Chapter 11
ஆறு மணிக்கு வர வேண்டிய மாப்பிள்ளை ஏழு மணியாகியும் வரவில்லை எனும் போதே சுகுணாவின் தந்தைக்கு அவன்மீதான மதிப்புப் போய்விட்டது.. நேரத்தின் மதிபபை உணர்ந்தவர் அவர்.. நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்..
“பெண் பார்க்க வருகிறப்பவே இப்படின்னா.. சரியா வராதே..” என்று சொல்லிவிட்டார்..
வந்தனாவுக்கு சந்தோசமென்றால் சந்தோசம்.. அவ்வளவு சந்தோசம்.. விவேகானந்தனுக்கு சுகுணாவைத் தரப் போவதில்லை என்பதை உறுதியாக அறியாமல் அவள் வீட்டுக்குச் செல்வதாக இல்லை.. அதற்கேற்ப சுகுணாவின் வீட்டில் அவளைப் போக விடாமல் நிறுத்தி வைத்து விட்டு அவள் வீட்டிற்குப் போன் பண்ணி அவர்களே காரில் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லி விட்டார்கள்.. பெரிய மனிதர் வீட்டுக் கோரிக்கையை வந்தனாவின் வீட்டில் தட்ட முடியவில்லை.. இன்று ஒருநாள்தானே என்று அவர்களும் சம்மதம் சொல்லி விட்டார்கள்..
வந்தனா கொண்டாட்டமாக காத்திருந்தாள்.. பெரிய இடத்துப் பெண் கிடைக்கப் போகிறாள் என்ற நம்பிக்கையோடு வரும் விவேகானந்தன் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு திரும்ப வேண்டும்.. அவள் அதைப் பார்த்து ரசிக்க வேண்டும்..
‘வாடா மாப்பிள்ளை..! உனக்குப் பணக்கார வீட்டுப் பெண் கேட்குதா..? இருக்குடா உனக்கு..’
அவளுக்கு ‘ஹா, ஹா’ எனப் பெருங்குரலெடுத்துச் சிரிக்க வேண்டும் போல இருந்தது.. அதையெல்லாம் வில்லிகள்தான் செய்வார்கள் என்பதினால் அடக்கிக் கொண்டாள்.. இப்போது அவள் செய்து கொண்டிருக்கும் வேலை வில்லித்தனமான வேலைதானே என்று அவளது மனச்சாட்சி கேள்வி கேட்கத்தான் செய்தது.
‘இல்லை..’ என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்..
‘அந்த செந்தில்நாதன் எனக்கு லவ் லெட்டர் கொடுக்க வந்தப்ப அவன் என்ன சொல்லி அவனைக் கலைத்து விட்டான்.. அது மட்டும் வில்லத்தனமான வேலையில்லையா..? அதுவும் இதுவும் ஒன்றுதான்..’
அந்த செந்தில்நாதனின் மீது வந்தனாவுக்கு துளியளவும் ஈர்ப்பு இல்லை.. அவனது காதல் கைநழுவிப் போய் விட்டது என்ற வருத்தமுமில்லை.. அவளது குமுறல் எல்லாம் அவனிடம் போய் விவேகானந்தன் அவளை ‘அட்டு பிகர்’ என்று சொன்னானே என்பதுதான்.. அவளை அவன் ‘அட்டு பிகர்’ என்று தன் நண்பனிடம் சொல்லிக் கலைத்து விடலாம்.. இவள் அவனைப் ‘பொறுக்கி’ என்று தன் தோழியிடம் சொல்லிக் கலைத்து விடக் கூடாதா..?
“நாமே அங்கே பெண் கொடுக்கப் போகிறதில்லை.. அதுக்கப்புறமும் ஏன் அவங்க தேவையில்லாம வரனும்..? வர வேண்டாம்ன்னு போன் பண்ணிருங்க..” என்று சுகுணாவின் தாய் சொன்னதை சுகுணாவின் தந்தை மறுத்து விட்டார்..
“நான் கேள்விப்பட்டவரை பையன் நல்ல மாதிரின்னுதான் சொன்னாங்க.. வீட்டில இப்படி இருப்பான்னு யாருக்குத் தெரியும்..? இந்த இடத்திலதான் சுகுணாவைக் கொடுக்கப் போகிறோம் என்கிற நம்பிக்கையில நம்ம சொந்தக்காரங்களுக்கு சொல்லி விட்டது தப்பாப் போச்சு.. அவங்க வந்து மாப்பிள்ளையை வரவேற்க வாசலில் காத்திருக்காங்க.. இப்பப் போய் இங்க கொடுக்கலை.. வி.வி.டெக்ஸ்டைல்ஸ் ஓனர் வீட்டில கொடுக்கப் போகிறேன்னு சொன்னா பெண்ணுக்குக் காதல் அது இதுன்னு கதை கட்டி விட்டிருவாங்க.. ஆடற நாடகத்தைச் சரியா ஆடிரனும்.. இல்லேன்னா தேவையில்லாத பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும்..”
சுகுணாவின் தந்தை உலக விவரம் அறிந்தவர்.. அவரது பேச்சுக்கு குடும்பம் கட்டுப்பட்டு மௌனமாக ஒத்துழைப்பைக் கொடுத்தது.. விவேகானந்தன் ஒருவழியாக எட்டு மணிக்கு வந்து சேர்ந்தான்.. தடபுடலான வரவேற்பை மகாராஜா போல ஏற்று சோபாவில் கெத்தாக உட்கார்ந்து திரும்பிப் பார்த்தவனின் பார்வையில் வந்தனா தென்பட்டு விட்டாள்.. அந்த நொடிக்காகவே காத்திருந்த வந்தனாவின் முகத்தில் இகழ்ச்சியென்றால் இகழ்ச்சி.. அப்படியோர் இகழ்ச்சி.. ஏளனமாக அவனைப் பார்த்தாள்..
‘ஏன் இப்படிப் பார்க்கிறா..?’
அதற்கு மேல் அவளது பார்வையைப் பற்றி அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை.. எப்போதும் அவளைப் பார்ப்பதைப் போல படு துச்சமாக அவளைப் பார்த்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.. வந்தனா துடித்துப் போனாள்..
‘எப்போதுமே ஜெயிக்கிறது இவனாத்தான் இருப்பானா..?’
விவேகானந்தனின் கலைந்த தலையையும், கசங்கிய உடையையும் வீணா சுகுணாவுக்கு சுட்டிக் காட்டினாள்..
“இதில இருந்தே இவனோட கேரக்டரை தெரிஞ்சுக்க.. இந்த பெண் பார்க்கிற படலத்துக்காக நீ காலையிலே இருந்தே ஃபேசியல், மெஹந்தி, மேக்கப், பட்டுப்புடவை, மல்லிகைபூ அப்படின்னு டிரேசினலா ரெடியாகிக்கிட்டு இருக்க.. இவன் என்னடான்னா தலையைக் கூட வாராம அப்படியே வந்திருக்கான்.. பர்ஸ்ட் மீட்டிங்குக்கே இம்பார்ட்டண்ட் கொடுக்காதவன் லைபுக்கு எப்படி இம்பார்ட்டண்ட் கொடுப்பான்..? நல்லவேளை.. வந்தனா வந்தா.. நீ தப்பிச்ச..”
வந்தனாவுக்கும் விவேகானந்தனுக்கும் இடையில் இருக்கும் பெரும்பகையை அறியாமல் வந்தனா சுகுணாவின் வாழ்வைக் காக்க வந்த தேவதை என்று கொண்டாடியது வீணாவின் குடும்பம்..
வந்தனாவின் பார்வையின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங்காமல்.. எதுவாக இருந்தாலும் எனக்கென்ன போச்சு என்ற அலட்சியத்துடன் தோளைக் குலுக்கியபடி சத்தியசீலனிடம் பேச ஆரம்பித்து விட்டான் விவேகானந்தன்..
‘இதுதான் இவன்..’
வெல்ல முடியாத அவனது ஆளுமை வந்தனாவைக் கொதிக்க வைத்தது.. பெரிய இடத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணவத்தில் ஆடுகிறானா.. ஆடட்டும் ஆடட்டும்.. இந்த வந்தனா என்ன செய்து வைத்திருக்கிறாள் என்று தெரியும்போது இந்த ஆணவம் பொடிப்பொடியாக நொறுங்கி விடும்.. அப்போது வந்தனா அவனை ஆணவத்துடன் பார்ப்பாள்.. அந்த நொடிகள் வருவதற்கு வெகுநேரம் ஆகப் போவதில்லை.. பெண் பார்க்கத்தானே வந்திருக்கிறான்.. பெண் வந்து நின்று இவனைப் பார்த்து உன்னைப் பிடிக்கவில்லையென்று சொல்லப் போகிறாள்.. அந்த நொடியில் அவன் முகம் கருக்கும் அல்லவா.. அத்தருணத்தில் அவனது முகம் போகும் போக்கைப் பார்த்துவிட வேண்டும்..
வந்தனா விவேகானந்தனின் அகங்காரம் அடிபட்டு அவன் மூக்குடைபடும் அந்த நொடியைக் காண ஆசையுடன் காத்திருந்தாள்.. அதற்குள் மீனாட்சி அவளைப் பார்த்துவிட்டு வாயெல்லாம் பல்லாக..
“வந்தனா..” என்று பாசத்துடன் அழைத்தாள்..
வந்தனாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது.. அவளுக்கு விவேகானந்தனுடன்தான் பிரச்னை.. மீனாட்சியும், விசுவநாதனும் வெகு பிரியமானவர்கள்.. எதிர் வீட்டைப் போல இல்லாமல் நெருங்கிய உறவினர்களைப் போல பந்த பாசத்துடன் பழகுபவர்கள்.. காலைநேர வாக்கிங் முதல்.. இரவு உணவு முடிந்தவுடன் மொட்டை மாடியில் உட்கார்ந்து கதை பேசுவது வரை விசுவநாதனும் வந்தனாவின் அப்பாவான நாராயணனும் இணை பிரியாமல் இருப்பவர்கள்.. வந்தனாவின் அம்மாவிற்கோ தும்மினால் கூட மீனாட்சியிடம் சொல்லியாக வேண்டும்.. மீனாட்சியின் ஆளுமைக்கு அவள் மிகப் பெரும் ரசிகை..
“அத்தை..” தயக்கத்துடன் மீனாட்சியின் அருகில் போய் நின்றாள் வந்தனா..
வந்தனாதான் வீணாவின் வீட்டுக்கு வந்து போவாள்.. வீணா வந்தனாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனதில்லை.. காரில் வந்து போகிறவளை மீனாட்சியும் பார்த்ததில்லை.. அதனால் அவளுக்கு வீணாவும் வந்தனாவும் தோழிகள் என்று தெரியாது..
“நீ என்னம்மா இங்க இருக்கிற.. இவங்க உனக்குத் தெரிந்தவங்களா..?”
“ஆமாம் அத்தை.. நீங்க பெண் பார்க்க வந்திருக்கிற சுகுணா அக்காவோட தங்கை வீணாவும் நானும் கிளாஸ்மேட்ஸ்.. பிரண்ட்ஸ்..”
“அப்படியாம்மா.. எனக்குத் தெரியாதே..”
“நீங்களும் என் பிரண்டோட அக்காவைப் பெண் பார்க்க வரப்போறிங்கன்னு எனக்கும் தெரியாது அத்தை.. நான் யதேச்சையா வந்தேன்.. அக்காவைப் பெண் பார்க்க வர்றாங்கன்னு வீணா சொன்னா.. யாருன்னு தெரியாமத்தான் இருந்தேன்..”
“உன் அப்பாம்மாகிட்ட இதைச் சொல்லிராதே.. எங்கே..? இவன் பண்ணி வைக்கிற வேலையாலே.. அக்கம் பக்கத்திலே பெண் பார்க்கப் போகிறோம்ன்னு சந்தோசமாச் சொல்லி.. நாலு மக்க மனுசகூட கிளம்பி வர முடியுதா..? யாருக்கும் தெரியாமத்தான் கிளம்ப வேண்டியதா இருக்கு..”
மீனாட்சி என்னவோ மகன் திருமணத்தைத் தள்ளிப் போடுவதைப் பற்றித்தான் குறையாக சொல்லிக் கொண்டிருந்தாள்.. பெண் பார்க்க வர மாட்டேன் என்கிற மகனைக் கிளப்புவதே பெரும்பாடாக இருக்கும் போது அக்கம் பக்கத்தில் என்னத்தைச் சொல்வது..? அது பெண் வீட்டாருக்குத் தெரியுமா..? வீணாவின் தாய் மீனாட்சியின் பேச்சைக் கேட்டு விட்டு..
“கேட்டிங்களா.. பெற்ற தாயே மகனைப் பற்றி சர்டிபிகேட் கொடுத்தாச்சு.. பெண் பார்க்க வருகிறதைக் கூட யாருக்கும் தெரியாமல் மறைத்து ஒளிந்து வருகிறாங்கன்னா, இவங்க
மகன் எப்பேற்பட்ட தில்லுவாரியாக இருப்பான்..? நல்ல மாப்பிள்ளையைப் பார்த்தீங்க போங்க.. கைக்கு அடக்கமான மாப்பிள்ளையைப் பார்க்கிறாராம்.. இவன் ஊரையே அடக்கிருவான் போல இருக்கே.. வந்தனா வந்தாளோ.. நாம பிழைத்தோமோ..” என்று கணவரை ஒரு பிடி பிடித்தாள்..
சுகுணா கையில் காபி டிரேயோடும் சுட்டெரிக்கும் பார்வையோடும் வந்து நின்று விவேகானந்தனை முறைத்தாள்..
“என்னடா.. பொண்ணு இப்படி முறைக்குது..?” சத்தியசீலனே அரண்டு விட்டான்..
எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்ல சுகுணா வாய் திறக்க விவேகானந்தன் முந்திக் கொண்டு..
“ஐ ஆம் ஸாரி.. இந்தக் கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை..” என்று சொல்லி விட்டான்..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.