Chapter 02

0Shares

கோயம்பத்தூரிலேயே பிரசித்தி பெற்ற ‘தரன் டெக்ஸ்டைல்ஸ்’ மில் ஓனர் கிரிதரனுக்கு பரணிதரன், பவித்ரா என்று இரண்டே பிள்ளைகள்.. அவரது மனைவி துளசி பெயருக்கேற்றார் போல சாத்வீகமான குணமுடையவள்.. பரணிதரன் அவளைக் கொண்டு பிறந்திருப்பதாக அனைவரும் சொல்வார்கள்.. அமைதியான சுபாவம்.. முகத்தில் தெரியும் தேஜஸ்.. கருணை மனம் என்று அவன் பிரத்யேகமான அரிய குணங்களுடன் இருந்தான்.. கோயம்பத்தூரில் எம்.ஈ பட்டம் பெற்றவுடன் எம்.பி.ஏ படிக்க ஃபாரின் போய் விட்டான்.. பட்டம் பெற்று திரும்பி வந்த மகனிடம் ‘தரன் டெக்ஸ்டைல்’ஸை ஒப்படைத்து அதற்கு எம்.டியாக்கி பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் கிரிதரன்.. அதுபோக கோயம்பத்தூரின் மையப் பகுதியில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்.. பவித்ரம் ஜவுளி ஸ்டேர்.. என்று இருந்தன.. அவற்றை கிரிதரன் பார்த்துக் கொண்டார்..

துளசி பொள்ளாச்சியில் பிறந்தவள்.. அங்கே அவளுக்குத் தாய் வீட்டுச் சீதனமாக நூறு ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்திருந்தார்கள்.. நிலத்தில் பால்பண்ணை, விவசாயப் பண்ணை, தென்னந்தோப்பு என்று வியாபார ரீதியாக மாற்றம் செய்த கிரிதரன்.. அறுபது ஏக்கர் நிலத்தில் நெல், கடலை, பருப்பு வகைகள் என்று சாகுபடி செய்ய வேலையாள்களை அமர்த்தி அவர்களை மேற்பார்வை பார்க்க ஒர் குடும்பத்தையே அங்கு குடி வைத்திருந்தார்..

பொள்ளாச்சி தென்னந்தோப்பில் அவர்களுக்கு ‘ஃபார்ம் ஹவுஸ்’ உண்டு.. விடுமுறை தினங்களில் அங்கு சென்று வருவதை பவித்ரா விரும்புவாள்.. பரணிதரனுக்கு வேலையிருந்தாலும் தங்கைக்காக குடும்பத்துடன் இணைந்து அங்கே சென்று வருவான்..

வாரம் ஓர்முறை பொள்ளாச்சிக்கு சென்று வரவே பொழுது இல்லாதவன், மாதம் ஓர்முறை சென்னைக்குக் கிளம்பி விடுவதை வழக்கமாக வைத்திருந்தான்.. என்ன வேலையிருந்தாலும் பயணத்தை நிறுத்த மாட்டான்.. எதற்காக என்று அவனது குடும்பத்திலும் கேட்க மாட்டார்கள்.. கூட வந்து திரும்பும் இளங்கோவும் கேட்க மாட்டான்..

அனைவருக்கும் தெரியும்.. அவன் சென்னைக்குப் போவது மலர் போன்ற மிருதுவான மாது ஒருத்தியைப் பார்ப்பதற்காக என்பது.. அந்த மலருக்கும் அது தெரியும்.. அவன் கடற்கரைக்கு வரும் நாளில் சரியாக அவளும் அங்கு வந்து விடுவாள்.. தூரத்தில் அவளுடைய காரை நிறுத்தி விட்டு நிதானமாக கோவிலில் அடிப் பிரதட்சணம் செய்வதைப் போல அடி மேல் அடியெடுத்து வைத்து வருவாள்.. அவளது பார்வை பரணிதரனின் காரின் மீதே நிலைத்திருக்கும்.. அங்குமிங்கும் அலை பாயாத பார்வை.. அவனை மட்டும் உள்ளிழுத்து நிரப்பிக் கொள்ளும் பார்வை.. காதலையே கரைத்து ஊற்றி அனுப்பி வைக்கும் பார்வை.. காந்தமென அவனைக் கவர்ந்து இறுக்கிக் கொள்ளும் பார்வை..

மேக வீதியில் நிலவு ஊர்வதைப் போல மிதந்து வந்து அங்கிருக்கும் சிமிண்ட் பெஞ்சில் சாய்ந்து அமர்வாள்.. பரணிதரன் கார்க்கதவைத் திறந்து ஸ்டிரியங்கின் மீது சாய்ந்து அவளைப் பார்க்க.. அவள் அவனைப் பார்க்க என்று அவர்களுக்கென்று ஓர் மாய உலகை சிருஷ்டித்துக் கொள்வார்கள்.. மௌனம் மட்டுமே அவர்களது மொழியாக இருக்கும்.. பேச்சுக்களற்ற மௌனம் உணர்த்தும் உணர்வுகளை வார்த்தைகள் உணர்த்தி விட இயலாது என்பதை அவர்களைப் பார்த்துத்தான் இளங்கோ தெரிந்து கொண்டான்.. அவள் வந்து விட்டால் அவன் பரணிதரனின் பக்கத்தில் நிற்க மாட்டான்.. கடலருகில் நகர்ந்து போய் விடுவான்.. கடலலையில் கால்களை நனைத்தபடி அவர்கள் இருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டிருப்பான்.. இருள் கவியும் நேரத்தில் பிரிய மனமில்லாத மெது நடையுடன் அவள் பிரிந்து சென்று விடுவாள்.. இளங்கோ நண்பனிடம் செல்வான்.. பரணிதரன் கண்மூடி இருக்கையில் சாய்ந்திருப்பான்.. அவனது நெற்றிச் சுருக்கங்களில் இளங்கோவின் மனம் வேதனை கொள்ளும்.. நண்பனின் நெற்றியை வருடி அவனது மனத்துயரை இவன் எடுத்துக் கொள்ள முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.. அது முடியவில்லையே..

இப்போதும் அதைப்போல இளங்கோ விலகி நடந்தான்.. அவன் அங்கு இல்லாததைப் போல.. பரணிதரன் மட்டுமே காரில் இருப்பதைப் போல அவளது பார்வை பரணிதரனின் மீது நிலைத்து நின்றது.. கோடானு கோடி ஏக்கங்களையும் விம்மல்களையும் சுமந்து வந்த பார்வையில் பரணிதரன் திளைத்தான்

அந்தி மாலையில் சூரியனின் கதிர்கள் மனோகரமானதொரு சோபையுடன் கடல் மீது படிந்தன.. அதீத ரோஜா வண்ணத்துடன் அலைகள் நர்த்தனமாடின.. வேகமாக ஓடி வந்த அலைகளைப் பார்த்த இளங்கோவிற்கு அவளைப் பார்ப்பதைப் போலவே இருந்தது.. அவளும் இந்த அலைகளைப் போலதான்.. அடிமேல் அடியெடுத்து வந்தாலும் அவளது இதயத்தின் தாபத்தையும் வேகத்தையும் விழிகள் பிரதிபலிக்கும்.. வேகமாக ஓடி வரும் அலைகள் கரை தொட்டவுடன் கடலுக்கே திரும்பி விடுவதைப் போல.. சற்று நேரத்தில் அவளும் அவளுடைய வீட்டிற்குத் திரும்பி விடுவாள்.. தனித்திருக்கும் பரணிதரனிடம் இளங்கோதான் திரும்பிச் செல்வான்..

‘எதற்கு இந்த மனவலி..?’ இளங்கோ மனதுக்குள் பொருமுவான்..

பரணிதரனுக்குப் பெண் கொடுக்க நான், நீ என்று கோவை மாவட்டத்திலுள்ள அவனது பணக்கார உறவினர் வட்டாரத்தில் தள்ளு, முள்ளு போட்டி நடந்து கொண்டிருக்கிறதே.. அது அவனுக்குத் தெரியாதா..?

பரணிதரனுக்கு மட்டுமல்ல.. அவன் பார்க்க வந்திருக்கும்.. அவனைப் பார்க்க வந்திருக்கும்.. மலருக்கும் அது தெரியும்.. தெரிந்தும் அவள் மௌனமாக இருக்கிறாள்.. மனதைத் திறந்து பேசியதில்லை.. பரணிதரனின் அருகில் வர முயன்றதுமில்லை..

ஆனால் அவன் வரும் நாளில் அவள் வந்து விடுவாள்.. இந்த நாளில்.. இந்த நேரத்தில்.. அவன் இங்கு வருவான் என்று அவளுக்கு எப்படித் தெரியும் என்று இளங்கோ திகைத்திருக்கிறான்.. பரணிதரன் குறிப்பிட்ட ஓர் நாளில் வருவதில்லை.. மாதத்தில் ஓர்நாள்.. ஏதோ ஓர் கிழமையில் சென்னைக்குப் புறப்பட்டு வருவான்.. பிற்பகல் நேரத்தில் கடற்கரைக்குச் செல்வான்.. உழைப்பாளர் சிலைக்கு அருகில் அவன் காரை நிறுத்திய மறுநொடியில் அவளது காரிலிருந்து அவள் இறங்குவாள்.. அது எந்த வகையான மாயம் என்று இதுவரை இளங்கோவுக்குத் தெரியாது..

‘டெலிபதி.. டெலிபதி.. என்பாங்களே.. அதுவா இருக்குமோ..’

அது என்ன பதியோ.. பரணிதரனும் அந்த மலரும் சதிபதிகள் போலதான் பார்த்துக் கொள்வார்கள்.. எல்லைக் கோட்டைக் கிழித்து வைத்திருப்பதைப் போல குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவள் அமர.. பரணிதரன் அவளைப் பருகு, பருகு என்று பார்வையில் பருகிக் கொண்டிருப்பான்..””

‘பார்வை ஒன்றே போதுமா..?’

இளங்கோவுக்குத் தெரியவில்லை.. பாட்டுக் கேட்க நன்றாகத்தான் இருந்தது.. இருக்கிறது.. இருக்கும்.. நடைமுறைக்கு அது சாத்தியமாகுமா..? ரத்னாவை மணப்பதற்கு முன்னால் இதுபோன்ற மென்மையான உணர்வுகளும் இருக்கும் என்றுதான் அவன் நம்பிக் கொண்டிருந்தான்.. என்று அவனது கரம் பிடித்து ரத்னா மனைவியாக அவனது வாழ்வில் நுழைந்தாளோ.. அன்று உடைந்தது மென் உணர்வுகள் பற்றிய அவனது மதிப்பீடு.. வன் உணர்வுகள் மட்டுமே வாழ்கையாகி விட்டது..

இதோ.. உன்னைப் பார்த்தாலே போதும் என்று ஒருத்தியைப் பார்வையால் தின்று கொண்டிருக்கிறானே.. பரணிதரன்.. அவனைப் போல அவனும் தன் மனைவியை ஓர்நாள் பார்க்க முயன்றான்..

“என்ன..?” கையைக் குவித்து முகத்தைச் சுளித்துக் கேட்டாள் ரத்னா..

“ச்சும்மா..” காதலுடன் சொல்வதாக இவன் நினைத்துக் கொண்டான்..

“ச்சும்மா பாக்கறிங்களா..? நீங்களா..? என்னை நம்பச் சொல்கிறீங்களா..? கடைஞ்செடுத்த வினயகாரனில்ல நீங்க.. உங்க முகரக்கட்டைக்கு என் முகம் தோதா இல்லைன்னு பாக்கறிங்களோ..? ஏனுங்.. உங்க மூஞ்சிக்கு இந்த மூஞ்சி கிடைச்சதே பெரிசுங்க மச்சான்.. நீங்க பொண்ணுப் பார்த்துட்டுப் போனப்பவே என் அப்பாவிடம் மல்லுக் கட்டினேனுங்க.. அப்பா, அப்பா.. மாப்பிள்ளையோட மூஞ்சி, குரங்கு மூஞ்சியப் போலவே இருக்குன்னு சொன்னேனுங்க.. அதுக்கு எங்கப்பா.. உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்காதே அம்மணி.. உனக்குப் பின்னாலே இன்னும் ரெண்டு தங்கச்சிக இருக்குதுகளேன்னு நினைச்சுப் பாரு அம்மணி.. இந்த மாப்பிள்ளை பொண்ணு பார்க்க வந்ததுமே பொசுக்குன்னு பொண்ணப் பிடிச்சுப் போயிருச்சு மாமான்னு சொல்லிட்டுப் போறாரு அம்மணி.. அவரு மாமான்னு கூப்பிட்டத நானு மாத்தி அமைக்க மாட்டேன்னு சொல்லிப் புட்டாருங்க.. அப்படி எங்கப்பாவ மாமான்னு சொல்லிக் கவிழ்த்த மகராசனில்ல நீங்க.. இப்ப வந்து மூஞ்சி சரியில்ல.. முகரை சரியில்லன்னு ஆராய்ச்சி பண்ணுகிறீங்களாக்கும்.. அல்லாம் சரியாத்தான் இருக்கு மச்சான்.. அங்ஙனதான் மூஞ்சி ஆட்டுக்கல்ல போல இருக்கு..”

அதற்கு மேலும் மனைவியை காதல் பார்வை பார்த்து விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள இளங்கோ என்ன மறை கழண்டவனா..? அதன்பின் அப்பரிசோதனையை கைவிட்டு விட்டான்..

‘இவன் மட்டும் எப்படி சளைக்காம காதல் பார்வை பார்க்கிறான்..? பதிலுக்கு அவளும் பார்க்கிறாளே..?’

அவனது பாதம் தொட்ட அலைகள் அவனது சந்தேகத்திற்கு விடை அளிக்காமல் கடலுக்குத் திரும்பிச் சென்று விட்டன..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link