Chapter 01

0Shares

“ஒன்றானவன்.. உருவில் இரண்டானவன்..

          உருவான செந்தமிழில் மூன்றானவன்..”

அருள்மிகு கைலாசநாதரின் கோவில் முன்னால் நீண்டிருந்த கடை வீதியிலிருந்த ஒரு கடையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

கைலாசநாதர் கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் கீர்த்தனா.. அதை வாஞ்சையுடன் பார்த்த கைலாசத்தை பார்த்து இதமாகச் சிரித்தபடி அவர் நடக்கத் தோள் கொடுத்தாள்..

“உங்களுக்குத்தான் முடியலையே தாத்தா… கோவிலுக்கு வந்துதான் ஆகனுமுன்னு அடம் பிடிக்காட்டித் தான் என்ன..?”

“நடையுடை பாவனையா இருக்கிறப்ப என்னால எப்பல்லாம் முடியறதோ.. அப்பல்லாம் கோவிலுக்கு வந்துட்டுப் போயிரனும்.. அதுக்கப்புறம் நீ சொல்கிறதைப் போல வீட்டிலேயே சாமி கும்பிட்டுக்கிற வேண்டியது தான்…”

“அது மட்டும்தான் காரணமா..? வேற ஒரு காரணமும் இருக்கே.. அதை நான் கண்டுபிடிச்சு வைச்சிருக்கேனே..”

தாத்தாவிடம் விளையாட்டாக தலையை ஆட்டிய கீர்த்தனாவின் காதுகளில் இருந்த ஜிமிக்கி அவளுடைய தலையாட்டாலுக்கு ஏற்றபடி ஆடியது… கண்கள் பிரகாசிக்க.. முகம் மலர.. மனம் விட்டுச் சிரித்த பேத்தியை வாத்சல்யத்துடன் ரசித்தார் கைலாசம்…

‘இவளுக்காகத்தான் நான் கோவில் பக்கம் வருகிறேன்னு இவ கண்டுபிடிச்சிருப்பாளோ..’ பெருமூச்சு விட்டார்..

எங்கே..? அவர்களின் வீடான மங்கள பவனத்தில் கீர்த்தனாவை உட்கார விடுவதே இல்லையே.. அதிகாலையில் எழுந்து கொள்ளும் பெண்ணை.. பம்பரமாக சுழல விடுகிறோமே என்று அந்த வீட்டிலிருந்த யாருக்கும் மனச்சாட்சி உறுத்தவில்லையே..

காபி வேண்டுமா.. “கீர்த்தனா..” காலை உணவு வேண்டுமா.. “கீர்த்தனா..” அறையை சுத்தம் பண்ண வேண்டுமா.. “கீர்த்தனா..” மதிய உணவுக்கு மெனு சொல்ல வேண்டுமா.. “கீர்த்தனா..” மாலை காபி டிபன் வேண்டுமா “கீர்த்தனா..” இரவு உணவு தயாராக வேண்டுமா.. “கீர்த்தனா..” 

கீர்த்தனா.. கீர்த்தனா.. கீர்த்தனா தான்…

அந்த வீட்டில் உள்ள அனைவரும் அனைத்து தேவைகளுக்கும் உச்சரிக்கும் ஒரே பெயர் கீர்த்தனாதான்..

அவள் அவற்றை மட்டும் கவனிக்கவில்லை.. அந்த வீட்டின் மோட்டார் பழுதடைந்தால் ரிப்பேர் பண்ண மெக்கானிக்கை வரச் சொல்லும்.. வேலையையும் அவள் தான் செய்தாள்.. கரண்ட் போனால் எலக்ட்ரிஷியனை வரவைக்கும் வேலையையும் அவள்தான் செய்தாள்..

தோட்டத்துப் பூச்செடியிலிருந்து.. சமையல் செய்யும் காய்கறிகள்வரை அனைத்திலும் அவளின் தேவை.. அந்த வீட்டுக்குத் தேவையாக இருந்தது.. அந்த வீட்டின் சுழற்சிக்கான மைய ஆணியாக அவள் இருப்பதைப் பாராட்டிப் பேச மட்டும் எவரும் அந்த வீட்டில் முன் வரவில்லை…

காலில் சக்கரம் மட்டும்தான் இல்லை.. மற்றபடி ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் கீர்த்தனாவுக்கு சிரிக்கக் கூட நேரமில்லை.. அந்த இளம் பருவத்தில் பொறுப்புக்களின் சுமைகளில் அழுந்திக் கொண்டிருப்பவளுக்கு சில நிமிடங்களுக்காவது விடுதலை கொடுக்கலாமே என்ற எண்ணத்தினால்தான்.. தனது தள்ளாமையையும்.. உடல் சிரமத்தையும் பொருட் படுத்தாமல் அவளை துணைக்கு அழைத்துக் கொண்டு கைலாசம் கோவிலக்கு வந்து விடுவார்..

அவரைத் தனியாக அனுப்ப முடியாது என்பதினால் அந்த சில நிமிடங்களுக்கு கீர்த்தனாவைத் தேடாமல் அவருடன் அவரின் பேத்தியை அந்த வீட்டினர் அனுப்பி வைத்து விடுவார்கள்..

“பேத்தியோடதான் போகனும்னு சொல்லுவார்.. பேத்தியைத் தவிர வேற யாராலேயும் அவரைக் கட்டுப் படுத்திக் கூப்பிட்டுக்கிட்டு வந்துரவும் முடியாது.. வேற என்னதான் செய்கிறது..” என்பாள் கைலாசத்தின் மருமகளான விமலா..

மாமனாரிடம் அவளுக்கு மரியாதை உண்டென்றாலும்.. அவளை அதட்டி விட கைலாசத்தினால் முடியாது.. கணக்கில் அடங்காத சொத்துக்களுக்கு ஒற்றைப் பெண் வாரிசாய் சுந்தர வடிவேலை மணந்து கொண்டவள் அவள்..

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கைலாசத்தின் மகனான சுந்தர வடிவேல்.. ஒரே நாளில் கோடிஸ்வர வர்க்கத்தைச் சேர்ந்தவராக மாறினார் என்றால்.. அதற்கு விமலா மட்டுமே காரணமாக இருந்தாள் விமலாவின் கழுத்தில் அவர் தாலியைக் கட்டியதினால் மட்டுமே அந்த உயர்வு கிடைத்தது என்பதினால்.. விமலாவுக்கு அந்தக் குடும்பத்தில் செல்வாக்கு அதிகம்…

என்னதான் அவள் மருமகளாக இருந்தாலும்.. மற்ற மாமனார்.. மாமியாரைப் போல அவளிடம் கடிந்து பேச கைலாசத்தினாலும் முடிந்ததில்லை.. அவர் மனைவி கயல் விழியாலும் முடிந்ததில்லை.. கயல்விழி போனதற்குப் பின்பு.. மருமகளின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் இருக்கக் கற்றுக் கொண்டார் கைலாசம்…

கீர்த்தனா அவருடைய தம்பி மகளின் மகள்.. தாய் தந்தையற்றவள்.. அவளுடைய தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட.. கீர்த்தனாவின் தாய் ரத்னா.. வயலில் கூலி வேலை செய்து மகளை வளர்த்தாள்..

எளிமையான வாழ்வுதான்… குடியிருக்க குடிசைதான்.. குடிக்கக் கஞ்சிதான்.. உடுத்திக் கொள்ள இரண்டு செட் துணிகள்தான்..

ஆனாலும் அந்த வாழ்வில் ஆனந்தமாக இருந்தாள் கீர்த்தனா..

களையெடுத்தாலும்.. தன் மகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தாள் ரத்னா.. பள்ளியிறுதி முத்தவளை.. கடன் வாங்கி கல்லூரிக்கட்டணம் கட்டி.. கல்லூரியிலும் சேர்த்து விட்டாள்..

“குடிக்கிறது கூழோ.. கஞ்சியோ.. படிக்கிறது பட்டப் படிப்பா இருக்கனும்.. உன் காலில நீ நிற்கனும்..”

வைரத்தின் உறுதியோடு சொன்னவள்.. மண்ணுக்குள் போனபோது கீர்த்தனா அனாதையாக நின்றாள்.. அவளுக்கு அடைக்கலம் கொடுக்க யாருமில்லை.. முதல் வருடக் கல்லூரிப் படிப்பை மட்டுமே முடித்திருந்தவளை பட்டதாரியாக்கிப் பார்க்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு மண்ணுக்குள் புதைந்து போனாள் ரத்னா..

அவளுக்கு இதய நோயாம்.. அதை மறைத்து மகளுக்காக அவள் உழைத்திருக்கிறாள்.. பணம் காசைக் கொடுக்காத இறைவன்.. இது போன்ற உயிர் கொல்லி நோய்களையும் கொடுக்காமல் இருந்திருக்கலாமே என்று கீர்த்தனாவின் மனம் குமுறியது..

தாயில்லாத வாழ்வை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.. அவளில்லாத வாழ்வை வாழ அவள் விரும்பாத போது.. அடுத்து என்ன செய்வது என்ற கவலை எங்கேயிருந்து வரும்..?

அந்தத் தருணத்தில்தான் சிவகாசியிலிருந்து கைலாசம் வந்து இறங்கினார்.. தம்பி குடும்பத்தின் கடைசித் துளிராக நின்று கொண்டிருந்தவளை அரவணைத்துக் கொண்டார்…

“தாத்தா..” என்று கதறியவளைத் தட்டிக் கொடுத்தார்..

ரத்னாவின் இறுதிக் காரியங்களை குறையின்றி செய்து விட்டு கீர்த்தனாவைக் கையோடு அழைத்துக் கொண்டுதான் கிளம்பினார்..

“வாம்மா..”

“எங்கே தாத்தா..?”

“நம்ம வீட்டுக்கு..”

அவர் மறந்தும் என் வீடு என்று சொல்லவில்லை.. வேறுவழியேதும் இல்லாத கீர்த்தனாவிற்கு அவர் காட்டிய வழியில் நடப்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்க வில்லை..

நேற்றுப் போல்தான் இருந்தது.. அவள் மங்கள பவனத்தில் மிரட்சியுடன் கால் வைத்தது.. அவளை அறிமுகமற்ற பார்வை பார்த்த சுந்தரவடிவேலிடம்..

“இவ இனிமே இங்கேதான் இருக்கப் போகிறா..” என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்தார் கைலாசம்..

ஓரக்கண்ணால் நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்த விமலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.. அதுவரை அதைப் போல தன்னிச்சையாக எந்த முடிவையும் கைலாசம் எடுத்ததில்லை..

அவளின் ஆச்சரியமான பார்வையின் குறிப்பில் சுந்தர வடிவேல் முகம் சுளித்தார்..

“கஷ்டப் பட்டா பணஉதவி செய்யலாம்.. அதுவும் கட்டாயமில்லை.. அப்படியிருக்கிறப்ப நம்ம பொறுப்பில வயதுப் பெண்ணைக் குடும்பத்தில் சேர்த்துக்கனும்கிறது சரியாப்படலைப்பா..”

அந்த வார்த்தைகளில் கீர்த்தனாவின் முகம் கூம்பி விட்டதைக் கவனித்தார் கைலாசம்.. அழையாத விருந்தாளியாக அந்த வீட்டுக்கு வந்து விட்டதில் அவள் மனம் படும் பாட்டை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது..

“சுந்தரா..” குரல் உயர்த்தினார்..

விமலா இப்போது நேரடியாகவே மாமனாரைப் பார்த்தாள்..

“ஒன்று கீர்த்தனா நம்ம குடும்பத்தில ஒருத்தியா இந்த வீட்டில இருக்கனும்.. இல்லைன்னா.. நான் என் பேத்தியை அழைத்துக்கிட்டு நம்ம பழைய வீட்டுக்கு குடிபோயிரனும்.. இது ரெண்டில எது நடக்கனும்னு நீயே முடிவு பண்ணிக்க..” அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டார்…

கைலாசம் லோன் போட்டுக் கட்டிய வீடு அவரின் பெயரிலே இருந்தது.. அளவில் சிறியதாக இருந்த அந்த வீட்டை சொத்துக் கணக்கில் விமலா சேர்த்துக் கொண்டதே இல்லை…

கைலாசம் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.. அதில் வரும் வாடகையைத் தனியாக அவர் பெயரில் பேங்கில் போட்டுக் கொண்டு வந்தார்..

“ஏன்ப்பா.. உங்களுக்கு வேணும்னா லட்சக் கணக்கில் செலவுக்கு பணம் கொடுக்க நானிருக்கேன்.. என் மகன் வெற்றிவேல் இருக்கான்.. அதையெல்லாம் விட்டு விட்டு அந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை வந்திரும்ன்னு வேலை மெனக்கெட்ட அதை வாடகைக்கு விட்டு.. 

அந்த வாடகைப் பணத்தை வசூல் பண்ணி சேர்த்து வைக்கறிங்க..?” சுந்தரவடிவேல் கோபப்பட்டார்..

“அது என் வீடு சுந்தரா.. நான் சம்பாதிச்சுக் கட்டினது.. என் கடைசிக் காலம் வரைக்கும் அதை விக்கவும் மாட்டேன்.. அந்த வாடகைப் பணத்தை வாங்காம இருக்கவும் மாட்டேன்..” என்று உறுதியாக சொல்லி விட்டார் கைலாசம்..

அந்த வீட்டிற்கு தம்பியின் பேத்தியுடன் கிளம்பி விட்டவரைத் தடுத்து நிறுத்திய சுந்தர வடிவேலுக்கு 

என்ன செய்வதென்றே தெரியவில்லை.. விமலாவின் இறுகிய முகம் அவளுக்கு கீர்த்தனாவின் வரவைப் பிடிக்கவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்திக் கொண்டிருந்தது..

எப்போதும் மருமகளிடம் வழக்கடிக்காத கைலாசமோ அன்று பிடித்தபிடி.. உடும்புப் பிடியாக பிடிவாதமாக நின்றிருந்தார்..

உலக்கைக்கு ஒரு பக்கம் இடி.. மத்தளத்துக்கு..?

இரண்டு பக்கமும் இடிவாங்கும் மத்தளமான சுந்தரவடிவேல் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த போது.. கம்பெனியிலிருந்து வீடு திரும்பிய வெற்றிவேல் கீர்த்தனாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான்..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link