Chapter 10
அர்ஜூனின் வீட்டிற்குள் அவன் மாளவிகாவுடன் நுழைந்ததும்..
“இதோ அர்ஜூனே வந்து விட்டான்.. டேய் அர்ஜூன் கிளம்புடா..” என்றாள் தமிழ்செல்வி..
“எங்கேம்மா..?”
“என்னடா இப்படிக் கேட்கிற…? இன்றைக்கு தர்ஷிணியின் அப்பாவை டிஸ்சார்ஜ் செய்கிறாங்களே.. நீ வர வேண்டாமா..?”
“அம்மா.. இவள் மாளவிகா.. நினைவிருக்கிறதா..?”
தமிழ்செல்வி புருவம் தூக்கி யோசித்தாள்.. பின் முகத்தில் வெளிச்சம் பரவ..
“உன் கூடப் படிச்சாளே.. அந்தப் பெண்ணா இது.. ஜீன்ஸும் டி-சர்ட்டுமா ஆளே மாறி விட்டாளே..” என்று கூறினாள்..
“அமெரிக்காவில் இருந்தால் ஆள் மாற மாட்டாளா..?”
“அப்படியா.. நீ அமெரிக்காவில் வேலை பார்க்கிறாயாம்மா..?”
“ஆமாம் ஆண்ட்டி..”
அப்போது வெளியேயிருந்து மீசையை முறுக்கிய வண்ணம் வேதாச்சலம் வீட்டிற்குள் வந்தார்..
“என்னடி.. அர்ஜூன் வந்துட்டான்னு சொன்னே.. அவன் கிளம்பாமல் நின்று கதை பேசிக்கிட்டு இருக்கிறான்..”
“நீங்க எங்கே அப்பா இருந்தீங்க..?”
“தோட்டத்திற்கு.. தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.. ஆமாம்.. இது யார் இந்தப் பெண்.. பார்த்த முகமாய் இருக்கிறாளே..”
“மாளவிகாப்பா.. காலேஜில் என்கூடப் படித்தவள்..”
“ஒ.. அந்தப் பெண்ணா.. உன் அப்பா கூட காலேஜ் புரொபசர் ஆச்சே.. இப்போ எப்படி இருக்கிறார்..?”
“அப்பாவும்.. அம்மாவும் டில்லியில் அண்ணன் ஃபேமிலியோடு செட்டிலாகி விட்டார்கள் அங்கிள்..”
“நீ என்னம்மா செய்கிறாய்..?”
“அமெரிக்காவில் வேலை செய்கிறேன்..”
“அப்படியா.. வராத பெண் வந்திருக்கிறாய்.. தமிழ்செல்வி.. நீ இந்தப் பெண்ணுக்கும்.. அர்ஜூனுக்கும்.. காபி டிபனை எடுத்து வைத்து விட்டுக் கிளம்பு.. நாம் ஹாஸ்பிட்டல் போய் விட்டு வந்து விடலாம்..”
“அர்ஜூன்..?”
“அவன் எதற்கு..? எத்தனையோ நாள்களுக்குப் பின்னால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் ஃபிரண்டைப் பார்த்திருக்கிறான்.. அவன் பேச நிறைய விஷயங்கள் இருக்கும்.. அவன் இங்கேயே இருக்கட்டும்.. நாம் போனால் போதும்.. அம்மா மாளவிகா.. நீ நாங்கள் வரும் வரை.. அர்ஜூனிடம் பேசிக் கொண்டிரும்மா.. நாங்கள் வந்ததும் நைட் டின்னர் உனக்கு இங்கேதான்..”
“தேங்க்யூ அங்கிள்..”
“தேங்க்ஸ் சொல்லி அந்நியப் படுத்தாதே.. இது உன் வீடு போல.. எப்போது நீ இந்தியா வந்தாலும் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டுத்தான் போக வேண்டும்..”
“ஓகே அங்கிள்..”
இதுதான் வேதாச்சலம்.. இரவு நெருங்கும் நேரத்தில்.. மருமகள் வீட்டில் இல்லாத சமயத்தில்.. வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நவநாகரீக யுவதியுடன் மகன் வீட்டிற்கு வருகிறான்.. துளிக்கூட அவர்களை சந்தேகிக்காமல்.. அதை ஆட்சேபமும் பண்ணாமல் வரவேற்று உபசரிப்பது அவருக்கு சாத்தியமானது.. இதுபோன்ற பல குணங்கள் கொண்டவராய் அவர் இருப்பதால் தான் அர்ஜூன் அவருடைய பேச்சுக்கு எப்போதும் கட்டுப்படுவான்..
தமிழ்செல்வி அவசரமாய் டிபனையும், காபியையும் டைனிங் டேபிளில் வைத்து விட்டு மகனிடம் மாளவிகாவிடமும் தலையாட்டி விட்டுச் சென்று விட்டாள்..
அவர்கள் போனதும் மாளவிகாவைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான் அர்ஜூன்..
“உன் அப்பா வெரி கிரேட் மேன் அர்ஜூன்..”
“யெஸ்..”
“ரியலி.. ஐ லைக் ஹிம்..”
“இதை அவரிடம் மறக்காமல் சொல்கிறேன்.. நீ டிபன் சாப்பிட வா..”
அவர்கள் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.
வேதாச்சலமும், தமிழ்செல்வியும் அந்த நேரத்தில் மருத்துவமனையில் போய் காரை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார்கள்..
“என்னம்மா.. எல்லாத்தையும் எடுத்து வைத்து விட்டாயா..?”
“வைத்து விட்டேன் மாமா.. அவர் எங்கே..?”
தர்ஷிணியின் விழிகள் அவர்களுக்குப் பின்னால் அர்ஜூன் வருகிறானா என்று தேடின..
“அர்ஜூன் வரவில்லைம்மா..”
“வரவில்லையா..? ஏன் மாமா.. ஆபிஸில் அதிகம் வேலையா..?”
“இல்லைம்மா.. அவன் ஆபிஸிலிருந்து அப்போதே வீட்டிற்கு வந்து விட்டான்.. ஆனால் கூட அமெரிக்காவில் வேலை பார்க்கும் அவன் ஃபிரண்டைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டான்.. எப்போதோ ஒருமுறை இந்தியாவிற்கு வரும் ஃபிரண்ட்.. பேசிக் கொண்டிருக் கட்டும்ன்னு வீட்டில் அவங்களை இருக்கச் சொல்லி விட்டு நாங்கள் மட்டும் வந்தோம்.. நான் பில் செட்டில் பண்ணி விட்டு வந்து விடுகிறேன்..”
“அண்ணா.. என்னிடம் பணம் இருக்கிறது..”
“இருந்தால் வைத்துக் கொள்.. தர்ஷிணியின் அப்பாவிற்கு செய்ய வேண்டியது எங்கள் கடமைம்மா..”
வேதாச்சலம் பணத்தைக் கட்டப் போய்விட, சரோஜா நெகிழ்ச்சியுடன் மகளைப் பார்த்தாள்..
“பார்த்தாயா தர்ஷிணி.. இந்தக் கல்யாணத்திற்கு மறுத்தாயே.. வேறு ஒருவராக இருந்தால் பெண் எடுத்த வீட்டிற்கு உதவ நினைப்பார்களா.. கடைசிச் சொட்டு வரை கறக்கத்தான் நினைப்பார்கள்..”
“நிஜம்தான் அம்மா..”
தர்ஷிணியின் மனம் அர்ஜூனிடமே இருந்தது.. அன்று அவளை மருத்துவமனையில் விட்டுவிட்டுப் போனவன்தான்.. ஒருவாரம் ஆகிவிட்டது.. இன்று வரை அவனைப் பார்க்கவே அவளால் முடியவில்லை..
தமிழ்செல்வியும்.. வேதாச்சலமும்தான் தினமும் மருத்துவமனைக்கு வந்து போனார்கள்..
‘என்னை வெறுத்து விட்டானா..’ தர்ஷிணி மனச் சஞ்சலம் கொண்டாள்..
அர்ஜூனை எதிர்பார்த்து ஏமாந்து போனாள்.. அவனைத் தேடிப் போய் பார்க்கலாம்.. ஆனால்.. அவன் வந்து அழைக்காமல் எப்படிப் போவது..?
நோயில் கிடக்கும் தகப்பனாரையும்.. அவர்கூட இருக்கும் தாயையும் அந்த நிலையில் விட்டுவிட்டு எப்படிப் போவது..?
“அம்மா.. அவள் இங்கேயே இருக்கட்டும்..”
‘ஏன் அப்படிச் சொன்னான்.. ‘அவளுடைய அப்பாவிற்கு உடம்பு சரியில்லை.. இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கலாமே..’
அவன் அப்படிச் சொல்லவில்லையே.. அவள் மனம் தவித்தது..
வீட்டில் போய் இறங்கியதும் கிருஷ்ணனை கைத்தாங்கலாக சரோஜா அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் போனாள்.. தருண் பைகளை எடுத்துக் கொண்டு சென்றான்..
கிருஷ்ணனின் அறையில் அவரைப் படுக்க வைத்ததும் அவசரமாய் எல்லோருக்கும் காபி போட்டுக் கொண்டு வந்தாள் சரோஜா..
காபி குடித்து முடித்ததும்.. வேதாச்சலமும், தமிழ் செல்வியும் எழுந்து கொண்டார்கள்..
“அப்போ நாங்க கிளம்புகிறோம்மா.. சம்பந்தியை பத்திரமாய் பார்த்துக் கொள்..”
“சரிங்க அண்ணா.. நீங்க இரண்டு பேரும் இருந்து சாப்பிட்டு விட்டுப் போகலாமே..”
“இல்லை அண்ணி.. அங்கே அர்ஜூனும்.. மாளவிகாவும் சாப்பிடாமல் இருப்பார்கள்.. நான் போய்த்தான் சமைத்துக் கொடுக்கணும்..”
“மாளவிகாவா.. யார் அது..?”
“அவள்தான் அர்ஜூனுடைய அமெரிக்கா ஃபிரண்ட்.. இரண்டு பேரும் காலேஜில் ஒன்றாகப் படித்தவங்க..”
“ஓ.. அப்படியா..”
“தர்ஷிணி.. போய் விட்டு வருகிறோம்மா..”
என்னது.. அவளை விட்டு விட்டு அவர்கள் மட்டும் போகிறார்களா..? அவள் அவர்களுடன் போகப் போவதில்லையா..? தர்ஷிணி பதறினாள்.. அவளது பார்வையை உணராமல் வேதாச்சலமும், தமிழ்செல்வியும் அவசரமாய் காரில் ஏறிப் போய் விட்டார்கள்..
‘என்னை ஏன் விட்டுவிட்டுப் போனார்கள்..?’ தர்ஷிணி மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்..
‘ஏன்.. அவர்களுடன் நீயாய் கிளம்பிப் போயிருக்க வேண்டியதுதானே..’ அவள் மனம் பதிலுக்குக் கேட்டது..
‘எப்படிப் போவேன்… ‘அவள் இங்கேயே இருக்கட்டும்..’ என்று அவன் சொல்லிவிட்ட பின்.. நானாக எப்படிப் போவேன்..’ அவள் சோபாவில் சுருண்டு படுத்துக் கொண்டாள்..
“தர்ஷிணி.. ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் படு..”
“பசிக்கலைம்மா..”
“அதற்காக வெறும் வயிறாய் படுப்பார்களா..? எழுந்திரு.. நாளைக்கு ‘உனக்குத் துணையாக எங்க மருமகளை விட்டுவிட்டுப் போனோம்.. நீ அவளை இளைக்க வைத்து அனுப்பியிருக்கிறாயே..?’ என்று உன் மாமனாரும், மாமியாரும் என்னைப் பார்த்துக் கேட்க மாட்டார்களா..?”
‘என் துணையே என்னை மறந்து விட்டதோ என்று நான் பயந்து கொண்டிருக்கிறேன்.. இதில் உனக்குத் துணையா..!’
தர்ஷிணி தாயுடன் வாதாடாமல் எழுந்து அவள் கொடுத்த உணவை அவசரமாய் பிட்டு.. வாய்க்குள் போட்டுக் கொண்டாள், சரோஜா வேலை முடிந்தவளாய் எழுந்து செல்ல.. தர்ஷிணி தன் அறைக்குள் புகுந்து.. கட்டிலில் விழுந்தாள்..
Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.