Chapter 01
கைலியை மடித்துக் கட்டியபடி வாசலுக்கு வந்தான் விவேகானந்தன்.. வீட்டிலும், நண்பர்களும் சுருக்கமாக ‘விவேக்’ என்று அழைப்பார்கள்.. உறவினர்களும் மற்றவர்களும் ‘விவேகானந்தா’ என்பார்கள்.. அதிலும் அவனைப் பெற்றெடுத்த அன்னையான மீனாட்சி பிறந்த மதுரை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.. ‘ஏம்ப்பா.. ஏய்ய்.. விவேகானந்தா..’ என்று நீட்டி முழக்கி வீரக் குரலெழுப்புவார்கள்..
விவேகானந்தன் இருபத்தியாறு வயது இளைஞன்… என்ஜினியரிங் படித்துவிட்டு பேங்க் மேனேஜராக குப்பை கொட்டுகிறான்.. படிப்புக்கும் வேலைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லையெனும் போது எதற்காக நான்கரை வருடங்கள் நாக்குத்தள்ள பொறியியல் பட்டப்படிப்பைப் படித்தான் என்பது மிகப் பெரும் கேள்விக்குறி.. எதிர் வீட்டு வந்தனா அவனைக் கண்டாலே..
“படிச்சது என்னவோ பி.ஈ.. பண்றதெல்லாம் பொறுக்கித் தனம்..” என்று யாரிடமோ சொல்வதைப் போல இவனைப் பார்த்தபடி ஜாடை பேசி நொடிப்பாள்..
அதுவரைக்கும் பேசாமல்தான் இருப்பான் விவேகானந்தன்.. சும்மா இருக்கும் சிங்கத்தை அவள் சொடக்குப் போட்டுஜாடை பேசினால் கேட்டுக் கொண்டு போக அவன் என்ன சாம்பானா..?
‘சிங்கம்டி..’
பேங்க் மேனேஜரை பொறுக்கியாகப் பார்க்க அவள் ஆசைப் படும்போது அவளது ஆசையை நிறைவேற்ற மேய்ச்சல் பார்வையைப் பார்க்கா விட்டால் அவன் எப்படி விவேகானந்தன் ஆவான்..?
துகிலுரிக்கும் அவனது பார்வையில் வந்தனாவின் முகம் ஜிவுஜிவு என ஆகி விடும்..
“பேரு வைச்சிருக்காங்க பாரு.. பேரு.. விளக்குமாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சலமாம்.. இந்தப் பொறுக்கிக்குப் பேரு விவேகானந்தன்..” என்று சாடி விட்டு ஓடி விடுவாள்..
‘ஓட வைச்சுட்டோம்ல..’ சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வான் விவேகானந்தன்..
‘யாருகிட்ட..? எனக்கு எந்தப் பெயரை வைச்சா இவளுக்கென்ன..? இந்த மூஞ்சிக்கு வந்தனான்னு பெயரு வைக்கிறப்ப என் மூஞ்சிக்கு விவேகானந்தன்ங்கிற பெயர் ஷீட் ஆகாதா என்ன..? வந்துட்டா.. என் பெயரை நொட்டனை சொல்ல..’ ‘நொட்டனை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் அவனுக்குத் தெரியாது என்று உதட்டைப் பிதுக்குவான்.. இது போன்ற சொற்கள் எல்லாம் அவனைப் பெற்ற தாய் மீனாட்சியின் உபயம்.. அவள் தினமும் ஒரு புதுச்சொல்லை அவனுக்கு அறிமுகப் படுத்துவாள்..
“சங்கம் வளர்த்த மதுரையிலே பிறந்துட்டு இப்படி இம்சைத் தமிழ் பேசறியேடி மீனாட்சி..” விசுவநாதன் பரிதாபமாக புலம்புவார்.
மீனாட்சி சட்டை செய்யவே மாட்டாள்.. மாறாக கணவருடன் ஊர்ச் சண்டை போடக் கிளம்பி விடுவாள்..
“அப்ப மதுரைத் தமிழ் மட்டம்.. தஞ்சாவூர் தமிழ் உசத்தின்னு சொல்ல வர்றீகளா..?” என்று பிடித்துக் கொள்வாள்..
“அப்படியாடி நான் சொன்னேன்..?”
“வேற எப்படிச் சொன்னீக..”
“அழகுத் தமிழை இப்படி நொனாட்டியம், நொட்டனைன்னு சிக்கலாக்கக் கூடாதுடி மீனாட்சி..”
“இந்தா பாருங்க.. மதுரைக்காரிக்கு தஞ்சாவூர்காரரு தமிழு கத்துத்தர வேணாம்.. ஊருக்கே நாங்க தமிழைச் சொல்லிக் கொடுப்போம்.. எங்ககிட்டயே லந்தா..?”
“பாத்தியா.. பாத்தியா.. ‘லந்து’ன்னு ஆரம்பிக்கிற.. இப்படி எதையாச்சும் எதுக்காச்சும் சொல்லி வைச்சா மனுசன் எதை எதுக்குச் சொல்றன்னு எப்படிடீ எடுத்துக்கிறது..?”
“அது அதை அது அதுக்குத்தான் சொல்லி வைக்கிறோம்.. எங்க ஊரு திருமலை நாயக்கரு பொண்டாட்டி பொறந்த வீட்டுப் பெருமையைப் பேசின மாதிரியா நான் உங்ககிட்டப் பேசிக்கிட்டு இருக்கேன்..? தஞ்சாவூரு வழக்கம் அப்படி.. மதுரை வழக்கம் இப்படி..”
இதை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சொல்லாவிட்டால் மீனாட்சிக்குத் தொண்டையில் சாப்பாடு இறங்காது.. தூக்கம் வராது.. மொத்தத்தில் அந்த நாள் நாளாகவே இருக்காது..
மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் ராணி தஞ்சையில் பிறந்தவளாம்.. மன்னர் திருமலை நாயக்கர் மஹாலைக் கட்டி முடித்தவுடன் தன் காணியிடம் பெருமையாகச் சுற்றிக் காட்டினாராம்.. அதைப் பார்த்து ராணி பிரமித்துப் போவாள் என்று அவர் நினைத்திருக்க ராணியோ.. அவள் பிறந்த அரண்மனையான தஞ்சை அரண்மனைக்கு நிகராகுமா திருமலை நாயக்கர் கட்டி வைத்திருக்கும் அரண்மனை என்று பிறந்த ஊரின் பெருமையைப் பீற்றினாளாம்..
உண்மையிலேயே இப்படியொரு வரலாற்று சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்ற சந்தேகம் விசுவநாதனிடம் இருந்தது.. மகனிடம் சந்தேகம் கேட்டார்.. அதற்கு அவன்..
“எனக்கு இதைப் பற்றியெல்லாம் பட்டறிவு கிடையாவதுப்பா.. அம்மாவுக்குத்தான் தெரியும்… அம்மாவைக் கூப்பிடறேன்.. அவங்ககிட்டேயே கேட்டுத் தெரிந்துக்கங்களேன்…” என்று அமர்த்தலாகக் கூறி அவரை அலற வைத்தான்..
“கெடுத்தியே காரியத்தை.. ஏண்டா.. அவளிடம் கேட்கிறதா இருந்தா கல்யாணமான முதல் நாள் ராத்திரியிலேயே கேட்டிருக்க மாட்டேனா.. இத்தனை வருசமா எதையும் கேக்காம இருக்கிறவனை வம்பில மாட்டிவிடப் பார்க்கறியேடா மகனே.. உனக்கே இது நல்லாயிருக்கா..?”
“ஓ.. பர்ஸ்ட் நைட்டிலேயே எங்கம்மா மதுரைக்கார மங்கம்மாவா இருந்திருக்காங்களா..? அன்றைக்கே சொல்ல ஆரம்பிச்ச தஞ்சாவூர் ராணிக் கதையை இப்ப ஸ்டாப் பண்ணப் பார்த்தா எப்படிப்பா..? உங்களுக்கு மட்டும் இது நல்லாயிருக்கா..?”
விவேகானந்தன் கெட்டிக்காரன்.. எப்போதும் வீரம் கொப்புளிக்கும் அணியுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வான்.. விசுவநாதனைப் போல நிதானம் காட்டும் மிதவாதிகள் எல்லாம் பேச்சுத் துணைக்கு மட்டுமே லாயக்கு என்பது அவனது திட்டவட்டமான தீர்மானம்..
“பாருங்கப்பா.. எதிர் வீட்டு வந்தனாவோட சண்டை வந்தா எங்கம்மா என்ன ஏதுன்னு கேட்டுக்கிட்டு நிற்க மாட்டாங்க.. சேலையை வரிந்து கட்டிக்கிட்டு களத்தில் இறங்கி அவளை ஒரு கை பார்த்து ஆய்ந்து விடுவாங்க ஆய்ந்து.. உங்களாலே அது முடியுமா..?”
“என்னாலே முடிகிறது இருக்கட்டும்.. எதிர் வீட்டு வந்தனா கூட உனக்கு ஏன் சண்டை வரப் போகுது..?”
“பார்த்தீங்களா.. இதுதான் நீங்க..! எதிர்காலத்தில எது வேண்டும்னாலும் நடக்கட்டும்ன்னு எடுத்துக் சொன்னா.. அதைப் பத்திக் கேள்வி.. துணைக் கேள்வி.. துணைக்குத் துணை கேள்வின்னு கேட்டு ஆளை ஒருவழி பண்ணிருவீங்க.. அம்மா அதைச் செய்ய மாட்டாங்க.. நேரடியா காலத்தில குதிப்பாங்க.. இதுதான் உங்களுக்கும், அவங்களுக்கும் இருக்கிற வித்தியாசம்..”
“விவேக்..”
“என்னப்பா..?”
“எதிர் வீட்டு வந்தனாவோட அப்பாவும் நானும் நண்பர்கள்டா..”
இப்படிச் சொன்ன விசுவநாதனை ஒரு மார்க்கமாகப் பார்த்த விவேகானந்தன் கருட பார்வையுடன்..
“அதுக்கு..?” என்று கேட்டு வைத்தான்..
“அடேய்.. அந்தப் பெண் என்னை மாமான்னு பாசமா கூப்பிடும்டா..” விசுவநாதன் அலறி விட்டார்..
“அப்புறம் என்ன..?”
“உங்கம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் படற அவஸ்தை போதாதா..? நீயும் என்னைப் படுத்தனுமா..?”
“ஓ.. நீங்க அப்படிக்கா வர்றீங்களா..? ஆனாலும் அப்பா நீங்க இவ்வளவு அலர்ட்டா இருக்கக் கூடாது..”
“என்னடா சொல்ற..?”
“அவளை நான் சைட் அடிச்சா உங்களுக்கென்ன..?”
“டேய்.. நான் உன் அப்பாடா..”
“அதனாலதான் சொல்றேன்… நீங்க இதையெல்லாம் கண்டுக்கவே கூடாது.. நான் எக்ஸ்பெக்ட் பண்ற ரேஞ்சில.. அவ இருக்காளே.. அவள், அவள்தான் அப்பா..”
இப்படிப்பட்ட தெளிவான பேச்சை தாயும் மகனும் எப்படித்தான் பேசுகிறார்களோ என்று நொந்து போனார் விசுவநாதன்.. நான் அவன் இல்லை என்ற சினிமாவைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறார்.. இது என்ன ‘அவள் அவள்தான்..’ என்பது.. எவள்.. எவள்தான்..?
“அதோட அப்பா.. நான் நீங்க இல்லை..”
இதுவும் புரிந்து தொலைக்கவில்லை.. மீனாட்சிக்கு ஒருவேளை புரிந்திருக்கலாம்.. ஆனால் சொல்ல மாட்டாள்.. நொனனாட்டியம் என்றால் அது நொனனாட்டியம்.. நொட்டனை என்றால் அது நொட்டனை.. லந்து என்றால் அது லந்து என்று ஆகப் பெரும் விளக்கங்களைக் கொடுத்து அவரை அதிர்ச்சிக்கு ஆளாக்குபவள் மகன் பேசும் பேச்சுக்களுக்கான தெளிவுரை பொழிவுரைகளை அவ்வளவு எளிதாக சொல்லி விடுவாளா என்ன..?
இப்படி அமைதியின் சிகரமான அப்பாவுக்கும்… ஆர்ப்பாட்டத்தின் மறு உருவமான அம்மாவுக்கும் மகனாகப் பிறந்திருப்பவன் நமது வீரத் திருமகன் விவேகானந்தன்..
அதிகாலைக் காற்றை ரசித்தபடி வாசலுக்கு வந்தவனை உஷ்ணமாக முறைத்தாள் எதிர் வீட்டு வந்தனா.. அவள் வாசல் தெளித்துக் கோலம் போட வந்திருக்கிறாளாம்.. அந்த அழகை பார்த்து ரசிக்கத்தான் விவேகானந்தன் வந்திருக்கிறானாம்..
‘இவளுக்கு இருக்கிற நினைவு இருக்கே.. ஹப்பா.. இவ அழகை பத்தி இம்புட்டு நம்பிக்கை இருக்கக்கூடாது.. இந்த வாசல் என்ன இவளுக்கு மட்டும்தான் சொந்தமா..?’
வந்தனாவிற்கு உடனடியாக ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான் விவேகானந்தன்.. அன்றைய நாளை வந்தனாவை ஆட்டி வைக்கும் அலப்பறையுடன் ஆரம்பித்து விட்டால் போகிறது..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.