Chapter 03
முகிலன் எம்.பி.ஏ. என்ற நியான் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கேபினின் வாசலில் நின்று.. கதவை சன்னமாக ஒரு விரலால் தட்டினாள் மிருணாளினி…
“யெஸ்.. கமின்…”
முகிலனின் குரல் அழைத்தது… அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..
சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த முகிலனின் பார்வை அவளை குற்றம் சாட்டியது. பிடிவாதமாக அவனது பார்வையைத் தவிர்த்து நிலம் பார்த்தாள் மிருணாளினி.
“உட்கார்…”
சேரின் நுனியில் அமர்ந்தாள்..
“உன் பெயர் மிருணாளினியா…? இல்லை.. பி.டி.உஷாவா..?” என்று கேட்டான் முகிலன்.
அவனது எதிர்பார்ப்பின் படி அவளது பார்வை உயர்ந்தது. கேள்வியுடன் அவனைப் பார்த்தது…
“என்னமோ.. ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கப் போகிறவளைப் போல.. உட்கார்ந்திருக்கயே.. அதுதான் கேட்டேன்…”
மிருணாளினி நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.. முகிலன் அவளையே பார்த்தான். அவள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவும்.. அவன் முகத்தில் எரிச்சல் மண்டியது.
“பேசுடி…” காட்டமாகக் கூறினான்.
“……..” அவளிடம் பதிலில்லை…
“பேசமாட்டாயா…?”
“…………”
“எத்தனை நாளைக்கு இப்படி மௌன விரதம் இருப்ப..?”
“என்னிடம் பேசாமலேயே இருந்து விட உன்னால் முடியுமா…?”
“…………”
“முடியும்ன்னா சொல்லு.. மோதிப் பாத்திரலாம்…”
இப்போது அவள் விழிகள் கலங்கிவிட அவள் இமைகொட்டி… தன்னை சரி செய்து கொண்டாள்.
அதைக் கவனித்தவனின் முகம் கனிந்தது.
“முடியாதுல்ல..? உன்னால் என்னிடம் பேசாமல் இருக்க முடியாதுல்ல..? அப்புறம் எதுக்குடி இந்த மௌன விரதம்…?”
“………”
“நேத்து நீ நம்ம மீட்டிங் ஸ்பாட்டிற்கு வரவில்லை..”
“………”
“நான் காத்திருப்பேன்னு தெரிஞ்சும்.. நீ வராமல் இருந்திருக்க…”
“……….”
“சொல்லிருடி.. வாயைத்திறந்து ஒரு வார்த்தை சொல்லிரு.. என்னை விட்டுடா மடையான்னு சொல்லிரு.. நான் அதுக்குப் பின்னால்… உன் பின்னால் வரமாட்டேன்.. உனக்காக காத்திருக்க மாட்டேன்.. இவ்வளவு ஏண்டி.. அன் அபிஸியலா உன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன்… அப்படிப் பேசினால்.. அப்போ நீ என்னை ஏன்னு கேளு…”
இப்போது மிருணாளியின் கண்ணீர் கரை உடைந்த வெள்ளமாய் அவளது கன்னத்தில் இறங்கி விட்டது. அவள் லேசாக விசும்பினாள்.. முகிலன் அதட்டினான்..
“இப்போ எதுக்கு அழறே…?”
அவள் பதில் சொல்லாமல் கண்ணீரைத் துடைக்க.. அவனுக்கு கோபம் அதிகமானது.
“சொல்லிட்டு அழுது தொலைடி…”
அவனது கோப வார்த்தைகளால் காயப்பட்டவளாக அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்…
“நான் தொலைந்து போகணுமுன்னுதானே நீங்களும் ஆசைப்படறீங்க…?”
“அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேன்.. அப்படி ஆசைப்படுகிறதாய் நான் உன்னிடம் சொன்னேனா…? அந்த மாதிரி நினைவிருந்தால்.. நான் ஏண்டி உன்னை இழுத்து வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறேன்..? நீ படுத்துகிற பாட்டுக்கு.. எப்போதோ தலையை முழுகியிருப்பேன்…”
“சொல்லிக் காண்பிக்கறீங்களா…?”
“நீ சொன்னதுக்கு பதில் சொல்கிறேன்.. நான் உன்னைக் காதலிக்கிறேன் மிருணா.. இதை கோடிமுறை உன்னிடம் சொல்லிவிட்டேன்.. உன் மண்டையில் இது ஏறித் தொலைக்க மாட்டேங்கிறது.. நான் என்ன செய்ய..?”
“காதலிக்கிறவர்தான் அவளைப் பார்த்து பல்லைக் காட்டினீங்களாக்கும்…?”
“ஏய்ய்.. அவ என் காலேஜ் மேட்டுடி…”
“இருக்கட்டுமே.. அதுக்காக அப்படி அப்பணுமா…?”
மிருணாளினியின் முகத்தில் கோபம் வர… முகிலன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.. அவளைச் சமாதானப் படுத்தும் வழி அவனுக்குத் தெரியவில்லை.
அவளது கோபத்திலும் ஒரு நியாயம் இருந்து தொலைத்தது. இரண்டு நாள்களுக்கு முன்னால் அவர்கள் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது…
“ஹாய்… முகில்… நீயாடா…?” என்ற கேள்வியுடன் பிரசன்னமான மோனிகா.. அப்படித்தான் அப்பித் தொலைத்தாள்.
முகிலனைத் தோளோடு தழுவி… மிருணாளியின் கண்முன்னாலேயே… அவன் கன்னத்தில் முத்தமிட்டும் வைத்தாள்.
மோனிகாவின் தோள் வளைவில் மிருணாளியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தபோதே முகிலனுக்கு ‘பக்’ கென்று ஆகிவிட்டது.
‘இப்போதுதான் போன வாரக் கோபம் தணிந்து.. என்னிடம் முகம் கொடுத்துப் பேசிக்கிட்டிருக்கா.. இந்த மகராசி வந்து அடுத்த வெடியைக் கொளுத்திப் போட்டுட்டாளா.. ம்ஹூம்.. இனி இவ மலையேறி விடுவாளே… மாசக்கணக்கில் இறங்கி வரமாட்டாளே…’
அவனது பயம் உண்மையானது.. மோனிகா போனதும்..
“எவ.. அவ…?” என்று ஆரம்பித்தாள் மிருணாளினி..
“என் கூடப் படித்தவ…!”
“கூடப் படித்தவளா…? இல்லை…” முடிக்காமல் விட்ட மிருணாளியின் கேள்வியில் எதுவோ மறைந்திருக்க.. முகிலன் கோபமானான்…
“மிருணா… வேண்டாம்…”
“நான் உங்களுக்கு வேண்டாம்தான்…”
“ச்சீ.. உன் தரத்துக்கு இவ்வளவு இறங்கிப் பேசலாமா…?”
“ஆமாமாம்… நான் இறங்கிப் பேசுகிறேன்தான்.. இப்படி பப்ளிக் பிளேஸில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துட்டுப் போறாளே.. அவ உயரத்தில் இருந்து பேசுகிறவள்தான்…”
“அவ விகல்பமில்லாதவடி…”
“ஆர் யு ஷ்யூர்…? இதைப் போல.. நான் என் காலேஜ் மேட்டுக்கு உங்க கண் முன்னாலேயே முத்தம் கொடுத்தாலும் இதே ஸ்டேட்மென்டைத்தான் சொல்வீங்களா…?”
“ஏய்ய்….”
முகிலன் அவள் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அறை விட்டான்.. அவள் வலியைக் காட்டிக் கொள்ளாமல் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.
முகிலன் தலையைப் பிடித்துக் கொண்டான்.. அவனால் மிருணாளினி பேசிய வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை…
அதே சமயத்தில் அவள் வார்த்தைகளில் இருந்த நியாயமும் அவனைச் சுட்டது..
‘எங்கேயிருந்துதான் இவள் வந்து தொலைத்தாளோ..’ அவன் மனதிற்குள் அந்த மோனிகாவை சபித்தான்..
“நானாடி அவளை வரச்சொன்னேன்…?”
“அது எனக்கெப்படித் தெரியும்…?”
“அறிவில்லாமல் பேசாதே மிருணா.. அவளை உன் முன்னால் வரச் சொல்ல.. நான் என்ன முட்டாளா…?”
அவளை சமாதானப்படுத்த வாய் விட்டவன்.. அவள் முறைப்பு அதிகமாவதைக் கண்டதும் திகைத்தான்…
‘ஐயையோ… நான் என்னத்தைப் பேசித் தொலைத்தேன்..?’ அவன் திகிலடைந்து போனவனாய் நிற்க.. அவள் வாய் திறந்தாள்..
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.