Chapter 08

0Shares

வள்ளுவர் என்னவோ எளிதாக சொல்லி விட்டார்..

‘யாகாவாராயினும் நா காக்க..’ என்று.. ஆனால் யோசித்து ஒவ்வொரு வார்த்தைகளாக பேசிக் கொண்டிருந்தால் அது பேச்சாக இருக்குமா..?

மனது நினைப்பதை தயங்காமல் பேசிவிட வேண்டும்… அதுதான் பேச்சு… அதைவிட்டு… செயற்கையான நாகரீகப் பூச்சோடு வெளிவரும் வார்த்தைகளில் இயல்பு இருக்காது.. இயல்பான வார்த்தைகள் இதயத்திலிருந்து வரும்..

தந்தை உடல் நலம் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் செய்தியை தர்ஷிணி உடனே தன் கணவனிடம் சொல்லியிருக்க வேண்டும்.. சொல்லியிருந்தால் அவன் காதல் செய்ய நினைத்திருக்க மாட்டான்..

அதைச் சொல்ல முயலுமுன் அவன் தொட்டுவிட.. அவள் பட்டென்று வார்த்தைகயை விட்டு விட்டாள்.. அர்ஜூனின் மனதில் அது ஆறாத ரணமாக பதிந்து விட்டது..

“ஐ ஆம் ஸாரி..”

“இது ஸாரி சொல்வதால் சரியாகும் வார்த்தையில்லை..”

“போனில் அம்மா பேசினாங்க..”

“ம்ம்ம்..”

“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்.. ஐ.சி.யு.வில் வைத்திருக்கிறாங்களாம்..”

“வாட்..?”

அர்ஜூன் அறை விளக்கைப் போட்டான்.. துணிகளையும் மற்ற பொருள்களையும் சேகரித்துக் கொண்டே செல்போனில் டிராவல் ஏஜன்ஸியை அழைத்து டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்தான்.. செல்போனை அணைத்து விட்டு அவளைப் பார்த்தான்..

“கிளம்பு..” என்றான் ஒற்றைச் சொல்லாய்..

“அர்ஜூன்..” அவள் விழிகள் தளும்பின..

“அர்ஜூன்.. ப்ளீஸ்..”

“இன்னும் அரை மணி நேரத்தில் டிரெயின்.. நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்..”

அவன் பேச்சைக் கத்தரித்து விட்டு.. ரூம் சர்வீஸை போனில் அழைத்து ரூமைக் காலி செய்வதைப் பற்றிச் சொன்னான்.. பெட்டிகளோடு.. அறையை விட்டு வெளியேறினான்.. தர்ஷிணி ஓட்டமும் நடையுமாய் அவனைப் பின்தொடர்ந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்..

வழியில் அர்ஜூன் தர்ணியை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.. வார இதழ் ஒன்றில் பார்வையைப் பதித்தவன்.. பதித்தவன்தான்..

தர்ஷிணியாலும் அவனிடம் பேச இயலவில்லை.. மனம் பூராவும் தகப்பனின் உடல் நிலையைப் பற்றிய கவலை மேலோங்கியிருந்த போது அவளால் பேச முடியவில்லை..

சென்னையில் போய் இறங்கியதும்.. வீட்டுக்குப் போகாமல் அவளை நேராக – கிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துமனைக்கே அழைத்துச் சென்றான் அர்ஜூன்..

“அம்மா..” தாயைக் கண்டதும்.. கணவனைப் பற்றிய நினைவை மறந்து அருகில் ஓடினாள் தர்ஷிணி..

“தர்ஷிணி.. வந்து விட்டாயா..”

“அப்பாவுக்கு எப்படிம்மா இருக்கு..?”

“இன்னும் கண் விழிக்கலை..”

அப்போதுதான் அருகே நின்று கொண்டிருந்த அர்ஜூனைப் பார்த்தாள் சரோஜா.. அவசரமாய் எழுந்து நின்றாள்..

“எப்போ ஹார்ட் அட்டாக் வந்தது..?” அர்ஜூன் விசாரித்தான்..

தன்மையாய் விசாரித்தான்..

“நேற்றைக்கு வழக்கம்போல் ஆபீஸ் போனார் மாப்பிள்ளை.. கொஞ்ச நேரத்தில் ஆபீஸிலிருந்து போன் வந்தது.. இவர் நெஞ்சு வலின்னு சொல்லி.. ஆபிஸிலேயே மயக்கம் போட்டு விட்டாராம்.. அவங்க ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி விட்டு எனக்குப் போன் பண்ணினாங்க..” சரோஜா அழுகுரலில் விவரம் கூறினாள்..

தாயின் அருகில் நின்று கொண்டிருந்த – தர்ஷிணியின் பதினேழு வயதான தம்பி தருணைப் பார்த்தான் அர்ஜூன்..

மேல்நிலைப் பற்றியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன்.. அவன் விழிகளில் பயம் தெரிந்தது.. அர்ஜூன் கனிவோடு அவன் தோளில் கை போட்டுக் கொண்டு..

“சாப்பிட்டாயா தருண்..?”

அவன் பதில் சொல்லாமல் தாயைப் பார்த்தான்..

“நீங்க சாப்பிட்டிங்களா அத்தை..?”

அவள் பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி பேசினாள்..

“மாப்பிள்ளை..! அவர் கண்விழிக்காமல் நான் சாப்பிட மாட்டேன்..”

“ம்.. டாக்டர் என்ன சொல்கிறார்..?”

“எதுவும் சொல்ல முடியாது என்கிறார்..”

அர்ஜூன் தலைமை மருத்துவரின் அறைக்குப் போய் அவரைப் பார்த்துப் பேசினான்..

“சிவியர் ஹார்ட் அட்டாக்.. பட்.. இதுதான் முதல் அட்டாக் என்பதால் அவ்வளவாய் பயமில்லை.. எதற்கும் ஒரு ஆறுமணி நேரம் கழியட்டும்.. பார்ப்போம்..”

அர்ஜூன் வீட்டிற்குப் போன் பண்ணினான்..

“அர்ஜூனா.. கோவா எப்படியிருக்கு..?” என்றார் வேதாச்சலம்..

“கோவா நல்லாத்தான் இருக்கு.. இங்க உங்க சம்பந்திதான் நல்லா இல்லை..”

“இங்கேயா..? இங்கேன்னா எங்கே..? நீ என்னடா சொல்கிற..? இப்போது எங்கேதான் இருக்கிற..?”

“ம்.. சென்னையில் இருக்கிறேன்.. வந்து இரண்டு மணிநேரமாகிறது..”

“இவ்வளவு நேரமாக வீட்டிற்கு வராமல் எங்கே இருக்கிற..? அதுசரி.. கோவாவில் பதினைந்து நாள் தங்கப் போகிறேன்னு என்னிடம் வாக்குக் கொடுத்து விட்டுத்தானே கோவா போன.. ஆறே நாட்களில் திரும்பி ஓடி வந்திருக்கிறாயே.. இதுதான் நீ வாக்குக் கொடுக்கும் லட்சணமா..? ஏண்டா.. அந்தப் பெண் அறியாப் பெண்.. அது என்ன பாவம் பண்ணியதுன்னு தேன்நிலவைக் கால்வாசியில் முடித்துக் கொண்டு நீ சென்னைக்கு ஓடி வந்த..?”

“பேசி முடிச்சிட்டீங்களா.. ஏன்ப்பா.. வாக்குத் தவறுவதைக் கேட்கும் நேரமா இது..? நான் இப்போது தர்ஷிணியின் அம்மாவோடும்.. தம்பியோடும் பேசிக் கொண்டிருக்கிறேன்..”

“அடப்பாவி.. அவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டாயா..? ஏன்டா.. கல்யாணமாகி இன்னும் முழுதாய் ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் உன் பெண்டாட்டி உன்னை முந்தாணையில் முடிந்து கொண்டாளா..? தேன்நிலவு கொண்டாட கோவாவை விட மாமனார் வீடே பெட்டர்ன்னு அங்கே போய் செட்டிலாகி விட்டாயா..? இந்த வேதாச்சலம் பெற்ற பிள்ளை இப்படியொரு காரியத்தைச் செய்யலாமா..?”

“ஏன்ம்ப்பா.. இப்பத்தான் அவளை அறியாப் பெண்.. அது இதுன்னு சொன்னீங்க.. இப்ப என்னடான்னா அவள் முந்தானையால் என்னை வலை வீசிப் பிடித்தாள்ன்னு சொல்றீங்க.. இது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா..?”

“இப்ப என் பாடு உனக்குப் புரியாதுடா.. நாளைக்கு உனக்கும் ஒரு மகன் பிறப்பான்..”

“அவன்.. என்னைப் போலவே இருப்பான்.. இப்போது அதை விட்டுவிட்டு நான் சொல்ல வந்ததைக் கொஞ்சம் கேட்கறீங்களா..?”

“என்னடா செல்லப் போற..?”

“தர்ஷிணியின் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக்..”

“யாரு.. கிருஷ்ணனுக்கா..?”

“தர்ஷிணியின் அப்பா பெயர் கிருஷ்ணன்தானே..”

“அடப்பாவமே.. எப்பவாம்..? இப்ப எந்த ஹாஸ்பிட்டலில் இருக்கிறார்..?”

அர்ஜூன் விவரம் சொல்லிவிட்டு.. போனை அணைத்து விட்டு அங்கிருந்த சேரில் சரிந்து உட்கார்ந்தான்..

சற்று நேரத்தில் வேதாச்சலமும், தமிழ்செல்வியும் வந்து விட்டனர்.. வந்த வேகத்தில் சரோஜாவை ஒரு பிடி பிடித்தாள் தமிழ்செல்வி..

“ஏன் அண்ணி.. எங்கேயோ.. கோவாவில் இருக்கிற என் மகனுக்கு தகவல் கொடுத்து வரவைக்க உங்களுக்குத் தெரியுது.. இந்தா இருக்கிற மாம்பலத்தில் இருக்கும் எங்களுக்கு ஒரு போனைப் போட்டு வரவைக்கணும்கிற நினைப்பு இல்லையா..?”

“இல்லை அண்ணி.. உங்களையேன் தொந்தரவு செய்யணும்னுதான்..” சரோஜா கையைப் பிசைந்தாள்.

“இதில் என்ன அண்ணி தொந்தரவு இருக்கு.. மனிதருக்கு மனிதர் ஆபத்துக் காலத்தில் உதவி செய்துக்கலைன்னா.. அவங்க சொந்த பந்தம்ன்னு சொல்லிக்கிறதில அர்த்தம் என்ன இருக்கு..? சொந்த பந்தம் எதுக்கு இருக்கு..? ஆபத்து காலத்தில் உதவத்தான் இருக்கு.. அப்படி ஆபத்தில் கை கொடுக்கலைன்னா.. அவங்கள சொந்தம்ன்னு சொல்லிக்கிறதில் அர்த்தமே இல்லை அண்ணி..”

ஆறுமணி நேரம்.. சரோஜாவோடு எல்லோருமே அன்னம்.. ஆகாரம் இல்லாமல் கிடந்தார்கள்.. ஆறுமணி நேரம் கழிந்தது.. கிருஷ்ணன் கண்விழித்தார்..

“இனிப் பயப்பட ஒண்ணும் இல்லை.. இன்னொரு ஹார்ட் அட்டாக் வராமல் பார்த்துக்கங்க..”

தமிழ்செல்வி அதட்டி உருட்டி.. சரோஜாவை சாப்பிட வைத்தாள்.. அர்ஜூன், தருணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று டிபன் வாங்கிக் கொடுத்தான்.. இரவானதும்.. வீட்டுக்கு கிளம்ப முனைந்த போது தர்ஷிணி தயங்கி நின்றாள்..

“அத்தை..”

“என்னம்மா..”

“நான் அம்மாவோடு இருந்து விட்டு வருகிறேன்..”

அர்ஜூனின் பார்வை மின்னலாய் அவள் மீது படிந்து விலகியது.. ஏதோ மறுத்துச் சொல்லப்போன தமிழ்செல்வியை அவன் குரல் தடுத்து நிறுத்தியது..

“அம்மா.. அவள் இங்கேயே இருக்கட்டும்..”

“இல்லைடா அர்ஜூன்..”

“ஸ்ஸ்.. இருக்கட்டும்ன்னு சொல்கிறேனில்லை.. விடுங்க.. தருண்.. நீ எங்களோடு வா.. காலையில் அங்கிருந்தே ஸ்கூல் போய்க்கொள்..”

அவன் பொறுப்பான அக்கா கணவனாக மைத்துனனை தங்களுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.. ஆனால் மறந்தும் மனைவியை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை..

0Shares

Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link