Chapter 06
வேகமாக மங்கள பவனத்துக்குள் வந்தான் வெற்றிவேல்.. ஹாலில் உட்கார்ந்து விமலாவிடம் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்த மாலதிக்கு அவனைக் கண்டதும் பேச்சு நின்று விட்டது..
‘இன்னைக்குன்னு பாத்து இத்தனை சத்தம் போடுவேனா..?’
தன்னைத்தானே நொந்து கொண்டாள்..
அவளைக் கண்டும் காணாததைப் போல வெற்றி வேல் மாடிக்குப் போய் விட்டாலும் அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.. அப்படியெல்லாம் வெற்றிவேலை எளிதாக எடை போட்டு விட முடியாது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து வைத்திருந்தவள் அவள்.. அவன் கண்டு கொள்ளவில்லை என்று எதையும் நினைத்துவிட முடியாது.. வேறு ஏதாவது ஒரு நிகழ்வின் போது.. அவன் கண்டு கொள்ள வில்லை என்று மற்றவர்கள் நினைத்து வைத்திருந்த நிகழ்வை.. அக்கு வேறு.. ஆணிவேறாக பிய்த்துக் கொட்டி விடுவான்..
அப்படி பலமுறை சிக்கிச் சின்னா பின்னமாகியிருக் கிறார் மோகனரங்கம்.. அந்தக் கதைகளை அறிந்து வைத்திருந்ததால் கூடுமானவரை வெற்றிவேல் இருக்கும் போது அறையைவிட்டு வெளியே வரமாட்டாள் மாலதி.. அன்று பார்த்து.. விமலாவுடன் கதை பேசும் ஆர்வம் வந்து தொலைத்ததில் ஹாலில் உட்கார்ந்து வாய் வளர்த்து விட்டாள்.. இல்லாவிட்டால் அவளாவது அறைக்கு வெளியே வருவதாவது..
‘உக்காந்தவ.. வாசலுக்கு நேரா உக்காந்து தொலைச்சிருக்கக் கூடாதா..? அவன் அங்கே வர்றப்பவே.. இங்கே வாயை அடக்கியிருப்பேனே..’ மாலதிக்கு ஆற்றாமையாக இருந்தது…
வெற்றிவேல் மாடிக்குப் போனபோது அவனது அறை திறந்திருந்தது.. புருவங்களை உயர்த்தியபடி உள்ளே போனான்.. அவனது மெத்தை விரிப்பை சரி செய்து விட்டுத் திரும்பிய கீர்த்தனா அவன் நிற்பதைக் கவனிக்காமல் அவன்மீது மோதி தடுமாறி விழப் போனாள்.. வெற்றிவேல் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.. பற்றுகோலைத் தேடும் கொடியாக அவன் கழுத்தை அவளது கரம் சுற்றி வளைத்திருந்தது.. அவன் கையணைவில் இருந்த அவளின் முகம் அவன் முகத்துக்கு வெகு அருகாமையில் இருந்தது.. அவள் மிரண்டு விழித்தாள்..
வெற்றிவேல் அதற்கு முன்பு அவ்வளவு கிட்டத்தில் அவள் முகத்தைப் பார்த்ததில்லை.. மிரட்சி ததும்பும் விழிகளில் குடியிருந்த பெண்மையின் லயத்தில் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது..
அவளின் இமைகள் பட்டாம் பூச்சிகளைப் போல படபடத்தன.. அவற்றின் பயத்தில் அவன் மெதுவாக அவளை நிறுத்தி விலகினான்..
“கவனமா வேலை செய்ய மாட்டியா..?” கடுமையாகக் கேட்டு வைத்தான்..
“இல்லை அத்தான்.. திடிர்ன்னு நீங்க வந்தீங்களா.. அதான் கவனிக்கலை..” கீர்த்தனாவின் விழிகளில் கண்ணீர் முட்டிநின்றது..
“எதுக்கெடுத்தாலும் அழுகக்கிளம்பிரு.. கண்ணில என்ன டேமைக் கட்டி வைச்சிருக்கியா..?”
“இல்லை அத்தான்..”
“இந்நேரத்தில இங்கே என்ன பண்ற..?”
“உங்க ரூமை சரி பண்ண வந்தேன் அத்தான்..”
“அதைக் காலையிலேயே செய்கிறதுக்கென்ன..?”
“ரெண்டு நேரமும் சரி செய்வேனே.. இது உங்களுக்குத் தெரியாதா..?”
அவள் விழிவிரித்துக் கேட்டதில் அவனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. அவனைக் கண்டதும் அவளின் நயனங்களில் குடி கொள்ளும் மயக்கத்தை அவன் அறிவான்.. அந்த ஒரு காரணத்தினாலேயே அவளிடம் கடுமையாகப் பேசிப் பழகுவான்.. என்னதான் கடுமை காட்டிச் சுள்ளென்று பேசினாலும்.. அதை உணராமல் பதில் கொடுக்கும் அவளின் அந்தத் தன்மையில் அவனது இரும்பு மனதில் லேசான இளக்கம் ஏற்பட்டது..
அறையைச் சுற்றிப் பார்த்தான்.. நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது அவனுடைய அறை..
“நீ பேசாம இன்டிரியர் டெக்கரேசனா ஆகியிருக்கலாம்..” பாராட்டுதலாகச் சொன்னான்..
அதில் அவள் முகம் மலர்ந்து விட்டது..
“அப்படியா அத்தான்.. நான் உங்க ரூமை டெக்கரேட் பண்ணியிருக்கிறது உங்களுக்குப் பிடிச்சிருக்கா அத்தான்..?” ஆர்வத்துடன் வினவினாள்..
அதிகப்படியாக பேசி விட்டோமோ என்று ஆகிவிட்டது வெற்றிவேலுக்கு.. அவள் மனதில்
இருக்கும் மயக்கத்தை உணர்ந்து கொண்டே இது போல பாராட்டுரைகளை உதிர்ப்பது சரியான செயலாகுமா என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான்..
“பிடிக்கலைன்னா என்ன செய்கிறதாய் உத்தேசம்.. இந்த ரூமை வேணும்னா கலைச்சுப் போட்டிரலாமா..?” வெடுக்கென்று கேட்டான்..
“ஸாரி அத்தான்..” அவள் முகம் கூம்பி விட்டது..
“போ.. போயி வேற வேலை இருந்தால் கவனி.. என் ரூமில ஒரு அளவுக்கு மேலே நிற்காதே.. எனக்கு அது பிடிக்காது.. எனக்கு பிரைவஸி முக்கியம்.. கெட் லாஸ்ட்..”
முகம் கன்றிப் போன கீர்த்தனா அறையை விட்டு அவசரமாக வெளியேறினாள்.. அவளது இமைகளின் ஓரமாக விளிம்பு கட்டியிருந்த கண்ணீரில் வெற்றிவேல் நிதானித்தான்..
“கீர்த்தனா..”
“அத்தான்..”
உடனே அவள் நின்று விட்டதில் அவனுக்கு லேசான புன்னகை வந்தது.. அவன் என்ன சொன்னாலும் தாங்கிக் கொண்டு இதமான ஒரு பார்வைக்காக ஏங்கி நிற்கும் ஆட்டுக்குட்டியைப் போல அவன் முகம் பார்த்து நின்றவளை ஊன்றிப் பார்த்தான்..
‘அழகாத்தான் இருக்கா..’
ஒற்றைவரியில் அவன் சொன்னதைப் போல அவள் சாதாரண அழகோடு இருந்து விடவில்லை.. அசாத்தியமான அழகோடு இருந்தாள்.. அவளின் நீள்வடிவக் கண்களும்.. நீண்ட கூந்தலும் அவனைக் கவர்ந்தது என்னவோ உண்மைதான்..
ஆனால் அவை மட்டும் அவனுக்குப் போதாதே.. அதற்கும் மேலாக சில தகுதிகள் வேண்டுமே..
அவன்.. தி கிரேட் வெற்றி வேல்..!
அவனுக்கு இணையாக மனைவியாக வருபவளுக்கு கீர்த்தனாவை விடக் கூடுதலான சில தகுதிகள் வேண்டும்.. அவை அவனுக்கு மிகவும் முக்கியம்..
அப்படியிருக்கையில் கீர்த்தனாவின் மயக்கத்தை எப்படி அவன் அனுமதிப்பது..?
“காலேஜ் முடிஞ்சிட்டா.. வேற எதையும் செய்யாம வீட்டுக்குள்ளேயே முடங்கிடனுமா..?”
“என்ன செய்கிறது அத்தான்.. அத்தைக்கு முடியலை.. இந்த வீட்டைப் பார்த்துக்க ஆள் வேணுமில்ல..?”
கீர்த்தனாவின் கேள்வியில் உண்மை இருந்தது.. அந்த மங்கள பவனத்தில் வேலை செய்ய வேலையாள்கள் பலர் இருந்தாலும்.. அவர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்க விமலாவினால் முடியவில்லை.. இரண்டடி நடந்தால் கூட மூச்சுவாங்கும் உடல்நிலையில்.. அவள் சார்பாக மங்கள பவனத்தை நடத்திச் செல்லும் பொறுப்பு கீர்த்தனாவின் தலைமேல் விழுந்திருந்தது..
காலையில் கோழி கூவும் முன்னால் எழுந்து.. கோழியை இவள்தான் எழுப்பி விடுவாள்.. குளித்து.. மடியாக பூஜையறையை சுத்தம் செய்து.. தோட்டத்திலிருந்து பறித்து வந்த பூக்களால் அதை அலங்கரித்து.. சுந்தர வடிவேல் வந்ததும் பூஜை பண்ணத் தயாராக வைத்திருப்பாள்..
தோட்டக்காரரை அதட்டி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சச் சொல்லுவாள்.. வாசல் தெளித்து பெருக்கி விட்டு கனகா போய் விட்டால்.. இவள் தாவணியை இழுத்துச் செறுகிக்கொண்டு மங்கள பவனத்தின் வாசலை அடைத்துக் கோலம் போட்டு விட்டு நிமிருவாள்..
“இந்த வீட்டுக்கே உன் கோலம்தான் மங்களம் சேர்க்குதும்மா..” என்பார் சுந்தரவடிவேல்..
காலைக் காபியை கலந்து கொடுக்கும் மங்கையிடம் அவன்றைய சமையல் மெனுவைச் சொல்லி விட்டு.. ஒவ்வொரு அறைக்கதவாய் தட்டி காபியைக் கொடுத்து விட்டு வருவாள்..
காலை டிபன் தயாராக இருக்கும்.. டைனிங் டேபிளைத் தயார் செய்து.. பாத்திரங்களை அதில் பரத்தி விட்டு.. சாப்பிட வருபவர்களுக்கு பரிமாற ஆரம்பிப்பாள்.. எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்புதான் அவள் சாப்பிடுவாள்..
காலை டிபன் முடிந்த கையோடு அவளுக்கு கொஞ்சநேரம் ஓய்வு கிடைக்கும்.. கைலாசத்தின் அறைக்குப் போய் அவருக்கு புத்தகம் படித்துக் காட்டுவாள்.. அவருடன் சதுரங்கம் விளையாடுவள்..
அவருடன் பேசும் போது மட்டும் அவள் தங்கு தடையில்லாமல் பேசுவாள்.. அவளின் அந்த உற்சாகப் பேச்சை அவரும் ரசித்துக் கவனித்துக் கேட்பார்..
சற்று நேரத்தில் கனகாவை அதட்டி வீட்டைச் சுத்தம் பண்ண வைத்து.. ஒவ்வொருவரின் அறைகளிலும் இருக்கும் அழுக்குத் துணிகளை சேகரித்து துவைக்கும் மெஷினில் போட்டு எடுக்கச் சொல்லுவாள்..
அதற்குள் மதிய உணவு வேளை வந்திருக்கும்.. பல சமயங்களில் வெற்றிவேல் வீட்டுக்கு சாப்பிட வரமாட்டான்.. அப்போதெல்லாம் அவனுக்கான சாப்பாடை கீர்த்தனாவே கொண்டு போய் பரிமாறி சாப்பிட வைத்து விட்டு வருவாள்.. அப்போதெல்லாம் அவள் மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.. அந்த வேலையை விரும்பி.. விருப்பத்துடன் அவள் செய்தாள்..
அவனுக்காக உணவு கொண்டு போய் பரிமாறி.. அவன் சாப்பிடும் அழகைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நொடிகளில் அதுவே போதும் என்று அவளுக்குத் தோன்றும்.. அங்கிருந்து திரும்பி வந்த பின்பு.. பிற்பகல் வேளையில்தான் அவள் மதிய உணவை உண்பாள்.. அதற்குள் மாலை வந்து விடும்.. டிபன் காபி பரிமாறும் வேலை வந்து விடும்.. அது முடிய இரவு உணவு.. எல்லோரும் சாப்பிட்டு.. முடித்ததும் அவசரகதியும் தானும் சாப்பிட்டுவிட்டு கைலாசம் சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை கொடுத்து அவரைத் தூங்கச் சொல்லி விட்டு கீர்த்தனா படுக்கையில் விழும் போது நேரம் நள்ளிரவைத் தொட்டிருக்கும்…
திரும்பவும் அதே விடிந்தும் விடியாத கருக்கல்.. பூஜை.. காபி.. கோலம்.. எது மாறினாலும் கீர்த்தனாவின் இந்த சுழற்சி மட்டும் மாறியதே இல்லை..
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.