Chapter 18
‘இத்தனை நாளாய் இதை எங்கே ஒளித்து வைத்திருந்தான்..?’
கிரிதரன் வியப்பின் உச்சத்தில் இருந்தார்.. அவரது மகன் பரணிதரன், தகப்பனுக்கே பாடம் சொல்லும் முருகன்.. கண்டிப்பை மட்டுமே காட்டும் விழிகள்.. கடினமான முகம்.. ஓர் சிறு பார்வையில் எவரையும் எட்ட நிறுத்தி விடுவான்..
அவனா சுற்றுப்புறத்தை மறந்து மேடையில் நின்று கண்களில் காதல் வழிய.. காதலாகி கசிந்துருகிப் பாடிக் கொண்டிருக்கிறான்..?
அவனையே பருகி விடுவதைப் போலப் பார்த்தபடி உருகிப் பாடிக் கொண்டிருந்த மலர் நிலாவை அவர் பிரியத்துடன் பார்த்தார்..
“மலரே..! மௌனமா..?
மௌனமே.. வேதமா..?”
எவராலும் அணுக முடியாத இரும்பு குணம் படைத்தவன் பரணிதரன்.. அவன் மனம் கவர்ந்த மலரிடம் மட்டும் மென்மையான குரலில் குழைவாகப் பாடிக் காதலில் உருகினான்.. அவள் மட்டும் என்ன.. அவனைவிட மிருதுவாக பட்டைப் போன்ற குரலில்..
“மலர்கள்.. பேசுமா..?
பேசினால் ஓயுமா..? அன்பே..!”
என்று பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. அதில் பரணிதரன் சொக்கிப் போனான்.. மனதை அளக்கும் மெல்லிய அவளது இயல்பு அவன் மனதை அசைத்தது.. அதிமென்மையான அற்புத அழகு அவளிடம் இருந்தது.. அவனுக்காக அவள் வாழ்ந்திருந்த காலங்களை பாடலில் உணர்த்தினாள் மலர்நிலா..
“பாதி ஜீவன் கொண்டு..
தேகம் வாழ்ந்து வந்ததோ..?”
லேசான விசும்பலுடன் மிதந்து வந்த பாடல் வரிகளில் இமை மூடித் திறந்து தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தான் பரணிதரன்.. அவளே அவனது சம்யுக்தை.. அவன் அவளது பிருத்விராஜன்.. குதிரையேறி அவளைக் கவர்ந்து கொண்டு பறந்து செல்ல, துடித்தது அவன் மனம்..
“மீதி ஜீவன் என்னைப்
பார்த்தபோது வந்ததோ..?”
கர்வத்துடன் அவன் கேட்டதை ரசித்துப் பார்த்தாள் பவித்ரா.. அவளது அண்ணனுக்குள் இருந்த காதல் மன்னன் அவளுக்கு ஆச்சரியமூட்டினான்..
மலர்நிலா காதலுடன் பரணிதரனைப் பார்த்து..
“ஏதோ.. சுகம்.. உள்ளூருதே..
ஏனோ.. மனம் தள்ளாடுதே..”
என்று பாடிய மலர்நிலாவின் காதுகளில் ஆடிய ஜிமிக்கியுடன் சேர்ந்து பரணிதரனின் உள்ளமும் ஆடியது..
“விரல்கள் தொடவா..
விருந்தைப் பெறவா..?”
எங்கேயிருக்கிறோம்.. எந்தச் சுழலில் நிற்கிறோம் என்பதை மறந்து கள்ளுரும் போதையுடன் அவன் கேட்க..
“மார்போடு கண்கள் மூடவா..?”
என்று அவன் மார்பில் சாய்ந்து விட்ட உணர்வுடன் விழிகளை மூடிக் கிறங்கித் தவித்தாள் அவள்..
பூச்சுடியிருந்த அவளது கூந்தலின் வாசம் பரணிதரனை அலைக்கழித்து.. அவள் வேண்டியபடி அவளை மார்பில் சாய்த்துக் கொள்ள அவனது உள்ளம் துடித்தது..
“கனவு கண்டு எந்தன்..
கண்கள் மூடிக் கிடந்தேன்..”
என்று அவள் தொடர்ந்து பாடிய போது அவளது கனவின் நாயகன் அவன்தான் என்பதில் இறுமாப்புக் கொண்டான் அவன்..
அவளது முகத்தில் விரவியிருந்த மென்மை அவனை ஈர்த்தது.. அதைவிட மென்மையாக..
“காற்றைப் போல வந்து..
கண்கள் மெல்லத் திறந்தேன்..”
என்று பாடலிலேயே அவளைத் தொட்டுத் திறந்து காதல் செய்தான்..
“காற்றே..! என்னைக் கிள்ளாதிரு..”
தாளமுடியாத தவிப்புடன் அவள் பாட.. அவனோ..
“பூவே..! என்னைத் தள்ளாதிரு..”
என்று பாடலில் அவளை இறுக்கிக் கொண்டான்.. கூட்டம் சலசலப்பை நிறுத்திப் பாடலில் கலந்து விட்டிருக்க.. மலர்நிலா ஏதோ ஓர் குளிர்நதியில் இறங்கியிருந்தாள்..
“உறவே..! உறவே..! உயிரின் உயிரே..!
புதுவாழ்வை தந்த வள்ளலே..”
என்றபடி அவனை அணுகி அவன் மார்பில் சாய்ந்து விட்டாள்..
“மலரே..! மௌனமா..?
மௌனமே.. பேசுமா..?”
பூச்சூடிய அவளது கூந்தலில் முகம் புதைத்து பரணிதரன்.. பாடலை முடித்த போது சம்பத் பல்லைக் கடித்தபடி மகேந்திரனிடம்.
“போய் உன் தங்கையை இழுத்துக்கிட்டு வாடா.. வீட்டைப் பார்த்துக் கிளம்பலாம்..” என்று அடிக்குரலில் உறுமினார்..
மகேந்திரன் அதி மெதுவாக எழுந்தான்.. அதைவிட மெதுவாக மேடையை நோக்கி நடந்தான்.. சம்பத்திற்கு மகனின் மெத்தனம் ஆத்திரத்தைக் கொடுத்தது.. அவரே போய் மகளை இழுத்து வரலாம்தான்.. அதனால் நிலைமை இன்னமும் மோசமாகி விடும்.. ஏற்கனெவே பரணிதரனுக்கும் மலர்நிலாவுக்கும் காதல் இருக்கிறது என்ற செய்தி உறவினர் வட்டாரத்தில் பரவி விட்டது.. அதை இப்போது மேடையில் பரணிதரனும் மலர்நிலாவும் உறுதிபடுத்தி விட்டார்கள்.. மலர்நிலாவுக்கு விருப்பமில்லாத நிச்சயத்தை சம்பத் நடத்த இருந்தார்.. அதை மலர்நிலா நிறுத்தி விட்டாள் என்பதும் உறவினர் மத்தியில் பரவியிருக்கும்.. அதை ஊர்ஜிதம் செய்வதைப் போல சம்பத் நடந்து கொள்ளக் கூடாது.. அவரது உறவினர் வட்டாரத்தில் அவரைவிட கிரிதரனுக்குத்தான் அதிக செல்வாக்கு இருந்து..
மகேந்திரன் பொன்னே, பூவே என்று அடி மேலடி வைத்து மேடையில் ஏறி.. இயல்பாக மலர்நிலாவின் தோளைத் தொட்டான்.. தந்நிலை மறந்து பரணிதரனின் மார்பில் கண்மூடி நின்றிருந்த மலர்நிலா தமையனின் தொடுகையில் விழிதிறந்து விலகி நின்றாள்..
“எப்படியிருக்க மகி..?” எதுவும் நடக்காததைப் போல கை நீட்டினான் பரணிதரன்..
“பார்த்து ரொம்ப நாளாச்சில்ல..?”
அவனது இயல்பான நடவடிக்கை மகேந்திரனைக் கவர்ந்தது.
“நாள்களா..? வருசங்களாகுது பரணி..”
பரணிதரனின் நீட்டிய கைகயைப் பிடித்துக் குலுக்கினான் மகேந்திரன்.. இந்துபிரியாவுக்கு அவளது கண்களையே நம்ப முடியவில்லை.. இமை கொட்டித் திறந்து பார்த்தாள்.. மேடையில் நண்பர்கள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்..
“ஐ மிஸ் யு மகி..”
காதலியிடம் சொல்வதைப் போல நண்பனிடம் சொன்னான் பரணிதரன்..
“நானும்தான்..” கீழுதட்டைக் கடித்துத் தலையை ஆட்டினான் மகேந்திரன்..
மலர்நிலாவுக்கு சந்தோசத்தில் அழுகைதான் வந்தது.. மேடையேறி தன் காதலை உற்றார் உறவினர் மத்தியில் கூவிச் சொல்ல வேண்டும் என்று அவள் நினைத்ததேயில்லை.. அத்தனை வருடமும் பரணிதரனை நெருங்காமல் தள்ளி நின்று அவள் மௌனப் பார்வை மட்டுமே பார்த்து வந்தது எதற்காக..? அவளுக்குத் திருமணம் பேசும் போது அவளது சம்மதத்தைக் கேட்பார்கள்.. அப்போது பரணிதரனின் மீதிருக்கும் காதலைச் சொல்லி.. அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதிபட அவளது மனதைத் தெரியப் படுத்தி விடலாம் என்றுதானே.. அது நடக்காமல் போய் விட்டதே.. அவளைப் பொற்றவர்களும், வளர்த்தவர்களும் அவளுடைய திருமண நிச்சயதார்த்தத்தையே அவளைக் கேட்காமல் நடத்திவிட முடிவு செய்து விட்டார்களே..
என்று அவளது விருப்பத்திற்கு மதிப்பில்லாமல் போனதோ.. அன்றே.. அனைத்து எல்லைகளையும் கடந்து.. தடைகளை உடைத்துப் பரணிதரனின் கைபிடித்துவிட வேண்டும் என்று மலர்நிலா முடிவு செய்து விட்டாள்..
அவளது எண்ணத்தை நிறைவேற்ற இப்படியொரு அதியற்புதமான மேடை கிடைத்த போது அதை விட்டு வைப்பாளா..?
பரணிதரனுடன் மனம் உருகப் பாடி.. பாடலின் முடிவில் அவன் மார்பில் தலை சாய்த்துக் கண்மூடி.. தன் காதலை மேடை போட்டு ஊர் முழுக்கச் சொல்லி விட்டாள்.. சம்பத் கோபப் படுவார்.. மேடைக்கு வந்து திட்டுவார்.. பரணிதரனுடன் கை கலப்பு வந்தாலும் வரலாம் என்றெல்லாம் அவள் மனதில் பயம் இருந்தாலும் வருவது வரட்டும் என்று துணிந்து நின்றாள்..
மேடைக்கு சம்பத் வரவில்லை.. மகேந்திரன் வந்தான்.. வந்தவன் பரணிதரனுடன் கட்டிப் புரண்டு சண்டை போடாமல்.. கட்டித் தழுவி நட்புப் பாராட்டினான்..
“அண்ணா..”
மலர்நிலா தழுதழுத்தாள்.. நண்பர்கள் இருவரும் அவளைத் திரும்பிப் பார்க்க அவர்களது அணைப்பில் அவளும் இணைந்து கொண்டாள்.. சம்பத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..
“மாலதி.. என்னதாண்டி நடக்குது..? உன் மகனுக்கு புத்தி கித்தி பேதலித்து விட்டதா..?” மனைவியிடம் அவர் பொங்க ஆரம்பித்தபோது..
“வணக்கம் சம்பத்..” என்றபடி கிரிதரன் அவரிடம் வந்தார்.. அவர் பின்னாலே துளசியும், பவித்ராவும்..
உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்..
“வணக்கம்..” என்று பதிலுக்கு சொல்லி வைத்தார் சம்பத்..
“சௌக்கியங்களா அண்ணா..?” துளசி பாசமாக கேட்டாள்..
என் சௌக்கியத்தைப் பற்றி உனக்கு என்ன அக்கறை என்று உறும முடியாத சூழ்நிலைக் கைதியாக..
“ம்ம்ம்..” என்று முணுமுணுத்து வைத்தார் சம்பத்..
“ஹாய் மாமா..” பவித்ரா தன் பங்குக்கு உறவு கொண்டாட.. சின்னப் பெண்ணிடம் எப்படி விரோதம் பாராட்டுவது என்று மண்டை காய்ந்தபடி சிரிக்க முடியாமல் சிரித்து வைத்தார்..
“நாங்க சென்னைக்குப் பெண் கேட்டு வருகிறதா இருந்தோம் சம்பத்.. என் மகன் பரணிக்கு உங்க பெண் மலர்நிலாவை ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.. நெருங்கிய சொந்தமா வேற இருக்கோம்.. நாம சம்பந்தம் பண்ணிக்கிறதில தடையேதும் இல்லையே..”
கூடிய கூட்டத்தின் மத்தியில்.. உறவினர்கள் புடைசூழ பெருத்த கோடிஸ்வரரான கிரிதரன் தன் மகனுக்குப் பெண் கேட்டு விட்டார்.. சம்பத் தன் பெண்ணைக் கொடுக்கிறேன் என்று போகவில்லை.. இதைவிட பெருத்த கௌரவம் இருக்க முடியாது.. சம்பத்தின் உறவினரின் மத்தியில் அவருடைய செல்வாக்கு கூடுதலாகும்..
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.