Chapter 07

0Shares

இடியோடு கூடிய மழைச்சத்தம்..!

உன் அடிதேடித் துடிக்கும்..

என் மனதின் சத்தம்!

“இந்த வருச  நியு இயருக்கு என்ன செய்யலாம் ஸ்ரீதேவி..?” லலிதா கேட்டபடி மொட்டை மாடிக்கு வந்தாள்..

அஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியின் கவனம் திரும்பியது.. உமா மகேஸ்வரியும்.. நிஷாவும் அங்கே வந்து பேச்சில் சேர்ந்துகொள்ள ஒரு குட்டி மாநாடு ஆரம்பமாகியது..

அஞ்சனாவுக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை… காரிலிருந்து இறங்கும்போதே எதேச்சையாக அண்ணாந்து வைசாலி அபார்ட்மென்டின் மாடியைப் பார்த்த பிரதாப்பின் பார்வையை அவர் சந்தித்துவிட்டிருந்தாள்.. காரில் ஏதோ இருந்தது போல.. அவன் காரை அபார்மென்டின் பார்க்கிங் ஏரியாவுக்குள் விடாமல்.. அங்கேயே நின்று, குனிந்து காருக்குள் பார்ப்பதும்.. பின்னர் மொட்டை மாடியை அண்ணாந்து பார்ப்பதுமாக இருந்தான்..

“யாரு அங்கே நிற்கிறது..? நம்ம பிரதாப்பா..?”

லலிதா எட்டிப் பார்க்கும்வரை எந்தப் பிரச்னையு மில்லாமல்தான் பிரதாப்புக்கும் அஞ்சனாவுக்கும் இடையிலிருந்த பார்வைப் பரிமாற்றம் ஓடிக் கொண்டிருந்தது.. லலிதா எட்டிப் பார்த்து கேள்வி கேட்டவுடன் மற்ற மூன்று பெண்களும் திரும்பிப் பார்த்ததும் அதில் தடங்கல் ஏற்பட்டு விட்டது..

“என்னாச்சு பிரதாப்..?” ஸ்ரீதேவி உரத்த குரலில் கீழே எட்டிப் பார்த்து விசாரித்தாள்..

“ஒன்றுமில்லைக்கா.. ஒரு ஃபைலைக் காணோம்.. அது முக்கியமான ஃபைல்.. கொண்டு வந்த ஞாபக மிருக்கு.. அதை எங்கே வைச்சேன்னு தேடிக்கிட்டு இருந்தேன்..” பிரதாப் காரணம் சொன்னான்..

“சரியாய்ப் போச்சு போ… உன் அப்பாதான் ஃபைலைத் தொலைச்சுட்டு அந்த கடுப்பைக் கொண்டு வந்து உங்கம்மா தலைமேலே கொட்டினாருன்னா.. நீ அதுக்கு மேலே இருக்கியே.. உன் குடும்பமே ஃபைலைத் தொலைக்கணும்னு நேர்த்திக் கடன் வைச்சிருக்கீங்களா..?” லலிதா சிரித்தபடி வினவியதும் மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்..

அதற்கு மேலேயும் அங்கே நிற்க முடியாமல் பிரதாப் காரை உள்ளே விட்டுவிட.. அவன் கண் பார்வையிலிருந்து மறைந்து போனதால் ஏமாற்றத்துக்கு ஆளானாள் அஞ்சனா.. மற்ற பெண்கள் புது வருடக் கொண்டாட்டத்தை பற்றிய தீவிர ஆலோசனையில் இருக்க.. இவள் பிரதாப்பின் முகத்தைப் பார்க்க எப்படி கீழே போவது என்ற தீவிர ஆலோசனையில் இறங்கி விட்டாள்…

“போன வருடம் நீ எனக்கு அம்மாவா வந்து சேர்ந்த.. இந்த வருசமாவது நல்ல பிரஸென்டா கொடுக்கிற அம்மா. கிடைக்கணும்..”

லலிதாவை வம்புக்கு இழுத்தாள் உமா..

“வேணும்னா இவளை அம்மாவா வைச்சுக்க.. செம பிரியாணி கிடைக்கும்..”

நிஷாவை கை காட்டி விட்டாள் லலிதா.. அவர்களுக் கிடையே நிலவிய அன்யோன்யத்தைப் பார்க்கையில் அஞ்சானவுக்கு ஆச்சரியமாக இருந்தது.. அந்த வைசாலி அபார்ட்மென்டில் ஆறு அபார்ட்மென்டுகள் இருந்தன.. அந்த ஆறில் குடியிருப்பவர்களும் ஒன்றுபோல ஒரு மனதாக இருப்பது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்விக்கு அவளுக்கு விடை கிடைக்கவில்லை.. அஞ்சனா குடி வந்திருந்த அபார்ட்மென்டுக்கு சொந்தக் காரர் துபாய் போக வேண்டி வந்ததால் அதை வாடகைக்கு விட்டுவிட்டு சென்றிருந்தார்.. அவருடைய குடும்பத்தைத் தவிர.. மற்ற ஐந்து குடும்பங்களும் சொந்த அபார்ட்மென்டில் இருந்தார்கள்..

ஆனாலும் கூட அவர்கள் ஐவரும் அஞ்சனாவின் குடும்பத்தையும் வேறுபாடு பார்க்காமல் தங்களுக்குள் இழுத்து விட்டுக்கொண்டதுதான் அஞ்சனாவுக்குள் நெகிழ்வைக் கொடுத்தது.. இத்தனைக்கும் கோதண்டம் யாரிடமும் கலகலவென்று பேசமாட்டார்.. அதை தயக்கத்துடன் அவள் சொன்னபோது மற்றவர்கள் உரக்கச் சிரத்தார்கள்..

“பரிமளா ஆன்ட்டி.. உங்க ஹஸ்பெண்டுக்கு சரியான ஜோடி ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கு..” என்று பரிமளத்தை கிண்டல் பண்ணினார்கள்..

பிரம்மநாயகமும் யாரோடும் கலகலப்பாக பேச மாட்டாராம்.. சதிஷுடன் மட்டும் காலை, மாலை வேளைகளில் வாக்கிங் போய் வருவாராம்..

“உமா ஹஸ்பெண்ட்தான் கமலாச்சே.. அவர்கூட பேசாமல் ஒருத்தரால இருக்க முடியுமா..? இல்லை.. இவர்தான் இருக்க விட்டுவிடுவாரா..?”

ஸ்ரீதேவி சொல்லியபோது அஞ்சனாவிற்கு எதுவும் புரிய வில்லை.. சதிஷின் ஜாடை கமலஹாசனைப் போல இல்லையே என்று குழம்பிப் போனாள்..

“அதான்ப்பா.. ‘புன்னகை மன்னன்’னு இவ சொல்றா..” உமா சந்தேகம் தீர்த்து வைத்தாள்..

‘ம்ஹூம்.. என் அப்பாவை பிரதாப்போட அப்பாவோட ஜோடி சேர்க்கிறதுக்கு பதிலா.. என்னை பிரதாப்போட இவங்க ஜோடி சேர்க்கக்கூடாதா..’ அஞ்சனா மனதுக்குள் ஏங்கிப் போனாள்..

 “முப்பது கோடி முகமுடையாள் – உயிர்

பொய்ம்புற ஒன்றுடையாள்..

அவள் செப்புமொழி பதினெட்டுடையாள்

எனில் சிந்தனை ஒன்றுடையாள்”

என்று பாடி வைத்தார் பாரதி..

நாம் அப்படியா இருக்கிறோம்..? ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கிடையே கூட- ஓராயிரம் வேற்றுமைகள்.. நீ பெரிதா.. நான் பெரிதா என்ற நிழல் யுத்தங்கள்..

 “சிரிப்பது போல முகமிருக்கும்..

சிரிப்புக்கு பின்னால் விசமிருக்கும்

அணைப்பது போல கையிருக்கம்

அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்..”

ஒரு திரைப்பட பாடலில் வருவதைப் போலத்தானே வாழ்க்கையும் நமக்கு உணர்த்தியிருக்கிறது..,

இப்படிப்பட்ட சூழலில் பாலைவனச் சோலைபோல கூட்டுக் குடும்பத்தைப் போல ஒருவருடன் ஒருவர் ஒட்டி உறவாடிக் கொண்டு ஒரு அபார்ட்மென்ட் வாசிகள் இருக்கிறார்கள் என்றால்.. அது எவ்வளவு ஆச்சரியகரமான விசயம்..?

வைசாலி அபார்ட்மென்ட் அருமையான நட்பையும் மனிதநேயத்தையும் அஞ்சனாவுக்கு உணர்த்தியது. அவளுடைய பிரதாப் இருந்ததினால் மட்டுமே அவள் வைசாலி அபார்ட்மென்ட்டை நேசிக்கவில்லை..

அங்கே.. நேசிக்கப்பட வேண்டிய மனிதர்கள் இருந்தார்கள்.. இதுதாண்டா வாழ்க்கை.. என்று லலிதா தன் தம்பியிடம் சொன்னதைப் போல வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.. அவர்கள் உணர்த்திய அத்தனை பரிணாமங்களும் அஞ்சனாவுக்கு வாழ்வின் ஆதாரத்தை உணர்த்தின…

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link