Chapter 02

0Shares

நிலவைக்கூட மேகம் மறைக்கலாம்

என் நினைவை.. உன் நினைவு

மறக்குமா..?

பிரதாப்பின் கண்ணில் வெட்டிய மின்னலில்.. அஞ்சனாவின் உடலில் ஒரு கோடி வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது.. மழைத்துளிகள் உணர்த்தாத சிலிர்ப்பை.. அவனது பார்வை அவளுக்கு உணர்த்தியது..

“தானே புயல் வந்தப்ப காலையிலேயே நாங்க இங்க வந்திட்டோம்…”

ஆயிஷா.. அந்த நாளில் பாண்டிச்சேரியில் இல்லாமல் மதுரைக்குப் போய்விட்டிருந்த அஞ்சனாவிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தாள்…

“ஹப்பா.. அதை நினைச்சாலே நெஞ்சம் நடுங்குது..” உமா கண்களைக் கொட்டினாள்..

“ஒரு வாரம் கரண்ட் கட்.. பக்கத்து வீட்டு மரம் உடைஞ்சு.. காம்பவுண்டு சுவர் மேல விழுந்து.. அதுவும் உடைஞ்சு போயிருச்சு.. ஒரே கும்மிருட்டு.. பேய் மழை..” 

இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டு.. அதை அனுபவித்து பார்க்கும் அந்த அபார்மென்ட்வாசிகளின் தன்மை அஞ்சனாவை ஈர்த்தது…

இந்த புயல் மழையில்.. அடை மழையில்.. பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்திருக்கும் தொடர் மழையில்.. மற்றவர்களாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்..?

ஜன்னல் கதவுகளையெல்லாம் இறுக சாற்றிவிட்டு, குளிரிலிருந்து தப்பிக்க கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு.. கதகதப்பாக வீட்டுக்குள் உட்கார்ந்-திருப்பார்கள்..

இப்படி.. மொட்டை மாடியில் கூடிநின்று.. அந்த குளிர்காற்றை விரும்பி ரசித்து.. மழையில் நனைந்து.. புயலை வரவேற்றிருக்க மாட்டார்கள்..

“சூடா டீ வந்தாச்சு.. எடுத்துக்கங்க..”

அகலமான டிரேயில் ஆவி பறக்கும் டீ கப்புகளை அடுக்கிக் கொண்டு வந்த உமாவின் கணவன் சதிஷ் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து ஈர உடைகளுடன் இருந்தான்.. சூடான பஜ்ஜிகளை உண்டு முடித்திருந்தவர்கள் ஈர உடைகளுடன் ஆவி பறக்கும் டீ கப்புகளை எடுத்துக் கொண்டு.. மழையில் நனைந்தபடி குடிக்க ஆரம்பித்தார்கள்..

‘இது அற்புதமான அனுபவம்..!’ என்று நினைத்துக் கொண்டாள் அஞ்சனா..

அந்த மழைநாளின் அந்த தருணத்தை என்றுமே மறக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றியது..

இதுபோன்ற அனுபவங்கள் எளிதில் கிடைக்காதவை.. அரிய தாய் கிடைப்பவை.. நினைவுப் பெட்டகத்தில் போட்டு பூட்டி வைத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷ தருணங்கள் இவை…

பிரதாப் இதற்கெல்லாம் பழகியவனாக இருந்தான்.. அந்த வருடம்தான் அந்த அபார்ட்மெண்டுக்கு குடிவந்திருந்த அஞ்சனாவுக்கு அத்தனையும் புதிதாக இருந்தது..

எப்போதும் கொட்டும் மழையாக இருந்தாலும் அன்று கொட்டிய அந்த மழை புதிது.. அதில் தெறித்த சாரல் புதிது.. ஈரப்பசையை சுமந்துகொண்டு வந்து உடல் மீது அப்பிய அந்த மழை நேரத்து ஊதக்காற்று புதிது..

“இன்று புதிதாகப் பிறந்தோம்..” என்பதைப் போல உணர்ந்தாள் அஞ்சனா.. நிஷாதான் இந்த வார்த்தைகளைக் கூறுவாள்…

“ஹஜ்யாத்திரைக்கு போயிட்டு வர்றவங்க இன்னைக்குத்தான் புதுசா பிறந்த பிறப்பைப் போல மனசிலிருக்கிற பகை, கோபம், அத்தனையையும் உதறிட்டு வரணும் அஞ்சனா…”

“அது ஏன் ஆன்ட்டி..?”

“அது அப்படித்தான்.. ஹஜ்ஜூக்கு போகிறவங்க.. அக்கம் பக்கத்தில பகையாய் இருந்தாலும் சமாதானம் பண்ணிக்கிட்டு போய் வரணும்.. அதுதான் நபிகளோட கட்டளை…”

“ஓ…”

நிஷாவிடம் இதைப் போல சொல்வதற்கு நிறைய விவரங்கள் உண்டு.. ஒவ்வொரு செயலுக்கும் அவள் கடவுளை நினைவுகூர்ந்து நன்றி சொல்லுவாள்..

“யா அல்லா..! இந்த ஆடைகளை நீயே தந்தாய்.. இதிலுள்ள தீமைகளை விலக்கி நன்மைகளைத் தருவாய்..”

தாய் சொல்லி கொடுத்தபடி ஆயிஷா சொல்லும்போது அவள் முகத்தில் தூய்மையான பக்தியின் ஒளி வீசும்.. அஞ்சனாவுக்கு தன் தாயின் நினைவு வரும். ஜானகியும் அப்படித்தான். தட்டில் சாதத்தைப் போட்டு விட்டு அதைச் சாப்பிடும் முன்னால் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடச் சொல்லுவாள்…

“படியளக்கிற பரமசிவனுக்கும் அந்த பரந்தாமனாய் நிக்கிற என் பெருமாளுக்கும் நன்றி சொல்லுடி.. இந்த அன்னம் கடைசி வரை கிடைக்கணும்.. நிலைக்கணும்னு நன்றி சொல்லு…”

அந்த ஜானகி இப்போது உயிரோடு இல்லை.. அவளுக்கும் சேர்த்து அன்பைப் பொழியும் தாயுமானவனாக கோதண்டம் மட்டுமே இருக்கிறார்..

“அப்பா இருக்கிறேண்டா செல்லம்…”

எதற்கெடுத்தாலும் இந்த வார்த்தைகளைத்தான் அவர் மகளிடம் சொல்லுவார்.. அவரும் அப்படித்தான் இருந்தார்.. தாய்க்குத் தாயாக.. தந்தையாக.. அனைத்துமானஅப்பாதான அவர்.. ஆனாலும் அவர் அம்மா இல்லையே.. அஞ்சனாவின் மனதில் தாயைத் தேடும் தனிமையுணர்வு நிரம்பிக் கிடந்தது.. அதை இட்டு நிரப்ப.. கோதண்டத்தின் பாசத்தால் கூட முடியவில்லை…

ஒருவேளை ஜானகி உயிரோடிருந்தால் அஞ்சனாவிடம் தென்படும் இந்த மாற்றத்தைக் கவனித்திருப்பாள்.. அவளிடம் நிலவும் தவிப்பையும், தடுமாற்றத்தையும் இனம்கண்டு கொண்டிருப்பாள்..

அவள்தான் இல்லையே.. அதனால் அலைபாயும் அஞ்சனாவின் மனதை கண்டுகொள்ளவும் யாருமில்லை.. அதைக் கண்டுகொள்ள வேண்டியவனோ.. சடசடத்த மழைநீரின் நனைந்து விளையாடிக் கொண்டிருந்தான்..

“லலிதா.. உன் தம்பி வந்திருக்கே.. கூப்பிட்டு வரவேண்டியது தானே..”

“கூப்பிட்டேன் ஸ்ரீதேவி.. அவன் மழையில போய் நனைவாங்களான்னு மலைக்கிறான்..”

“நீ என்ன சொன்ன..?”

“இதுதான்டா வாழ்க்கைன்னு சொன்னேன்..”

உற்சாகமாய் பேசியபடி கையிலிருந்த உருளைக்-கிழங்கு வறுவலை நீட்டினாள் லலிதா..

“பிரதாப்.. அம்மா எங்கே காணோம்..?”

“அப்பாவுக்கு டீ போட்டுக்கிட்டு இருக்காங்கக்கா..”

“ஏனாம்..? அந்த டீயை இங்கே வந்து குடிச்சா ஆகாதா..?”

“அம்மாவுக்கு ஆகும்.. அப்பாவுக்கு ஆகணுமே..?”

“அதைச் சொல்லு..”

“நீங்க ஏன் கவலைப்படறீங்க.. சார் போட்டுக் கொண்டு வந்திருக்கிற டீயை குடிக்க நானாச்சு..”

உமாவிடம் பேசியபடி சதிஷின் கையிலிருந்த டீக் கப்பை வாங்கிக் கொண்டான் பிரதாப்..

“பார்த்துடா பிரதாப். இது சதிஷ் சார் போட்டிருக்க டீ.. குடிச்சா ஷாக் அடிச்சிரப் போகுது..” நிஷா பயமுறுத்தினாள்.

“என்ன ஆன்ட்டி.. சார் இஞ்சியில இருந்தும், எலுமிச்சை பழத்தில இருந்தும்தானே கரென்ட் எடுப்பாரு..?”

“நினைச்சுக்கிட்டே இரு.. இப்ப இவரு டீயில இருந்தும் கரெண்டை எடுக்கலாம்ன்னு கண்டுபிடிச்-சிட்டாராம்…”

நிஷா சிரிக்காமல் சொன்னாலும், அவள் கண்கள் சிரித்து அவளைக் காட்டி கொடுத்து விட்டன…

“யாரு கண்டது.. எதிர்காலத்தில அது நடந்தாலும் நடக்கலாம்..”

பிரதாப் சிரித்துக்கொண்டே டீயை உறிஞ்சினான்.. அவன் பார்வை அஞ்சனாவின் பக்கம் தாவிவிட்டன.. அவளை அவன் பார்க்கும்போது அவள் பின்னால் 

தெரிந்த வானத்தில் மின்னல் வெட்டியது..  ‘இவளைப் பார்க்கிறப்பல்லாம் மின்னல்தான தெரியுது’ அவன் நினைத்துக் கொண்டான்..

மின்னலுக்கும் அஞ்சனாவுக்கும் இடையில் உள்ள சம்பந்தத்தை அவனால் அறுதியிட்டுக் கூற முடிய வில்லை… அது என்னவோ.. அவளை அவன் கிட்டத்தில் பார்க்கும் நேரமெல்லாம் மின்னல் வெட்டுகிற நேரமாகவே இருந்து வைத்தது.. அவளை முதன் முதலில் சந்தித்தபோதும், இப்படித்தான் ஓர் மின்னல் வெட்டியது.. அந்த ஒளிக்கீற்றின் பின்னணியில் அவள் காரை விட்டு இறங்கியபோது மின்னல் வேறு.. அவள் வேறு என்று பிரித்துப் பார்க்க அவனால் முடியவில்லை..

அவள் அவனைப் பார்க்காமல் சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தவர்களை பார்த்தாள்..

“எந்த ப்ளாட்ப்பா..?”

அவள் கேள்வி கேட்டவரை அப்போதுதான் கவனித்தான் பிரதாப்.. அவள் அப்பா என்று அழைத்ததிலும் அவரின் சாயல் அவளிடம் சிறிதளவு தென்பட்ட-திலிருந்தும்.. அவர்தான் அவளுடைய தந்தை என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை பிரதாப் கண்டுபிடித்து முடித்தான்..

“பர்ஸ்ட் ப்ளோரும்மா..”

அவர் மகளுக்கு கை காட்டிய வீட்டை அவள் பார்த்தபோது… பிரதாப்பும் பார்த்து வைத்துக் கொண்டான்.

‘உஷாக்கா.. துபாய் போயிட்டாங்களே.. அவங்க வீட்டுக்கு இவங்க குடிவந்திருக்காங்களா..?’

இது பற்றிய விவரம் அவனுக்குத் தெரியவில்லை.. அதை தாயிடம் கேட்கலாமென்றால்.. அங்கே ஒட்டுப் புல்லை போல.. ஒட்டிக்கொண்டு அவன் தங்கை ப்ரீதியும் உடனிருப்பாள்.. அவள் இருக்கும்போது பிரதாப் எந்த விசாரணையும் மேற்கொள்வதில்லை..

‘எமகாதகி..! விசயத்தை அக்கு வேறு.. ஆணி வேறாக் கண்டுபிடிச்சு.. அலசி ஆராய்ஞ்சிருவாளே..!’ ஊர் உலகத்தில் எது எதையோ கண்டு பயந்து கொண்டிருக்க.. அவன் தங்கையின் அதீத புத்திசாலித்தனத்தின் மீது பயம் கொண்டிருந்தான்..

‘என்னதான்.. சாண் பிள்ளைன்னாலும் ஆண்பிள்ளை’ என்ற பழமொழியை தினசரி அவன் நினைவுபடுத்திக் கொண்டிருந்தாலும்.. அலட்சியமாக ஓர் பார்வை பார்த்து..

“ஹ..!” என்ற ஒற்றைச் சொல்லை உதிர்க்கும் ப்ரீதியை அவனால் அதுநாள் வரை எதுவும் செய்ய இயலாமல் போனது..

‘இவ யாரு..? பேரென்ன..? ஊரென்ன.? அப்பா மட்டும் கூட வந்திருக்கிறாரே.. அம்மா எங்கே..? இவ படிக்கிறாளா..? இல்லை வேலை செய்கிறாளா..?’

கேள்விகள் அவன் மனதைத்துளைக்க.. அவன் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக அலைமோதினான்.. அந்த நேரம் பார்த்து.. அவள் கைப்பையைத் திறந்தபடி எதிரே வர.. இருவரும் மோதிக் கொண்டார்கள்..

“ஐ ஆம் ஸாரி..” பதறித் தடுமாறியவளைப் பார்த்த போது.. வானத்தின் மின்னல் வெட்டியதில் பிரதாப் ஆச்சரியப்பட்டுப் போனான்..

‘யார் இவள்..? மின்னலாக வந்தவளோ..?’

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link