Chapter 20
சொட்டு சொட்டாய்..
உதிர்த்த துளிகள்
கண்ணீர் துளிகளா..?
மழைநீர் துளிகளா..?
“உன் அப்பாவுக்கு வேற வேலையே இல்லையா..?”
பிரதாப் கோபப்பட்டான்.. அஞ்சனாவால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை..
“இப்ப உனக்கு என்ன வயதாகிருச்சுன்னு உன் கல்யாணத்திற்கு அவசரப்படறாரு..?”
“நானும் சொல்லிப் பார்த்துட்டேன் பிரதாப்.. இத்தனை நாளாய் என் படிப்பைக் காரணம் காட்டி அதோட கல்யாண ஏற்பாட்டைத் தடுத்து நிறுத்த முடிஞ்சது.. இப்ப படிப்பும் முடிஞ்சிடுச்சு.. இனி எதைச் சொல்லி இதையெல்லாம் நிறுத்தறது..?”
அஞ்சனாவின் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாத இயலாமையோடு அவளை உறுத்துப் பார்த்தான் பிரதாப்..
“நிறுத்த முடியாதுன்னா என்ன செய்கிறதாய் உத்தேசம்..? அவர் கை காட்டற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட உத்தேசமா..?” சிடுசிடுத்தான்..
அவன் கேள்வியில் மனதில் பலமான அடியை வாங்கினாள் அஞ்சனா.. அதன் வலி தாளாமல் அவளும் மோதிவிட்டாள்..
“என் உத்தேசம் இருக்கட்டும்.. உங்களுக்கென்ன உத்தேசம்..?”
முகச் சுளிப்புடன் கேட்டவளை கண்கள் இடுங்க கூர்ந்து பார்த்தான் பிரதாப்..
“புரியலை..”
“உங்களுக்கா புரியாது? புரியாததைப் போல நடிக்கிறீங்க..?”
“ஏய்ய்.. உன் முன்னால நடிக்கணும்ங்கிற அவசியம் எனக்கில்லைடி…”
“அதானே.. உங்களுக்கெதுக்காக அவசியம் வரப்போகுது..? நீங்க பாதுகாப்பாய், பத்திரமாய் இருந்து கிட்டு என்னை பம்பரமாய் சுழல வைக்கிற ஆளாச்சே..?”
“அஞ்சனா..?”
“கத்தாதீங்க.. என் அப்பா எனக்காக மாப்பிள்ளை பார்க்கிறாருன்னா பெத்தவர்ங்கிற கடமை அவருக்கு இருக்கு.. கடமை மறக்காமல் அதைச் செய்கிறாரு.. உங்களுக்கு அந்தக் கடமை இருக்கா..?”
“என்னடி சொல்ற..?”
“என்னைக் காதலிக்கிறவர்ங்கிற கடமை உங்களுக்கு இல்லைன்னு சொல்றேன்..”
“அதுக்காக என்ன செய்யணும்னு நினைக்கிற..?”
“அதையும் நான் தான் சொல்லணுமா..? ஏன்.. என் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டி விட வேண்டியதுதானே.. அதை செய்துட்டா இந்த அவதி இல்லையே..”
“காதலிக்கிற கடமையை மட்டும் உனக்கையாய் சொல்றியே.. கூடப்பிறந்த கடமைன்னு ஒன்னு இருக்கே.. அதை மறந்துட்டியா..?”
அஞ்சனா மௌனம் சாதித்தாள்.. அங்கே சுற்றி, இங்கே சுற்றி பிரதாப் இங்கேதான் வந்து நிற்பான் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்..
“ப்ரீதிக்கு நான் அண்ணன்டி..”
“யாரு இல்லைன்னு சொன்னது..?”
“அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு…”
‘என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய பொறுப்பை மட்டும் வசதியாய் மறந்து போயிடு..’
“நான் வேண்டாம்னு தடுக்கலையே.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்க.. நாம ரெண்டு பேரும் முன்னால நின்று ப்ரீதியோட கல்யாணத்தை நடத்துவோம்..”
அவள் குழந்தையாகச் சொல்ல.. அவளை இரக்கத்துடன் பார்த்தான் பிரதாப்…
‘அவள் முன்னால் நின்றால்தான் ப்ரீதியின் திருமணம் தடைபடும். இதை அவளிடம் எப்படிச் சொல்வது..?’
“புரியாம பேசாதே அஞ்சனா.. எங்க வீட்டில் ஜாதி பார்ப்பாங்க..” அவன் உடைத்துச் சொல்லி விட்டான்…
“எங்க வீட்டிலயும் அப்படித்தான்..” அவள் ரோசத்துடன் சிலுப்பிக் கொண்டாள்…
“இந்த லட்சணத்தில நீயும் நானும் புருசன் பெண்டாட்டியாய் நின்னு ப்ரீதியின் கல்யாணத்தை நடத்த முடியுமா..?”
அவன் ஆழ்ந்த குரலில் கேட்க.. அஞ்சனாவின் முகம் சிணுங்கியது..
“அப்ப.. இதுக்கு என்னதான் வழி..?”
“கொஞ்சநாள் பொறுமையாய் இரு..”
“நானிருப்பேன்.. அப்பா இருக்கணுமே..?”
“சமாளி..”
“எதுவரைக்கும்..?”
“ப்ரீதியின் கல்யாணம் நடந்து முடிகிற வரைக்கும்..”
“உங்களுக்கு உங்க தங்கையைப் பற்றி மட்டும் தானே கவலையிருக்கு..? அந்தக் கவலையில் பாதிகூட என்னைப் பத்தி இல்லையே..?”
“நீயென்ன.. அவகூட போட்டி போடுறயா..?”
“ஆமான்னு சொன்னா என்ன செய்வீங்க..?”
“அறைஞ்சு பல்லை உதிர்த்திருவேன்.. இப்ப உனக்கு என்னதாண்டி வேணும்..?”
“நம்ம கல்யாணம் நடக்கணும்..”
“முட்டாளாடி நீ.. இவ்வளவு நேரமாய் கிளிப்பிள்ளைக்கு சொல்கிறதைப் போல பொறுமையாய் சொல்கிறேன் திரும்பவும் வேதாளத்தை போல முருங்கை மரத்தில ஏறுகிறாயே..”
“அப்ப நான் வேதாளமா..? உங்க தங்கை மட்டும் பெண்குலமா..?”
“அவளை எதுக்காகடி பேச்சில இழுக்கிற..? அவ உன்னை என்ன செய்தா..?”
“என் வாழ்க்கைக்கு குறுக்கே வருகிறாளே..?”
அஞ்சனா பொருமிய அடுத்த நொடியில் பிரதாப் அடிக்குரலில் உறுமினான்..
“வாயை மூடுடி..”
அவன் கன்னத்தில் அவன் கைவிரல்கள் பதிந்து விட்டன.. கன்னத்தைப் பிடித்தபடி அவன் அடித்த அடியை ஜீரணிக்க முடியாமல் அஞ்சனா ஸ்தம்பித்து போய்நின்று விட்டாள்..
“ச்சீ.. இவ்வளவு சுயநலக்காரியா நீ.. உன் முகத்தில் விழிக்கவே எனக்கு விருப்பமில்லை.. இப்பவே என் தங்கையை கரித்துக் கொட்டறயே.. நாளைக்கே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு வைய்யு.. என் தங்கையை ஒரு வழிபண்ணிரமாட்ட..?”
அவன் படிகளில் இறங்கி வேகமாய் போய்விட்டான். அஞ்சனா அங்கேயே அமர்ந்து வெகுநேரம் வரை விசும்பிக் கொண்டிருந்தாள்.. மறுநாளைய பெண் பார்க்கும் படலத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்ற நினைவுடன் அந்த அபார்ட்மெண்டின் மற்ற ஐந்து குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள்.. வழக்கம்போல உச்சக்கட்ட காபி கொடுக்கும் படலத்தின்போது அஞ்சனா வாந்தியை எடுத்து வைத்தாள்..
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.