Chapter 04

0Shares

“இப்ப அதுதான் உங்களுக்கு வருத்தமா…?”

“எதுடி…?”

“உங்களுக்குப் புரியவில்லையாக்கும்…?”

“நிஜமாகவே புரியலை மிருணா…”

“என் பெயரைச் சொல்லிக் கூப்பிடவேண்டாம்..”

“வேற யார் பெயரைச் சொல்லிக் கூப்பிட…?”

“ஓ.. அது வேற இருக்கில்ல.. ஏன்… உங்க ஆசைக்காதலி பெயரைச் சொல்லிக் கூப்பிடுங்களேன்…”

“அது நீதானேடி…”

“அந்தக் கதையெல்லாம் இங்கே வேண்டாம்..”

“சரி.. வேண்டாம்… உனக்கு வேண்டாம்கிறது எனக்கு மட்டும் எதுக்கு… விட்டுவிடுவோம்…”

“விடத்தானே நீங்க துடிச்சுக்கிட்டு இருக்கீங்க…”

“எதைவிட.. துடிச்சுக்கிட்டு இருக்கேன்…?”

“எதைன்னு உங்களுக்கு தெரியாதாக்கும்…”

முகிலன் உண்மையிலேயே களைத்துப் போய் விட்டான். இன்று முழுவதும் அவள் இதே ரீதியில்தான் பேசி கழுத்தறுக்கப் போகிறாள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்து விட்டது. இன்னும் சற்று நேரம் அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால்… தலை குழம்பி விடும் அபாயமிருந்ததால்.. அவன் புறமுதுகு காட்ட முயன்றான்…

“இப்ப எதுக்கு வாட்சைப் பார்க்கறீங்க…?”

“வாட்சை எதுக்குப் பார்ப்பாங்க…?”

“நேரம்தான்…”

“தெரிஞ்சுக்கிட்டே ஏன் கேட்கிற..?”

“நான் என் நேரத்தைச் சொன்னேன்…”

“நீ அடிதான் வாங்கப் போகிற…”

“அதுதான் ஏற்கெனவே நீங்க கொடுத்து.. நான் வாங்கியாச்சே.. இன்னும் என்ன பாக்கியிருக்கு…?”

“த்சு.. ஏதோ கோபத்தில் அடிச்சுட்டேன்.. ஸாரி..”

“ஆமாம்… தெரியாமல்தான் கேட்கிறேன்.. என் முகத்தில் ஏமாளின்னு எழுதி ஒட்டியிருக்கா…?”

“என்னடி.. இப்படிக் கேட்கிற…?”

“அவளைப் பார்த்தால் உங்களுக்கு முத்தம் கொடுக்கத் தோணுது.. என்னைப் பார்த்தால் அடி கொடுக்கத் தோணுதுன்னா.. நான் ஏமாளியில்லையா…?”

‘இவள் எங்கே சுற்றி.. எங்கே வருகிறாள்…’ அவனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

மிருணாளினி அந்த முத்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டாள் என்பது புரிந்துவிட… அவன் எழுந்து பேண்ட்டில் ஒட்டிக் கொண்டிருந்த மணலைத் தட்டி விட்டான்..

“என்ன…?” அவள் எழுந்து கொள்ளாமல் வினவினாள்..

“நேரமாச்சு…” அவன் திரும்பவும் வாட்சைப் பார்த்தான்.

“நேத்து.. இதைவிட அதிக நேரம் உட்கார்ந்திருந்ததாய் எனக்கு ஞாபகம்..”

‘வரும்டி.. உனக்கு வரும்.. ஏன் வராது…?’ பல்லைக் கடித்தான் முகிலன்…

அவனுக்கு மட்டும் சீக்கிரமாக வீட்டுக்குப் போக வேண்டுமென்று வேண்டுதலா.. என்ன..?

ஆசையாய் பேச வந்தவனை இப்படி எண்ணெய்ச் சட்டியில் போட்டு வறுக்காத குறையாய் தாளித்துக் கொண்டிருந்தால்.. அவனுக்கு முள்ளின் மேல் நிற்பதைப் போல இருக்காதா…?

“இன்னைக்கு வேலையிருக்கு மிருணா…”

“என்ன வேலை..? அந்த மோனிகாவைப் பார்க்கப் போகும் வேலையா…?”

“அபாண்டமாய் பேசாதே.. அவ எங்கேயிருக்கான்னு கூட எனக்குத் தெரியாது…”

“இதை நான் நம்பணுமாக்கும்..”

“மிருணா.. வேண்டாம்.. கிளம்பு…”

“நீங்க கிளம்புங்க…”

“நீ…?”

“அதைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்…”

“நான் கவலைப்படாமல் வழியில் போகிற வழிப் போக்கனா கவலைப்படுவான்..? இம்சையைக் கிளப்பாமல் வாடி….”

“இம்சையா..? நானா…?”

“நான் உன்னைச் சொன்னேனா…?”

“வேற யாரைச் சொன்னீங்க…?”

“ஏய்ய்.. இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்டி… கொஞ்சம் கருணை காட்டுடி.. ஆயிரம்தான் இருந்தாலும் நான் உன்னைக் காதலித்து தொலைத்தவன்.. அதையாவது நினைத்துப் பார்…”

“காதலித்து தொலைத்தீங்களா..? ஏன் சொல்ல மாட்டிங்க.. நான் அவளைப் போல கட்டிப்பிடித்து முத்தமா கொடுக்கிறேன்…?”

‘இவளை என்னதான் செய்வது..?’ பல்லை நறநறவென்று கடித்த முகிலன்..

“நீ எனக்கு முத்தமே கொடுத்ததில்லையா..?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்..

அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் முகம் சிவக்க மௌனித்தாள்… அதுவரை இருந்த எரிச்சல் மறைந்து போக.. முகிலனின் மனம் மிருதுவானது.

அவன் அவளையே பார்த்தான். அவளின் இந்த நாணம் அவனை வசீகரித்தது…

அவளுக்கு அவனைப் பிடிக்கும். மிக… மிக… மிகப் பிடிக்கும். அதை முகிலன் நன்கு அறிவான்..

அவளின் அந்த அதீதக் காதல் மழையில் நனைந்த பின்னால் வேறொருத்தியின் முத்தம் என்ன.. அதற்கு மேல் அவள் முன்னேறினாலும் அவள் அவனுக்கு மிருணாளினியாகிவிட மாட்டாள்..

இதை ஏன் மிருணாளினி புரிந்து கொள்ள மறுக்கிறாள் என்ற கோபம்தான் முகிலனுக்கு…

“நீ என்னை தொட்டதில்லையா…?” அவன் மேலும் வினவினான்.. அவள் மேலும் முகம் சிவக்க.. அந்த மென்மையான காதல் உணர்வின் அலைகளை நுகர அவன் விரும்பினான்..

‘மிருணாளினி…’

அவள் பெரிலேயே அவனை வசீகரித்தவள்…

அவளது வேலைக்கான விண்ணப்பத்தை பரிசீலனை செய்த போது.. அவளது போட்டோவைப் பார்க்காமல் பெயரைத்தான் முதலில் படித்தான் முகிலன்..

‘மிருணாளினி…’ என்ற பெயர் அவனை வசீகரித்து விட.. அவள் எப்படியிருப்பாள் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவனுக்குள் முகிழ்ந்தது.

அவசரமாக அவளது போட்டோவைப் பார்த்தான். பெயருக்கேற்ற மென்மையை அவளது போட்டோ பிரதிபலித்தது.

அவளைக் காதலிக்க ஆரம்பித்த பின்னால்.. பல தருணங்களில் அவன் அதை அவளிடம் சொல்லியிருக்கிறான்..

“நீ மட்டும் நான் எதிர்பார்த்ததைப் போல இல்லாமல் இருந்திருந்தால் எனக்கு ஏமாற்றமா போயிருக்கும் மிருணா..”

“ஐய்யே.. எல்லாரும் ஆளைப் பார்த்து லவ் பண்ணுவாங்கன்னா.. நீங்க பெயரைப் பார்த்து லவ் பண்ணினீங்களாக்கும்…”

அவள் காதலாய் சொல்லிய போது.. சொன்ன ‘உக்கும்’ அவனைக் கவர்ந்தது.

இப்போது அவனைக் கடுப்படிக்கவென்று சொன்ன ‘உக்கும்..’ அவனைக் கதிகலங்க வைத்து கசந்தது..

“நீ என்னைக் கட்டிப் பிடித்ததேயில்லையா..?” அவன் கேள்வியைத் தொடர…

“ப்ளீஸ்..” என்று அவள் எழுந்து விட்டாள்..

“போகலாம் வாங்க..”

“இரு.. போகலாம்…”

“உங்களுக்கு நேரமாகி விட்டதுன்னு சொன்னீங்களே..”

“இப்போது நேரமாகவில்லை…”

“பட்.. எனக்கு நேரமாகிவிட்டது..”

“மிருணா…”

“போகலாம் வாங்க…”

அவள் முகம் இறுகிப் போயிருந்தது.. அந்த நிலவொளியிலும் தெளிவாக முகிலனுக்குத் தெரிந்தது.

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link