Chapter 24

0Shares

மூச்சுவாங்க படிகளில் ஏறிக் கொண்டிருந்த கைலாசத்தின் அருகே வந்து கை கொடுத்தான் வெற்றிவேல்..

“என் கையைப் பிடிச்சுக்கங்க தாத்தா..”

“போடா.. என் உடம்பில இன்னும் தெம்பு குறையல.. உன் அப்பன் கையையே நான் பிடிச்சதில்ல.. உன் கையைவா பிடிப்பேன்..?”

கைலாசம் அவன் கையை தட்டி விட்டு.. படிகளில் முக்கி.. முணங்கி ஏறினார்.. அவரிடம் ஒரு வளைக்கரம் நீண்டது.. அழகான பொன் வளையல்கள் குலுங்கிய அந்தக் கையை நீட்டியவளை வாஞ்சையுடன் நிமிர்ந்து பார்த்தார்..

சரசரக்கும் புதுப் பட்டும்.. கழுத்தில் புதுத்தாலிக் கயிறுமாக மங்கள பவனத்தின் மருமகளாக ஜ்வலித்தாள் கீர்த்தனா..

“ஏன் தாத்தா.. என் கையைப் பிடிச்சுக்க மாட்டிங்களா..?”

அவளின் குழைவான குரலில் நீட்டிய அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டார் கைலாசம்..

“தாத்தா இது அநியாயம்..”

பட்டு வேட்டி சட்டையில் அயர வைக்கும் கம்பீரமான அழகுடன் இருந்த வெற்றிவேல் குரல் கொடுத்தான்..

“என் கையை மட்டும் பிடிக்க மாட்டிங்க.. என் பெண்டாட்டி கையை மட்டும் பிடிப்பீங்களா..?”

“போடா அறிவு கெட்டவனே.. இது என் பேத்தியோட கைடா..”

“அப்படிச் சொல்லுங்கப்பா..” சுந்தரவேல் சிரித்தார்..

“அப்பா நீங்க என் கூடத்தான் கூட்டணி போடனும்.. தாத்தாகூடச் சேரக் கூடாது.. இந்தப் பக்கம் வாங்க..” பொய் கோபம் காட்டினான் வெற்றிவேல்..

கலகலத்து சிரித்த அவர்கள் சிரிப்பில்.. விமலாவின் வயிறு எரிந்தது..

“குடும்பமே ஒன்னாக் கூடிருச்சு பாரு..” வன்மத்துடன் அருகில் வந்த மகளிடம் சொன்னாள்..

“விடுங்கம்மா..” என்றாள் நந்தினி..

அவளுடைய கணவன் ராம்குமாரும்.. குழந்தைகளும்.. வெற்றிவேலுடன் பேசியபடி முன்னதாக படியேறிக் கொண்டிருந்தார்கள்.. 

“கல்யாணமே வேண்டாம்ன்னு தள்ளிப் போட்டுக்கிட்டு வந்தான்.. எந்தப் பெண்ணைக் காட்டினாலும்.. இது சொத்தை.. அது சொள்ளைன்னு தள்ளி வைச்சான்.. நாம எவ்வளவு கவலைப் பட்டோம்..?”

“அதுக்காகத்தானே நந்தினி.. அத்தனையிலும் சோடை போகாத ரியாவை இவன் கண்ணுக்கு காட்டினோம்..”

“இவனுக்கு பிடிக்கனுமில்ல..?”

“பிடிச்சிருக்குன்னு சொன்னானேடி.. அதை நம்பித்தானே அவங்க வீட்டாளுகளை வரவழைச்சு கல்யாணம் பேசி முடிச்சோம்..?”

“நிச்சயம் நடக்கலையேம்மா..”

“அதை இந்த கீர்த்தனா நடக்க விடலைடி..”

“அவ மேல குற்றம் சொல்லாதீங்கம்மா.. பாவம்.. அவ என்ன செய்வா..?”

“அவளா பாவம்..? அவ ஊரையே பாவம்ன்னு சொல்லிட்டுப் போயிருவா.. எங்கேயோ இருந்து வந்த அநாதை.. எனக்கே மருமகளாகிட்டா.. இதை எங்கே போய் சொல்கிறது..?”

“பேசாம மலையேறி வந்து ‘நின்ற நாராயணப் பெருமாள்’ கிட்டச் சொல்லுங்க.. அவரைப் பாக்கத்தானே மலையேறிக்கிட்டு இருக்கோம்..? உங்களுக்கு நினைவிருக்காம்மா.. இந்த கோவிலுக்கு வான்னு கூப்பிட்டப்ப ரியா வரமுடியாதுன்னு சொல்லிட்டா..”

“இப்ப என்னதான் சொல்ல வர்ற..?”

“அவ கல்ச்சரே வேறம்மா.. நம்ம மங்கள பவனத்துக்கு அவ சரிப்பட்டு வந்திருக்க மாட்டா.. இப்ப நடந்திருக்-கிறதுதான் சரி..”

“என்னவோ போ.. என்ன நடந்துச்சோ.. ஏது நடந்துச்சோ.. திடிர்ன்னு அந்தப் பொண்ணு கல்யாணம் நடக்காது.. மும்பைக்குக் கிளம்புங்கிறா.. வெற்றி வந்து கீர்த்தனாவைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தக் காலில நிற்கிறான்.. என்னதான் நடந்திருக்கும்..?”

நடந்தது எதையும் ரியா சொல்லவில்லை.. அவளுக்கு வெற்றிவேலுடனான திருமணத்தில் விருப்ப மில்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டாள்.. அதை எதிர்பார்த்திருந்தவனைப் போல நிஷாந்த் தோளைக் குலுக்கினான்.. கல்பனாவும்.. சுந்தரும் மும்பையில் வாழ்பவர்கள்.. பிள்ளைகளின் மீது ஆதிக்கம் காட்டாதவர்கள்.. ரியாவின் வாழ்க்கை அவளுடையது என்பதில் தெளிவாக இருப்பவர்கள்..

“ரியாவுக்கு விருப்பமில்லாததை நாங்க செய்ய மாட்டோம்..” என்று விமலாவிடம் சொல்லி விட்டார்கள்..

“அப்புறம் என்ன கழுதைக்கு இவங்க மக மும்பையில இருந்து கிளம்பி சிவகாசிக்கு வந்து இறங்கினாளாம்..?” விமலா மாலதியிடம் வெடுவெடுத்தாள்..

மாலதியால் என்ன பதிலைச் சொல்ல முடியும்..? அவள் இந்தத் திருப்பத்தை எதிர்பார்த்தாளா என்ன..? வெற்றிவேலை ரியா திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதில் நஷ்டம் அவளுக்குத்தானே.. அதை அவள் யாரிடம் சொல்லி அழ முடியும்..? திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல வேதனையைப் பொறுத்துக் கொண்டுதான் இருந்தாக வேண்டும்..

கீர்த்தனாவைப் பெண் கேட்க வந்த சவிதாவிற்கு ஏமாற்றமாக இருந்தது.. மகனுக்குப் பெண் பார்க்க வந்து விட்டு அது முடியாமல் திரும்பிப் போவதில் அவள் மனதுக்குள் சங்கடம் வந்தது.. அவள் கூடச் சொன்னாள்..

“ஏங்க.. ரியாவை நம்ம கிரணுக்கு பேசி முடிச்சிட்டா என்னங்க..? நமக்குப் பெண் மாறினதைப் போல.. அவங்களுக்கும் மாப்பிள்ளை மாறியிருக்கில்ல..?”

கருணாகரன் கிரணைப் பார்த்தார்.. அவன் மட்டுமல்ல.. ரியாவும் அதை மறுத்து விட்டாள்.. இருவருமே ஒன்று போல ஒரே கருத்தைத்தான் சொன்னார்கள்..

“என்னைக்குமே ரியாவை நான் ஜோடியா நினைச்சுப் பார்த்ததில்லம்மா.. அவளும் அப்படித்தான்.. இத்தனை நாளா வெற்றியை மேரேஜ் பண்ணிக்கப் போகிறவங்கிற பொசிசன்ல அவளைப் பார்த்திருக்கேன்.. அவளும் அதே பொசிசன்ல இருந்து என்கூடப் பேசிப் பழகியிருக்கா.. திடிர்ன்னு அது மாறினாலும் எங்க மனசில அதே உறவுதான் இருக்கும்மா.. அது மாற நாளாகும்.. ரியா வேற யாரையாவது மேரேஜ் பண்ணி நான் அதை விஷ் பண்ணினா அது வேற விசயம்.. அதுவே ரியாவும் நானும் மேரேஜ் பண்ணிக்கிறதா இருந்தா.. நெவர்.. அது எங்களாலே முடியாத விசயம்.. இப்ப என்னம்மா.. எங்க ரெண்டு பேருக்குமே டைம் இருக்கு.. நிதானமா எங்க லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணிக்கத்தான் போறோம்.. எதுக்கு அவசரப் படறிங்க..?”

கிரண் சொன்னதை முழுமனதாக ரியா ஆமோதித்தாள்.. அந்த வகையில் அவர்களின் முடிவு விமலாவிற்கு கொஞ்சம் நிம்மதியைத் தரத்தான் செய்தது..

“இந்தக் கிரண் பய மட்டும் நம்ம வெற்றிக்குப் பார்த்த ரியாவைக் கல்யாணம் பண்ணியிருந்தா அவனை வீட்டுப் பக்கமே சேர்த்திருக்க மாட்டேன்..” என்று நந்தினியிடம் அவள் சொன்னாள்..

வந்திருந்த விருந்தினர்களுடன் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவுக்கு அவர்கள் குடும்பத்துடன் போய் வந்தார்கள்.. பஞ்சமுக விநாயகரைத் தரிசனம் செய்தார்கள்.. வெற்றிவேலின் குடும்பத்தின் சார்பாக லட்சார்ச்சனை நடைபெற்றது.. மாரியம்மன் கோவிலைச் சுற்றிப் பார்த்து வியந்து விட்டு.. தொன்மை வாய்ந்த கைலாச நாதரையும் வணங்கி விட்டு.. திருத்தங்கல் குன்றின் மீது ஏறி நின்ற நாராயணப் பெருமாளையும் வணங்கி விட்டு.. விருந்தினர்கள் ஊர் போய் சேர்ந்தார்கள்..

கீர்த்தனாவின் திருமணம் பற்றிய விவரத்தை அறிந்தவுடன் படுத்த படுக்கையாக இருந்த கைலாசம் துள்ளிக் கொண்டு எழுந்து அமர்ந்து விட்டார்..

“வெற்றி.. என் தங்கமே..”

பேரனின் கன்னம் வருடி அவர் சிந்திய கண்ணீர் துளிகளில் வெற்றிவேல் நெகிழ்ந்து விட்டான்.. அதுவரை அத்தைகைய பாசத்துடன் அவனுடைய தாத்தா அவனை அரவணைத்ததில்லை..

அந்த வயோதிகரின் விழிகளிலும்.. முகத்தினிலும் தெரிந்த சந்தோசத்தைப் பார்த்த போது.. இதை விடவா அந்தஸ்து உயர்ந்தது என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது..

தினமும் கைலாச நாதரின் கோவிலுக்கு வரும் கீர்த்தனாவுடன் தனித்துப் பேச அழைத்துக் கொண்டு போய் விடுவான் வெற்றிவேல்.. மனம் முழுவதும் ஆனந்தத்துடன் தனியே வீடு திரும்புவார் கைலாசம்..

எந்ததெந்த இடங்களுக்கு ரியாவை அவன் அழைத்துக் கொண்டு போனானோ.. அந்த இடங்களுக்கெல்லாம் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு போனான் வெற்றிவேல்..

“எவ்வளவு அழகா இருக்கு அத்தான்..?”

இருகைகளையும் கன்னத்தில் குவித்து வைத்து கண்கள் விரிய அவள் குதூகலித்தபோது.. இயந்திரம் போல ரியா சொன்ன ‘ஹௌ ஸ்வீட்..’ தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது..

‘பக்கத்திலேயே கொடி மலரை வைச்சுக்கிட்டு செயற்கை மலரின் பின்னால் போயிருக்கேன் பாரு..’ என்று நினைத்துக் கொண்டான்..

அடுத்து வந்த முகூர்த்த தினத்தில் சிவகாசியையே ஒரு கலக்கு கலக்கி மிக பிரம்மாண்டமாக 

வெற்றி வேலுக்கு.. கீர்த்தனாவுடன் திருமணம் நடைபெற்றது.. அரை மனதாக இருந்தாலும் மகனின் திருமணம் என்பதால் முக மலர்ச்சியை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட திருமண மண்டபத்தில் உலா வந்தாள் விமலா.. 

திருமணத்திற்கு கிரணின் குடும்பம் வந்திருந்தது.. ரியாவின் குடும்பம் வரவில்லை.. திருமணம் முடிந்து கிளம்பும் போது கிரண்.. மோகனரங்கத்தை கூட அழைத்துக் கொண்டான்..

“கம்யூட்டருக்கும் கந்தக பூமிக்கும் என்ன மாமா சம்பந்தம்..? நீங்க ஜீனியஸ்..! உங்களுக்குத் தெரியாத வேலையில ஒட்டிக்கிட்டு தண்டச் சம்பளம்ன்னு பெயர் வாங்கறதைவிட.. தெரிஞ்ச வேலையைப் பார்த்து நியாயமான சம்பளத்தை வாங்குங்களேன்.. அத்தைக்கும் அதுதான் சந்தோசம் மாமா..”

கிரண் அழைத்ததை விட.. மோகன ரங்கம் அவன் அழைப்பை ஏற்றுக் கொண்டு கிளம்பி விட்டதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..

“எப்புடிடா..?” வெற்றிவேல் வியந்தபோது..

“மீனுக்கு தண்ணிரில்தான் வாழ முடியும் வெற்றி.. இவரால கம்யூட்டரிலதான் சாதிக்க முடியும்.. இவரோட சேவை எனக்குத் தேவைப்படுது.. இனி இவர் என்னோட பெர்சனல் மேனேஜர்..” என்று கண்சிமிட்டிச் சிரித்தான் கிரண்..

திருமணம் முடிந்த புதுமணத்தம்பதிகள்.. சிவகாசியின் அடையாளமான கைலாசநாதர் கோவிலுக்குப் போய் விசாலாட்சியுடன் நின்ற கைலாசநாதரை வணங்கினார்கள்.. அடுத்து குன்றின் மேல் திருத்தங்கலில் குடியிருக்கும் நின்ற நாராயண பெருமாளை வணங்க குடும்பத்துடன் மலையேறிக் கொண்டிருந்தார்கள்.. பெருமாள் ஸ்ரீதேவி.. பூதேவி சகிதம் காட்சிதந்தார்.. சிவன்.. செங்கமல நாச்சியார்.. முருகன்.. என்று தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்த அனைத்து தெய்வங்களையும் வணங்கிவிட்டு.. மலையிறங்கியபோது விமலாவின் மனம் சமனப் பட்டு கீர்த்தனாவை மருமகளாக முழு மனதுடன் ஏற்றிருந்தது..

முதலிரவின் தனிமையில் வெற்றிவேல் புது மனைவியை நெருங்கியபோது அவள் அவனது பார்வையைத் தாங்க முடியாத தளிர் கொடியாய் அவன் மார்பில் சாய்ந்தாள்.. வெற்றிவேலின் கைகள் அவளை வளைத்தன.. அவன் முன்னேறிய போது அவள் நடுங்கிய நடுக்கத்தில் அவன் பெண்மையின் சிலிர்ப்பை உணர்ந்தான்.. அந்த நொடியில்தான் அவனுக்கு அது புரிந்தது..

கீர்த்தனா அவனுடன் மனதில் பேசிய தருணங்களில் அவனும் அவளுடன் மனதில் பேசியிருக்கிறான்.. மனதோடு பேசிய அந்தப் பேச்சினால்தான் அவனால் ரியாவை திருமணம் செய்து கொள்ள முழுமனதாக சம்மதம் கொடுக்க முடியாமல் போயிருக்கிறது.. கீர்த்தனாவை கிரணுக்கு விட்டுக் கொடுக்க முடியாமலும் போயிருக்கிறது..

பேசுங்கள்.. மனம் விட்டு மட்டுமல்ல.. மனதோடும் பேசிப் பாருங்கள்.. நினைத்தது நடக்கும்..

– முற்றும் –

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link