Chapter 10
வந்தனாவுக்குக் குதூகலமாக இருந்தது.. அடித்தாலும் அடித்தாள், ஜாக்பாட்டையல்லவா அடித்திருக்கிறாள்.. அவளுடைய தோழி வீணா காய்ச்சல் என்று காலேஜிற்கு வரவில்லை.. தோழியை நலம் விசாரிக்க கடைசி வகுப்பைக் கட்டடித்து விட்டு மூன்று மணிக்கு அவள் வீட்டிற்குப் போனால், கலகல சிரிப்பும் துள்ளலுமாக அவளே கதவைத் திறந்து ஷாக் கொடுக்கிறாள்..
“என்னடி வீணா.. உனக்கு ஃபீவர்ன்னு உஷா சொன்னாளே..”
“அது ச்சும்மா.. அக்காவை பெண் பார்க்க வர்றாங்க.. அவளுக்கு ஃபேசியல், மேக்கப்ன்னு ஹெல்ப் பண்ண வேண்டியிருந்தது.. அதுக்குத்தான் லீவ்.. அதை உஷாவிடம் சொல்ல முடியுமா..?”
“எப்படி முடியும்..? அவதான் பி.பி.சி யாச்சே..”
தோழிகள் இருவரும் கலகலத்துச் சிரித்தபடி வீணாவின் அறைக்குப் போனார்கள்.. நட்சத்திர ஹோட்டல் அறையின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கும் அந்த அறை எப்போதும் போல அப்போதும் பிரமிப்பைத் தர.. உள்ளுக்குள் வீணாவின் மீது சன்னமான பொறாமையுடன் உட்கார்ந்தாள் வந்தனா..
வீணாவின் அப்பா பெரிய பணக்காரர்.. சுகுணா, வீணா என்று இரண்டே பெண் குழந்தைகள்.. பங்களா, அபார்ட்மெண்ட், ஷாப்பிங் காம்ளெக்ஸ் என்று அவருடைய அசையா சொத்துக்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.. மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்.. தகுந்த இடம் அமைந்து விட்டது போல..
“உனக்கென்னடி அக்கா மேலே புதுசா பாசம் பொங்கி வழியுது..?”
எப்போதும் சுகுணாவுடன் மல்லுக்கு நிற்கும் வீணாவிடம் கேட்டாள் வந்தனா.. அவள் தலையைச் சாய்த்து..
“அவளுக்கு மேரேஜ் ஆனாத்தானே எனக்கு லைன் கிளியராகும்..?” என்று கண்சிமிட்டினாள்..
“அதானே பார்த்தேன்.. நீயாவது, பாசமலரை மலர வைக்கிறதாவது..”
“நோ சான்ஸ்..”
சற்றுநேரம் காலேஜ் கதைகளைப் பேசிக் களைத்த தோழிகளுக்கு டிபனும், காபியும் அறைக்குத் தேடி வந்தன..
“ஓகே வீணா.. நான் கிளம்பறேன்.. அக்காவை பெண் பார்க்க வர்றாங்கன்னு வேற சொல்ற.. உனக்கு வேலையிருக்கும்.. நான் எதுக்கு டிஸ்டர்பா..” வந்தனா கிளம்பப் போனாள்..
“என் வேலையெல்லாம் முடிஞ்சிருச்சு… அக்காகூட காலையிலேயே பியூட்டி பார்லருக்குப் போய் வந்தாச்சு.. மெஹந்தி போட ஆள் வந்து போயாச்சு.. இனி ஸாரி கட்டிவிட வேண்டியது தான்.. அதையெல்லாம் அம்மா பார்த்துக்குவாங்க.. எனக்கு ஸாரி கட்டத் தெரியாதே..”
“அதைச் சொல்லு..” என்ற வந்தனா.. அதி முக்கியமான கேள்வி என்று தெரியாமலே அந்தக் கேள்வியைக் கேட்டாள்..
“மாப்பிள்ளை எந்த ஊர்டி.. என்ன பிஸினெஸ் செய்கிறாராம்..?”
வீணாவின் அப்பா பிஸினெஸ் மேன் என்பதால் மகளையும் தொழிலதிபர் வீட்டில்தான் கொடுப்பார் என்ற நிச்சயம் வந்தனாவுக்கு.. வீணாவின் பதிலோ அவள் எதிர்பாராததாக இருந்தது..
“மாப்பிள்ளை உள்ளூர்தான்.. பிஸினெஸ் மேன் இல்லை.. பேங்க் மேனேஜர்..”
“பேங்க் மேனேஜரா..? ஏன் வீணா..? நீங்க உங்க லெவலில்தான் மாப்பிள்ளை தேடுவீங்கன்னு நினைத்தேன்..”
“அப்பா வேற மாதிரி திங் பண்றார் வந்தனா.. பிஸினெஸ்ஸில் ஏற்ற இறக்கம் இருக்கும்.. கவர்ண்மெண்ட் ஆபிசர்ன்னா அப்படி இல்லைன்னு சொல்கிறார்.. குடும்பமும் மிடில் கிளாஸ்தான்.. சுகுணாவோட ஷேருக்குக் கிடைக்கிற புராப்பர்ட்டீஸே போதும்ன்னு சொல்கிறார்.. ஒரே பையனாம்.. மிடில் கிளாஸ் என்கிறதினால அப்பாவுக்கு அடங்கி இருப்பாராம்.. சுகுணாவோட கைதான் ஓங்கி இருக்குமாம்..”
“ஓ..”
சுகுணாவுக்கு வரப் போகும் மாப்பிள்ளை அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்துக் கொண்டாள் வந்தனா.. யாருக்குக் கிடைக்கும் இப்பேற்பட்ட பணக்கார வாழ்க்கை.. அதிலும் சுகுணா அழகென்றால் அழகு.. அப்படியொரு பேரழகு..
‘எனக்கு ஒரு அண்ணன் இல்லாமப் போயிட்டானே.. இந்த வருண் குரங்கு தம்பியாகப் பிறந்து தொலைத்ததுக்கு அண்ணனாப் பிறந்து தொலைச்சிருக்கலாம்.. ம்ஹீம்.. வீணாவையும் பெண் கேட்க முடியாது.. என் கூடப் படிக்கிறா.. அவனை விட வயதில் பெரியவளா இருந்து தொலைக்கிறா.. இவளைக் கட்டிக்க எந்த மிடில்கிளாஸ் அதிர்ஷ்டக்காரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ..’
ஏக்கப் பெருமூச்சுடன் மாப்பிள்ளையைப் பற்றிய மற்ற விவரங்களைக் கேட்டால்.. கிடைத்த விவரங்கள் அவளறிந்த ஒருவனைப் பற்றிய விவரங்களாக இருந்து அவளுக்கு அதிர்ச்சியை வர வைத்தன..
“மாப்பிள்ளை உள்ளூர்ன்னு சொல்ற.. எந்த ஏரியாவாம்..”
“எல்லாம் உங்க ஏரியாதான்..”
“எங்க ஏரியாவா..?”
“ஆமாண்டி.. உன்னோட ஏரியாதான்..”
“தெரு பெயர் சொல்லு.”
வீணா சொன்ன தெரு வந்தனாவின் வீடு இருக்கும் தெருவாக இருந்தது.. வந்தனாவுக்குத் ‘திக்’கென்று ஆகிப் போனது.. அவளது தெருவில் குடியிருக்கும் பேங்க் மேனேஜர் ஒருவன்தான்.. அவன் பெற்றோருக்கு ஒரே மகன்..
‘அவனா இருக்குமோ..?’
இருக்காது என்று திடம் கொள்ளவும் வழியில்லை.. அவனில்லையென்றால் வேறு யாராக இருக்கும்..?
“மாப்பிள்ளையோட பெயர் என்ன வீணா..?”
“விவேகானந்தனாம்டி.. சாமியார் பெயர் மாதிரியில்ல..?”
மிகப்பெரும் நகைச்சுவையைச் சொல்லி விட்டதைப் போல விழுந்து உருண்டு புரண்டு சிரித்தாள் வீணா.. வந்தனா சிரிக்கவில்லை.. உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.. விவேகானந்தன் தான் சுகுணாவைப் பெண் பார்க்க வரப் போகும் மாப்பிள்ளை என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
‘அவனுக்கு இப்படியொரு வாழ்வா..?’
அவளது இதயம் வலித்தது அவன் இத்தகைய வாழ்வு கிடைக்கத் தகுதியானவன் அல்ல என்பதினாலா.. இல்லை.. அவளைக் கண்டாலே இகழ்ச்சியாகப் பார்த்துத் துச்சமாகப் பேசுபவனுக்கு இப்படியொரு அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறதே என்பதினாலா..?
எதுவாக இருந்தாலும் விவேகானந்தனுக்கு சுகுணா கிடைக்கக்கூடாது என்று வன்மம் வைத்தாள் வந்தனா.. இது நடக்கக் கூடாது.. இந்தத் திருமண ஏற்பாட்டை தடுத்து நிறுத்தத்தான் கடவுளாகப் பார்த்து வந்தனாவை இந்த நாளில் இந்த வீட்டிற்கு வர வைத்திருக்கிறாரோ என்னவோ..
“இவணாவது.. சாமியாராகிறதாவது.. இருக்கிறவங்களை வெறுக்கடித்துச் சாமியரா ஓட வைச்சிருவான்.. சரியான கேடி..” வெறுப்புடன் அவளது மனதிலிருந்த கணிப்பைச் சொன்னாள் வந்தனா..
“என்னது..?” வீணாவின் சிரிப்பு நின்று விட்டது..
“உனக்கு அவரைத் தெரியுமா வந்தனா..?”
“தெரியாமல் என்ன..? எங்க வீட்டிற்கு எதிர் வீட்டில்தான் குடியிருக்கிறான்.. தெருவில் ஒருத்தியைக்கூட நடக்கவிட மாட்டான்.. கலாட்டா பண்ணி ஓட வைச்சிருவான்..”
“பேங்க் மேனேஜர்ன்னு அப்பா சொன்னாரே..”
“பேங்க் மேனேஜர்தான்.. இவனுக்கெல்லாம் பொறுப்பான கவர்ண்ட்மெண்ட் ஆபிசர் வேலை கிடைச்சிருக்கு பாரு.. பொறுக்கியிலும் பொறுக்கி.. கடைந்தெடுத்த பொறுக்கி.. உங்க குடும்பத்துக்கு இவன் செட்டாக மாட்டான் வீணா..”
“ஐ….ஸீ..”
வீணா யோசனையானாள்.. வந்தனா விடவில்லை.. எந்த அளவுக்கு விவேகானந்தனின் இமேஜை பாழாக்க முடியுமோ.. அந்த அளவுக்கு அவனைப் பற்றிப் போட்டுக் கொடுத்தாள்..
“உங்க ஃபேமிலிக்குன்னு ஒரு தரம் இருக்கு வீணா.. இவனுக்குப் பெண் கொடுத்தா.. இவனாலே வர்ற வம்பு வழக்குகளை பைசல் பண்றதிலேயே உங்கப்பாவின் பொழுது போயிரும்.. சுகுணாக்கா பாவம்.. ஷி இஸ் பார்ன் வித் சில்வர் ஸ்பூன்.. இவனோ பிறக்கிறப்பவே எவ மேலே கல்லெறியலாம்ன்னு உண்டி வில்லோடு பிறந்திருக்கவன்.. குப்பையைக் கிளருகிற சேவலுக்கு புழுதான் பெரிதாகத் தெரியும்.. வைரத்தின் மதிப்பைப் பற்றி அதுக்கு என்ன தெரியும்..? உன் குடும்பத்தின் அருமை, பெருமையைப் பத்தியும்.. சுகுணாக்காவின் ஷாப்ட் நேச்சர் பத்தியும் இவனுக்கு என்ன தெரியும்..? இவன் சுகுணாக்காவின் தரம் தெரிந்து வைத்து வாழ மாட்டான் வீணா..”
இந்த அளவுக்கு வந்தனா எடுத்துச் சொன்ன பின்பும் வீணாவின் வீட்டில் விவேகானந்தனுக்குத்தான் சுகுணாவை திருமணம் செய்து கொடுப்போம் என்று சொல்லி விடுவார்களா என்ன..? வீணாவின் அம்மா ஏற்கனெவே கணவரின் முடிவை ஆட்சேபித்துக் கொண்டிருந்தாள்.. அவர்களது அந்தஸ்திற்கு இணையான குடும்பத்தில்தான் பெண் கொடுக்க வேண்டும் என்று வாதாடிக் கொண்டிருந்தாள்.. வந்தனா சொன்னதைக் கேட்டதும் கணவரிடம் கண்டித்துச் சொல்லி விட்டாள்..
“நம்ம லெவல்ல இருந்து இறங்கிப் போனா இப்படிச் சம்பந்தம்தான் வந்து சேரும்.. பேசாம சுகுணாவை வி.வி.டெக்ஸ்டைல்ஸ் ஓனர் மகனுக்கே பேசி முடிச்சிருங்க..”
சுகுணாவுக்கும் அதுதான் சம்மதம் என்பதை வீணா சொல்லவும் சுகுணாவின் தந்தை தலையாட்டி விட்டார்.. வி.வி.டெக்ஸ்டைல்ஸ் ஓனர், சுகுணாவின் தந்தைக்கு தூரத்து உறவு.. சுகுணாவை தன் மகனுக்குத் தரும்படி பலமுறை கேட்டும் சுகுணாவின் தந்தை பிடி கொடுக்கவில்லை.. இப்போது வந்தனாவின் கைங்கர்யத்தினால் பிடி கொடுக்கும்படி ஆகி விட்டது..
“பெண் பார்க்க வரச்சொல்லி விட்டு.. வேண்டாம்ன்னு சொன்னா நல்லாயிருக்காது.. அவங்க வந்து பார்த்துட்டுப் போகட்டும்.. பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லைன்னு சொல்லிக்கலாம்..”
இப்படியாகத்தானே வேண்டாமென்று மறுக்கப் போகும் பெண்ணைப் பார்க்க வேண்டா வெறுப்பாக அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் விவேகானந்தன்..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.