Chapter 15

0Shares

“ஹௌ ஸ்வீட்..” என்றாள் ரியா..

அவள் வாய்தான் அப்படிச் சொன்னதே தவிர.. கண்களில் அந்த ரசனை இல்லை என்பதை கண்டு கொண்டான் வெற்றிவேல்..

எதற்காக இருக்கிற வேலைகளையெல்லாம் ஓரம் கட்டி விட்டு.. வேலை மெனக்கெட்டு இந்தப் பெண்ணின் பின்னால் வந்திருக்கிறோம் என்று அவனுக்கு சலிப்புத் தட்டியது..

ரியாவின் விழிகளில் அலட்சியம் குடி கொண்டிருந்தது.. வெற்றிவேல் எதைச் சொன்னாலும் லேசாக தோள்களைக் குலுக்கி ‘ஹௌ ஸ்வீட்’ என்று சொல்லி வைத்தாள்.. கண்கள் மட்டும்.. ‘ஹ.. இதெல்லாம் ஒரு விவரமென்று என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்..’ என்று பழிப்பு காட்டின..

பேசாமல் திரும்பிப் போய் விடலாமா என்று கூட வெற்றிவேல் நினைத்து வைத்தான்.. ஆனால்.. ரியா அவன் சுற்றிக் காட்டிய இடங்களைத்தான் அலட்சியமாகப் பார்த்து வைத்தாள்.. அவனைப் பார்க்கவில்லை என்பதில் அவனால் திரும்பி விட முடியவில்லை..

“இது பிளவக்கல் அணையோட பார்க்.. மொத்தமா பிளவக்கல் அணைன்னு சொன்னாலும் இது கோவிலார் அணை.. பெரியார் அணைன்னு ரெண்டு பிரிவா இருக்கும்.. இப்பத்தான் தண்ணி கம்மியா இருக்கு.. அக்டோபர்.. டிசம்பரில் இந்த அணைகள்ல தண்ணி நிரம்பி வழியும்..”

“ஹௌ ஸ்வீட்..”

வெற்றிவேலுக்கு பூங்காவின் அழகே வெறுத்து விட்டது.. இப்படியா ஒரு பெண் எதற்கெடுத்தாலும் ஹௌ ஸ்வீட் என்று சொல்லியே அவனைக் கடுப்படிப்பாள்..?

நென் மேனியைக் காட்ட அழைத்துப் போனான்.. காருக்குள் பரவிய நறுமணம் அவளிடமிருந்து வருகிறது என்பதில் அவனுக்குள் லேசான கிளர்ச்சி உண்டானது.. அவன் மனதிலிருந்து சலிப்பு விலகியதைப் போல உணர்ந்தான்.

“இது நென்மேனி..”

“ஹௌ ஸ்வீட்..”

போன சலிப்பு வரவா எனக் கேட்டதில் அவன் பல்லைக் கடித்தான்.. இருந்தும் ரியாவின் விரிந்த கூந்தலின் அழகு அந்தச் சலிப்பை ‘ஓடு.. ஓடு..’ என விரட்டி விட்டது..

அவனுடன் வெளியே வருவதற்கான காரணமாக அந்த ஊர் சுற்றிப் பார்த்தலை அவள் கையில் எடுத்திருக் கிறாள் என்பதைத்தவிர அவளுக்கு ஒன்றும் சிவகாசியின் சுற்றுப்புறச் சூழலைப் பற்றி யாதொரு அக்கறையும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது..

‘விட்டுத் தொலைடா வெற்றிவேலு.. படிச்சிருக்கா.. அழகா இருக்கா.. நீ எதிர்பார்க்கிற ஸ்டேட்டஸில் இருக்கிறா.. இதைத்தான நீயும் கேட்ட.. அவளே பழகிப் பார்க்க வந்திருக்கிறப்ப.. உனக்கென்ன வந்தது..? பழகித் தான் பாரேன்.. பிடிச்சிருந்தா கட்டிக்கயேன்..’ அவன் மனம் உபதேசித்தது..

“இது நெல்மேனி.. நெல் அதிகமாக விளைஞ்சதால் நெல்மேனின்னு சொன்னாங்க..”

“ஹௌ ஸ்வீட்..”

“காலப் போக்கில.. நெல்மேனி மறுவி ‘நென் மேனி’ன்னு ஆகிப் போச்சு.. இது கவர்ண்ட்மென்ட் பாசன நீர்குளம்.. குளிர்காலத்தில ஏராளமான பறவைகள் வரும்.. குளம்புல்லா தண்ணி நிரம்பி இருக்கிறப்ப வெளிநாட்டுப் பறவைகளும் வரும்.. பாக்கவே ரம்யமா இருக்கும்..”

“ஹௌ ஸ்வீட்..”

அவளிடம் தென்பட்ட அதிநாகரிகமான அழகை அவனுக்குப் பிடித்துத்தான் இருந்தது.. அவள் சொல்லும் ‘ஹௌ ஸ்வீட்’டைத்தான் அவனுக்குப் பிடித்துத் தொலைக்கவில்லை…

“இப்ப எந்த பெர்ட்ஸையுமே காணலையே..”

ரியா சூயிங்கத்தை மென்றபடி கேட்டாள்.. அவளிடமிருந்த அந்தப் பழக்கத்தை வெற்றிவேல் வெறுத்தான்.. அந்த சூயிங்கத்தைத் துப்பித்தான் தொலையேன் என்று பல தருணங்களில் சொல்லிவிட நினைத்து வாய் திறந்தான்.. முதன் முறையாக அவளுடன் வெளியே வந்திருக்கும் போது இதைப் போல எதையாவது சொல்லி அந்தத் தருணங்களின் இனிமையைக் 

கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவனது அறிவு வலியுறுத்தியதால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தான்..

“இப்பக் குளிர்காலமில்லையே…”

வெற்றிவேலின் பதிலில் ரியாவின் முகம் சுருங்கியது.. அவனுக்கு சந்தோசமாக இருந்தது.. அவளின் மூக்கு உடைபட்டதில் அவளது முகம் மாறிப் போயிருப்பதை வெகுவாக அவன் ரசித்தான்..

‘சுத்திப் பாக்க வந்தவ சொல்கிறதை கொஞ்சமாவது காது கொடுத்துக் கேட்கனும்.. அத விட்டுட்டு.. எதுக்கெடுத்தாலும் ‘ஹௌ ஸ்வீட்..’ன்னு சொல்லி காது கொடுத்துக் கேட்காம விட்டா இப்படித்தான் மூக்கு உடையும்.. இப்பத்தானே குளிர்காலத்தில பறவைகள் வரும்ன்னு சொன்னேன்.. அதுக்கப்புறமும் என்ன எந்த பெர்ட்ஸையும் காணோமேன்னு கேள்வி கேண்டிக் கிடக்கு..?’

வெற்றிவேலுக்கு வெகு திருப்தியாக இருந்தது.. சுணங்கிப் போன அவள் முகத்தைக் கவனிக்காதவனைப் போல..

“போகலாமா..?” என்று கேட்டான்..

“ஷ்யூர்..” அவள் வேகமாக காரை நோக்கி நடந்தாள்..

வெற்றிவேலுக்கு விசிலடிக்க வேண்டும் போல இருந்தது.. சன்னமான விசிலொலியுடன் அவன் காரைக் கிளப்பினான்.. ரியா அவன் முகத்தை உற்றுப் பார்ப்பதை அவனால் உணரமுடிந்தது.. அவன் உதடுகளில் வெகு நேரத்துக்குப் பின்னால் புன்னகை அரும்பியிருந்தது..

“இங்கே எந்த பிஸினெஸ் பேமஸ்..” ரியா பேச்சை மாற்றினாள்..

“பட்டாசும்.. தீப்பெட்டியும் தான் மெயின் பிஸினெஸ்..” வெற்றிவேலுக்கும் பேச்சுப் போன திசையை பிடித்திருந்தது..

“நானே கேட்கனும்னு நினைச்சேன் ஏன் அப்படி..?”

“சிவகாசி சூடான கந்தகபூமி.. இங்கே பட்டாசு.. தீப்பெட்டிதவிர வேற தொழில்கள் அதிகமா எடுபடாது..”

“ஹௌ ஸ்வீட்…”

“இதில ஸ்வீட்டா இருக்கிறதுக்கு என்ன இருக்கு..?” வெற்றிவேல் கேட்டேவிட்டான்..

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனாள் ரியா.. வெற்றிவேல் இப்படி முகத்துக்கு நேராக கேள்வி கேட்டு வைப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை..

‘மேனர்ஸ் தெரியாத முரடன்..’ மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்.. வெளியே மலர்ச்சியாக முகத்தை வைத்துக் கொண்டாள்..

“யு ஸி வெற்றி.. நான் உலகத்தையே சுற்றிப் பார்த்தவ.. எனக்கு இந்த சீனரியெல்லாம் ஜீஜிபி.. உங்க கூட தனியே அவுட்டிங் போகலாம்ன்னு தான் வந்தேன்.. மத்தபடி எனக்கு இதைப் பார்க்கிறதில இண்ட்ரெஸ்ட் இல்லை.. உங்களைப் புரிஞ்சுக்கனும்னா உங்ககூடப் பேசிப் பழகியாகனும்.. அதுக்கு வீட்டில் சான்ஸ் இருக்காது.. அதனாலதான் வெளியில் வந்தேன்..”

மனதிலிருப்பதை மறைக்காமல் அவள் சொல்லிய விதம் வெற்றிவேலுக்குப் பிடித்திருந்தது.. அந்தக் காரணத்தினால்தானே அவனும் அவளுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க கிளம்புகிறேன் பேர்வழியென்று வந்திருக்கிறான்..

“சீனரிஸை வேண்டும்னா நீங்க விதம் விதமா பார்த்திருக்கலாம் ரியா.. ஆனா.. அந்தந்த பிரதேசத்தில் வாழ்கிற மக்களின் வாழ்க்கையை அந்தந்த பிரதேசத்தில் தான் பார்க்க முடியும்.. இது சிவகாசி.. இங்கிருக்கிறவங்க வாழ்க்கையை உணரனும்னா இந்த பூமிக்கு நீங்க வந்தாகனும்..”

“வெரி இண்ட்ரெஸ்டிங்..”

“எது..? வாழ்க்கையா..?”

“உங்க பேச்சு..”

இப்போது ரியாவை நேருக்கு நேராகவே பார்த்தான் வெற்றிவேல்.. அவளது மாசு மருவில்லாத பளீரென்ற வெண்ணிற சருமத்தில் அவன் மனம் சபலம் கொண்டது.. மும்பையின் மாடல் அழகியைப் போல இருந்தவளை அவன் நினைத்தால் மணக்க முடியும் என்பது அவனுக்கு இனிப்பாக இருந்தது.. அப்படி அவளுடன் அவனுக்குத் திருமணம் நடந்தால்.. சுற்று வட்டாரத்திலேயே மிக அழகான பெண்ணை மணந்தவனாக அவன் மட்டுமே இருப்பான் என்பதில் லேசாக சிரித்துக் கொண்டான்..

“நான் உங்களை விடச் சின்னவதான்.. நீங்க என்னை வா.. போன்னே கூப்பிடலாம்.. ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன்..”

வெற்றிவேல் அவளை கண்சிமிட்டும் நேரத்திற்கு மின்னல் வெட்டைப் போல ஓர் பார்வை பார்த்து விட்டு.. காரில் கவனமானான்.. அவன் முகத்தில் தெரிந்த சிரிப்பில் அவன் மனம் உல்லாசமாக இருப்பதை ரியாவினால் புரிந்து கொள்ள முடிந்தது.. அந்த உல்லாசம் அவள் மனதிலும் இடம் பெயர்ந்தது..

“யு லுக் வெரி ஹேண்சம்..” என்றாள்..

“அப்படியா..?” அவன் வாய் விட்டுச் சிரித்தான்..

பதிலுக்கு ‘நீயும் அழகுதான்’ என்று சொல்வானென்று  அவள் எதிர்பார்த்தாள் வெற்றிவேல் அதைச் சொல்ல வில்லை.. என்பதில் அவள் முகம் கூம்பியது..

‘ஆனாலும் இவனுக்கு ஹெட்வெயிட் அதிகம்தான்..’

அவனுடன் பேச விருப்பமில்லாமல் சாலையை வேடிக்கை பார்த்தாள்.. மும்பையின் ஆடம்பரச் சாலைகளைப் பார்த்துப் பழகியவளுக்கு.. சிவகாசியின் சாலையைப் பார்ப்பதில் சுவராஸ்யம் வரவில்லை…

“பட்டாசுக்கு சிவகாசிதான் பேமஸ்.. ஆனா சீனாப் பட்டாசுகள் வர ஆரம்பித்ததில் பட்டாசு பிஸினெஸ் கொஞ்சம் டல்லடிக்கத்தான் செய்யுது..”

எதுவும் நடக்காததைப் போல வெற்றிவேல் பேச ஆரம்பிக்க.. ரியா வெகு இயல்பாக அந்தப் 

பேச்சுடன் ஒட்டிக்கொண்டாள்.. அவளின் மனப்போக்கை அவனிடம் வெளிப்படுத்தி விடக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.. எதுவாக இருந்தாலும் திருமணத்திற்குப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்பது அவளுடைய எண்ணம்.. அதுவரை வெற்றிவேல் கோபப்படும்படி அவள் எதையும் பேசிவிடக்கூடாது.. அவன் அவளுடைய எதிர்பார்ப்புகளின் வடிவமாக இருந்தான்.. அவள் கற்பனைகளின் உருவமாக இருந்தான்.. அவனைப் போன்ற ஒருவனைத் தேடிப் பிடிப்பது இயலாத காரியம்.. எனவே கிடைத்திருப்பவனை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில் அவள் தீர்மானமாக இருந்தாள்.. எது எப்படி இருந்தாலும் அவனை அவள் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும்.. அது ரியாவின் முடிவாக இருந்தது..

“நானும் இதைப் பத்தி ஒரு ஆர்டிகளில் படிச்சேன்.. சைனாப் பட்டாசை நிறையப் பேர் யூஸ் பண்றாங்கன்னு எழுதியிருந்தாங்க..” என்றாள் ரியா

“நாங்க இதை எதிர்பார்க்கலை..”

“இங்கே மெயின் பிஸினெஸ் இது மட்டும்தானா..?”

“பிரிண்டிங் பிரஸ்ஸீக்கும் சிவகாசிதான் பேமஸ்.. கவர்ண்ட்மெண்ட் பாட புத்தகங்கள் அச்சடிக்க இங்கே தான் கொடுப்பாங்க.. கவர்ண்மெண்ட் எக்ஸாம் கொஸ்டின் பேப்பரையும் இங்கேதான் அச்சடிப்பாங்க.. இதெல்லாம் ரகசியமா யாரையும் உள்ளே விடாமல் நடக்கும்..”

“இண்ட்ரெஸ்டிங்..”

“நைட் டின்னர்ல பால்சோறு கட்டாயமா இருக்கும்.. கூடவே பக்கோடா..”

“ஓ.. நானே கேட்கனும்னு நினைச்சேன்.. நேத்து நைட் டின்னர் டயத்தில எல்லாருக்கும் கம்பல்சரியா மில்க் சாதம் கொடுத்தாங்க.. கேட்டப்ப இங்கே இதுதான் வழக்கம்ன்னாங்க.. ஏன்..?”

“எல்லாத்துக்கும் ஒரு காரணத்தை நம்ம பெரியவங்க வைச்சிருப்பாங்க.. சிவகாசி சூடான கந்தக பூமிங்கிறதால உடல் சூட்டைக் குறைக்கத்தான் இந்த மெனு.. என்ன டிபன் சாப்பிட்டாலும் கடைசியா பால் சோத்தைச் சாப்பிட்டுத்தான் ஆகனும்.. இது கட்டாயமான பழக்கம்.. ஹோட்டலில் கூட பால்சோறும்.. பக்கோடாவும் இருக்கும்..”

“குட் காம்பினேசன்…”

“இது வந்தாரையும்.. இருக்கிற வங்களையும் வாழ வைக்கிற பூமி.. படிப்பறிவில்லாத பெண்கள் கூட எளிதாக ஒருவாரத்துக்கு 3000 ரூபாய் சம்பாதிச்சுருவாங்க.. வளையம் குத்துறது.. குச்சி அடைக்கிறது.. கட்டு ஒட்டுறதுன்னு போகிற போக்கில மாதத்துக்கு பனிரெண்டாயிரம் ரூபாய் பார்த்துருவாங்க.. முறையான சேமிப்பும் அனாவசிய செலவுகளும் இல்லாம இருந்தா.. இவங்க வாழ்க்கை அமோகமா இருக்கும்..”

ரியா கேட்கிறாளோ.. இல்லையோ.. அவளுக்குத் தனது ஊரின் தன்மைகள் தெரிய வேண்டும் என்று அனைத்தையும் சொல்லிக்கொண்டே போனான் வெற்றிவேல்.. 

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link