Chapter 23
சன்னமான விசிலுடன் எம்.டி அறைக்குள் நுழைந்த பரணிதரனை விரக்தியுடன் பார்த்து வைத்தான் இளங்கோ..
“ஹாய் இளங்கோ.. ஹவ் ஆர் யு..?” என்றபடி நண்பனின் தோளில் ஓங்கி ஒர் தட்டு தட்டி விட்டுச் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து சுழன்று திரும்பி மேஜையில் இருந்த கம்யூட்டரில் அன்றைய மெயிலைப் பார்க்க ஆரம்பித்தான் பரணிதரன்..
அவன் நலம் விசாரிக்கத் தோளில் தட்டிய வேகத்தில் தலை குப்புற மேஜை மீது கவிழ்ந்து விழுந்து நிமிர்ந்து பார்த்த இளங்கோ..
“உனக்கே இது நியாயமா இருக்காடா பரணி..?” என்றான் பரிதாபமாக..
“எந்த நியாயத்தைச் சொல்கிற..?” கம்யூட்டரின் திரையை விட்டுப் பார்வையை நகர்த்தாமல் கேட்டான் பரணிதரன்.
“அதுசரி.. ஆயிரத்து ஐந்து நியாயம் வைச்சிருக்கிறவனுக்கு எந்த நியாயம்ன்னு தனியா எதையும் தெரியாதுதான்.. நேத்து ஈவினிங் என்னைப் பார்த்த..”
“யெஸ்.. யெஸ்.. ஆபிஸ் முடிந்தப்போ பார்த்தது..”
“என்னவோ ஆபிஸ் திறந்தப்பவே ஆஜராகி விட்டதைப் போலயில்ல பேசுகிற.. நீ ஈவினிங்தான் வந்த.. காலையில இருந்து மில்லையும் ஆபிசையும் கட்டிக் காப்பாத்தினது நான்.. நினைவில இருக்கட்டும்..”
“அதுதானே உன் வேலை..? நான் இருக்கிறப்ப ஓ.பி அடிக்கிற இல்ல.. இல்லாதப்ப ஆபிசைப் பார்த்துக்கிறது பெரிய விசயமா..? அந்த ஒரு வேலையைத்தான் உருப்படியாய் செய்கிற..”
“சொல்லிக் காட்டறியா..?”
“ஆமாண்டா.. சொல்லித்தான் காட்டறேன்.. என்னங்கிற..?”
“எதுவும் சொல்லலை.. சொன்னாச் சொல்லிட்டுப் போ.. நான் சொல்ல வந்தது என்னன்னா.. நேத்து ஈவினிங் பார்த்தவனை இன்னைக்குக் காலையிலே.. பத்து வருசத்துக்கு அப்புறம் ஃபாரின்ல இருந்து திரும்பி வந்து குசலம் விசாரிக்கிறதைப் போல இப்படியா ஓங்கி ஒரு மொத்து மொத்தி விசாரிப்ப..? தோள்பட்டை விண்ணு விண்ணுன்னு தெறிக்குதுடா..” இளங்கோ தோள்பட்டையை நீவி விட்டுக் கொண்டான்..
“ஊஹீம்..?” அப்போதும் நண்பனைத் திரும்பிப் பார்க்காத பரணிதரன்.
“வீட்டுக்குப் போனதும் உன் பெண்டாட்டியை ஒத்தடம் வைத்து விடச் சொல்லு..” என்றான்..
“நண்பனாடா நீ.. மிச்சம் மீதியிருக்கிற தோள்பட்டையையும் அவள் பிய்த்து விட வழி சொல்கிறியா..?”
“பெரிசா ஆபிசில் ஃபிலிம் காட்டிக்கிட்டு இருக்கிற.. ஃபேஸ் புக்கில உன் அறச்சீற்றத்துக்கு ஆயிரம் லைக்ஸ் வந்து விழுகுது.. பெண்டாட்டிக்குப் போய் இந்த பயம் பயப்படற..”
“பரணி.. ஆண்கள் எல்லாம் அறச்சீற்றங்களை வெளியுலகத்தில் காட்டி விட்டு வீட்டுக்குள்ளே பெண்டாட்டியிடம் பம்மி வாழ்வதே சாலச் சிறந்ததுடா மச்சான்..”
“இன்றைக்குத் தத்துவம் நம்பர் ஒன்னாக்கும்.. அப்படிச் செய்யலைன்னா என்ன ஆகுமாம்..?”
“பெண்டாட்டியோட கரச் சீற்றத்துக்கு ஆளாகனும்டா மச்சான்.. கட்டைப் பிரம்மச்சாரி.. உனக்கெங்கே இது தெரியப் போகுது..? நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆகுமில்ல.. அப்போத் தெரியும்..”
“ஈஸிட்..? அவ அடிப்பாளா..?” ரசித்துக் கேட்டான் பரணிதரன்..
பெண்டாட்டியின் கையில் அடி வாங்குவதைப் பற்றி ஒரு மனிதன் இத்தனை ரசனையுடன் பேசுவானா என்று விசித்திரமாக அவனைப் பார்த்தான் இளங்கோ..
“அவ மலர்டா.. அடிச்சா வலிக்காது..”
“அடேய் நண்பா..! உன்னை மாவீரன்னு நினைச்சேண்டா..”
“எந்த மாவீரனும் காதலியிடம் கத்தியைத் தூக்க மாட்டாங்க.. பூப்போட்டுக் கொண்டாடத்தான் செய்வாங்க.. அதைப்பத்தி உனக்கு என்னடா தெரியும்..? முன்னப் பின்னக் காதலித்துப் பார்த்திருந்தாத் தெரியும்.. ஏன் இளங்கோ..”
“என்னடா பரணி..?”
“நீ ஏன் ரத்னாவைக் காதலிக்க டிரை பண்ணக் கூடாது..?”
பரணிதரன் கேட்ட கேள்வியில் இளங்கோவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.. நண்பன் என்னவோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட்டதைப் போல
“யாரு..? நானு..? ரத்னாவைக் காதலிக்க டிரை பண்ணனும்..? போடா டேய்..” என்றான்..
பரணிதரன் மெயிலைப் பார்த்து முடித்து விட்டுச் சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பி நண்பனைப் பார்த்தான்..
“உன் பெண்டாட்டியைத்தானேடா காதலிக்கச் சொன்னேன்..? ஊரான் பெண்டாட்டியைக் காதலிக்கச் சொன்னதைப் போல இப்படிப் பதறுகிற..? வாட்’ஸ் யுவர் பிராப்ளம் மை டியர் பிரண்ட்..?”
“என் பெண்டாட்டிதாண்டா பிராப்ளம்.. ஒரு நாளைக்கு ஒர்தடவை சண்டை போட்டா ஓகே.. நான் வீட்டில் இருக்கிற ஒவ்வொரு செகண்டிலயும் சண்டை போட்டா என்னத்தடா செய்வேன்..? வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா மச்சான்..”
“அதான்.. கூறாமல் சன்யாசம் வாங்கிக்கலாம்ங்கிற டிசிசனோட இருக்கிறவனைப் போல முகத்தைத் தூக்கி வைச்சுக்கிட்டு இருக்கிறயா..? சகிக்கலை..”
“இதைத்தான் அவளும் சொல்கிறா..”
“என்னன்னு..”
“என் முகத்தைப் பார்க்க சகிக்கலையாம்..”
“ஹா.. ஹா..”
“என் பிழைப்பு உனக்குச் சிரிப்பா இருக்கு..? நடத்து.. நடத்து..”
விரக்தியில் வெந்து பேசின நண்பனின் முன்னால் குனிந்த பரணிதரன் கண்சிமிட்டினான்..
“நான் உன் காதலியில்லடா..” நினைவுருத்தினான் இளங்கோ..
“அடச்சீ.. சொல்கிறதைக் கேளு.. நீ வீட்டில இருக்கிற ஒவ்வொரு செகண்டிலும் சண்டை வருதில்ல..? ஏன் வீட்டில இருக்கிற..?”
“சன்யாசம் வாங்கிக்கிட்டு ஓடிப் போய் விடச் சொல்கிறயா..?”
“நீ திருந்தவே மாட்டியா..? ரத்னா உன்னிடம் சண்டையிழுக்கிறதில தப்பே இல்லை.. பேச விடுடா..”
“சரி.. சரி.. வாயை மூடிக்கிட்டேன்.. சொல்லு..”
“ரத்னாவை வெளியில கூப்பிட்டுக்கிட்டுப் போ..”
“வெளியிலயா..? எங்கே கூப்பிட்டுக்கிட்டுப் போக..”
“இம்சைடா உன்னோட.. இப்படிக் கேட்கிறவனை பெண்டாட்டி வீடு கட்டித்தான் அடிப்பா.. சினிமா.. கோவில்.. டூரிஸ்ட் ஸ்பாட்டுன்னு கோயம்பத்தூரில அவுட்டிங் போக இடத்துக்கா பஞ்சம்..? பக்கத்திலதான் பிளாக் தண்டர் இருக்கு.. ஊட்டி இருக்கு..”
“ஏண்டா ரிஸ்க் எடுக்கச் சொல்கிற.. வீட்டுக்குள்ள அடி வாங்கினா வெளியில தெரியாது.. இவ சண்டைக்கு பயந்தே நான் ஹனிமூன் டிரிப்பையே கேன்சல் பண்ணிட்டேன்..”
“அதுதான் அடி பின்னியெடுக்கிறாப்புல போல.. அடேய் இளங்கோ.. ஆளில்லாத வீட்டுக்குள்ள சொர்ணாக்காவா இருக்கிற பெண்கள் எல்லாம் ஆளிருககிற வெளியுலகத்தில அமைதியின் சிகரமா மாறி விடுவாங்க.. அப்படியே மெயின்டெயின் பண்ணினேனான்னா அமைதியின் சிகரமே அவங்க சுபாவமா மாறி விடும்டா..”
“என்னவோ போ பரணி.. எனக்கென்னவோ.. நீ சொல்கிறது வொர்க் அவுட்டாகும்ன்னு தோணலை..”
“டிரை பண்ணிப் பாருன்னுதான சொல்கிறேன்.. நல்ல மூடில இருக்கேன்.. இந்தா.. ஒன் வீக் லீவைப் பிடி.. ஊட்டிக்கு ரத்னாவுடன் எஸ்கேப் ஆகு.. தனியா ஓடப் போகிறானாம்.. பெண்டாட்டியோடு ஓடுடா.. வாழ்கையே சொர்க்கமா மாறிரும்..”
“உனக்கென்னடா.. கட்டை பிரம்மச்சாரி.. கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட இம்சையைப் பற்றி உனக்கென்ன தெரியும்..?”
புலம்பிக் கொண்டே வீட்டுக்குப் போனான் இளங்கோ.. காலிங் பெல்லின் சப்தத்தில் கதவைத் திறந்த அவனது தர்மபத்தினி ரத்னா அவனை சந்தேகமாகப் பார்த்தபடி..
“இப்பத்தான் ஆபிஸ் போனிங்க..? போன வேகத்தில்
திரும்பி வந்திருக்கீங்க என்ன..? வேலையை விட்டு ஓட்டி விட்டுட்டாங்களா..?” என்று கேட்டாள்..
“ஏண்டி..? உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா..?”
“உங்க மூஞ்சியைப் பார்த்தா வராது..”
“இந்த மூஞ்சி வேண்டாம்ன்னு உன்னைப் பொண்ணுப் பார்க்க வந்த போதே உங்கப்பனிடம் சொல்லியிருந்தா நான் தப்பிப் பிழைச்சிருப்பேனேடி.. தறுதலை..”
கோபத்தில் இளங்கோ வாய் விட்டுவிட ரத்னா பத்ரகாளி அவதாரமெடுத்தாள்..
“யாரு தறுதலை..?” என்று ஆரம்பித்தவள்.. இளங்கோ தறுதலை.. அவனைப் பெற்றவர்கள் தறுதலை.. அவனுடன் பிறந்தவர்கள் தறுதலை.. ஏன்.. ஒட்டு மொத்த அவனது பரம்பரையே தறுதலைப் பரம்பரை என்று கழுவி ஊற்றி முடித்தாள்..
‘இவ கூட ஊட்டிக்குப் போயிட்டாலும்..’ வெறுத்துப் போனான் இளங்கோ.. யோசனை சொன்னவன் நண்பன் மட்டுமல்ல.. முதலாளியும்கூட என்பதினால் வேண்டா வெறுப்பாக பெட்டியில் துணிகளை அடுக்க ஆரம்பித்தான்..
“என்ன இது..? எங்கே ஓடிப் போக பிளான் பண்ணியிருக்கீங்க..?” ரத்னா அடுத்த சண்டைக்கு ஆயத்தமானாள்..
“தனியா ஓடப் போவதில்லை..”
“பின்னே..? பக்கத்து வீட்டுக்காரியைக் கூப்பிட்டுக்கிட்டு ஓடப் போறிங்களா..?”
“ஏண்டி.. உன்னிடம் அடி வாங்கறது பத்தாதுன்னு ஊர் முழுக்க அடி வாங்கச் சொல்கிறியா..? பக்கத்து வீட்டு பாமா என் தங்கைபோல.. அவளோட புருசன் பயில்வான் பரமசிவம் எனக்குத் தெய்வம் போல..”
“பிழைச்சுக்குவீங்க போங்க.. வேற யார்கூட ஓடப் போறிங்க..”
“என்ற வூட்டுக்காரிகூட ஓடப் போறேன்.. உன் துணிகளை பேக் பண்ணு.. கிளம்பியாகனும்..”
“என் துணிகளையா..?” ரத்னாவால் நம்பவே முடியவில்லை..
“உன் துணிகளைத்தான் பேக் பண்ணச் சொன்னேன்.. ஒரு வாரம் லீவ் கிடைத்திருக்கு.. ஊட்டிக்குப் போய் வரலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கேன்..”
“பொய்தானே..”
அப்போதும் நம்ப முடியாமல் ரத்னா கேட்டாள்.. இளங்கோ ஒன்றைக் கவனித்தான்.. அவளிடம் இருந்த கோபமும், சலிப்பும், எரிச்சலும், சிடுசிடுப்பும் காணாமல் போயிருந்தன.. ஓர்வித எதிர்பார்ப்பும் மிருதுதன்மையும் முகத்தில் வந்திருந்தன..
‘என்னடா இது..! இவ என் பெண்டாட்டிதானா..?’
இளங்கோவே ரத்னாவுக்கான உடைகளை அடுக்க ஆரம்பித்தான்.. மலைத்து நின்ற மனைவியை இழுத்துக் காரில் உட்கார வைத்து ஊட்டிக்குக் காரை விரட்டினான்.. பரணிக்குச் சொந்தமான ஹோட்டலில் இளங்கோவுக்கான அறை தயாராக இருந்தது.. அங்கே கணவனுக்குக் கிடைத்த மரியாதையில் ரத்னாவுக்கு கால் தரையில் பாவவில்லை.. அந்தரத்தில் மிதந்தாள்..
ஒருவார காலம் ஓடியதே தெரியவில்லை.. காலையில் எழுந்ததும் ஊர் சுற்றப் போனார்கள்.. ஏரியில் படகு சவாரி செய்தார்கள்.. பூங்காக்களை வலம் வந்தார்கள்.. ஓங்கி வளர்ந்திருந்த யூகலிப்ட்ஸ் மரங்களுக்கு மத்தியில் குதிரை சவாரி செய்தார்கள்.. இரவின் மடியில் ரத்னா புரண்டு படுத்து இளங்கோவை அணைத்துக் கொண்டதில் இது கனவா, நனவா என்று இளங்கோ பிரமித்துப் போனான்.. ஊட்டியின் ஊசி முனைக் குளிர் உடலைத் தாக்கியது.. அதற்கு இதமாக மனைவியின் நெருக்கம் இருந்ததில் அவன் கள்ளுண்ணும் வண்டானான்.. அது போன்ற காதலையும் காமத்தையும் அதுவரை அவன் மனைவி கொடுத்ததேயில்லையே..
ஊட்டியை விட்டுத் திரும்பி வந்தபோது இளங்கோவும், ரத்னாவும் ஈருடல் ஓருயிராக மாறியிருந்தார்கள்..
“எப்புடிடா..? நீயே கல்யாணமாகாதவன்.. இந்தச் சூட்சுமம் உனக்கு எப்படித் தெரிந்தது..?”
“உனக்கு ஏன் தெரியலை..?” பரணிதரன் பதிலுக்கு கேட்டான்.
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.