Chapter 24
செல்போனை காதோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் ரங்கமணி. அமெரிக்க மாப்பிள்ளையைப் பற்றிய பெருமைகளைப் பேசினால் அவளுக்கு வாய் வலிக்கவே வலிக்காது..
“அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.. அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்.. ஹனிமூனுக்கு அமெரிக்காவுக்கு போயிரலாமுன்னு மாப்பிள்ளை சொல்லிட்டாராம்.. எங்க மிருணாவுக்கு விசாவும்.. பாஸ் போர்ட்டும் வாங்கி வச்சுட்டோம்..”
மறு முனையில் இருந்து கட்டாயம் பொறாமையான பதில் வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் சுந்தரம்…
ரங்கமணியின் முகத்தில் பல்ப் எரிந்தது…
“ஆமாமாம்.. எதுக்கு வேலை..? இந்த வேலையை வைத்துத்தான் எங்க மிருணா பிழைக்கணுமா..? மாப்பிள்ளை, வீட்டுக்கு ஒரே பிள்ளை.. பெங்களூரில் சொந்தமா பங்களா… கோயம்புத்தூர் பக்கம் வற்றாத வயல் பாசனம்ன்னு செல்வம் கொழிக்கிற குடும்பம்.. அவங்க வீட்டு மருமகள் ஏன் வேலைக்கு போகணும்..? எங்க மிருணா வேலையை விட்டுருவா..”
இப்போது போனில் பேசிக் கொண்டிருந்த நபர் வெளிப்படையாகவே புலம்பித் தள்ளி விட்டாள் போல..
ரங்கமணி நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டாள்..
“அது சரி.. ஆசையிருக்கும் தாசில் பண்ண.. அதிர்ஷ்டம் இருக்கும் கழுதை மேய்க்க.. எல்லாப் பொண்ணும்.. பொண்ணாயிடுமா..? எங்க மிருணாவை போட்டோவில் பார்த்து ஆசைப்பட்டு.. வீடு தேடி பெண் கேட்டு தானாய் வந்தாங்க.. மத்தவங்களுக்கு அப்படியா..?”
சுந்தரத்திற்கு பசித்தது.. எங்கேயாவது கணவனுக்கு சோறு போட மறந்து.. போனில் பெருமை பேசிக் கொண்டிருக்கும் மனைவி இருப்பாளோ என்று மனதிற்குள் கோபப் பட்டுக் கொண்டார் சுந்தரம்..
பின்னே.. வெளிப்படையாக ரங்கமணியிடம் பேசிவிட அவரால் முடியுமோ..?
வாசலில் கார் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தார்.. முகிலனும்.. மிருணாளினியும் மாலையும் கழுத்துமாக இறங்க.. கூடவே ஜென்ஸியும்.. கயல்விழியும் இருந்தார்கள்.
எம்.டியின் காரிலிருந்து.. அவரும் ஜெனரல் மேனேஜரும் இறங்கி வந்தார்கள்.
சுந்தரத்தின் கையிலிருந்த புத்தகம் நழுவியது…
“ரங்கமணி…” என்று பதட்டமாக அழைத்தார்..
“இப்போதைக்கு சோறு கிடைக்காது…” அவள் அடுத்த நம்பரை அழுத்த ஆரம்பித்தாள்..
“உன் பெருமையில் இடி விழுந்து தொலைச்சிருக்குடி.. போனைத் தூக்கிக் கடாசிவிட்டு.. வாசலுக்கு வந்து பாரு…”
“என்னவாம்.. வாசலில் என்ன நாடகமா நடக்குது…?”
எட்டிப் பார்த்த ரங்கமணிக்கு மயக்கமே வந்து விட்டது.. மனைவியைத் தாங்கிப் பிடித்து உட்காரவைத்த சுந்தரம்.. மிருணாளினியைப் பார்த்த பார்வையில் கொலைவெறி இருந்தது..
“தாரிணியை பெற்றதால் எங்களுக்குப் பெருமை.. உன்னைப் பெற்றதால் இந்தக் கதிக்கு ஆளாக்கினாயா…?”
“அப்பா.. நான் எந்தத்தப்பும் பண்ணலை.. என்னைக் கேட்டுக்கிட்டா பெண் பார்க்க வரச் சொன்னீங்க..? என்னைக் கேட்டுக்கிட்டா நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணினீங்க..? என்னைக் கேட்டுக்கிட்டா கல்யாணத்துக்கு நாள் குறிச்சீங்க..”
“அதனால.. நீயா மாப்பிள்ளை தேடிக்கிட்டாயா..?”
வாக்குவாதம் ஆரம்பமானது.. எம்.டியும்.. ஜெனரல் மேனேஜரும் எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள்.. எடுபடவில்லை..
ஜென்ஸியும்.. கயல்விழியும் வாதாடிப் பார்த்தார்கள்..
சுந்தரமும்.. ரங்கமணியும் அதை காது கொடுத்துக் கேட்கவில்லை..
“போய் விடு..” தீர்மானமாக சொல்லி விட்டார்கள்..
எதிர்பார்த்ததுதான்.. என்றாலும் மிருணாளினிக்கு மனம் வலிக்கத்தான் செய்தது.. அவள் வீட்டை விட்டுக் காரில் ஏறியபோது.. கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது…
“இதையெல்லாம் பேஸ் பண்ணித்தான் ஆகணும் மிருணா…” முகிலன் ஆறுதலாகப் பேசினான். அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டாள் மிருணாளினி..
முகிலனின் வீட்டுக்குள் கார்கள் நுழைந்தபோது.. மாலை வேளையாகி விட்டிருந்தது.. அப்போதுதான் பள்ளியிலிருந்து வீடு திரும்பியிருந்த.. பிரகாசம் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.. கோகிலா காபி போட பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டிருந்தான்..
“முகிலன் வந்துட்டான் போல…” கார்களைப் பார்த்தவள் நின்றாள்..
“கூட அவனோட எம்டி வருகிறார் போல..” பிரகாசம் அவசரமாக எம்.டியின் காரருகே சென்றார்.
மாலையும் கழுத்துமாக இறங்கியவர்களைப் பார்த்ததும் அவர்கள் இருவருக்கும் விசயம் புரிந்து விட்டது..
“அம்மா..” முகிலன் பேச ஆரம்பித்தபோது..
“வேண்டாம்…” கையமர்த்தி விட்டாள் கோகிலா..
“உங்களுக்கு ஷாக்காகத்தான் இருக்கும்..” எம்டி சமாதானமாக பேச முற்பட்டபோது.. கையெடுத்துக் கும்பிட்டாள் கோகிலா..
“சார்.. இது வெறும் வாய் வார்த்தைகளால் சமாதானமாகிற விசயம் இல்லை. காதல் உயர்வானதுதான்.. தாய்மை அதைவிட உயர்வானது.. இவன் காதலைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை..”
“சொன்னால் நீங்க அதை ஏத்துக்க மாட்டிங்கன்னு நினைச்சிருப்பார்…”
“இந்தக் கல்யாணத்தை மட்டும் நான் ஏத்துக்குவேனா..? இதைச் செய்ய முடிந்தவனால்.. அதைச் செய்ய ஏன் முடியவில்லை…?”
“நீங்க கோபப்பட்டிருக்க மாட்டிங்களா..?”
“ஏன்.. என் கோபத்தை அவன் தாங்கிக்க மாட்டானாமா..? இந்த வயிற்றில் அவனைச் சுமந்தபோது.. வயிற்றுக்குள் அவன் எட்டி உதைத்தானே.. அந்த வலியை நான் தாங்கிக் கொள்ளவில்லையா..? பிரசவ வேதனையில் துடித்தேனே.. இவனைப் பெறுவதற்காக அந்த வலியை நான் தாங்கிக் கொள்ளவில்லையா..? என் மடியினில் வளர்ந்தானே.. என் இடுப்பில் சுமந்தேனே.. அப்போது இவனை நான் தாங்கிக் கொள்ளவில்லையா..?”
பதில் சொல்ல முடியாமல் ஜென்ஸியை பார்த்தார் எம்.டி… யார் பேசினாலும் எசப் பேச்சு, எதிர் பேச்சைப் பேசி அவர்களது வாயை அடைத்து விடும் ஜென்ஸிக்கே வாயடைத்துப் போன போது.. எம்டியால் என்ன செய்ய முடியும்…?
“இது அவன் வீடு.. இந்த வீட்டிலிருக்க அவனுக்கும்.. அவன் பெண்டாட்டிக்கும் உரிமையிருக்கு.. அவங்களும்.. நாங்களும் ஒரே வீட்டிலிருக்கிறதாலே.. உறவு
கொண்டாடணும்னு அவசியமில்லை.. தனித்தனி சமையல்தான்.. அவங்க மாடியிலிருக்கட்டும்.. நாங்க கீழேயிருக்கிறோம்..”
கோகிலாவின் தீர்மானத்திற்கு பிரகாசம் கட்டுப்பட்டார்.. முகிலன் உதட்டைக் கடித்துக் கொண்டு தாய் கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டான்..
குற்றவாளியாய்.. தனியறையில் குறுகி அமர்ந்து கண்ணீர் விட்ட மிருணாளினியின் தோள் தொட்டான்.. அவள் சிலிர்த்து விலகினாள்…
“வேண்டாம்…”
“ஏன்..?”
“உங்களைப் பெற்றவர்களுக்கும்.. என்னைப் பெற்றவர்களுக்கும்.. தீராத துயரத்தைக் கொடுத்து விட்டு.. நாம் மட்டும் சந்தோஷமாயிருக்கணுமா…?”
“முட்டாள்.. அந்த தீராத துயரை நாம் தீர்க்க வேண்டாமா…?”
“எப்படி..?”
“நீ என்னிடம் ‘மன்னிப்பாயா..?’ன்னு கேட்டாயே.. அதைப் போல.. அவங்ககிட்ட கேட்டால் போச்சு..”
“நாம்தான் கேட்டு விட்டோமே.. அவங்க மன்னிக்கலையே…”
“அதையெல்லாம் கேட்கிறவங்க கேட்கணுமுடி.. நிஷா என்னிடம் ‘மன்னிப்பாயா’ன்னு கேட்டிருந்தால் நான் அவள் கை தொட்டு ‘வா’ன்னு கூப்பிட்டிருப்பேனா..? இல்லை.. நீதான் அந்த அமெரிக்கா மாப்பிள்ளைகிட்ட ‘மன்னிப்பாயா…?’ன்னு கேட்டு பின்னாலே போயிருப்பாயா..?”
மிருணாளினிக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது.. மீதியையும் முகிலன் அவள் காதோடு விளக்கினான்.. வெட்கத்தில் அவள் முகம் மூட.. அவள் கைகளை விலக்கினான்.. அவள் கண் மூடிக்கிறங்க.. அவள் மேல் பரவிப் படர்ந்தான்..
நாள்கள்.. வராங்களாகி.. மாதங்களாகி.. வருடம் ஒன்று உருண்டோடிய போது.. அந்த வீட்டில் மழலைச் சத்தம் எழுந்தது.
“குவா.. குவா…” என்ற அழுகை.
‘மன்னிப்பாயா…?’ என்று கேட்க.. இருவீட்டாரும் போட்டி போட்டுக் கொண்டு பேரனைத் தூக்கி.. தாம் பெற்ற பிள்ளைகளை மன்னித்தார்கள்…
…முற்றும்…
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.