Chapter 15

0Shares

இரவு முழுவதும் தூங்காமல் உழன்று கொண்டிருந்த வந்தனாவுக்கு கண் எரிச்சல் வந்திருந்தது.. ஒற்றைக் கேள்வியைக் கேட்டு விட்டு அவன் போய் விட்டான்.. இவள்தான் தூக்கத்தை தொலைத்து விட்டு நிம்மதியில்லாமல் தவித்தாள்..

‘என்மேல ஆசையா..?’

அவனது கேள்வி காதுகளில் ரீங்காரமிட்டது.. ஆசைப்படும் விதத்தில்தான் அவனும் இருந்தான்.. உயரமாக, கம்பீரமாக, கைதேர்ந்த சிற்பியொருவன் வடித்து வைத்த இரும்புச்சிலையாக.. கன்னியின் மனதைச் சுண்டியிழுக்கும் தோற்றத்துடன்தான் இருந்தான்.. அவளது மனதையும் சுண்டியிழுத்தான்.. ஆசையினால் அல்ல.. ஆணவத்தால்.. அலட்சியத்தால்.. எகத்தாளத்தால்.. இகழ்ச்சியினால்..

அவன்மீது அவளுக்கு எப்படி ஆசை வரும்..?

அவனைத் தண்டிக்க அவள் வியூகம் வகுத்தால்.. மிக எளிதாக அந்த வியூகத்தை உடைத்து விட்டு, வீரத்திருமகனாக வெளியில் வந்து நின்று விட்டானே.. நின்றதுடன் விட்டானா.. அவன்மீது ஆசைப்பட்டுத்தான் அவள் சுகுணாவின் மனதைக் கலைத்து விட்டாளாம்.. குற்றம் சொல்கிறான்..

வந்தனாவுக்கு தலை வேதனையாக இருந்தது.. தூங்காமல் விழித்திருந்த இமைகள் சோர்ந்திருந்தன.. கண்கள் எரிச்சலுடன் சிவந்திருந்தன.. அந்தக் கோலத்தில் மகளைப் பார்த்த ருக்மிணி பதறி விட்டாள்..

“என்னடி இப்படி வந்து நிற்கிற..? காய்ச்சலா..?” மகளின் நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்தார்.. சுடுவதைப் போல இருந்ததில்..

“இந்த உடம்போடு உன்னை யாரு வாசல் தெளிச்சுக் கோலம் போடச் சொன்னது..? போய்ப் படு.. வேலைக்காரப் பொண்ணு இப்ப வந்திரும்.. வாசல் தெளிச்சுக் கோலம் போடற வேலையை அது பார்த்துக்கும்..” என்று மகளைக் கடிந்து கொண்டாள்..

‘அதுசரி.. நான் வாசல் தெளிக்கப் போகலைன்னா அவனை எப்படி ஜாடை பேச முடியும்..? நேத்து ராத்திரி அவன் பேசின பேச்சுக்கு நல்லா ஜாடை பேசிக் கொடுத்துக் கட்டலைன்னா எனக்கு எப்படி நிம்மதி கிடைக்கும்..?’

அவனை ஜாடை பேச வேண்டிய வார்த்தைகளை தேடிப் பிடித்து மனதில் கோர்த்து வைத்துக் கொண்டாள்.. ‘இந்த மூஞ்சிக்கெல்லாம் நினைப்புத்தான்.. தேவாங்கைப் பார்த்து யாராச்சும் ஆசைப்படுவாங்களா..? முழித்துக்கிட்டேத் தண்டவாளத்தில யாராச்சும் தலையைக் கொடுப்பாங்களா..? ஆசை இருக்காம் காதல் பண்ண, அதிர்ஷ்டம் இருக்காம் கழுதை மேய்க்க..’ என்பன போன்ற சொற்றொடர்கள் அவள் மனதில் வரிசை கட்டி முட்டி மோதிக் கொண்டிருந்தன.. அவற்றையெல்லாம் வெளியில் கொட்ட வேண்டாமா..? அத்துடன் இன்று ஒருநாள் உடல் அசதியாக இருக்கிறது என்று அவள் வாசல் தெளிக்கும் வேலையை விட்டுக் கொடுத்தால் மறுபடியும் அதைக் கைப்பற்ற முடியாத அபாயம் இருக்கிறது.. மற்ற வீடுகளில் வேலைக்காரப் பெண்கள்தான் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.. ருக்மிணி அதைக் காரணம் காட்டி மகளைத் தடுத்துக் கொண்டிருந்தாள்.. வந்தனாவோ அதை முறியடிக்க பல காரணங்களைத் தேடிப் பிடித்துச் சொல்லித் தப்பித்துக் கொண்டிருந்தாள்..

“மாம்.. காலையிலே வாசல் தெளித்துக் கோலம் போட்டா மூளை ஃபிரஷ் ஆகிரும்..” இவள் சொல்ல..

“ஃபிரஷ் ஆன மூஞ்சி.. ஏண்டி திரும்பப் படுத்து குறட்டை விட்டுத் தூங்குது..” என்று ருக்மிணி மடக்குவாள்..

“கோலம் போடறது மூளைக்கு வேலைம்மா..”

“வெங்காயம் கட் பண்ணிக் கொடுத்தா மூளை வேலை செய்யாதா..?”

எதிர்வீட்டு மீனாட்சியின் உபயத்தால் ருக்மிணி பேசக் கற்றுக் கொண்டு விட்டதாக நாராயணன் மெச்சிப் போவார்.. அப்பாவி அம்மாக்கள், அறிவாளி அம்மாக்களாக மாறுவதில் பிள்ளைகளுக்குச் சில சிக்கல்கள் உண்டு.. அதை அப்பாக்கள் என்றுமே புரிந்து கொள்வதில்லை..

ஆக மொத்தம் ருக்மிணி எத்தனை தடை போட்டாலும் அதை உடைத்து வாசல் தெளித்துக் கோலம் போட போய் விடுவாள் வந்தனா.. அந்த வேலையை விட்டுக் கொடுக்க மாட்டாள்.. அப்படி விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றி வைத்திருக்கும் வேலையை இன்று ஒருநாள் என்று விட்டுக் கொடுத்தால் மறுபடியும் கிட்டுமா..?

‘அந்த ரிஸ்க்கோ வேண்டாம்..’

ருக்மிணியின் வார்த்தைகள் காதுகளில் விழுகாததைப் போல வாசலுக்குப் போய் விட்டாள் வந்தனா.. பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வாசலுக்கு வந்தால் இவளை முந்திக் கொண்டு எதிர்வீட்டு வாசலில் இருந்து பாட்டு வந்தது..

“உன்மேல கொண்ட ஆசை..

உத்தமியே மெத்தை உண்டு..

சத்தியமாச் சொல்லுறேண்டி..

தங்க ரத்தினமே..!

தாள முடியாது கண்ணே..

பொன்னு ரத்தினமே..”

வந்தனாவின் கையிலிருந்த பக்கெட் நழுவித் தரையில் வீழ்ந்து கவிழ்ந்தது.. பக்கெட்டில் இருந்த தண்ணீர் அவளது பாதங்களை நனைத்து வழிந்தோட வந்தனா ஸ்தம்பித்து நின்றாள்..

என்ன மாதிரியான பாடல் இது.. கன்னி மனதை ஆட்டி வைக்கும் பாடல்.. கனவுகளைத் திணிக்கும் பாடல்.. ஏதோ ஓர் குளிர் நதியில் தள்ளி விடும் பாடல்.. இனம் தெரியாத சுழலினிலே சிக்க வைக்கும் பாடல்.. கானகத்தின் அடர்த்தியிலே தொலைய வைக்கும் பாடல்.. காதலான காமத்தையே உணர்த்துகிற பாடல்.. சீரான சுவாசத்தையே திணற வைக்கும் பாடல்.. சிக்கலில்லா சிக்கலிலே சிக்க வைக்கும் பாடல்..

இப்படிப்பட்டதோர் பாடலை அவளைப் பார்த்துப் பாடுகிறானே.. இவனுக்கு எவ்வளவு தைரியம்.. கேட்பதற்கு ஆளில்லையென்று நினைத்தானா..?

அப்படித்தான் என்பதில் மனம் சோர்ந்தாள் வந்தனா.. அவன் அவளைப் பார்த்துக் கிளர்ச்சியூட்டும் பாடலொன்றைப் பாடுகிறான் என்று புகார் செய்தால் ஒரு குருவிகூட நம்பித் தொலைக்காது.. குருவியே இப்படியெனும்போது மனிதப்பிறவிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. ‘விவேகானந்தனா.. தங்கமாயிற்றே..’ என்பார்கள்.. அதில் முதலாவது ஆளாக அவளுடைய தங்கத் தம்பி வருண் இருப்பான்.. இரண்டாவது, மூன்றாவது ஆள்களாக அவளைப் பெற்ற தாய், தந்தை இருப்பார்கள்.. மற்றவர்கள் இவர்களைப் பின்பற்றுவார்கள்.. தப்பித்தவறி விவேகானந்தன் அப்படிப் பாடியிருப்பானோ என்று சம்சயப் படுபவர்கள் கூட அவனைப் பெற்ற அன்னை மீனாட்சியின் திருவாய்க்குப் பயந்து கொண்டு இருக்கவே இருக்காது என்று சாதித்து விடுவார்கள்..

வந்தனா செழுத்தப்பட்டவள் போல குனிந்து பக்கெட்டை எடுத்தாள்.. சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல போர்டிகோவில் இருந்த குழாயில் தண்ணீர் பிடிக்கப் போனாள்.. தோட்டத்துக் குழாய் காம்பவுண்டு கேட்டின் பக்கத்திலேயே இருந்தது.. வாசல் தெளிக்க அந்தக் குழாயில்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.. விவேகானந்தனின் பாடல் கொடுத்த ‘ஷாக்’ கில் வந்தனா அதையும் தாண்டி போர்டிகோவுக்குப் போய் விட்டாள்.. விவேகானந்தனின் பாடல் அவளைத் துரத்தி வந்து அலைக்கழித்தது.

“சித்திரைக்குப் பக்கத்திலே..

சேர்ந்திருக்கிற வைகாசி போல்

முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே..!

மூணு முடிச்சுப் போட்டுச் சேர்ந்துக்குவோம்

பொன்னு ரத்தினமே..!”

பக்கெட்டில் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் நிரம்பி வழிந்து வந்தனாவின் கால்களை நனைத்து நீரோடை போல் ஓடிக் கொண்டிருந்தது.. குழாயை மூட வேண்டும் என்ற உணர்வில்லாமல் அவள் விவேகானந்தனின் பாடல் தந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.. 

‘மூணு முடிச்சுப் போட்டுச் சேர்ந்துக்குவானா..? யாரு கூட..?’

உன்னோடுதான் என்பதைப் போல அவனது கண்கள் மேய்ந்ததில்..

‘அதுக்குத்தானே காத்திருக்கேன்..’ என்று பல்லைக் கடித்தாள் வந்தனா..

நீரோடை போல ஓடிய தண்ணீர் வாசலைத் தொட்டு.. முதல் நாள் வந்தனா போட்டிருந்த கோலத்தை நனைத்து ஓடியது..

“நேத்து நீ போட்ட கோலம்..

நீர்க்கோலம் ஆகிப் போச்சு..”

அவன் கைகாட்டியதில் வாசலைப் பார்த்தவள் அவசரமாக குழாயை மூடினாள்.. அவளது பலவீனத்தை அவன் முன்னால் வெளிக் காட்டி விட்டாளே.. எல்லாம் அவனால்தானே.. எரிச்சலுடன் பக்கெட்டைத் தூக்கிக் கொண்டு போய் வாசலில் தெளிக்க ஆரம்பித்தாள்.. வாசலைக் கூட்டிப் பெருக்கி முடித்து கோலம் போட ஆரம்பித்தவளிடம் சொல்வதைப் போல..

“மாக்கோலம் போட்டுக்கலாம்..

தங்க ரத்தினமே – என்னை

மச்சான்னு கூப்பிடுடி பொன்னு ரத்தினமே..”

என்று அவன் கேட்டின் மீது சாய்ந்து நின்று விரல்களால் தாளம்  போட்டபடி பாடியதில் கோலப்பொடி டப்பாவை அவன் மீது கோபத்துடன் விட்டெரிந்தாள்.. அவன் விலகாமல் நின்ற இடத்திலேயே டப்பாவை கேட்ச் பிடித்த தீரத்தில் அவளுக்கு வாழ்வே வெறுத்தது..

“ஈரோட்டுச் சந்தையிலே..

எனக்கு வேட்டி எடுத்துக்கலாம்..”

முதலில் இவனுக்கு வேட்டி கட்டத் தெரியுமா என்ற சிந்தனை ஏன் வந்தது என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் வந்தனா.. இப்போதுதான் ‘ஒட்டிக்கோ.. கட்டிக்கோ..’ வேட்டி வந்து விட்டதே என்ற எண்ணமும் ஒட்டிக் கொண்டு வந்ததில்.. எங்கே, நைட்டியைக் கிழித்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விடுவோமோ என்று பயந்தும் போனாள்..

அவளது பயத்தைப் பற்றிய பரிதாபம் சிறிதும் இல்லாமல்..

“காஞ்சிபுரம் சிலுக்குச் சேல..

தங்கரத்தினமே..! – தந்து

கண்ணாலம் கட்டிக்கறேன் பொன்னுரத்தினமே..!”

என்று காந்தமென இழுக்கும் தொனியில் பாடி அவளைச் சோதித்து வைத்தான் விவேகானந்தன்.. அவனைத் திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் ஓடிக் கதவைச் சாத்தி அதன்மீது சாய்ந்து நின்று மூச்சு வாங்கியவளை அவனது பாடல் துரத்தியது..

“கனவிலே வந்தவளே..

கதவு தாண்டி வந்தாலென்ன..

கதையாக போக வேண்டாம்

தங்கரத்தினமே..! – நானே

கதவாக துணையிருப்பேன் பொன்னுரத்தினமே..!”

வந்தனாவின் மூடிய இமைகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.. இமைமூடி நின்றவளின் முகத்தில் துயரம் அப்பியிருந்தது.. விவேகானந்தன் வகுத்திருக்கும் புதிய போர்முறையில் அவள் பயம் கொண்டாள்..

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link