Chapter 04
எது நடக்க வேண்டுமோ.. அது நன்றாகவே நடந்தது.. தொழிற்சாலையில் மோகனரங்கம் எந்த அளவிற்கு மண்டகப்படியை வாங்கினாரோ.. அதற்குக் கொஞ்சம் கூட குறையாமல் மாலதிக்கும் மண்டகப்படி நடந்தது..
‘அந்த வகையில இவன் நியாயக்காரனில்ல…’
மோகனரங்கம் மனதுக்குள் மெச்சியதை மட்டும் மாலதி அறிந்திருந்தால்.. அவரை உண்டு.. இல்லை யென்று ஒருவழி பண்ணிவிட்டுத்தான் ஓய்ந்திருப்பாள்..
அடுத்தவர் மனதைப் படிக்கும் வித்தை அவளுக்குத் தெரியாததினால் அவர் தப்பிப் பிழைத்தார்..
ஆனால்.. அந்த மனதைப் படிக்கும் வித்தையை வெற்றிவேல் கற்று வைத்திருக்கிறானோ என்ற சம்சயம் வெகு நாள்களாக அவர் மனதில் இருந்தது..
“பாருங்க அத்தை.. சொந்த அண்ணன் குடும்பத்தைக் கூட யாரும் வீட்டோடு வைத்துக்க மாட்டாங்க.. நீங்க அப்படியில்லை.. சுற்றி வளைத்து மூக்கைத் தொடற சொந்தம்.. இருந்தும் அம்மாவோட உறவுக்காரங்களாச்சேன்னு அமைதியாப் போய்க்கிட்டு இருக்கேன்.. அதைப் புரிஞ்சுக்கிட்டு நீங்களும் அடக்கி வாசிக்கக் கத்துக்கங்க..”
“இல்லை.. தம்பி…”
“உங்க விளக்கமெல்லாம் எனக்குத் தேவையில்லை.. கனகாதான் மாவரைச்சுக்கிட்டு இருக்குன்னு தெரியுதில்ல.. அப்புறம் எதுக்காக அதைக் கூப்பிட்டிங்க..?”
“சும்மாவும் கூப்பிடலைங்கய்யா.. சொடக்குப் போட்டுக் கூப்பிட்டாங்க..” கனகா எடுத்துக் கொடுத்தாள்..
‘அடிப்பாவி.. நேரம் பார்த்துப் போட்டுக் கொடுக்கிறாளே..’ மாலதி மனதுக்குள் குமைந்தாள்..
“இது வேறயா..? சுத்தம்.. ஏன் அத்தை.. நீங்க மனுசங்களை மதிக்கவே மாட்டிங்களா..?”
இந்தக் கேள்வியை கொஞ்சம் கூட மட்டு மரியாதை காட்டாமல் துச்சமாக மாலதியைப் பார்த்தபடி வெற்றிவேல் கேட்டதைத்தான் மாலதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
“வேலைக்காரிக்கு மரியாதை கொடுக்கனும்.. மதிக்கனும்னு சொல்லத் தெரியறவனுக்கு.. அதே மரியாதையையும்.. மதிப்பையும் அத்தைக்கு கொடுக்கனும்னு மட்டும் ஏன் தெரிய மாட்டேங்குது..?”
கணவரிடம் அவள் புலம்பிய போது..
“எனக்கு மட்டும் எப்படிடீ மாலதி தெரியும்..?” என்று அவர் பரிதாபமாக கேட்டார்..
வெற்றிவேலின் மனதில் என்ன ஓடுகிறது என்று அவனைப் படைத்த பிரம்மானால் மட்டுமே கணிக்க முடியும் என்பது அவரின் தெளிவான முடிவாக இருந்தது..
மற்றபடி.. மானிடராகப் பிறந்தவரால் அவன் மனதில் என்ன சிந்தனையோட்டம் ஓடுகிறது என்று கணித்து விட முடியுமா என்ன..?
இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு லேசான முகச் சுளிப்புடன் அவன் பேசிய பேச்சில்.. இனி ஜென்மத்துக்கும் வேலையாள்களை வேலை ஏவ மாலதியால் முடியாது என்பதை புரிந்து கொண்டாள் மாலதி..
“எல்லாத்துக்கும் வேலைக்காரங்களை டிபண்ட் பண்ணாம.. கொஞ்சம் உங்க வேலைகளை நீங்களே செய்துக்கப் பழகிக்கங்க அத்தை..”
“ஆகட்டும் தம்பி..”
“இப்படிச் சொடக்குப் போடறது.. ‘ஏய்ய்’ன்னு அதட்டறது.. பக்கத்தில இருக்கிற பேப்பரை எடுக்கக் கூட.. தள்ளி நிற்கிற வேலைக்காரங்களைக் கூப்பிடறதுங்கிற வேலைகளை நீங்க விட்டிருங்க…”
“ஆகட்டும் தம்பி..”
“இனியொரு தரம் இதைப் போல கம்ப்ளெயிண்ட் என்னிடம் வரக்கூடாது.. பார்த்து நடந்துக்கங்க..”
“ஆகட்டும் தம்பி..”
“வேலைக்காரங்களும் மனுசங்கதான்.. மெஷின் இல்ல.. ஒரு அளவுக்குத்தான் அவங்க கிட்டயும் வேலை சொல்லனும்.. அதுக்கு மேலே சொன்னா.. அவங்க வேலையே வேணாம்ன்னு கிளம்பிப் போய்கிட்டே இருப்பாங்க.. நல்லா கவனத்தில வையுங்க.. அப்படி வேலைக்காரங்க போயிட்டாங்கன்னா.. அவங்க செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் நீங்கதான் செய்தாகனும்.. சொல்லிட்டேன்..”
“தம்பி..!”
மோகனரங்கத்திற்கு வந்த குளிர்காய்ச்சல் மாலதிக்கு வந்து விட்டது.. அத்துடன் வெற்றிவேல் விட்டு வைத்தானா..? தொழிற்சாலையில் மோகனரங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த சபாபதியை பாராட்டியது போல வீட்டில் மாலதியைப் போட்டுக் கொடுத்த கனகாவைப் பாராட்டித்தள்ளி விட்டான்..
“இப்படித்தான் இருக்கனும் கனகா…”
‘எப்படி இருக்கனும்னு சொல்றான்..?’
“அநீதியை எதிர்த்து தைரியமா குரல் கொடுக்கனும்..”
‘இவனே சொல்லித் தர்றானே..’
“என் அத்தைன்னு கூட நினைக்காம தைரியமா என்னிடம் வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணின பாரு.. அங்கதான் நீ நிற்கிற..”
‘அவ எல்லா இடத்திலயும் தான் நிற்கிறா..’
“உன்னோட இந்த நேர்மையைப் பாராட்டி..”
‘பாராட்டி..?’
“இந்த மாதத்தில இருந்து உனக்கு சம்பளத்தை 500 ரூபாய் ரெய்ஸ் பண்ணியிருக்கேன்…”
‘என்னது..?’
மாலதி அதிர்ந்து விட்டாள்.. அவளைப் போட்டுக் கொடுத்த ஒரே காரணத்திற்காக கனகாவின் சம்பளம் உயர்கிறது என்றால் அந்த வீட்டில் வேலை பார்க்கிற மற்ற வேலையாள்களுக்கும் சம்பள உயர்வை வாங்கி விட வேண்டுமென்ற ஆசை வந்து விடாதா..?
“இவன் அந்தத் திட்டத்தோடதானடி சம்பளத்தைக் கூட்டறான்..”
“இனி என்னங்க செய்கிறது..?”
“அடக்கி வாசிடி.. முடிஞ்சா வேலைக்காரங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா.. நீ செய்து கொடுத்திரு..”
“அடப்பாவி..! பெண்டாட்டிக்கு யோசனை சொல்கிற லட்சணத்தைப் பாரு..”
“என்னடி செய்கிறது.. இந்த டிரிக்கை ஃபாலோ பண்ணித்தான் கம்பெனியில நான் வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கேன்..”
இப்பேற்பட்ட தன்மானச் சிங்கத்தைக் கணவனாக அடைந்திருக்கும் மாலதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது…
“பேசாம பெங்களூருக்கு டிரெயின் ஏறிரலாமா..?”
“இந்த நினைப்பை உன் மனசிலயும்.. என் மனசிலயும் வரவைக்கத்தானே அவன் இவ்வளவு வேலை பார்க்கிறான்.. தெரிஞ்சும் இந்த வீட்டை விட்டு வெளியேறிலாம்ன்னு நினைக்க எப்படி மாலதி உனக்கு மனசு வந்துச்சு..?”
இந்தமுறை மோகனரங்கம் வேறு ஒரு நடிகரைப் போல பாவனை செய்ய மாலதி கொலைவெறியாகிப் போனாள்.. அவள் பார்த்த பார்வையில் அரண்டு போன மோகனரங்கம்..
“மாலதி.. நீ என் பத்தினிடி..” என்றார் பரிதாபமாக..
“ம்ம்..? கொலையும் செய்வாள் பத்தினின்னு கேள்விப் பட்டிருக்கீங்களா..? அதெல்லாம் கேள்விப் பட்டிருப்பீங்க.. இத்தனை சினிமாவைக் கரைச்சுக் குடிச்சவருக்கு இந்த டயலாக் மறந்து போகுமா..?”
“என்னடி.. இப்படி பயமுறுத்தற..?”
“பின்னே..? கல்யாணம் பண்ணிக்கிட்டவளை தன் வீட்டில உட்கார வைத்துச் சோறு போடறவன்தான் புருசன்.. இப்படி பத்து விட்ட தங்கச்சி வீட்டில பத்தோடு பதினொன்னா இருக்க வைக்கிறவனா புருசன்..?”
மாலதி கண்கலங்கி விட்டாள்.. அவளின் ஆவேசத்தில் அவரை அவன்.. இவன்.. என்று விளித்ததை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
‘என் பெண்டாட்டிதான சொன்னா.. வீட்டு வேலை செய்யற கனகாவா சொன்னா..?’ என்று தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டார் அவர்..
எதற்காக வீட்டுக்காரியுடன்.. வேலைக்காரியை இணை கூட்டி நினைத்தாரென்று அவருக்கே தெரிய வில்லை.. அவ்வபோது அவர் செழிப்பான கனகாவை ஓரக்கண்ணால் ஒரு மார்க்கமாக பார்த்து வைப்பார்தான்.. அதற்காக.. ஆழ் மனது வேளை கெட்ட வேளையிலா அடிமனதின் ஆசைகளை வெளிக் கொணர்ந்து வைக்கும்..?
‘நினைப்பே சரியில்லையே…’
இதே ரீதியில் போனால் வெகுசீக்கிரத்தில் வெற்றி வேல் அவருக்கு பைத்தியம் பிடிக்க வைத்து விடுவான் என்று அவருக்குத் தோன்றி விட்டதில்.. விடிய.. விடியத் தூங்காமல் விட்டத்தைப் பார்த்தபடி மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்..
அப்படியெல்லாம் பூமியை ஆள்கிற பொறுமையோடு அந்த வீட்டில் காலம் தள்ளிக் கொண்டிருந்த மோகன ரங்கத்துக்கும்.. மாலதிக்கும்.. கைலாசத்தின் கேள்வியில் வியர்த்துக் கொட்டியது.. வெற்றிவேலின் பார்வை அவர்கள் மீது படிந்ததில் அவர்களின் கலவரம் அதிகமானது…
‘இவன் சும்மாவே எங்களை பெட்டியை கட்ட வைக்கச் சொல்கிறதில குறியாய் இருப்பான்.. இப்ப இந்தப் பெரியவர் வேற கேள்வியைக் கேட்டு வைச்சிட்டாரா.. நீங்க இருக்கப் போய்தானே எங்களுக்கு இந்தப் பிரச்னைன்னு புதிதாய் ஒரு காரணத்தை உண்டு பண்ணி பெட்டியைக் கட்ட வைச்சிருவானோ..?’
வெற்றிவேலின் பார்வையும் அப்படித்தான் இருந்தது..
“கேட்டிங்களா அம்மா.. இதுக்குத்தான் நான் சொன்னேன்.. மாமா ஒரு பொஸிசனுக்கு வந்துட்டார்..
அவர் தனி வீடு பார்த்துப் போயிரட்டும்ன்னு.. எங்கே..? நீங்க கேட்டாத்தானே.. இப்பப் பாருங்க.. தாத்தாவும் இதையே காரணமாச் சொல்றார்..”
விமலாவிடம் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் வெற்றிவேல்.. விமலா யோசித்ததில் மோகனரங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது.. சிவகாசியில் இருந்து கொண்டு மங்களபவனத்தில் குடியிருக்காமல் தனி வீட்டில் குடியிருந்தால் அவரை யார்தான் மதிப்பார்கள்..?
“ஏய்ய்.. அவர் மங்களபவனத்தில் இருக்கிறவர்டா..”
இந்த வார்த்தைகளுக்கு சிவகாசியில் கிடைக்கும் மரியாதையை அனுபவித்துப் பழகி விட்டவரால் அதை இழந்து சிவகாசியில் பிழைப்பை நடத்திவிட முடியுமா..?
“தாத்தா கேட்கிறதிலயும் நியாயம் இருக்கேம்மா.. அவரோட தம்பி பேத்தி.. யாருமில்லாம அனாதையா நிற்கிறா.. அவளுக்கு நம்மை விட்டா வேற சொந்தமில்லை.. ஆதரிக்க ஆளில்லாம இளம் வயசுப் பொண்ணு தனியா வாழ முடியுமாம்மா..? நம்ம மாமாவுக்கு இத்தனை வயசாகிருச்சு.. அத்தையும் அவரும் தாராளமா தனி வீடு பார்த்துக்கிட்டுப் போகலாம்.. இருந்தும் அவங்க இந்த வீட்டிலதான் இருப்போம்ன்னு அடம் பிடிச்சுக்கிட்டு இருக்கிறப்ப.. இந்தப் பெண்ணும் இங்கே இருந்தா என்ன குறைஞ்சிரப் போகுது..? ஆப்டர் ஆல்.. இவளும் நம்ம உறவுக்காரப் பெண்தானேம்மா..?”
‘ஆப்டர் ஆல்..’ என்ற வார்த்தையை வெற்றிவேல் என்னவோ வெகு இயல்பாகத்தான் சொல்லி வைத்தான்.. ஆனால் அது போன்ற வார்த்தைகளைக் கேட்டறியாத கீர்த்தானாவின் இதயத்தில் அந்த வார்த்தை முள்ளாக தைத்தது…
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.