டிற்குப் போய் நிம்மதியாய் தூங்குவேன்..”
“அப்படியா சொல்கிறாய்..? போய் விடுகிறாயா..? தேங்க்ஸ்.. நான் நிம்மதியாய் தூங்குவேன்..”
தர்ஷிணி ரோசத்துடன் அவனை முறைத்துக் கொண்டே சென்று கதவைத் திறக்கப் போனாள்..
“நில்..” என்றான் அர்ஜூன்..
அவள் நின்று.. திரும்பிப் பார்த்தாள்..
“இன்றைக்கு போய் விடுவாய்.. நாளைக்கு.. அதற்கு மறுநாள்.. ஏன்.. வாழ்நாள் பூராவும் என்ன பண்ணுவாய்..?”
“என்னவோ பண்ணுவேன்.. அது என் கவலை..”
“உன் வீட்டில் தான் அது உன் கவலை.. இது என் வீடு..”
“அதுக்கு இப்ப என்னாங்கறீங்க..?”
“பேசாமல் வந்து கட்டிலில் படு..”
“என்னது..?”
அவள் விழிகளை உருட்ட.. அவனுக்கு தான் சொன்னதின் அர்த்தம் புரிந்தது..
“அடச்சீ.. கட்டிலில் படுத்துத் தூங்கு..”
“அதைக் கீழேயும் படுத்துத் தூங்கலாம்..”
“ஏஸி குளிரில் தரையில் படுத்தால் இல்லாத வியாதியெல்லாம் வரும்..”
“என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்..”
“உன்னைப் பற்றி யார் கவலைப்பட்டது..? என் அப்பாவோ.. அம்மாவோ.. எசகுபிசகாய் நீ தரையில் படுத்துத் தூங்குவதைப் பார்த்து விட்டாங்கன்னு வை.. உனக்கு நிமோனியா காய்ச்சலை வரவழைக்க நான் திட்டமிட்டு சதி செய்ததாக என்மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விடுவார்கள்.. அதிலும் என் அப்பா என் மேல் கேஸே போட்டு விடுவார்.. அந்த அளவிற்கு உன் பாட்டால் அவரை அலைபாய வைத்திருக்கிறாய்..”
“அதற்காக உங்கள் கூடவெல்லாம் என்னால் கட்டிலில் படுக்க முடியாது..”
“பின் வேறு யார்..? வேண்டாம் தர்ஷிணி.. என் வாயைப் பிடுங்காதே.. நான் எக்குத்தப்பாய் கேட்டு விடுவேன்..”
“என்னவோ புதிதாய் கேட்டுவிடப் போவது போல பிலிம் காட்டுறீங்களே.. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா..?”
“தெரியும்தானே.. என்னைப் பற்றி நல்லாத் தெரியும் தானே.. உன் மூஞ்சியை மதித்து.. நான் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன்னு உனக்குத் தெரியும்தானே.. அப்புறம் ஏண்டி.. சீன் காட்டிக் கொண்டு இருக்கிற.. பேசாமல் படுத்துத் தூங்கு..”
தர்ஷிணி அவனைப் போல பேச முடியாமல், தன் கோபத்தை தலையணையின் மேல் காட்டினாள்.. அர்ஜூனின் பக்கம் அவள் வீசிய தலையணை சுவரில் மோதி விழுந்தது.. அவன் கோபத்துடன் பல்லைக் கடித்தான்..
“என்னடி.. திமிரா..?”
“ஆமாம்.. பிறந்ததில் இருந்து.. நீங்கள் சோறு போட்டு வளர்த்த திமிர்..”
“ஏய்ய்.. ஏண்டி தலையணையைத் தூக்கி சுவரில் எறிகிற..?”
“அது வேறு என்மேல் பழியா..? நான் உங்கள் பக்கம் எடுத்துப் போட்டேன்.. அது சுவரில் போய் மோதுகிறது..”
“அவ்வளவு அகங்காரம் உனக்கு..”
தர்ஷிணி எழுந்து போய் தலையணையை எடுத்தாள்.. அவன் பக்கம் மெதுவாய்.. மிக மெதுவாய் வைத்தாள்.
“போதுமா..?”
“போதாது..”
“வேறு என்ன செய்ய வேண்டும்..?”
“என் காலை அமுக்கி விடவேண்டும்..”
“அதற்கு வேறு ஆளைப் பாருங்கள்..”
“ஏன்.. நீயே பாரேன்..”
“என்னத்தைப் பார்க்க..?”
“எனக்கு வேறு பெண்ணைப் பார்..”
“ஆஹா.. அதற்கென்ன.. தாராளமாய் பார்த்து விட்டால் போகிறது.. நீங்களும் எனக்காக வேறு மாப்பிள்ளை பாருங்களேன்..”
அர்ஜூன் பதில் பேசாமல் படுத்துக் கொண்டான்.. எப்படி அவளால் அவனை வாடா.. போடா.. என்று சொல்ல முடியவில்லையோ.. அப்படி.. அர்ஜூனால், ‘அதற்கு என்ன.. உனக்கு வேறு மாப்பிள்ளையை பார்த்து விட்டால் போகிறது’ என்று சொல்ல முடியவில்லை..
தர்ஷிணி கட்டிலின் இந்த ஓரமாகப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள்.. அவளுக்கு தூக்கம் வரவில்லை.. ஓர் ஆணின் அருகாமையை உணர்ந்தவளால் தூங்க இயலவில்லை.. அர்ஜூன் புரண்டு அவள் புறம் திரும்பிப் படுத்தான்.. அவள் அவசரமாய் கண்களை மூடிக் கொண்டாள்.. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசம் அர்ஜூனின் நாசியில் நுழைந்தது.. அவன் மனம் மயங்கியது.. முதன் முதலாய் அவளை தாபத்துடன் பார்த்தான் அவன்..
Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.