Chapter 13
‘இது ஒரு சாபம்…’
மிருணாளினி மன வேதனைப் படுவாள்..
அவள் முகிலனைக் காதலித்தாள்.. அவள் வேண்டும் என்று அவன் தாபம் கொள்வதைப் போல.. அவன் வேண்டும் என்று அவளது மனமும் தவித்தது.
அந்தத் தவிப்பையும் துடிப்பையும் அனுபவித்துக் கொண்டிருப்பவளிடம், அவன் கல்யாணத்தை வேண்டும் போது…
‘வா.. நாம் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்…’ என்று சொல்லிவிட அவள் மனம் துடிக்கும்.
ஆனால்.. அதைச் சொல்ல விடாமல் சூழ்நிலை தடுக்கும்.
‘இது என்ன மாதிரியான சாபம்..?’ அவள் மனம் பொங்கியது..
‘கண்ணெதிரே உணவு இருந்தும்.. சாப்பிட முடியாமல்.. கைகள் கட்டப்பட்டிருக்கும் சாபம்.. எனக்கே உரியவனுடன் கலந்து குடும்பம் நடத்த முடியாமல்.. என்மேல் ஏவிவிடப் பட்டிருக்கும் சாபம்..’ அவள் விழிகளில் கண்ணீர் அரும்பியது.
‘ஏன்.. பெண்ணென்று இந்தப் பூமியில் பிறந்தேன்..?’ அவள் கண்ணீர் சிந்தினாள்.
மற்றவர்களைப் பற்றிய நினைவில்… தன் காதலை மனதில் புதைத்துக் கொண்டு நடமாட வேண்டிய நிர்பந்தம், பெரும் சுமையாய் அவள் மனதில் கனத்தது.
அப்படிப்பட்ட நேரங்களில் அவளது மனதை படித்து விடுவான் முகிலன்..
“ஏய்ய்.. அழுமூஞ்சி.. எதுக்குடி கண்ணைக் கண்ணைச் சிமிட்டுற…?”
“உங்களைப் பார்த்து ஒண்ணும் சிமிட்டலை…”
“அதுதான் தெரியுதே.. அம்மணி.. கண்ணில் டேமை வைச்சுக்கிட்டு.. கண்ணீருக்கு தடா போட்டு நிப்பாட்டிக்கிட்டு இருக்கேன்னு புரியுதே.. என்ன விசயம்..?”
“முகில்…”
அவள் உடைந்து போய் அவன் மார்பில் முகம் புதைத்து அழுவாள்..
அவன்.. அவளைத் தடுக்கமாட்டான். அவனது மனபாரம் தீரும் வரை அழவிட்டு காத்திருப்பான்…
ஒரு வழியாய் அவள் அழுந்து ஓய்ந்ததும் சீண்டுவான்..
“இன்னைக்குன்னு புதுசர்ட் போட்டுக்கிட்டு வந்தேன்டி.. அதைக் கசக்கிட்டயே…”
“அதுதான் வினையே…”
“என்னது…?”
“ம்ம்.. உங்களை யார் புது சர்ட் போட்டுக்கிட்டு வரச்சொன்னதாம்…?”
“ஏனாம்…?”
“இந்த சர்ட்டில் அழகாய் இருந்து தொலைக்கறிங்களே..” அவனுக்குப் புரியும்… அவனைத் தேடும் அவளது மனதின் தவிப்பைப் புரிந்து கொள்வான் அவன்…
மிருணாளினி அவனிடம் மயங்கியிருந்தாள். அதில் அவனுக்கு நிறையப் பெருமையும், ஆண்மையின் வெற்றி கலந்த கர்வமும் உண்டு.
அவனது தோற்றத்தில் அவள் மயங்குவதை அவள் வாய்விட்டுச் சொல்லியதில் அவன் இறங்கிப் போனான்.
“அழகாய் இருந்தாலென்ன..?” அவன் அவளை சீண்டினான்.
“ம்த்சு…” அவள் நிறைவேறாத தவிப்புடன் சிணுங்கினாள்.
“ஏனிந்த சலிப்பு…?”
“தெரியாதாக்கும்…”
“தெரியலையே…”
அவன் சும்மாயிருக்காமல் கண் சிமிட்டி வைக்க.. அவள் தாள முடியாதவளாய் அவன் மடிமீது சுருண்டாள்.
“தாளாத பெண்மை வாடுமே.. பாடுமே…”
அருகேயிருந்த தள்ளுவண்டியில் ரேடியோ பாடியது..
“யாரது…? சொல்லாமல்.. நெஞ்சள்ளிப் போவது…”
அவள் விழி மலர்த்தி அவனைப் பார்த்தாள். அந்த விழிகளில் தெரிந்த அழைப்பில் அவன் கள்ளுண்ட வண்டாக அவள் மேல் குனிய.. விலகி எழுந்து அமர்ந்தாள்.
“ஏண்டி…?”
“வீட்டுக்குப் போகலாம்…”
“அதுக்குப் பதில்.. வேறொன்றைச் செய்யலாம்…”
“என்ன…?”
“உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்…”
அவன் வார்த்தைகளில் அவள் கரைந்து போனாள்.. சொல்லி வைத்ததைப் போல.. தள்ளுவண்டியின் ரேடியோப் பெட்டி..
“கல்யாணம்தான் கட்டிக்கிட்டு…
ஓடிப் போகலாமா…?
இல்லை.. ஓடிப் போயி…
கல்யாணம் தான் பண்ணிக்கலாமா…?”
என்று பாடி வைத்தது…
“நான் கேட்க வேண்டிய கேள்வியை பாட்டே கேட்குது.. என்னடி சொல்கிற…?”
முகிலனின் கைகள் அவளைச் சுற்றி வளைத்துப் பரவிப் படர்ந்தன..
மிருணாளினி.. அத்துமீறும் அவன் கரங்களுக்குள் அடைக்கலமாகிவிட வேண்டும் என்று விரும்பினாள்.
ஆனாலும் மனதிற்கு மாறாக.. அவன் கைகளை விலக்கி.. விலகினாள்..
“மிருணா…”
அவன் குரல் தாபத்துடன் அவள் காதோரமாக ஒலித்தது.. அவள் கண்மூடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் போராடினாள்…
அது ஒரு துன்பம்.. மனம் விரும்புகிறவனுடன்.. மனம் விரும்புகிறபடி கலந்து விட முடியாமல் விலகி விட நேர்வது..
அந்தத் துன்பத்தில் விழுந்தவளாய் மிருணாளினி சோர்வுடன் மறுத்தாள்..
“ப்ளீஸ்.. முகில்…”
“ஏன்…?”
“அந்தக் கடலைப் பாருங்க..”
முகிலன் பார்த்தான். வெள்ளை நிறத்தில் அலைகள் எழுந்து கரை தொட வேண்டி ஓடிவந்து.. தோற்று விழுந்து.. பின்வாங்கின..
“அந்த அலைகள் கரையைக் கடந்தால் என்ன ஆகும்..?”
மிருணாளினியின் கேள்வியில் இருந்த நியாயம் அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது..
ஆயினும் பொங்கி எழும் அலைகளைப் போன்ற உணர்வுகளை வெல்வது அவ்வளவு எளிதாகவும் அவனுக்கும் இருக்கவில்லை…
“நீ என்னை சோதிக்கிறாய் மிருணா..” அவன் குற்றம் சாட்டினான்.
“இந்தச் சோதனை எனக்கும்தான்…” அவள் குரல் நடுங்க பதில் சொன்னாள்.
“வா.. இதை வென்று காட்டுவோம்…”
“எப்படி…?”
“சேர்ந்து வாழ்ந்துதான்…”
“அப்படியொரு காலம் வரும்.. அப்போது நானும் வருவேன்..”
“அதுவரை…?”
“பொறுத்திருங்க…”
அவன் பொறுமையிழந்தவனாக சிடுசிடுத்தான். அவன் விரல் பற்றி மிருணாளினி சமாதானம் செய்ய முற்படுகையில்.. தள்ளுவண்டியின் ரேடியோ அடுத்த பாட்டிற்கு தாவியது..
“உன்னைத் தொட்ட காற்றுவந்து…
என்னைத் தொட்டது…
அதுவே போதுமென்று பெண்மையுன்னை
கேட்டுக் கொண்டது…
வரலாம்.. தொடலாம்.. மணநாள் வரும் போது…
தருவேன்.. எனைநான்…
பக்கம் நீ வரும் போது…”
இனம் புரியாத விதத்தில்.. ஏதோ ஒரு வகையில்.. அந்தப் பாடல் முகிலனை அமைதிப்படுத்தியது..
“உன் பாதம் தொட்ட அலைகளே…
என் பாதம் தொட்டது..”
இப்போது பாட்டோடு.. மிருணாளினி சேர்ந்து பாடினாள்.. அவர்களின் இருவரின் பாதங்களையும் கடலலைகள் தொட்டு நனைத்த போது.. அவர்களது கிளர்ச்சி.. போன இடம் தெரியாமல் மறைந்து விட்டிருந்தது.
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.