Chapter 13
“ஏய்ய்.. என்னை என்னன்னு நீ நினைத்துக் கொண்டாய்..?”
“என் புருஷனென்னுதான்..”
“இந்த ஜால வார்த்தையெல்லாம் என்னிடம் வேண்டாம்..”
“அப்படிச் சொல்லி விட்டால் எப்படி..? நான் உங்களிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசுவது..?”
“நீ பேசுவதைக் கேட்க எனக்கு இஷ்டமில்லை..”
“வேறு யார் பேசுவதைக் கேட்க இஷ்டம்..? அந்த மாளவிகா பேசுவதையா..?”
அர்ஜூன் அவளைப் பட்டென்று அடித்து விட்டான்..
“இங்கே பார்.. அவள் என் ஃபிரண்ட்.. தப்பாகப் பேசினால் உன் பல்லை உடைத்து விடுவேன்..”
விடியும் வரை.. தர்ஷிணி விசும்பிக் கொண்டே இருந்தாள்.. அர்ஜூனின் மனம் சங்கடப்பட்டது.. ஆனாலும் அவன் அவளைச் சமாதானப்படுத்த முனையவில்லை..
விடிந்த போது.. அவள் அவனைத்தொட்டு எழுப்பினாள்.. விழித்துக் கொண்டவன் அவள் கையைத் தட்டிவிட்டு எழுந்து அமர்ந்தான்..
“காபி.. பேப்பர்..”
அவன் குளித்து முடித்து வரும் போது.. அவனுடைய துணிகள் தயாராக இருந்தன..
‘இவளை யார் இதை எடுத்து வைக்கச் சொன்னது..’ நினைத்துக் கொண்டாலும் அவள் பொருத்தமாக எடுத்து வைத்திருப்பதை மனதிற்குள் பாராட்டிக் கொண்டே போட்டுக் கொண்டான்..
“இன்னும் கொஞ்சம் சட்னி போடவா..?”
பார்த்துப் பார்த்து பரிமாறினாள்.. எந்தவித பாராட்டும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான் அர்ஜூன்..
“மதியம் லன்ச் பாக்ஸ்..”
அவனுடைய கேரியர் அடங்கிய சிறு பேக்கை அவனது காரில் வைத்து விட்டாள்.. அவன் பதிலுக்கு கையாட்டுகிறானா என்ற கவலையின்றி டாட்டா காண்பித்து அனுப்பி வைத்தாள்..
மாலையில் அவன் வரும் போது வாசலில் காத்திருந்தாள்.. அவன் வந்ததும் ஓடிஓடிக் கவனித்தாள்.. இரவில் இயல்பாக அவனை நெருங்கிப் படுத்துத் தூங்கினாள்..
தினப்படி இந்த வழக்கங்கள் தொடர.. மெல்ல அர்ஜூன் அவற்றுக்கு பழகிவிட்டான்.. மாலை வீடு திரும்பும் போது ‘பளிச்’சென்ற முகத்துடன்.. மல்லிகை மலர்சூடி.. வாசலில் வந்து அவள் வரவேற்பதை விரும்ப ஆரம்பித்தான்..
இரவினில் அவன் நாசியை வருடும் மல்லிகை வாசத்தை நுகர்ந்தபடி தூங்க ஆரம்பிப்பது அவனுக்கு பிடித்தமான ஒன்றாக ஆகிப் போனது..
மிக அருகில் படுத்து உறங்கும் தர்ஷிணியிடமிருந்து வரும் பிரத்யேக நறுமணத்தை அவன் ரசித்தான்.. ஒதுங்கிப் போகாமல்.. ஒட்டிப் படுக்கும் அவளது இயல்பை ஏற்றுக் கொண்டான்..
ஆனால்.. மறந்தும் அவள் விரல் தொடக்கூட முனையவில்லை..
தர்ஷிணியும்.. எத்தனையோ வகைகளில் முயன்று பார்த்தாள்.. அவன் அமர்ந்திருக்கும் போது.. அவன் முகத்தின் மீது முந்தானை சேலை படிய கடந்து போனாள்..
சேலையின் வாசத்தை ரசித்து முகர்ந்தவன்.. அந்த சேலையைப் பற்றி இழுத்து.. அவளை நிறுத்த முயலவில்லை..
அவன் படுத்திருக்கும் போது.. அவன் மேல் படர்ந்து.. கட்டிலின் மறுபக்கம் கிடந்த விரிப்பை எடுத்தாள்.. தன்மேல் படியும் அவளது உடலின் மென்மையில் கிளர்ந்தானே தவிர.. அவளை.. அவன் கரம் சுற்றி வளைக்கவில்லை..
தர்ஷிணிக்கு அழுத்து விட்டது.. ஆனானப்பட்ட விசுவாமித்திரரையே அந்த மேனகை வளைத்துவிட முடிந்தது.. ஆனால் இவனை வளைக்க அவளால் முடியவில்லையே..
“அப்படி.. என்னதான் நான் செய்து விட்டேன்..?” நேரடியாய் அவனிடம் ஒருநாள் அவள் கேட்டே விட்டாள்..
அது இரவு நேரம்.. அறையின் தனிமையில்.. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதில் தலையைக் கொடுத்திருந்தவன்.. அவளை நிமிர்ந்து ஒரு கணம் பார்த்தான்.. பின் மீண்டும் கன காரியமாய் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டான்..
“நான் கேட்கிறது காதில் விழுகிறதா.. இல்லையா..?”
“ம்ம்.. விழுகிறது.. விழுகிறது..”
“அப்படியானால் எனக்குப் பதில் சொல்லுங்கள்..”
“அவசியம் பதில் சொல்லணுமா.. என்ன..”
அவன் அலட்சியமாய் மீண்டும் புத்தகத்தை புரட்ட.. தர்ஷிணி கோபமானாள்.. எக்கி அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கினாள்..
“தர்ஷிணி.. புத்தகத்தைக் கொடு..”
“கொடுக்க மாட்டேன்..”
“விளையாடாதே.. கொடு..”
“கொடுக்க முடியாது..”
“கொடுடின்னா..”
அர்ஜூன் மூன்றாவது முறையாக அவளது கன்னத்தில் அடித்து விட்டான்.. தர்ஷிணியின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது.. அர்ஜூனின் கோபமும், பிடிவாதமும் அதனுடன் சேர்ந்து வடிந்தது..
“ஏய்ய்.. ஏண்டி என்னைக் கொடுமைக்காரனாக ஆக்குற..?”
“அடிப்பதுதான் கொடுமையா..? என்னைப் புறக்கணிப்பதும் கொடுமைதானே..”
“உன் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்.. நான் உன்னைப் புறக்கணித்தேனா..?”
“அர்ஜூன்.. அன்றைக்கு என்ன நடந்ததுன்னு ஒரு நிமிசம் நினைத்துப் பாருங்க..”
“என்ன நடந்திருந்தாலும்… என்னிடம் நீ சொல்லியிருக்கணுமா.. இல்லையா..? நீ அதை சொன்னபின்.. நான் உன்னிடம் ஆசையாக நெருங்கியிருந்தால்.. நீ அப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருக்கலாம்.. ஆனால் நீ அதைச் சொல்லவே இல்லையே..”
“அன்றைக்கு எனக்கு இருந்த பதட்டத்தில் அப்படிப் பேசி விட்டேன்..”
“தர்ஷிணி.. உன்னிடம் நான் சொல்வது இதைத்தான்.. பேசிய வார்த்தையை உன்னால் திரும்பப் பெற முடியாது.. நான் கேட்ட வார்த்தையை என்னாலும் மறக்க முடியாது..”
“அர்ஜூன்.. நான் உங்கள் மனைவி..”
“இது விதி தர்ஷிணி.. வேறென்ன நான் சொல்ல..? உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை.. என் அப்பாவின் கத்தலுக்காக பயந்து உன் கழுத்தில் தாலியைக் கட்டினேன்.. இப்போது அனுபவிக்கிறேன்..”
“எனக்கும் இதேபோல் பேசத் தெரியும் அர்ஜூன்..”
“பேசு.. நான் கேட்டுக் கொள்கிறேன்.. ஆனால் மனம் இசைந்து உன்னோடு வாழ மட்டும் என்னால் முடியாது..”
“இதுதான் உங்கள் முடிவா..?”
“ஆமாம்..”
தர்ஷிணி பேசாமல் படுத்து விட்டாள்..
Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.