Chapter 05

0Shares

துளித்துளியாய்.. மழைத்துளிகள்..!

அதில் ஓர் துளியாய்..

நான் மாறினால்

உன் தோள் தொட முடியுமா..?

” நீ எங்கே வர்ற..?”

பிரதாப்பை கண்ட சதிஷ் புருவம் உயர்த்தினான்..

“இதென்ன சார் அநியாயமாய் இருக்கு.. இன்னைக்கு வந்தவங்களுக்கெல்லாம் உங்க ஸ்கூலைப் பத்தி சொல்லுவீங்க.. எனக்கு சொல்லமாட்டீங்களா..?” 

“உனக்குத்தான் நிறையத் தடவை சொல்லி-யிருக்கேனே..”

“மறந்து போச்சு சார்..”

“இதைநான் நம்பணுமாக்கும்..? நீ ஒரு மார்க்கமாகத் தான் இருக்க.. இரு உன் அப்பாகூட வாக்கிங் போறப்ப பத்த வைக்கிறேன்…”

“நான் அக்காகிட்ட பத்த வைக்க மாட்டேனா..?”

“அவ நம்பமாட்டாளே…”

“அந்த தைரியம்தானே உங்களுக்கு..? ஆனாலும் நீங்க செமலக்கி சார்… அக்காவைப் போல அழகான, அன்பான, அறிவான வொய்ப் கிடைச்சிருக்காங்க… அதிலயும் உங்களைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக் கிட்டிருக்காங்களே.. அதைச் சொல்லுங்க…”

“கண்ணு வைக்காதே…”

இதை சதிஷ் சொன்னபோது.. பிரதாப் படுதீவிரமாக அஞ்சனாவை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்… அவள் பட்டாம்பூச்சிகளைப் போல படபடக்கும் இமைகளை உயர்த்துவதும், தாழ்த்துவதுமாக ஒருவிதமான பரபரப்போடு இருந்தாள்..

“இதை அங்கே சொல்லுங்க..” என்று முணுமுணுத்த பிரதாப்பிடம்..

“இந்தக் கண்ணு வைக்கிறதை சொல்லலைப்பா..?” என்று தலையில் அடித்துக்கொண்டான் சதிஷ்..

‘இதுக ரெண்டுக்கும் சயின்ஸ் மேல ஆசை வந்திருக்காம்..’ பல்லை கடித்தான்..

“கேட்டுக்க அஞ்சனா.. இங்கே கிளாஸுக்கு வரும் மாணவர்கள் நோட்டுப் புத்தகம் கொண்டு வரக்கூடாது.. இதுதான் முதல் கண்டிசன்..”

“ஹை.. ஜாலி…”

“உனக்கே ஜாலியாயிருக்குன்னா.. சின்னப் பசங்களுக்கு எப்படியிருக்கும்..? இதிலேயே அவங்களுக்கு பாதி சந்தோசம் வந்திரும்..”

“பின்னே.. வராம எப்படி இருக்குமாம்..?”

“தினப்படி வாழ்க்கையில அவர்கள் பார்க்கிற, விளையாடுகிற பொருள்களை வைத்தே அறிவியல் விதிகளை சொல்லிக் கொடுக்கிறோம்..”

“எப்படி..?”

“உதாரணமா.. அவங்க யூஸ் பண்ற வாட்டர் பாட்டில், பொம்மை கார்கள், பலூன்கள், அவங்கசாப்பிடற பழங்கள்ன்னு எல்லாத்திலயும் அறிவியல் இருக்குன்னு சொல்லி தர்றோம்..”

“ம்ம்ம்..”

“முதலில் எலுமிச்சை பழத்தில் இருந்து கரண்ட் எடுக்கிறதை சொல்லித் தந்தோம்.. அவங்களே அடுத்த கட்டத்துக்குப் போய் இஞ்சியில இருந்தும், சாத்துக்குடியில இருந்தும் கரண்ட் எடுக்க முடியும்ன்னு கண்டுபிடிக்ச்சிருக்காங்க..”

“வெல்டன்…”

“காந்த விதிகள், மின்சார விதிகள், சூரியஒளி விதிகள்ன்னு எல்லாமே அவங்க விளையாட்டுப் பொருள்கள் மூலமாகவே கத்துக்கிறாங்க.. தியரிடிக்கலா இருக்கிற விசயத்தை விளையாட்டுப் போல பிராக்டிக்கலா செய்து பார்த்து சந்தோசபடறாங்க..”

உண்மையிலேயே சதிஷின் அறிவியல் சம்பந்தமான விளக்கங்களில் ஆர்வமானாள் அஞ்சனா.. பிரதாப்பை மறந்து விழி விரிய அவள் அறிவியல் பள்ளியைப் பற்றிக் கேட்க ஆரம்பிக்க.. அவளின் அசைவுகளை மௌனப் பார்வையுடன் ரசித்துக் கொண்டிருந்தான் பிரதாப்..

“வித்தியாசமான ஸ்கூல் சார்” மனம்விட்டு பாராட்டிய அஞ்சனா… எழுந்துகொள்ள மனமின்றி எழுந்து கொண்டாள்..

சதிஷின் ஸ்கூலில் பொன்மொழிகளைத் தாங்கிய போர்டு மாட்டப்பட்டிருந்தது.. மிக நேர்த்தியான அந்த இடத்தை விட்டு வெளியேறும்போது.. மறக்காமல் பிரதாப்பின் மீது ஒரு பார்வையை வீசி விட்டுத்தான் அவள் சென்றாள்..

அவள் போனவுடன் அந்த இடமே வெறிச்சோடிப் போய் விட்டதைப் போல உணர்ந்தான் பிரதாப்… அவன் எழுந்துகொள்ள முனைந்தபோது புருவங்களை உயர்த்தினான் சதிஷ்…

“என்ன ஓடற..?”

“வேற என்ன செய்யச் சொல்றீங்க..?”

“உட்காருப்பா.. போகலாம்..”

“இது உங்களுக்கே நியாயமாய் இருக்கா சார்..? இப்பத்தானே வேலை முடிஞ்சு வந்திருக்கேன்..? இன்னும் வீட்டுக்குக்கூட போகல.. என்னைப் போய் உட்காரச் சொல்றீங்களே..?”

“உன்னைப்போக வேணாம்ன்னு நானா சொன்னேன்..? நியாய.. அநியாயத்தைப் பத்தியெல்லாம் நீ பேசக்கூடாது..”

“என்னவோ.. சயின்ஸ் மேல இருந்த ஆசையில உள்ளே வந்திட்டேன்..”

“நீ எது மேல இருந்த ஆசையில உள்ள வந்தேன்னு எனக்கும் தெரியும்..”

“அனுபவம் பேசுது..?”

“பின்னே.. பேசாதா..?”

“பேசட்டும்.. பேசட்டும்.. தாராளமா பேசட்டும்.. எது எதுக்கோ பேச்சுரிமை இருக்கும்போது அதுக்கு இருக்கக் கூடாதா..? ஆனா சார்.. எனக்கு சயின்ஸ் மேலே ஆசையில்லேன்னு அபாண்டமா சொல்லிட்டீங்களே.. அதைத்தான் என் மனசு தாங்கலை சார்..”

“ஏம்பா.. ஒத்தை வார்த்தையை தாங்கமாட்டாத பூஞ்சை மனசா… உன் மனசு..?”

“பின்னே என்ன சார்..? எனக்கு சயின்ஸ்லே கெமிஸ்ட்ரி மேலே கொள்ளைப் பிரியம் தெரியுமா..?”

“அதானே பார்த்தேன்.. உனக்கு ஜூவாலஜி, பாட்டனி, பிஸிக்ஸ் மேலேயெல்லாம் கவனம் திரும்பாதே.”

“அதெல்லாம் எனக்கு வொர்க் அவுட் ஆகாது சார்..”

“அடேங்கப்பா.. ஐயாவுக்கு கெமிஸ்ட்ரி மட்டும் செமத்தியா வொர்க் அவுட் ஆகுதாக்கும்..”

“நீங்களே பார்த்தீங்களே சார்..”

பிரதாப் பூடகமாய் சிரிக்க.. சதிஷ் அதை ரசித்தவனாக பலமாக சிரித்து வைத்தான்..

“பார்த்தேன்.. பார்த்தேன்.. பலமான கெமிஸ்ட்ரிதான்…”

பிரதாப் வீட்டுக்குள் நுழைந்தபோது.. “அப்பவே உன் கார் சத்தம் கேட்டுச்சேடா..” என்று விசாரித்தாள் பரிமளம்..

“அது வேற காரோட சத்தம்.. இல்லையான்னா..” ப்ரீதியின் பார்வையில் குறும்பு கொப்பளித்தது..

“என்னவோ போடா.. நீதான் வந்துட்டன்னு காபி கலந்து வைச்சிட்டேன்..” பரிமளம் சலித்துக் கொண்டாள்.

“இப்ப என்னம்மா அதை சூடு பண்ணிக்கொண்டு வாங்க.. குடிச்சிட்டுப் போறேன்..” பிரதாப் ஆறுதலாகப் பேசினான்..

“எங்கே இருக்கு.. நீவர நேரமாகும்ன்னு சொல்லி இந்த ‘குட்டிச் சாத்தான்’ அதை வாங்கிக் குடிச்சிட்டாளே..” அங்கலாய்த்தாள் பரிமளம்..

‘குட்டிச்சாத்தான்’ என்று பரிமளத்தால் விளக்கப் பட்ட ப்ரீதி மர்மச் சிரிப்புடன் தமையனைப் பார்த்தாள்..

“அதுவாண்ணா.. தூரத்திலே ஒரு ஸ்கூட்டி சத்தம் கேட்டுச்சா.. அதனாலே நீ வர நேரமாகும்ன்னு நானா முடிவு பண்ணி.. உன் காபியை குடிச்சிட்டேன்.. நான் நினைச்சது தானே சரி..?” புருவங்களை வேறு உயர்த்தினாள்..

தன்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்று பிரதாப் நொந்தே போனான்..

வெறும் வாகன சத்தத்தை வைத்தே.. அவன் மாடிக்கு வருவானா.. இல்லை மாட்டானா.. என்று  அவனது தங்கை கணித்து விடுகிறாளா..,

அவள் பெரிய அறிவாளி என்பதில் பிரதாப்பிற்கு யாதொரு சந்தேகமும் இல்லை.. ஆனால்.. அந்த அறிவுத் திருக்கடல் அவனைச் சுற்றியே மையம் கொள்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.. உன் உடன்பாட்டை யெல்லாம் யார் கேட்டது..? என்ற தினுசில் அவனைப் பார்த்தபடி.. தாயிடம் இரண்டாவது கப் காபியைக் கேட்டாள் ப்ரீதி..

“அதைத்தான் வாங்கி குடிச்சிட்டியே..” என்றாள் பரிமளம்..

“அது அண்ணனோட காபிம்மா..” ப்ரீதி விளக்கம் சொன்னாள்..

“ஏண்டி.. உனக்கு காபி கலந்துக்கிட்டு வர்றேன்னு சொன்னேனா இல்லியா.. நீதானே முந்திரிக் கொட்டையைப் போல உன் அண்ணன் காபியை வாங்கிக் குடிச்ச..?”

“அதுக்கென்னம்மா இப்ப..?”

“திரும்பவும் காபியைக் கேட்கறியே..?”

“என் பங்கு காபின்னு ஒண்ணு உண்டா..? இல்லையா..?”

“உண்டு..?”

“அதாம்மா இது..”

ஆளானப்பட்ட கவுண்டமணிக்கே அதான் இது என்ற வாழைப்பழத்திற்கான விளக்கம் விளங்காதபோது பாவம்.. அப்பாவியான பரிமளத்திற்கு அதாம்மா இது என்ற காபிக்கான விளக்கம் விளங்கிவிடுமா..?

அதனால் அவள் எதற்கு வம்பு என்று மகள் கேட்ட காபியை போட்டுக் கொடுத்துவிட சமையலறைக்குள் போய் ஒளிந்து கொண்டாள்..

“அம்மாவை எதுக்காக இந்த பாடுபடுத்தற..?” பிரதாப் முறைத்தான்..

“யார் யாரோ.. யார் யாரையோ.. போட்டு பாடாப் படுத்தறாங்க.. நான் அம்மாவைத்தானே படுத்தறேன்…”

ப்ரீதி பொடி வைத்துப் பேசியதை போல உணர்ந்தான் பிரதாப்..

அவளிடம் விளக்கம் கேட்டுவிட முடியாது என்பதை உணர்ந்தவனாக.. அவன் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.. 

“இப்ப எதுக்காக.. அனல் பார்வை பார்க்கிற..?” அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள் ப்ரீதி..

“சும்மாகூடப் பார்க்கக்கூடாதா..?” எரிந்து விழுந்தான் பிரதாப்..

“பார்த்து.. பார்த்துத்தானே அவளை பைத்தியமாக்கி வைச்சிருக்க..”

ப்ரீதி குண்டைத்தூக்கிப் போட்டாள்..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link