Chapter 14
“தேங்க்.. யு..”
யாமத்தில் யாழ் மீட்டும் யட்சக் கன்னிகையின் சங்கீதம் போல மெலிதாக ஒலித்த குரலில் விழிகளைத் திறந்து பார்த்தான் பரணிதரன்.. மகேந்திரனின் கையைப் பற்றித் தோளில் தலை சாய்த்து நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தாள் மலர்நிலா..
“ஹேய்.. நீ எப்படியிருக்க..?”
பரணிதரன் எழுந்து கொள்ள முனைய.. வேகமாக வந்த நர்ஸ் அவனைப் பிடித்துக் கொண்டாள்..
“நீங்க எமோசனல் ஆகக் கூடாது.. உடம்பை அசைக்கவும் கூடாது..”
பரணிதரனின் பக்கத்திலேயே கண்ணீர் விட்டபடி உட்கார்ந்திருந்த துளசி அப்போது டாக்டரைப் பார்க்கப் போயிருந்தாள்.. மனைவியை மகனருகில் விட்டு விட்டு கிரிதரன் மில்லுக்கும் வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருந்தார்.. பரணிதரனின் தங்கை பவித்ராவுக்கு மலர்நிலாவின் வயது.. அவளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும் கிரிதரனே பார்த்துக் கொண்டார்..
“டோன்ட் மூவ் பரணி..” மகேந்திரன் தங்கையை அங்கிருந்த சேரில் உட்கார வைத்து விட்டு பரணிதரனின் பக்கத்தில் உட்கார்ந்து நண்பனின் கையைப் பிடித்துக் கொண்டான்..
“என்னால்தானே உனக்கு இந்த நிலைமை..”
மலர்நிலாவின் மனதில் இருந்த வார்த்தைகளைச் சொல்லிக் கண் கலங்கினான்..
“நான்தான் மலரிடம் எங்க ஃபேமிலி முழுதும் தோப்புக்குப் போயிருக்காங்கன்னு விளையாட்டுக்குச் சொன்னேன்.. அதனால்தான் இவ்வளவும்..”
“ஹேய்.. நீ ஏன் ஃபீல் பண்ற..? யாருமே வேண்டும்ன்னு எதையுமே பண்றதில்லை.. இதுதான் நடக்கனும்னு விதி இருந்தா யார் என்ன செய்ய முடியும்..?”
நண்பனிடம் தேறுதலாகப் பேசிக் கொண்டிருந்தாலும் பரணிதரன் மலர்நிலாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அதிர்ந்திருந்த அந்தச் சிறுமியின் தோற்றம்.. ஆழமாக அவன் மனதில் பதிந்தது.. தெரியாமல் தவறு செய்து விட்டு துடிக்கும் குழந்தை போல அவள் கண்களில் நீருடன் உதடுகள் துடிக்க குழந்தை போல அவள் கண்களில் நீருடன் உதடுகள் துடிக்க அவனது காலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளது பார்வையில் தெரிந்த பரிதவிப்பு பரணிதரனின் மனதை உருக்கியது..
“உனக்குக் காய்ச்சல் விட்டிருச்சா..?” மலர்நிலாவிடம் கேட்டான்..
“வலிக்குதா..?” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவள் பதிலுக்குக் கேள்வி கேட்டாள்..
பரணிதரன் மென்மையாக முறுவலித்தான்.
“எங்க விட்டில் ஸ்விம்மிங் பூல் இருக்கு..”
மலர்நிலா சொன்னதும்.. தங்கை காய்ச்சல் வேகத்தில் பிதற்றுகிறாள் என்று பயந்து போனான் மகேந்திரன்.. மலர்நிலாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்..
“தண்ணியக் கண்டு பயப்பட மாட்டேன்..” மலர்நிலா தொடர்ந்தாள்..
“நீச்சல் கத்துக்குவேன்.. எனக்கு மட்டும் நீச்சல் தெரிந்திருந்தா நீங்க என்னைக் காப்பாத்தக் கிணத்துல குதித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதில்ல.. இப்படியெல்லாம் ஆகியிருக்காதுல்ல..”
மலர்விழி அழ ஆரம்பித்தாள்.. டாக்டரைப் பார்த்து விட்டுத் திரும்பிய துளசி மலர்விழி அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும..
“அழாதேம்மா..” என்று அவளை அணைத்துக் கொண்டாள்..
“ஸாரி ஆண்ட்டி..” மலர்விழியின் அழுகை கதறலாக மாறியது..
துளசியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அவளது வயிற்றில் முகம் பதித்துக் கதறிய சிறுமியின் தலையைக் கோதி விட்டபடி துளசியும் அழுதாள்..
“வேண்டாம்மா.. நீங்க அழுதா மலரும் அழுகையை நிறுத்தாது..” பரணிதரன் எடுத்துச் சொன்னான்..
துளசி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மலர்நிலாவின் முதுகில் தட்டி ஆறுதல் படுத்தினாள்..
“காய்ச்சல் அடிக்குதே..” கவலையுடன் மகேந்திரனைப் பார்த்தவள்..
“வீட்டுக்குத் தெரியாமல் வந்தீங்களா..?” என்று கேட்டாள்..
‘ஆமாம்..’ எனும் விதமாக தலையசைத்தான் மகேந்திரன்.. துளசி பெருமூச்சு விட்டாள்..
“யாரை நோகிறதுன்னு தெரியல.. பாட்டன், முப்பாட்டன் காலத்துப் பகையை குறைய விடாம பார்த்துக்கிட்டா எப்படி..? உன் அப்பாவையும், சித்தப்பாவையும் நான் கூடப் பிறந்த அண்ணன், தம்பிகளாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. அவங்களுக்குத்தான் அது புரிய மாட்டேங்குது.. எப்படியோ போகட்டும்.. நீ மலரைக் கூப்பிட்டுக்கிட்டுக் கிளம்பு.. காய்ச்சல்காரப் பிள்ளையை கூப்பிட்டுக்கிட்டு பொள்ளாச்சியிலிருந்து கோயம்பத்தூருக்கு வந்திருக்க.. அலுப்புத் தாங்காம காய்ச்சல் அதிகமாகியிருச்சுன்னா என்ன செய்கிறது..?”
“மலர் பரணியைப் பார்க்கனும்னு கேட்டுச்சு ஆண்ட்டி.. எனக்கு அது நியாயம்ன்னு பட்டுச்சு.. அப்பாவுக்கு வேலையிருந்ததினால மலரை ஹாஸ்பிடலுக்குக் கூப்பிட்டுக்கிட்டு போகும் பொறுப்பை என்னிடம் விட்டாங்க.. நான் காரை கோயம்பத்துருக்குத் திருப்பச் சொல்லிட்டேன்..”
“சரி.. பரணியைப் பார்த்துட்டிங்கள்ல.. சீக்கிரமாகக் கிளம்பி நேரத்தோட வீடு போய் சேருங்க..”
ஒரு வார்த்தை.. ஒரேயொரு வார்த்தை.. உன்னால்தானே என் மகனுக்கு இந்த நிலைமை என்று சொல்லாமல்.. கோபமாக பார்க்காமல்.. மலர்நிலாவுக்குத் தேறுதல் சொல்லி.. மகேந்திரனிடம் இணக்கமாகப் பேசி அனுப்பி வைத்தாள் துளசி..
மகேந்திரனின் கை பிடித்து எழுந்த மலர்நிலா தொய்வாக நடந்தாள்.. பரணிதரனின் பார்வை அவளையே தொடர்ந்தது.. அறைவாசலுக்குப் போனவள் திரும்பிப் பார்த்தான்.. இருவரின் பார்வைகளும் கலந்தன.. கண்களில் நீர் வழிய.. சோர்ந்த முகத்துடன் தலையசைத்து விடைபெற்றாள்.. பரணிதரன் மௌனப் பார்வையுடன் தலையசைத்து விடை கொடுத்தான்..
மருத்துவ மனையை விட்டு வெளியேற மனமில்லாமல் வெளியேறினாள் மலர்நிலா.. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கால்களில் இரும்புக் குண்டைக் கட்டி விட்டதைப் போல அவ்வளவு சிரமமாக இருந்தது.. பரணிதரனை விட்டுப் பிரிய முடியவில்லை.. அவள் மனது அவனிடமே தங்கி விட்டது..
மகேந்திரனும், மலர்நிலாவும் கோயம்பத்தூருக்குப் போனதையும், பரணிதரனைப் பார்த்ததையும் வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து விடலாம்.. கார் டிரைவரால் அப்படி மறைத்து விட முடியுமா..? சம்பளம் கொடுக்கும் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் டிரைவர்..
“ஏன் லேட்..?” என்று அதட்டிய சம்பத்திடம் உண்மையை மறைக்காமல் சொல்லி விட்டார்..
“மகி..”
வீட்டுக்குள் வந்த சம்பத் போட்ட சப்தத்தில் பேத்தியின் பக்கத்திலிருந்த சங்கீதா அவசரமாக ஓடி வந்தாள்..
“மெல்லப் பேசுடா சம்பத்.. இப்பத்தான் மாத்திரையை விழுங்கிட்டு மெல்ல மலர் தூங்க ஆரம்பிச்சிருக்கா.. எழுப்பி விட்டிராதே.. உனக்கு மெல்லமாப் பேசவே தெரியாதா..?”
“இவன் பண்ணியிருக்கிற காரியத்தைக் கேட்டிங்களாம்மா..”
“சத்தம் போடாதேன்னு சொல்றேனில்ல..”
“இவன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா..?” சம்பத் குரலைத் தழைத்துக் கொண்டார்..
“என்ன பண்ணினான்..?”
“நம்ம மலரை அழைத்துக்கிட்டுக் கோயம்பத்தூர் போயி அந்தப் பரணிதரனைப் பார்த்து உறவு கொண்டாடிட்டி வந்திருக்கான்..”
சங்கீதா அவசரமாக சின்ன மருமகள் எங்கேயிருக்கிறாள் என்று பார்த்தாள்.. இந்துபிரியா தன் பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தாள்… மாலதி மட்டும்தான் அங்கிருந்தாள்.. வேதாச்சலம் தோப்புக்குப் போயிருந்தார்.. தோப்பில் காய் இறக்கிக் கொண்டிருந்தார்கள்..
“சின்னப் புள்ளைக சம்பத்து.. தன்னாலதான் அந்தப் பயலுக்கு இப்புடி ஆகிருச்சுன்னு மலருக் கண்ணு மருகுது.. தான் விளையாட்டுக்குச் சொன்னதினாலதான் இம்புட்டும் நடந்திருச்சுன்னு மகி மருகறான்.. ரெண்டும் அவனைப் பார்க்கக் கோயம்பத்தூருக்குப் போனதில ஒரு தப்புமில்ல.. நீ இந்த விசயத்தைப் பெரிசு பண்ணாதே.. அம்புட்டுத்தான் சொல்வேன்.. சின்ன மருமக காதில விழுந்தா அது வினோத்து காதுக்குப் போயிரும்.. உங்கப்பாவைப் பத்திச் சொல்லவே வேணாம்.. ஆட்டமா ஆடிருவாரு..”
“அதுக்காக இதை இப்படியே விட்டு விடுவதா..?”
“இப்போதைக்கு விட்டு விடு..”
“அம்மா.. என்னோட பயம் உங்களுக்குப் புரியலை..”
“புரியுதுடா தம்பி.. எல்லாம் புரியுது.. நாளைக்கு நடக்கப் போவதை நாளைக்குப் பார்த்துக்கலாம்.. இப்ப மலர் கண்ணைத் திறக்காம காய்ச்சலில் கிடக்கா.. அதை மட்டும் பாரு.. காய்ச்சல் குணமானதும் சென்னைக்குப் போய் விடப் போறிங்க.. அதுக்குப் பின்னால கட்டுதிட்டமா வைத்துக்கிட்டாப் போச்சு.. காலப் போக்கில எல்லாம் மறந்திரும் சம்பத்து..”
மறக்கவில்லை.. பொள்ளாச்சிப் பக்கமே மலர்நிலாவை அழைத்து வராமல் பொத்திப் பொத்தி வைத்தும் மலர்நிலா பரணிதரனை மறக்கவே இல்லை.. சென்னைக்கு வந்த ஒரிரு மாதங்களிலேயே நீச்சலைக் கற்றுத் தேர்ந்து விட்டாள்.. விடுமுறைகளுக்கு பொள்ளாச்சி போகாமல் குடும்பம் மொத்தமும் ஊட்டி, கொடைக்கானல், மூனாறு என்று மாறினார்கள்.. அவளை மட்டும் விட்டு விட்டு.. தனித்தனியாய் குடும்பத்தினர் மட்டும் பொள்ளாச்சி சென்றுவர.. மலர் நிலா அவர்களிடம் பரணிதரனைப் பற்றி விசாரித்து விட்டு வங்கிக் கட்டிக் கொண்டாள்.. அவனைப் பற்றி அவள் பேசவே கூடாது என்று குடும்பத்தினர் கட்டுப்பாட்டை விதிக்க.. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவள் பரணிதரனை சென்னையில் பார்த்தாள்..
அவளது பள்ளி இருக்கும் தெருமுனையில் அவனுடைய காரின் மீது சாய்ந்து அவன் நின்றிருந்தான்.. மூன்று வருடங்களில் மிகப் பெரியவனாக அவன் மாறியிருந்ததைப் போல அவளுக்குத் தோன்றியது.. அவளைத் தேடும் அவனது பார்வையை எதிர் கொண்ட வண்ணம் மௌனமாக அவனெதிரில் நடந்தாள்..
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.