Chapter 16
கைலாசத்திற்கு மருந்தை ஊற்றிக் கொண்டிருந்த கீர்த்தனாவின் கைவிரல்கள் நடுங்குவதைக் கவனித்தார் கைலாசம்.. அவர் பார்வை உயர்ந்து பேத்தியின் முகத்தில் படிந்து எதையோ தேடியது..
அவருக்கு கீர்த்தனாவைப் பற்றி நன்றாகவே தெரியும்.. மனதில் இருப்பதை அவள் வெளியே சொல்ல மாட்டாள்.. அநாதவராய் நின்றவளை அரவணைத்துக் கொண்ட வீடு என்பதால் மங்கள பவனத்தை அவள் அதிகமாக நேசித்தாள்.. அவள் மனது புண்படும்படி யார் எதைச் சொன்னாலும் அந்தத் துக்கத்தை அவள் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டாள்.. பாவம்.. மனதை மறைத்தறியாத அந்தப் பேதையின் கைவிரல்கள் மட்டும் நடுங்கி அவளைக் காட்டிக் கொடுத்து விடும்..
அன்றைய கை நடுக்கம் எதனால் வந்திருக்கக் கூடும் என்பதை அந்த வயோதிகர் நன்றாகவே அறிவார்.. சற்று முன்பு சுந்தரவடிவேல் அவரைத் தேடிவந்து சொல்லி விட்டுப் போயிருந்த செய்தியில் அவர் மனதில் இரும்புக் குண்டு ஏறி அமர்ந்திருந்தது..
“அப்பா.. மும்பையிலே இருந்து வந்திருக்கிற மாலதியின் அக்கா பொண்ணை நம்ம வெற்றிக்கு பிடிச்சிருக்காம்..”
“சுந்தரா..?”
தகப்பனும்.. மகனும் அர்த்தம் பொதிந்த பார்வைகளை பறிமாறிக் கொண்டார்கள்.. சுந்தரவடிnலுக்கு தகப்பனாரின் மனம் புரிந்திருந்தது.. அதை நிறைவேற்றி வைக்கும் திராணியற்றவராக அவர் பெற்றவரின் முன்னால் தலை குனிந்தார்..
“நான் என்னப்பா செய்யட்டும்..? என்னைக் கேட்டா எதுவும் நடக்குது..? மாலதியோட அக்கா பொண்ணை சிவகாசிக்கே விமலா வரவழைச்சிருக்கா.. அதைப்பத்தி ஒரு வார்த்தை என்னிடம் சொல்லலை.. வந்து நிக்கிற பெண்ணை ‘வா’ன்னு தான் என்னால கூப்பிட முடிஞ்சது..”
“இது உன் மகனின் கல்யாணம்டா..”
“அந்த நம்பிக்கையிலதாம்ப்பா நானும் இருந்தேன்.. வெற்றி ஒருவார்த்தை என்னிடம் அபிப்ராயம் கேட்பான்.. அன்னியத்து சம்பந்தம்.. வேண்டாம்ன்னு சொல்லிராம்ன்னு மனப்பால் குடிச்சேன்.. அவன் அவங்க அம்மாவுக்கு மேலே இருக்கான்.. இவளைக் கட்டிக்கட்டுமான்னு கேட்காம.. கட்டிக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போறான்.. இதுதான் நான் குடும்பத்தலைவனா இருக்கிற லட்சணம்.. என்னால பேச முடியாதுப்பா.. பார்வையாளனா மட்டும்தான் இருக்க முடியும்..”
கைலாசம் பேசவில்லை.. அவர் உள்ளம் நைந்திருந்தது.. வெற்றிவேலின் மீது மனதை வைத்திருக்கும் கீர்த்தனாவின் மனது இதைக் கேட்டவுடன் என்ன பாடுபடும் என்பதில் அவர் மனம் கசிந்தார்..
“திருவிழாவுக்கு ரியாவோட குடும்பம் வரப் போகுதாம்.. அப்ப பேச வேண்டியதைப் பேசிட்டு.. கல்யாணத்துக்கான நாளையும் குறிச்சிரப் போறாங்களாம்.. அவ வீட்டாளுகளோட நம்ம விமலா மணிக்கணக்கில் போனில் பேசறா.. இப்பவே கல்யாணம் முடிஞ்சு ரியா
இந்த வீட்டுக்கு மருமகளா ஆகிட்டதைப் போல நடந்துக்கிறா..”
கைலாசம் பெருமூச்சு விட்டார்.. சுந்தர வடிவேல் பேச்சை நிறுத்திவிட்டு இரக்கத்துடன் தகப்பனாரின் கையைப் பிடித்துத் தட்டிக் கொடுத்து விட்டு வெளியேறினார்.. சற்றுப் பொறுத்து வந்த கீர்த்தனாவின் கண் இமைகள் வீங்கியிருந்தன.. அவள் கைலாசத்தின் முகம் பார்க்காமல் அவருக்கான மருந்தை ஸ்பூனில் ஊற்ற ஆரம்பித்தாள்.. நடுங்கிய விரல்களுடன் அதை அவரிடம் நீட்டிய போது அவருக்கு மனம் தாளவில்லை..
“அம்மாடி..” என்று அவள் தலையைத் தடவினார்..
“தாத்தா..” அவள் விம்மி விட்டாள்..
அழுவதற்கும்.. சிரிப்பதற்கும் அவரை விட்டால் அவளுக்கென்று வேறுயார் இருக்கிறார்கள்..? சொந்த மென்று தோள்சாய அவர் மட்டும்தானே இருக்கிறார்..?
தரையில் அமர்ந்து.. கட்டிலில் உட்கார்ந்திருந்த அந்த முதியவரின் மடியில் முகம் புதைத்து தேம்பி அழுதாள் அந்த பேதை..
“அழாதேம்மா..” தேற்ற முடியாமல் கைலாசத்தின் குரலும் கரகரத்தது..
அதுவரை வெற்றிவேலை விரும்புவதாக வெளிப்படையாக ஒரு வார்த்தைகூட கீர்த்தனா சொல்லிய தில்லை.. அவள் மனதில் புதைந்திருந்த அந்தக் காதலை கைலாசம் மட்டுமே அறிவார்.. மனதோடு பேச முயலும் அவளின் விழி சொல்லும் வார்த்தைகளை வெற்றிவேலும் அறிவான்.. ஆனால் அதை பொருட்படுத்த மாட்டான்..
அன்று பூட்டி வைத்திருந்த அவள் மனக்கதவு திறந்தது.. அதில் ஒளிந்திருந்த அவளின் உண்மைக் காதலை.. அவளுக்கென்று இருந்த ஒரே சொந்தமான கைலாசத்திடம் அவள் கொட்டிவிட்டாள்..
“என் மனசில காதல் வரக் கூடாதா தாத்தா..? அத்தான் மேல நான் ஆசைப்படக் கூடாதா..? அவரோட சொத்து சுகத்துக்காகவா அவர் மேல நான் மனசை வைச்சேன்..? எனக்கு அவரைப் பிடிக்கும் தாத்தா.. அது எதனாலன்னு எனக்கே தெரியலை.. பிடிக்கிற மனசை பிடிக்காமப் பண்ண என்னால முடியலையே தாத்தா..”
“அவன் உன்னால எட்டித் தொட முடியாத உயரத்தில இருக்கான்ம்மா.. அது ஏன் உன் மனசுக்குத் தெரியாமப் போச்சு..?”
மனம் தாளாமல் சொல்லி விட்ட கைலாசத்தை நீர் வழியும் கண்களோடு நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தனா.. அதில் தெரிந்த தீட்சண்யத்தில் கைலாசத்தின் உடல் சிலிர்த்துப் போனது.. காதலின் தணலாக தெரிந்தாள் அவள்..
“காதல் தகுதி பார்த்துத்தான் வருமா தாத்தா..? அதனாலதான் அத்தான் என்னைவிட பணக்காரியா இருக்கிற ரியாவைக் கட்டிக்கப் போறாரா..? இல்லை தாத்தா.. காதல் பணத்தைப் பார்த்து வரக்கூடாது.. மனசைப் பார்த்து வரனும்.. என்னைவிட அதிகமா அவரைக் காதலிக்கிறவங்க இருக்கிறாங்களா..? யாருமில்ல தாத்தா.. அத்தானை அந்த அளவுக்கு நான் காதலிக்கிறேன்.. இது பணம் பார்த்து வந்த காதல் இல்லை தாத்தா.. மனசு பார்த்து வந்தது.. என் மனசு தேடும் தேடல் இது தாத்தா..”
அதுவரை கீர்த்தனா அதைப் போல அவரிடம் பேசியவள் அல்ல.. அவள் கண் முன்னால் நடமாடிக் கொண்டிருந்த அவளது காதலன்.. இன்னொருத்திக்கு சொந்தமாகப் போகிறான் என்பதைத் தாங்க முடியாமல் அவள் மனதிலிருப்பதைக் கொட்டிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டவராக கைலாசம் அவளை அமைதி படுத்த முயன்றார்..
“விட்டுரும்மா.. அவன் இன்னொருத்திக்கு சொந்தமாகப் போகிறவன்.. அவன் மேல இனியும் மனசை வைக்காதே..”
“வைக்காம..? அதை பிய்த்து எடுத்துற முடியுமா தாத்தா..? அவர் யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கட்டும்.. யார் கூட வேண்டும்னாலும் வாழ்ந்துக் கட்டும்.. நான் அவர் நினைப்பாய்த்தான் வாழ்வேன் தாத்தா.. இது அவருக்கும் தெரியும்..”
“வெற்றிக்கா..? உன் மனசு தெரியுமா..? சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காதும்மா..”
“போங்க தாத்தா.. உங்களுக்கு உங்க பேரனைப் பத்தித் தெரியாதா..? மனசில இருக்கிறதை தோண்டி எடுத்து படிக்க முடிகிறவராலே என் மனசு பேசுற பேச்சை கேட்க முடியாதா..? அவர் கேட்டிருப்பார் தாத்தா.. பணக்காரர் இல்லையா..? இந்த அநாதையை கல்யாணம் பண்ணிக்க அவரோட அந்தஸ்தும் கௌரவமும் இடம் கொடுக்கலை.. போகட்டும் தாத்தா.. அவ பின்னாலே போகட்டும்.. நான் இருக்கும்வரை என்னைத் திரும்பிக் கூட பார்க்க வேணாம்.. நான் போன பின்னாலே வரட்டும்.. மண்ணுக்குள்ள போனவளுக்கு அவர் மனசோட பேசறதைப் பத்தித் தெரியாதுன்னு அத்தான் நினைப்பார் தாத்தா.. காற்றோடு கலந்திருக்கும் என் ஆத்மாவுக்கு.. அவர் மனசு பேசற பேச்சை காது கொடுத்துக் கேட்க முடியும்.. அவர் எனக்காக என்னைப் பார்க்க வந்து.. என்னை நினைச்சு அவர் மனசோட பேசற பேச்சை கேட்டுட்டாப் போதும்.. என் ஆத்மா சாந்தியடைஞ்சிரும்..”
“அடி வாங்கப் போற.. என்ன பேச்சுன்னு இதையெல்லாம் பேசற..?”
“அவருக்குத் தெரியாது தாத்தா.. என் மனசு பேசற பேச்சை அவர் மனசு அறியும்ங்கிறது எனக்குத் தெரியும்ன்னு அத்தானுக்குத் தெரியாது.. அதைப் போல நான் போன பின்னால அவர் பார்க்க வந்தா.. காற்றோடு கலந்திருக்கும் என் ஆத்மாவுக்கு அது தெரியும்ன்னு அவருக்குத் தெரியாது..”
“கீர்த்தனா..” கைலாசத்தின் குரல் கம்மியது..
அந்தச் சின்னப் பெண் பேசிய பெரிய பெரிய வார்த்தைகளில் அவர் மனம் இற்றுப் போனது.. அவள் யாரை யாசிக்கிறாள்..? அவரின் சொந்தப் பேரனை யாசிக்கிறாள்.. வீட்டிற்குப் பெரியவராக இருந்தும்.. பேரனை அதட்டி.. அவள் கழுத்தில் தாலியைக் கட்டச் சொல்லும் உரிமை அவருக்கு இல்லாமல் போய் விட்டதே..
“அத்தான்கூட இனி அதிகமா பேச மாட்டேன் தாத்தா.. பேச்சைக் குறைச்சுக்கறேன்.. அவரிடம் வாய் விட்டுப் பேசினாத்தான் அது பேச்சா தாத்தா..? மனதோடு பேசினால் அது பேச்சில்லையா..? என் மனதோடு பேச அவர் வரலைன்னா என்ன தாத்தா..? அவர் மனதோடு நான் பேசிட்டுப் போறேன்.. என் மனசு பேசறதை எப்படி தாத்தா அவர் மனசு கேட்காம போகும்..? அது ஆத்மார்த்த மானதில்லையா..?”
அவள் கண்களில் நீர் வர்ற.. முகத்தில் ஒளியுடன் பேசியவளின் பின்னால் ஒளிவட்டம் தெரிவதைப் போல அவருக்குள் பிரமை ஏற்பட்டது.. அவளிடம் புதிதாக தோன்றியிருந்த தேஜஸில் அவர் நிலைகுலைந்தார்..
கீர்த்தனா எழுந்தாள்.. கண்களைத் துடைத்துக் கொண்டு.. அவரைப் பார்த்து.. ஏழ்மையாகச் சிரித்தாள்.. அவர் மனம் வலித்தது..
“மனசு தாங்காம அழுது பினாத்திட்டேன் தாத்தா.. மறந்திருங்க…”
அது பினாத்தலா..? அவர் மனதில் வலி அதிகமானது.. கீர்த்தனா அவர் முகம் பார்க்காமல் வெளியே வந்தாள்.. எதிரில் வெற்றிவேல் வருவது தெரிந்தது.. ஆதவனைக் கண்டதும் மலரும் சூரியகாந்திப் பூவாய் அவனைக் கண்டதும் அவள் மலர்ந்தாள்.. அவனிடம் பேச அவள் துடித்தாள்.. அவளைக் கண்டதும் புருவங்கள் உயர அவன் நின்றான்.. அவளுக்கு பேச்சு வரவில்லை..
‘நான் பேச வந்தேன்..
சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை..
உன் வாய்மொழி.. மணிவாசகம்
நீ சொல்லாமல் என்நெஞ்சில் சொல்லில்லை..’
அவள் மனம் பாடியது.. அவன் மனதோடு பேசியது.. அதை உணர்ந்தும் உணராதவனைப் போல அவன் கேட்டான்..
“என்ன..?”
“ஒன்னுமில்லை அத்தான்..” அவள் நகர்ந்து விட்டாள்..
ஹாலின் முடிவில் அவள் திரும்பிப் பார்த்த அதே நொடியில் அவனும் திரும்பிப் பார்க்க.. இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொண்டன.. அவள் பார்வையின் வீச்சில் வெற்றிவேல் தடுமாறினான்.. அதை அறிந்து கொண்ட காருண்யத்துடன் பார்வையை விலக்கி.. வேகமாக போய்விட்டாள் கீர்த்தனா.. அசையாமல் நின்றான் வெற்றிவேல்…
ரியாவைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் அவசரப்பட்டு விட்டோமோ என்று முதன்முதலாக அவன் மனம் நினைத்தது.. சஞ்சலப்பட்ட அவன் மனதை சதிராட வைக்கவென்று ஒருவன் பத்ரகாளியம்மன் திருவிழாவில் கலந்துகொள்ள வந்து நின்றான்..
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.