Chapter 01

0Shares

அது அழகான காலைப் பொழுதாக இருந்தது.. அலம்பி விட்டதைப் போல சாலை இருந்தது.. முதல் நாள் அடை மழை விடாது பெய்தால் அப்படித்தானே இருக்கும் என்று இளங்கோ சொன்னான்.. ரசனைகளுக்கும் அவனுக்கும் ரொம்ப தூரம் என்றான் பரணிதரன்.. தோராயமாக எத்தனை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று சொன்னால் தேவலையென்று வரவழைத்துக் கொண்ட வினயத்துடன் வினவினான் இளங்கோ.. அவனுடன் ஒரு மனிதன் கடற்கரைக்கு வரத் துணிந்தால் இப்படியா இம்சை செய்வான் என்று பதிலுக்கு வினவினான் பரணிதரன்..

மழைநாள்களின் சாலைகள் வித்தியாசமான அழகோடு மிளிர்கின்றன.. திருமண மேடையைக் காணப் போகும் புது மணப் பெண்ணின் பொழிவோடு மனதைக் கவர்கின்றன.. சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்திருந்த செந்நிற மலர்கள் பாதையெங்கும் பூத்தூவி வரவேற்பதைப் போல சிதறியிருந்தன..

“இருக்கும்டா.. உனக்கு இப்படித்தான் இருக்கும்.. கல்யாணம் பண்ணிக்கலைல்ல.. உலகமே அழகாகத்தான் இருக்கும்..” தன் செல்போனைப் பார்த்தபடி சோகத்துடன் சொன்னான் இளங்கோ..

“அதையேண்டா போனைப் பார்த்துக்கிட்டே சொல்கிற..?” காரை ஓட்டியபடி கேட்டான் பரணிதரன்..

“எந்த நேரம் என் பெண்டாட்டி போனில் வருவாளோன்னு பக்கு பக்குன்னு இருக்குடா மச்சான்..” இளங்கோ நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்..

“கோயம்பத்தூரில இருக்கிற பெண்டாட்டிக்கு சென்னைக்கு வந்தும் பயப்படற ஆளை இப்போத்தாண்டா பார்க்கிறேன்..”

“எப்பவும் நீ பார்க்கலாம் பரணி… கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட அவஸ்தையைப் பத்தி உனக்குத் தெரியாதுன்னு சொல்லு… கேட்டுக்கிறேன்.. இப்பத்தான் பார்க்கிறன்னு சொல்லாதே.. மனசு தாங்கலை..”

“இதோ.. பீச் ரோடு வந்திருச்சு.. கடலைப் பார்த்து உன் கவலையை ஆற்றிக்க..”

பரணிதரன் கடற்கரைச் சாலையில் காரை விட்டுத் திருப்பி உழைப்பாளர் சிலையருகில் நிறுத்தினான்.. இளங்கோ கார்க் கதவைத் திறந்து இறங்கினான்.. சில்லென்ற கடல்காற்று வந்து உடலை ஊடுறுவியது..

“இதுவும் நல்லாத்தான் இருக்கு..”

இளங்கோ இமைகளைச் சுருக்கித் தோள்களை உயர்த்தி ரசித்தான்.. பரணிதரன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கடலைப் பார்த்தான்.. வெகு அருகில் கடல்..! நீல வண்ணச் சேலையைப் போல நீண்டிருந்தது.. கரை தொடாத அலைகள் வெள்ளி ரிப்பன்களைப் போல வளைந்து நெளிந்து வசீகரித்தன..

“கடலை இங்கேயிருந்து பார்த்தா நல்லாயிருக்குமா..? கிட்டப் போய் கால் நனைக்கலாம்.. வாடா..” இளங்கோ அழைத்தான்..

பரணிதரனின் முகம் இறுகியது.. சிரிப்பு மறைந்தது.. 

“நான் வரலை.. நீ போய் விட்டு வா..” என்றான்..

தவறு செய்து விட்டவனைப் போலத் துணுக்குற்று பதறித் திரும்பினான் இளங்கோ.. ‘ஸாரி..’ என்ற வார்த்தை நாக்கு முனை வரை வந்தது.. தடுத்து நிறுத்தி விட்டான்.. பரணிதரனுக்கு அது பிடிக்காது.. நண்பனுக்குப் பிடிக்காத எதையும் இளங்கோ செய்யத் துணிந்ததில்லை.. பேசியதும் இல்லை..

“மன்த்லி ஒன்ஸ் சென்னை வந்து திரும்பறது இண்ட்ரஸ்ட்டாத்தாண்டா இருக்கு.. பயணங்கள் எப்போதுமே இனிமையானவைதான்..”

பேச்சை மாற்றுவதை பரணிதரன் உணராத விதத்தில் பேச்சை மாற்றி விட்டான்.. இதுதான் இளங்கோ.. பரணிதரனின் காவல் கவசம்.. இணை பிரியாதவன்..

அவன் எதிர்பார்த்ததைப் போலவே பரணிதரனின் முக இறுக்கம் தளர்ந்து விட்டது.. சன்னமான சிரிப்பு முகத்தில் படற..

“சமயத்தில் நீ கூட கவிதையாப் பேசறேடா..” என்றான்..

‘அப்பாடி..’ இளங்கோவின் மனம் நிம்மதியானது.. அதை நண்பன் உணராத வண்ணம் மறைத்தபடி..

“என்னத்தைடா செய்கிறது.. என் வாழ்க்கைதான்.. ‘க.மு, க.பி’ன்னு ஆகிருச்சே..” என்று அலுத்துக் கொண்டான்..

“க.மு… க.பி.. யா..?”

“யெஸ் மை டியர் பிரண்ட்.. க.மு மீன்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி.. க.பி.. மீன்ஸ்.. கல்யாணத்துக்கு பின்னாடி..”

“ஹ..ஹ…ஹா..”

“இப்படிச் சிரிக்காதேடா.. பயமாயிருக்கு..”

“ஜோக் பண்ணாம பேசாம இருக்கியா.. ரத்னாவைப் பற்றி எங்களுக்குத் தெரியும்.. நல்ல பெண்..! டாடியும், அம்மாவும் ரத்னா ‘பூ’ மாதிரின்னு சொல்கிறாங்க..”

“பவித்ரா என்ன சொல்லுச்சு..?”

“பவியை எல்லாம் கணக்கில் சேர்க்காதே.. ஷி இஸ் வெரி டேன்ஜரஸ் கேர்ள்.. அளவுக்கதிகமான புத்திசாலி..”

“அதனாலதான் கேக்கறேன்.. பவி என்ன சொல்லுச்சுன்னு..”

“அதையேண்டா கேட்கிற.. இந்த டேன்ஜரஸ் ரத்னாவை டேன்ஜரஸ் வுமன்னு சொல்லுது..”

“தட்’ஸ் தி பாயிண்ட் மச்சி.. இனம்.. இனமறியும்.. அதை விட்டுட்டு ஜென்டில் மேன் டாடியும்.. குடும்ப விளக்கு அம்மாவும் சொல்கிற கமெண்ட்ஸைச் சொல்லிக்கிட்டு இருக்கியே.. நம்ம பவித்தங்கச்சிதான் என் பெண்டாட்டியைக் கரெக்டா எடை போட்டிருக்கிற ஆள்.. பிரில்லியண்ட் கேர்ள்..”

“போதும்டா.. அடங்கு.. சென்னைக்கு வந்தும் புலம்பலா..?”

“ஏண்டா கேட்க மாட்ட.. நாம சென்னைக்குக் கிளம்பி வர்றதுக்கு முதல்நாள் எனக்கும் ரத்னாவுக்கும் செம சண்டைடா..”

“ஓஹோ..”

அசுவராஸ்யமாக பரணிதரன் தலையை ஆட்டியதில் இளங்கோ மனத்தாங்கல் கொண்டான்.. அவன் எவ்வளவு பெரிய மனவேதனையைப் பகிர்ந்து கொள்கிறான்.. அதை ஊன்றிக் கவனிக்காமல் பரணிதரன் அசட்டையாக ‘ஓஹோ..’ போடலாமா..?

“எல்லாம் போடலாம்.. என்னவோ அத்தி பூத்ததைப் போலச் சண்டை போட்டிருந்தாத்தான் ஆச்சரியமாய் கேட்கனும்.. நீதான் தினமும் தண்ணி குடிக்கிறதைப் போலப் பெண்டாட்டி கூடச் சண்டை போட்டுக்கிட்டு இருக்கியே.. ரத்னா பாவம்..”

“நானாடா சண்டைக்குப் போறேன்..? இதில ரத்னா பாவமாம்.. என்னைப் பார்த்தாப் பாவமாத் தோணலையா..?”

“தோணலை..”

“ஏன்..?”

“ஏன்னா.. ஆண்கள் எப்பவும் வலிமையானவர்கள்.. பெண்கள் பாவம்.. பலவீனமானவர்கள்..”

“இப்படிப் பேசிப் பேசியே நாம வீணாப் போறோம்டா.. அன்னைக்கு நடந்த சண்டையில கை கலப்பாகிருச்சுடா மச்சான்..”

“அடி பலமா..? நீயிருக்கியே.. எதுக்கெடுத்தாலும் கை நீட்டறது தப்புடா இளங்கோ.. நீ முரட்டுத்தனத்தை விட்டு விடனும்.. ஆமாம்.. சொல்லிட்டேன்..”

பரணிதரனின் அறிவுரைக்கு அதற்கென்ன என்று தலையாட்டாமல் விரக்தியாக பார்த்து வைத்தான் இளங்கோ.. போதாக்குறைக்கு மூக்கை வேறு உறிஞ்சினான்..

“அடிதாண்டா வாங்கப் போகிற..?” பரணிதரன் கடுப்பானான்.

“கடைசி வரைக்கும் வாயைத் திறக்கவே இல்லையே..”

“அதனாலதான் பெண்களை பூமா தேவியின் மறு உருவம்ன்னு சொல்கிறாங்க.. ரத்னா பொறுமையின் சிகரம்டா..”

இளங்கோ வெறுமையின் சிகரமாக வெறித்துப் பார்த்தான்.. 

“இப்ப முழி.. எதுக்குடா உனக்கு அவ்வளவு கோபம் வருது..? கடைசியில் யார்தான் பேசினது..?”

“நானாடா பரணி பேசுவேன்..? பேசாம வாசல் பக்கம் வந்துட்டேன்..”

“குசும்புக்காரன்டா நீ.. கழுத்தில மூணு முடிச்சைப் போட்டுட்டா பெண்டாட்டி உனக்கு அடிமைங்கிற திமிரு.. ரத்னா பேசினாளா..?”

“ஊம்.. அவதான் பேசினா..”

“விட்டு கொடுத்து வாழனும்ங்கிற விவரம் தெரிஞ்ச பொண்ணு.. அதுகூட மல்லுக்கு நிற்கிறயே.. உன்னை என்னதான் செய்கிறது..? சரி சரி.. என்ன பேசினா..? மன்னிப்பு கேட்டாளா..?”

“ஊஹீம்.. ஒழுங்கா மரியாதையா வீட்டுக்குள்ள வந்தீங்கன்னா இந்த அடியோட நிறுத்திக்குவேன்.. வீம்பு பிடிச்சு வாசலிலேயே நின்னிங்கன்னா வாசலுக்கு வந்து அடிப்பேன்.. எப்படி வசதின்னு கேட்டா மச்சான்..”

“என்னது..????”

பரணிதரன் நம்ப முடியாமல் இளங்கோவைப் பார்த்தான்.. அவன் உண்மை சொல்கிறானா.. இல்லை.. பொய் சொல்கிறானா என்று அவனால் கணிக்கவே முடியவில்லை..

“ஆமாண்டா பரணி.. ஆரம்பத்தில நான்தான் அடி கை வைச்சேன்.. போகப் போக என்னோட ஆக்சன் ஆப்போசிட் ரியாக்சனா மாறி அவ அடி கை வைக்க ஆரம்பிச்சுட்டா..”

“எவரி ஆக்சன் ஹெஸ் எ ரியாக்சன்..”

“சயின்ஸ் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டியா..?”

“ஆப்போசிட் ரியாக்சனைப் பத்திச் சொன்னது யாரு..? நீதானே..”

“என்னத்தடா சொல்ல..? நான் எதைச் சொன்னாலும் அதுக்கு ஆப்போசிட்டாத்தான் நடக்குது.. கொஞ்சம் அமைதியா இருடின்னு பெண்டாட்டிகிட்டச் சொல்லிட்டேண்டா.. அதுக்குப் பின்னாலதான் வீடு ‘வியட்நாம் வீடா..’ ஆகிருச்சு.. அதுவரைக்கும் ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கு ஒரு தரம்ன்னுதான் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா..”

இளங்கோ பேசித் தள்ளிக் கொண்டேயிருக்க.. அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த பரணிதரனின் கண்கள் மின்னின.. அதற்குக் காரணம் தனது பேச்சாற்றல்தான் என்று நம்புவதற்கு இளங்கோ ஒன்றும் விரல் சுவைக்கும் பச்சைக் குழந்தையில்லை.. அவன் பேச்சை நிறுத்தி விட்டு மெதுவாக தலையைத் திருப்பிப் பார்த்தான்..

கடற்கரைச் சாலையில் நின்றிருந்த பரணிதரனின் காருக்கு நேர் எதிராக தேவதையைப் போல நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள்.. அன்றுதான் பூத்த புது மலர் புன்னகையுடன் பரணிதரனைப் பார்த்தாள்.. அந்த ஓர் பார்வையில் அவனது மனம் நிறைந்தது..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link