Chapter 06
மின்னலோடு மின்னலாக
எந்தன் முன்னால் வந்து நின்று
கன்னத்திலே கன்னம் வைத்து
காதல் சொல்லி பிரிந்து சென்றாள்
ப்ரீதியின் பேச்சில் பிரதாப் உதட்டைக் கடித்துக் கொண்டான்.. எவ்வளவோ மறைத்துப் பார்த்தும் ப்ரீதியிடம் அவன் மாட்டிக் கொண்டதன் மர்மம் என்னவென்று தலையை உழப்பிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்..
“தேவையில்லாம ஸ்டெரெயின் பண்ணிக்காதே.. நீ மறைவாத்தான் ஹேண்டில் பண்ணினே.. ஆனா உன் திருட்டு முழிதான் காட்டிக் கொடுத்துருச்சே..”
“இந்த முழியைப் பத்திப் பேசற வேலையை எல்லாம் என்கிட்ட வைச்சுக்காதே.. என் முழி திருட்டு முழின்னா.. உன் முழி என்ன முழி..?”
“எதுக்கு இப்ப முழியைப் பத்தி ஆராய்ச்சி பண்ற..? நீ அஞ்சனாவை அடிக்கிற சைட்டை பத்தி எனக்கு தெரியும்.. அவ்வளவுதான்..”
“அதெல்லாம் இல்லை..”
“ஹை.. ஹை.. இதை தலையில பூ வைக்காம.. காதில பூ வைச்சிருக்கிற வேற யாருகிட்டயாவது போய் சொல்லு.. என்கிட்ட இந்த டகுல்பாச்சி வேலையெல்லாம் வேணாம்…”
ப்ரீதி கிளம்பி சென்றுவிட டகுல்பாச்சி என்றால் என்ன அர்த்தம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான் பிரதாப்.. இதைப்போன்ற வார்த்தைகளையெல்லாம் ப்ரீதி அனாசியமாக அள்ளி விடுகிறாள்.. அதன் அர்த்தம் புரியாமல் பிரதாப்தான் தலைகாய்ந்து விடுகிறான்..
“ப்ரீதி எங்கேடா..?” பரிமளம் கேட்டாள்..
“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்..? இப்பத்தான் வெளியிலே போனா..” எரிந்து விழுந்தான் பிரதாப்..
“வேற எங்கே போயிருக்கப்போறா.. எல்லாம் கம்ப்யூட்டர் கிளாஸுக்குதான போயிருப்பா..”
“தெரியுதில்லே.. அப்புறமும் என்ன கேள்வி வேண்டிக்கிடக்கு..?” பிரதாப் சுள்ளென்று பேசிவிட்டு உள்ளே போய்விட..
“ஏன் இவன் வந்ததில இருந்து எரிஞ்சு விழுந்துக்கிட்டு இருக்கான்..?” என்று அப்போதுதான் அலுவலகம் விட்டுத் திரும்பி வந்த பிரம்மநாயகத்திடம் கேட்டாள் பரிமளம்..
“ஏண்டி.. நானே ஆபிஸில் அலுத்துச் சலிச்சுப்போய் வீட்டுக்கு வந்து சேர்றேன்.. இதில் உன்மகன் எரிஞ்சு விழறதைப் பத்தி என்கிட்ட விளக்கம் கேட்கிற.. ஒரு மனுசன் விளக்கம் சொல்லியே ஓய்ஞ்சு போகணும்னு நீங்க எல்லோரும் கங்கணம் கட்டிக்கிட்டு அலைகிறிங்களா..? ஒரு நாளைக்கு எத்தனை விளக்கம்தாண்டி என்னால சொல்ல முடியும்..?”
அவர் மகனுக்கு மேல் எரிந்து விழுந்தார்..
அவரே பாவம்.. தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கிறார்.. அன்றைக்கென்று பார்த்து ஒரு ஃபைல் காணாமல் போய்விட்டது.. அதற்கான விளக்கத்தைச் சொல்லச் சொல்லி.. அவரின் உயிரைக் குறைத்து வீட்டுக்கு அனுப்பியிருந்தார்கள்.. வீட்டுக்கு வந்தவரிடமும் பரிமளம் விளக்கம் கேட்டு வைத்தால் அவர் கடித்துக் குதறிவிட மாட்டாரா..?
“இந்த வீட்டுக்கு ஆளாளுக்கு நான் ஒருத்தி கிடைச்சிருக்கேன்.. சிறிசு முதற்கொண்டு பெரிசு வரைக்கும் ஊரில இருக்கிற அத்தனை கோபத்தையும்.. என்மேலே கொண்டு வந்துதான் காட்டாறாங்க…”
பரிமளம் எண்ணெய்ச் சட்டியில் போடப்பட்ட அப்பளமாக பொரிந்து கொண்டே.. கடமையை மறக்காமல் காபி கலக்கப் போனாள்..
மொட்டை மாடியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான் நசிம்.. மொட்டை மாடியில் நின்றபடி ரோட்டைப் பார்க்கும் எண்ணத்துடன் மாடிக்கு வந்த அஞ்சனா அவர்களை கண்டதும்.. தனிமை கிடைக்காதே என்ற கவலை கொண்டவளாக நகம் கடித்தாள்..
அன்று அவளுக்கு கல்லூரி இல்லை.. பிரதாப் வேலையிலிருந்து திரும்பி வரும் நேரம் நெருங்க நெருங்க.. அவளது இதயத்துடிப்பு அதிகமானது.. அவன் வரும்போது அவளும் திரும்பி வருகிறதைப் போல எப்போதும் பார்த்துக் கொள்வாள்.. அவள் முதலில் வந்தால்.. கீழ்தளத்தில் குடியிருக்கும் உமா மகேஸ்வரியிடம் பேசுவதைப் போல பாவனை செய்தபடி காத்திருப்பாள்.. அவன் முதலில் வந்துவிட்டால் அவன் சதிஷுடன் பேசியபடி நின்றிருப்பான்..
அது என்னவோ.. அவனுக்காக காத்திருப்பதை அவள் முகக்குறிப்பாலும்.. விழியசைவாலும் உணர்த்தி விடுவாள்.. அவன் மட்டும் அவ்வாறு உணர்த்தியதே இல்லை.. அவளுக்காக அவன் காத்திருப்பதைப் போலவே நிற்கமாட்டான்.. இயல்பாக மற்றவர்களிடம் பேசியபடி கல்லையும், மண்ணையும் பார்க்கும் பார்வையைப் போல அவளையும் பார்த்து வைப்பான்..
‘இவனென்ன பெரிய மன்மதனா..?’
‘அவளுக்குள் ரோசம் பொங்கியிருக்கிறது.. இனி இவன் முகத்தையே பார்க்கக்கூடாது..’ என்ற வைராக்கியம் பெருகியிருக்கிறத…
எல்லாம் சாயங்காலப் பொழுது நெருங்குகிற வரைக்கும்தான். பொழுது சாய.. சாய.. அவன் முகம் பார்க்க வேண்டுமே என்று மனது அலைபாய ஆரம்பித்துவிடும்..
அந்த மன்மதனைக் கண்டால் அவளுக்கு எப்படியிருக்குமோ தெரியாது.. பிரதாப்பைக் கண்டுவிட்டால் அவள் மனம் அலைகடலாய் ஆர்ப்பரிக்கும்.. அவன் முகத்தைத் தேடி ஆவலுடன் அவள் பார்வை பாய்ந்து ஓடும்..
பிரதாப்.. தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேனேஜராக இருந்தான்.. கார் வைத்திருந்தான்.. அவன் காரிலிருந்து இறங்கும் கம்பீரத்தில் அவள் மனம் சிக்கித் தவிக்கும்..
‘பெரிசா.. பேங்க் மேனேஜர்ன்னு பந்தா காட்டறான்..’ உதட்டை சுழித்து அழகுகாட்டிக் கொள்வாள்..
அவன் மேல் ஏன் இத்தனை பித்தாக இருக்கிறாள் என்ற விவரம் கேட்டால் அந்த வானத்தைக் காட்டுவாள்..
“ஆகாயம் ஏன் பெரிசா இருக்கு..? அதை யாராவது கேட்டிங்களா..?” அவளின் நியாயம் இப்படித்தான் இருக்கும்..
“ஹாய் அக்கா..”
சிறுவர்களோடு சிறுவனாக கலந்திருந்த நசிம் கூவினான்..
“டாக்டராடா நீ..? சின்னப் பசங்களோட விளையாடிக் கிட்டு இருக்க..?” செல்லமாக கடிந்து கொண்டாள் அஞ்சனா..
“அவன் அப்படித்தான்க்கா..” ஆயிஷா அவளருகில் வந்து நின்றாள்..
“லீவு விட்டா.. சின்ன பசங்ககூடத்தான் இவன் லூட்டி அடிப்பான்..” ஆயிஷா சொல்லிக் கொண்டிருந்த போது ஒன்றரை வயதுக் குழந்தையோடு ஸ்ரீதேவி மாடிக்கு வர.. அஞ்சனாவை மறந்து.. குழந்தையிடம் தாவினாள்..
“அவனாவது சின்னப் பசங்களோடு விளையாடறான்.. இது குழந்தைக கூடத்தான் கூட்டு வைச்சுக்குது..”
ஆயிஷாவைப் பார்த்த அஞ்சனாவின் முகம் கனிந்தது.. காரின் ஹாரன் ஒலி கேட்க.. அவசரமாக திரும்பிப் பார்த்தாள்.. ஹாரன் சப்தத்தைக் கொடுத்தபடி பிரதாப் வந்து கொண்டிருந்தான்…
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.