Chapter 01
மழை வருவதின் அறிகுறி..
மண் வாசனை..!
நீ வருவதின் அறிகுறி..
உன் வாசனை..!
சோவென்று மழை கொட்டிக் கொண்டிருந்தது.. அடர் மழையாய் அடர்ந்து பொழிந்துக் கொண்டிருந்த தொடர் மழையின் ஊதக்காற்று.. ஊசியினைப் போல உடலைத் துளைத்தது.. ‘ஸ்ஸ்ஸ்..’ என்ற சப்தத்துடன் வீசிய காற்றில் தோட்டத்து மரங்கள் ஆவேசத்துடன் சாமியாடின…
“புயல் எப்ப கரையைக் கடக்குமாம்..?”
மழையில் இரு கைகளை விரித்து குதித்துக் கொண்டிருந்த ஆயிஷா கேட்டாள்…
ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி.. குழந்தைத்தனம் மாறாத முகம்.. குழந்தைத்தனத்துடன் கூடிய சிரிப்பு.. குழந்தையைப் போன்றபேச்சு.. மொத்தத்தில் அந்த வைசாலி அபார்மென்டின் செல்லக் குழந்தை அவள்…
“தெரியலையே…”
முகத்தில் வழிந்த மழைநீரை வழித்துக்கொண்டே பதில் சொன்ன அஞ்சனாவின் பார்வை பிரதாப்பின் மீதே இருந்தது…
அவள் புயலை எங்கே நினைத்தாள்..? நினைவெல்லாம் நித்யா என்பதைப் போல, அவளது நினைவெல்லாம் பிரதாப்பின் மீதல்லவா இருந்தது..?
அவள் கண் முன்னால் கொட்டும் மழைத் துளிகளின் சாரை சாரையான நீர்த்திரை தெரியவில்லை.. வானத்தில் கீற்றாக வரும் வெள்ளி மின்னல்கோடு தெரியவில்லை.. டமால் என்ற இடியோசை கேட்டு காதைப் பொத்திக் கொண்டே ஆயிஷா தெரியவில்லை.. நீலம் புயலை வரவேற்க அந்த அபார்மென்டின் மொட்டை மாடியில் கூடி.. மழையில் நனைந்து கொண்டிருந்த மற்றவர்களைத் தெரியவில்லை…
அவள் விழிகளுக்குத் தெரிந்ததெல்லாம்.. மழைநீரில் நனைந்ததினால் முகத்தில் வழிந்த நீரைக் கூட துடைக்காமல் பக்கத்திலிருந்த ஸ்ரீதரிடம் கதை பேசிக் கொண்டிருந்த பிரதாப் மட்டும்தான்..
மகாபாரதத்தின் கௌரவர்களுக்கும்.. பாண்டவர்களுக்கும் வில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்ததுரோணர்.. ஒரு மரத்தைக் காட்டி.. அதன் அடர்ந்த இலைகளுக்கு இடையே இருக்கும்.. குருவியை அம்பால் குறிவைத்து வீழ்த்தச் சொன்னாராம்.. எல்லோரும் குறி பார்த்தார்களாம்.. ஒவ்வொருவரிடமும் மரத்தில் என்ன தெரிகிறது என்று அவர் கேட்டாராம்..
ஒருவன் மரத்தைச் சொன்னான், மற்றவன் இலைகளைச் சொன்னான், மூன்றாமவன் கிளையைச் சொன்னாள்.. அனைவருமே.. மரத்தையும் அதை சுற்றியிருந்த அனைத்தையும் ஒப்பித்துவிட்டு.. கடைசி-யாகத்தான் குருவியைக் குறிப்பிட்டார்கள்..
அர்ஜுனனிடம் அதே கேள்வியை துரோணர் கேட்டார்…
“குருதேவரே..! எனக்கு குருவி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது..” என்றானாம் அவன்..
அதைப்போல.. அஞ்சனாவின் கண்ணுக்கு இடியுடன் கூடிய புயல் மழை தெரியவில்லை.. அந்த மழையை ரசித்து நனைத்து கொண்டிருந்த பிரதாப் மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிந்தான்..
“ஆன்ட்டி.. புயல் எங்கே வந்திருக்காம்..?”
என்னவோ கிரிக்கெட் ஸ்கோரைப் கேட்பதைப் போல ஆயிஷா கூறினாள்..
“இரு கேட்கலாம்…”
வெகு சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கையிலிருந்த செல்போனின் ரேடியோவில் செய்தியை காதில் வைத்துக் கேட்டாள் ஸ்ரீதேவி..
“இன்னும் கரையைக் கடக்கலையாம்..” அறிவித்தாள்..
“எப்போ கரையைக் கடக்குமாம்..?” ஆயிஷா கூவினாள்..
“கொஞ்சம் பொறு.. போய் புயல்கிட்டக் கேட்டுக்கிட்டு வந்து சொல்றேன்..”
சிரித்த ஸ்ரீதேவி.. மழைக்குள் வந்தாள்..
“அம்மா…”
அவளுடைய கணவன் ராமனிடமிருந்த குழந்தை கை நீட்டி அழுதது…
“கெட்டிக்காரிடிநீ.. உன் அம்மா மட்டும் நனையக் கூடாதுன்னு பத்திரமா பார்த்துக்கறியா..?”
சூடான பஜ்ஜிகளுடன் வந்த நிஷா.. செல்லமாக குழந்தையிடம் கேட்டாள்…
ஒன்றரை வயதுக் குழந்தைக்கு அந்தக் கேள்வி புரிந்ததா.. என்ன..? அது புரிந்ததைப் போன்ற பாவனையுடன் தாயை அழைப்பதை நிறுத்திவிட்டு.. நிஷாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்தது..
“உன் ஹஸ்பென்ட் எங்கே நிஷா..?”
பஜ்ஜியை கடித்துக் கொண்டே லலிதா விசாரித்தாள்..
அவளுக்குப் பக்கத்திலேயே அவளது கணவன் ஸ்ரீதர் நனைந்துக் கொண்டிருந்தான்…
“ம்ஹும்.. அதையேண்டி கேட்கிற.. அடை மழை பெய்யுதுன்னு.. ஸ்கூல்.. காலேஜெல்லாம் லீவு விட்டுட்- டாங்க.. இதுக ரெண்டும் வீட்டிலே இருக்குதுகன்னு நான் நிம்மதியா இருக்க முடியுதா..? மழை பெய்தால்தான் அவர் கடமை வீரரா மாறிடறாரே.. சூட்கேஸில் மாற்று டிரெஸ்ஸை எடுத்து வைச்சுக்கிட்டு.. இந்தக் கொட்டற மழையில டியூட்டிக்கு போயிட்டாரு..” பெருமூச்சு விட்டாள் நிஷா
நிஷாவின் கணவன் சபியுல்லா தமிழ்நாடு மின்சாரத் துறையில் என்ஜினியர்…
“கொட்டற மழையிலயும்.. அடிக்கிற காத்திலயும் டியூட்டியா..?” உமாமஹேஸ்வரி வியந்தபோது.. “நல்லா கேட்டீங்கபோங்க ஆன்ட்டி..” என்றான் நிஷாவின் மகன் நசிம்…
“ஏண்டா.. நீதான் மழையைக் காரணம் காட்டி மெடிக்கல் காலேஜூக்குப் போகாம மட்டம் போட்டிருக்-கேன்னா.. என்னை எங்கே போகச் சொல்ற..? நான் ஆல்ரெடி லீவில்தான் இருக்கேண்டா..”
பதில் சொன்ன உமா மகேஸ்வரி.. ஸ்கூல் டீச்சர்.. இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு மாதம்தான் ஆகிறது.. மருத்துவ விடுப்பில் இருப்பவள்.. மழையில் நனைவதற்கான உடல்நிலை இல்லாததினால் கவனமாக தள்ளிநின்று மழையை வேடிக்கை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தாள்…
“என்னைக்கிருந்தாலும் நீங்க ஸ்கூலுக்குப் போய்த் தான் ஆகணும்.. நாளைக்கே நானும்.. ஆயிஷாவும்,
காலேஜ் ஸ்கூல்ன்னு போய்த்தான் ஆகனும்.. நான் அதைச் சொல்லலை ஆன்ட்டி..”
“வேற எதைச் சொன்ன..?”
“கொட்டற மழையிலயும்.. அடிக்கிற காத்திலயும் தானே எலக்ட்ரிக் கம்பங்கள் எல்லாம் டமால்.. டமால்ன்னு விழுந்து வைக்கும்..? கரண்ட் கட்டாகாம இருக்கணும்னா.. ஈபி.யிலே வொர்க் பண்றவங்க வீட்டில் தங்க முடியுமா..?”
“அதைச் சொல்லு..” அலுத்துக் கொண்டாள் நிஷா..
“கஷ்டம்தான் உனக்கு” மிக லேசாக இமை சிமிட்டி சிரித்த லலிதாவின் சங்கேத மொழியில் ஸ்ரீதேவியும்.. உமாவும் கூடச் சேர்ந்து சிரித்தார்கள்.. அதைத் திரும்பிப் பார்த்த பிரதாப்பின் பார்வையில் அஞ்சனா தென்பட்டாள்.. அவன் பார்வையில் மின்னலடித்தது..
அவன் பார்வையில் தெரிந்த பரவசத்தைக் கவனித்த அஞ்சனாவின் மனதில் உற்சாகம் ஊற்றாக பெருகியது.. அவள் கைபிடித்து நனைந்து கொண்டிருந்த ஆயிஷாவிடம் எதையோ பேசுவதைப் போல குனிந்தபடி அவன் பார்வையை அவள் சந்தித்தாள்…
“ஏய்ய்.. பிரதாப்.. இங்கே வா..”
அதற்குள் பிரதாப்பை ஸ்ரீதர் அழைத்தவிட அவன் பார்வையை விலக்கிக் கொண்டு.. ஸ்ரீதரின் பக்கமாக போய் விட்டான்..
அஞ்சனாவின் மனதில் ஏமாற்றம் கசிந்தது..
‘இது கொடுமை..!’ அவள் மனம் கசிந்தாள்..
இப்படிப் பார்வையிலேயே கொன்று தின்று கொண்டிருக்கிறானே.. ஒரு வார்த்தை.. ஒரேயொரு வார்த்தை அவளிடம் அன்பாக பேசிவிட்டால் போதுமே.. அவள் உயிர்த்தெழுந்து விடுவாளே..
அதைச் செய்ய மறுக்கும் அவனது செய்கையில் அவள் மனம் துயரம் கொண்டது..
“ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
உன் காதல் நான்தானென்று…
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…”
மழையில் நனைந்து கொண்டிருந்த சதிஷ் ராகமாக பாடினான்.. அவனது குரலினிமையில் கரைந்து போனாள் அவனது மனைவி உமா மகேஸ்வரி..
‘ம்ஹீம்.. இதை நான் பாடி அவன் கேட்க வேண்டும்..’ அலுப்புடன் பிரதாப்பைப் பார்த்தாள் அஞ்சனா..
அவன் மீது தெளித்து விழுந்த மழைத்துளிகள் அவள் மீது பட்டுத் தெறித்ததில் அவள் மனம்.. இனம் விளங்காத சுகத்தை கொண்டது..
‘மழைத்தூறல் வந்து..
சாரல் போட்டு..
உன்னை நனைத்தது..
அது உன்னை நனைத்து..
தெறித்தபோது
என்னை நனைத்தது..!’
அவள் மனம் பாடியது.. அதையறியாமல் அவள்மீது மின்னலாக ஓர் பார்வை வீச்சை செலுத்துவதும்..
அவள் பார்க்கும்போது அதை விலக்கி.. மற்றவர்களிடம் சிரிப்பதுமாக பிரதாப் இருந்தான்…
அஞ்சனாவின் தோள் மீது படர்ந்திருந்த மழைத்துளிகள் விழுந்தபோது.. இந்தத் துளிகளில் எந்தத் துளி.. அவனைத் தொட்டத் துளி..? என்ற ஆராய்ச்சியில் அவள் ஈடுபட்டாள்.. அவள் மனம் தொடர்ந்து பாடியது..
“அது துளித்துளியாய்..
எனது தோளில் இடம்பிடித்தது..
இந்த இயற்கையெல்லாம்..
இருவரையும் இணைத்துப் பார்க்குது..”
எப்போதும் கொட்டும் மழைதான் அப்போதும் கொட்டியது.. இப்போது போல.. அது ஒருபோதும் இத்தகைய இன்ப உணர்வை அள்ளித் தந்ததில்லை என்று அவள் நினைத்துக் கொண்டாள்..
வானில் மின்னல் வெட்டியது.. அதைத் திரும்பிப் பார்த்த பிரதாப்பின் பார்வையில்.. மின்னல் கீற்றை பின்னணியாகக் கொண்ட அஞ்சனா தெரிந்தாள்..
அவன் பார்வையில் மீண்டும் மின்னலடித்தது…
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.