Chapter 16

0Shares

தன் பையிலிருந்த போட்டோவை மீண்டும் பார்த்தாள் நிஷா.. ஆண்மை ததும்பும் கம்பீரமான தோற்றத்துடன் அந்தப் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தான் முகிலன்..

‘பெர்ஸனல் மேனேஜராமே… ம்ம்ம்…’

அவனது தோற்றம் அவளை வசீகரித்தது.. அவனை மீண்டும்.. மீண்டும் பார்க்க மனம் தூண்டியது.. அவள் பார்த்தாள்.. ஆழ்ந்து பார்த்தாள். விழிகளை விலக்க மனமில்லாமல் உற்றுப் பார்த்தாள்

‘இவன் எனக்கு ஹஸ்பெண்டாக அமைந்தால்.. நிச்சயம் நான் லக்கிதான்..’ மனதுக்குள் கூறிக் கொண்டாள்..

“நிஷா…” அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் கௌதம்.

மகளையும் அவள் கையிலிருந்த போட்டோவையும் மாறி மாறிப் பார்த்தார்.

மறைக்க வழியில்லாமல் மாட்டிக் கொண்ட உணர்வுடன்..

“டாட்…” என்று எழுந்தாள் நிஷா…

“என்னம்மா இந்தப் போட்டோவைப் பார்த்துக்கிட்டிருக்கே…?” புருவம் உயர்த்தினார் கௌதம்.

“நத்திங் டாட்…”

“ஒன்றுமேயில்லையா…?” அவர் மனம் நம்ப மறுத்தது.

“இந்த முகிலன் மேரேஜுக்கு சம்மதிக்கலையாம் நிஷா..” மகளுக்கு அறிவுறுத்தினார்.

“ஐ நோ இட் டாடி…”

“அப்புறமும் எதுக்கும்மா இந்த போட்டோ நம்மகிட்ட இருக்கணும்…? தூக்கி எறி…”

‘தூக்கி எறிவதா..? இவனையா..? நோ…’

நிஷாவின் பார்வை கட்டுப்படுத்த முடியாமல் முகிலனின் போட்டோவின் மீது படிந்தது.

அதை கௌதமும் கவனித்தார்.

“ஹி இஸ் எ பெர்ஸனல் மேனேஜர் டாட்..”

“வாட் ஃபார் இட்…?”

“எம்.ஈ. முடித்துவிட்டு எம்.பி.ஏ பண்ணியிருக்கிறான்..”

“ஸோ வாட்…?”

‘எல்லாத்துக்கும் ‘வாட்.. வாட்’டுன்னு சொல்லாம உருப்படியாய் எதையாவது யோசியுங்க டாடி…’

அலுப்புடன் நினைத்துக் கொண்டாள் நிஷா.. அவளுக்கு அவனை கைநழுவ விட மனமில்லை..

“அகிலா நல்லவங்க…”

“நான் இல்லைன்னு சொன்னேனா…?”

“அவங்க பேரண்ட்ஸ் வொர்க்கிங் பீபுள்…”

“இதையெதுக்கு நாம பேசணும் பேபி…?”

“டாடி.. அவங்க எப்பவும்.. முகிலனை டிபண்ட் பண்ணி இருக்க மாட்டாங்க.. இது எவ்வளவு பெரிய விஷயம்…?”

‘நடக்காது’ என்று முடிவாகி விட்ட ஒன்றைப் பற்றி.. திரும்பத் திரும்ப பேசும் மகளை கவலையுடன் பார்த்தாள் கௌதம்.

“‘கிட்டாதாயின் வெட்டென மற’ன்னு ஒரு தமிழ் புராவெர்ப் உண்டு நிஷா… உன் அம்மா இதை உனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறா…”

“‘முயற்சியுடையார்.. இகழ்ச்சியடையார்…’ இதுவும் ஒரு தமிழ் புராவெர்புதான்.. இதையும் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாங்க.. டாடி..” 

“இப்ப என்னதான் சொல்ல வருகிற…?”

“டாட்.. முகிலனின் அக்காவுக்கு மேரேஜ் ஆகியிருச்சு.. ஷி இஸ் வெல் செட்டில்டு வுமன்..”

“நம்ம பக்கத்து அபார்ட்மெண்ட்தானே..? நமக்குத் தெரியாமல் போகுமா..? அவங்க வசதிதான்.. அதுக்கென்ன இப்ப…?”

“முகிலனின் பேரண்ட்ஸ் சம்பாதிக்கிறாங்க.. கடைசிவரை பென்சன் கிடைக்கிற வேலை…”

“அதை வாங்கி நமக்கு கொடுக்கப் போகிறாங்களா..?”

“முகிலன்கிட்ட அவங்களுடைய தேவைக்காக கேட்க மாட்டாங்க.. அதோடு அகிலாக்காவின் தேவைகளுக்கும் முகிலனை கேட்கவிட மாட்டாங்க..”

“இவ்வளவு தூரத்துக்கு நீ யோசிக்கணுமா…?”

“முகிலனுக்கு சென்னையில் சொந்தமாக பங்களா இருக்கு. அந்த பங்களா மெயின் சிட்டியில் அமைஞ்சிருக்கு. இது எல்லாத்துக்கும் மேல.. அது.. அவர் பெயரில் இருக்கு.. இது போக அவரோட அப்பா அம்மாவுக்கு வீடு இருக்கு. அபார்ட் மெண்ட் ஒண்ணும் இருக்காம்..”

“நீ மூளையை ரொம்பத்தான் சூடாக்கிக்கிற நிஷா..”

“அவருக்கு சொந்த கார் இருக்கு.. பேங்க் பேலன்ஸ் இருக்கு..”

“இருந்துட்டுப் போகட்டும்…”

“இவ்வளவு தகுதியோட வேறு ஒரு மாப்பிள்ளையை எனக்காக உங்களால் பார்க்க முடியுமா டாடி…?”

முடியாதுதான்.. அதை கௌதம் உணர்ந்துதான் இருந்தார்.. அவர் ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர்.. டெல்லியில் வசதியாக சொந்த அபார்ட்மெண்ட்.. கார் என வாழ்க்கை நடத்துகிறவர். அவருடைய ஒரே மகளான நிஷாவுக்கு மாப்பிள்ளை தேடி அலைந்த போது.. முகிலனைப் போல அனைத்து தகுதிகளையும் கொண்ட மாப்பிள்ளை அதுவரை அவர்களின் கண்களுக்கு தென்படவேயில்லை..

ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்ற நிலைமை.. படிப்பு இருந்தால் அவனுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகமிருக்கும்.. பெரிய பதவி இருக்காது… இரண்டும் இருந்தால் ஆள் பார்க்க நன்றாக இருக்க மாட்டான்..

கௌதமும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்து விட்டார்.. ஒருவன் கூடத் தேறவில்லை..

மகள் கடைசிவரை திருமணமாகாமல் வீட்டிலேயே இருந்து விடுவாளோ என்ற பயம் கௌதமின் மனைவி விசாலிக்கு வந்து விட்டது..

“ஏங்க… எல்லாமும் இருக்கணும்ன்னு தகப்பனும்.. மகளும் ஒன்று போல பிடிவாதம் பிடிச்சா எப்படி..? ஏறக்குறைய இருந்தாலும்பேசி முடிச்சுருங்க..” என்று கணவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

“அதுக்கு நிஷா சம்மதிக்கனுமே விசாலி…”

“அவளுக்கென்ன தெரியும்.. அவ தாளத்துக்கு நீங்க ஆடாதீங்க.. சொல்லிட்டேன்…”

“இது உன் காலமில்லை விசாலி.. நாம இருக்கிறதும் தமிழ் நாடில்லை.. டெல்லி. நிஷா இங்கே பிறந்து வளர்ந்தவ.. அவமேல நம் கருத்துக்களை திணிச்சுற முடியாது…”

“அதுக்காக.. அவளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாமுன்னு சொல்றீங்களா…?”

விசாலி கோவப்பட்டாள். அவள் பாவம்.. தஞ்சையில் பிறந்து வளர்ந்தவள்.. திருமண மேடையில் தான் கணவனைப் பார்த்தவள்..

‘மாப்பிள்ளை மிலிடிரியில் இருக்கிறாரு… பொண்ணு போட்டோவைப் பார்த்தே புடிச்சுப் போச்சுன்னு சொல்லிட்டாரு…’

கௌதமிற்கு விசாலியின் போட்டோ காட்டப்பட்டது. அவர்களின் திருமணத்திற்கு அவரது சம்மதம் தேவைப்பட்டது..

ஆனால்.. கடைசிவரை விசாலியின் பெற்றோர் கௌதமின் போட்டோவை அவளிடம் காண்பிக்கவுமில்லை. திருமணத்திற்கு அவளது சம்மதத்தை கேட்கவுமில்லை…

பாவம் விசாலி.. ‘வெற்றிலை பாக்கு போடுவதே தப்பு’ என்ற எண்ணத்துடன் வளர்ந்தவள்.. கௌதமின் மதுப்பழக்கத்தைக் கண்டு அதிர்ச்சிக்கு ஆளானாள்…

வாசலில் போய் வயதுப் பெண்கள் நிற்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவள்.. கௌதமுடன் பார்ட்டிகளுக்கு போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள்.

எல்லாவற்றையும் ஜீரணித்து.. அந்த சூழ்நிலையிலும்.. தன் இயல்பு மாறாமல் வாழ்க்கையை நடத்திய விசாலிக்கு.. மகளின் மனப்போக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

என்ன செய்வது…? நிஷா.. விசாலியின் மகளாக வளராமல் கௌதமின் மகளாக வளர்ந்து விட்டாளே…

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link