Chapter 05
600 வருட பழமை வாய்ந்த கைலாச நாதரின் கோவிலில் அந்திகால பூஜை நடந்து கொண்டிருந்தது.. ஓங்கிய கோபுரக்கலசத்தோடு இருந்த கைலாச நாதர் கோவிலின் வரலாறு சுவராஸ்யம் மிகுந்தது.. பழம் பெருமை வாய்ந்தது.. அந்தக் கோவிலுக்கு வருவதென்றால்
கைலாசருக்கு கொள்ளைப் பிரியமாக இருக்கும்..
தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ‘ஹரிகேசரி’ காசியிலிருந்து சிவலிங்கத்தைக் கொண்டு வந்து சிவகாசியில் நிலுவினார்.. காசியிலிருந்து வந்த சிவ லிங்கம் கோவில் கொண்ட இடமாதலால் அந்த ஊர் ‘சிவகாசி’ என்று அழைக்கப் படலானது.. 600 ஆண்டு கால பழமை கொண்ட வரலாற்றுப் பொக்கிசமான காசி விஸ்வநாதரின் கோவிலுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து போவார்கள்..
அன்றும் அதே போல.. கோவிலின் வாசலில் ஒரு டூரிஸ்ட்பஸ் வந்து நின்றது.. திமுதிமுவென இறங்கிய மக்கள் கூட்டம் கோவிலுக்குள் புகுந்தது.. வட இந்திய உடைகளையும்.. இந்தி பேசிய மக்களையும் கண்ட கீர்த்தனா…
“அப்பவே சாமி கும்பிட்டுட்டு வந்திருக்கலாம்.. நீங்க என்னவோ அடி பிரதட்சணம் வர்றதைப் போல மெதுவா வந்தீங்க.. இப்பப் பாருங்க.. கூட்டம் வந்திருச்சு..” என்றாள்..
“வந்தா என்னம்மா..?” இலகுவாக சொன்னார் கைலாசம்…
“என்னவா..? காலாகாலத்தில தரிசனம் பண்ணிட்டு வீட்டைப் பார்த்து ஓடியிருக்கலாமில்ல..?”
“ஏன்..? வீட்டுக்கு மெதுவாப் போனா ஆகாதா..? வீடு எங்கேயும் ஓடிப் போகாது.. கோவிலுக்குள்ள வந்திட்டா சாமியைப் பத்தி மட்டும்தான் நினைக்கனும்.. மத்த நினைப்பை மறந்திரனும்…”
“நீங்க பண்ற அழும்பு இருக்கே.. சும்மாவா அத்தான் உங்களுக்கு அட்டூழியத்தாத்தான்னு பெயர் வைச்சிருக்காரு.. எல்லாம் காரணப் பெயர்தான் தாத்தா…”
மீண்டும் ஜிமிக்கிகள் ஆட தலையை ஆட்டிச் சிரித்தாள் கீர்த்தனா.. ‘அத்தான்’ என்ற வார்த்தையைச் சொல்லும் போது அவள் முகத்தில் வந்து போன பரவசத்தில் அந்த முதியவரின் மனம் வலித்தது..
பழுத்த இலையின் அனுபவ பாடத்தை.. அப்போது தான் துளிர் விடும் தளிர் இலை அறியுமா..?
அவர் வாழ்ந்து பார்த்தவர்.. வாழ்ந்து முடித்தவர்.. மனதுக்குப் பிடித்தவனைப் பற்றிய பேச்சில் கன்னி மனதின் ரகசிய சந்தோசத்தை அவளின் முகம் காட்டிக் கொடுத்து விடும் என்ற ரகசியத்தை அறிந்தவர்…
அதைப் பாவம்.. அந்த சின்னஞ்சிறு பேதை அறிய மாட்டாள்…
அவள் மனதின் ரகசியத்தை யாரும் அறியவில்லை யென்ற எண்ணத்துடன் அவள் இருக்க.. அதை அறிந்தும்.. அறியாதவராக.. அந்தச் சின்னப் பெண்ணின் மனதிலிருந்த காதலுக்கு மௌன சாட்சியாக அந்த முதியவர் இருந்தார்..
அவளுக்கு வெற்றி வேலைப் பற்றிப் பேசப் பிடிக்கும்.. அப்படிப் பேசும் போது அவள் முகத்தில் ஓடும் பரவச அலைகளைக் காண முடியாமல் தவித்துப் போவார் கைலாசம்.. எதிர் காலமில்லாத அந்தக் காதலை விட்டு விடு என்று அவரால் எப்படி அந்த சின்னப் பெண்ணிடம் சொல்ல முடியும்..?
பொத்தி வைக்கும் மல்லிகை மொட்டுக்களின் வாசனையை மறைத்து விட முடியுமா..? கீர்த்தனா.. தன் மனதுக்குள் பொத்தி வைத்திருக்கும் காதலை யாரும் அறியவில்லை என்ற நிம்மதியோடு.. வாழ்கிறாள்.. அவர் யார்.. அந்த நிம்மதியைக் குலைக்க..?
அந்த வீட்டின் பொறுப்புக்களில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவளுக்கு வெற்றி வேலின் நினைவுகள் மட்டுமே இளைப்பாறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தன என்ற உண்மையை அவர் அறிவார்.. அந்த இளைப்பாறுதலை பேத்தியிடமிருந்து பறித்து விட அவருக்கு மனம் வரவில்லை..
கீர்த்தனா அவரிடம் மட்டும்தான் வெற்றிவேலைப் பற்றிப் பேசுவாள்.. மற்றவர்களிடம் அவனைப் பற்றி மூச்சுக் கூட விட மாட்டாள்.. அப்படிப்பட்டவளின் அந்தரங்கத்தில் இருக்கும் காதல் உணர்வுகளை அவர் அடையாளம் கண்டு விட்டதாக அவர் எப்படிக் காட்டிக் கொள்வார்..?
கீர்த்தனாவின் சந்தோசத்தைக் கலைக்க அவருக்கு மனம் வரவில்லை.. அவளுடைய பேச்சில் கலந்து கொண்டவராக..
“ஆமாம்.. உன் அத்தான் ரொம்பக் கண்டுட்டான்.. நான் அட்டூழியத்தாத்தான்னா.. நான் பெத்த அவனோட அப்பன் மட்டும் என்னவாம்..? அவனை அட்டூழிய அப்பான்னு சொல்லுவானா..?”
“அட்டூழிய டாடின்னு சொல்லுவார்..”
“அதுக்கப்புறம்.. அவன் யாரோட பேரன்..? என்னோட பேரன்தானே.. அப்ப அவன் அட்டூழியப் பேரனா ஆகிருவானா..?”
“அவர் அட்டூழியம் பண்ணினாலும் அதுவும் அழகாத்தான் இருக்கும் தாத்தா..”
கீர்த்தனாவின் வார்த்தைகள் மயக்கத்துடன் வெளி வந்தன.. கைலாசம் பெருமூச்சு விட்டார்.. அழகான தளிர்கொடி போன்ற அந்த சிறு பெண்ணின் அழகுக்கும்.. குணத்துக்கும்.. அன்புக்கும் முன்னால் யாராலும் நிற்க முடியுமா..?
அவள் தினந்தினம் தன் மனதோடு வெற்றி வேலிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.. அதைச் சொன்னால் அவருடைய பேரன் கேட்டுக் கொள்வானா..?
‘நான் அப்பவே சொன்னேன்… கேட்டிங்களா தாத்தா..? வயதுப் பெண்ணை குடும்பத்தில் சேர்த்துக் கிட்டா இப்படித்தான்..’ என்று பொங்கி விட மாட்டானா..?
ஒரு கை ஓசையைக் கொண்டதல்ல காதல்.. அது இரு கை ஓசையைக் கொண்டது.. கீர்த்தனா மட்டும் வெற்றி வேலோடு மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தால் போதுமா..? அவன் மனதிலும் அவள் இருக்க வேண்டாமா..? அவன் மனதோடு அவளிடம் பேச வேண்டாமா..?
வெற்றிவேல் அழுத்தமானவன்.. அவனுடைய விருப்பு வெறுப்புக்களை அவ்வளவு எளிதாக யாராலும் கண்டு பிடித்து விட முடியாது.. அவன் முகத்திலிருந்து எதையும் படித்துவிட முடியாது.. எதையும் வெளிப்-படுத்தாத இரும்பு மனிதன் அவன்..
அவனிடம் கீர்த்தனாவைப் பற்றிப் பேசுவதென்பது இயலாத ஒன்று..
கைலாசம் சிந்தனையுடன் பேத்தியைப் பார்த்தார்.. அவள் அழகாக பல்வரிசை தெரிய சிரித்தாள்..
“கோவிலுக்கு போகனுமுன்னு அடம் பிடிச்சு இந்தக் கைலாசநாதர் கோவிலுக்கு ஏன் வர்றீங்கன்னு எனக்குத் தெரியும்ன்னு சொன்னேனா.. இல்லையா..?”
“ஆமாம்.. சொன்ன..”
“அது என்னன்னு கேட்டிங்களா தாத்தா..?”
“என்னம்மா..?”
மனம் நடுங்கக் கேட்டார் கைலாசம்.. எங்கே.. அவள் பாட்டுக்கு.. என்னை வேலைச் சுமைகளில் இருந்து கொஞ்ச நேரத்துக்காவது காப்பாற்றலாம்ன்னுதானே கோவிலுக்கு கூப்பிட்டுக்கிட்டு வருகிறிங்க தாத்தா என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் அவளுக்கு..
அவளின் வேலைச் சுமைகளுக்காக அவர் இரக்கப் படுவதை அவள் தெரிந்து கொண்டால் அவளை மங்கள பவனத்தில் மூன்றாவது மனுஷியாக நினைத்து வேதனைப் படமாட்டாளா..?
அவளையும் மங்கள பவனத்தில் ஒருத்தியாக நினைத்துக் கொண்டுதானே அவள் அத்தனை வேலைகளையும் தலையில் சுமந்து கொண்டிருக்கிறாள்..?
“உங்க பெயரும் கைலாசம்.. இங்கே கோவில் கொண்டிருக்கும் ஈஸ்வரனும் கைலாசநாதர்.. அதனால தானே தாத்தா.. அடம்பிடிச்சு.. அழிச்சாட்டியம் பண்ணி.. தினமும் இந்தக் கோவிலுக்கு வந்துடறிங்க..? என்ன தாத்தா.. நான் சொன்னது கரெக்ட்தானே..?”
கன்னம் குழிய சிரித்து அவர் வயிற்றில் பாலை வார்த்தாள் அவருடைய பேத்தி..
‘நல்ல வேளை.. இவளுக்கு எதுவும் தெரியல..’
கைலாசத்தின் மனம் நிம்மதியானது.. அவர் பூவை விட மென்மையான பேத்தியின் முகவடிவில் லயித்துப் போனவராக ஆமாம் என்ற பாவனையில் தலையை ஆட்டினார்..
கைலாச நாதரரை வணங்கி.. விசாலாட்சி அம்மனையும் சேவித்து விட்டு அவர்கள் பிரகாரத்தை வலம் வந்தார்கள்.. கீர்த்தனா சளசளவென பேசிக் கொண்டே வந்தாள்.. தினந்தோறும் கோவிலுக்கு வருவதினால் அங்கே வழக்கமாக வந்து போகும் பெண்களில் அனேகம் பேருக்கு அவளைத் தெரிந்திருந்தது..
“என்ன.. கீர்த்தனா.. கோவிலுக்கு வந்தியா..?”
“இல்ல மாமி.. டென்னிஸ் விளையாட வந்தேன்..”
சிரிக்காமல் இவள் சொல்வதில் அந்த மாமி சிரித்து விட்டு நகர்ந்தாள்..
“டேய் கிச்சா.. எங்கேடா உங்க அம்மா..”
“அவங்க பக்கத்து வீட்டு ஆண்டிகூட வம்பு பேசிக்கிட்டு இருக்காங்க கீர்த்தனாக்கா..”
“இதுக்கு எதுக்குடா கோவிலுக்கு வரனும்.. வீட்டு வாசப்படியிலே உட்கார்ந்து கதையளந்தாப் போதாதா..?”
“இந்த ஐடியாவை நீங்க சொல்லி விட்டிங்கன்னு உங்க சார்பா அம்மாகிட்டச் சொல்லிரவாக்கா..?”
“கெடுத்தியே காரியத்தை.. ஏண்டா.. உன் அம்மாவுக்கும் எனக்கும் சண்டை மூட்டி விடனும்கிற நேர்த்திக் கடனை வைச்சிருக்கியா..?”
கீர்த்தனாவின் கலகலப்பில் கைலாசத்தின் மனம் நிறைந்தது..
‘இது.. இது.. இதுக்காகத்தான் நான் கோவிலுக்கு வாம்மான்னு உன்னைக் கூப்பிட்டுக்கிட்டு வரேன்ம்மா..’ நெகிழ்ந்தார்..
அந்த வீட்டில் இதுபோல கலகலப்பாக கீர்த்தனாவால் பேசிவிட முடியுமா..? இத்தனை கலகலப்புடன் இருப்பவள் வீட்டை நெருங்க.. நெருங்க.. அத்தனை கலகலப்பு களையும் ஒளித்து வைத்து விட்டு முகத்தை மூடி ஒரு பேசா மடந்தைப் போர்வையை போர்த்தி விடுவாள்.. அந்த போர்வைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் கலகலப்பான கீர்த்தனாவை.. மறுநாள் கோவிலுக்குப் போகலாம் என்று அழைத்து வந்து சில நிமிடங்களுக்கு சிறை மீட்பார் கைலாசம்..
‘எப்படியோ.. இத்தனை நெருக்கடியிலயும் டிகிரியை முடிக்க வைச்சுட்டேன்..’ நினைத்துக் கொண்டார்..
அதற்கு வெற்றிவேல் உறுதுணையாக இருந்தான்.. மற்றவற்றில் தன் தாத்தாவை ஆட்சேபிப்பவன்.. கீர்த்தனாவின் படிப்பு விசயத்தில் அவரை முழுமனதாக ஆதரித்தான்..
“பர்ஸ்ட் இயர் முடிச்ச பொண்ணு.. இன்னும் இரண்டே வருசம்தான்.. டிகிரி ஹோல்டராகிடும்.. இத்தனை நாளாய் படிச்ச படிப்பு வீணாய் போகிறதா..? கீர்த்தனாவுக்கு நான் காலேஜில் சீட் வாங்கிக் குடுக்கறேன்..”
சொன்னபடி சீட்வாங்கிக் கொடுத்து அவளை கல்லூரிக்கும் அனுப்பி விட்டான்…
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.