Chapter 24
மழைவிட்ட பின்னாலும்..
சாரல் வந்து தெறித்தபடி
மின்னலாக வந்தவளே..! உன்
பின்னலிலே மனம் மயங்குதடி
புதுவருடக் கொண்டாட்டத்தில் இந்த எதிர்பாராத திருப்பம் நிகழுமென்று யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.. அஞ்சனாவின் பார்வையே அடேய் பாதகா என்று பிரதாப்பை அழைத்து வைத்தது… பிரதாப்பின் இறைஞ்சும் பார்வைக்கு யாதொரு பலனும் ஏற்படவில்லை. எல்லோரும் தங்களுக்குள் பேசியபடி கலைந்து சென்றார்கள்..
“என்னப்பா இது..? நான் உங்க மூத்த மகன் நினைவிருக்கா..?” பிரம்மநாயகத்திடம் சீறினான் பிரதாப்.
“நல்லா நினைவிருக்குடா.. அதனாலதான் உன் தங்கைக்கு கல்யாணம் பேசி முடித்தப்பவே உனக்கும் கல்யாணத்தை சேர்த்து பேசி முடிச்சேன்..” என்றார் பிரம்மநாயகம்..
“என் கல்யாணத்துக்கென்ன அவசரம்..?”
“உன் வயசில நான் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாயிட்டேன்..”
“இது ஒரு பெரிய சாதனையா..? இந்தச் சாதனையை எப்ப வேணும்னாலும் சாதிச்சுக்கலாம்.. முதல்ல ப்ரீதியோட கல்யாணத்தைப் பாருங்க..”
“உன் கல்யாணத்தைப் பார்த்தாதான் ப்ரீதியின் கல்யாணத்தையும் சேர்த்து பார்க்க முடியும்..”
“என்னப்பா சொல்றீங்க..?”
“நீ அந்த மாப்பிள்ளையோட ஒன்னுவிட்ட தங்கையை கல்யாணம் பண்ணிக்கிட்டாதான்.. அவர் உன் தங்கையை கல்யாணம் பண்ணிக்குவாராம்..”
“நல்ல கதையாய் இருக்கே.. இதென்ன பண்டமாற்று வியாபாரமா..? கல்யாணம்ப்பா.. ஆயிரம் காலத்தப் பயிர்!”
“என்னடா செய்கிறது..? எனக்கும் அது புரிகிறது.. ஆனா உன் தங்கச்சி கட்டினா அந்த மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன்னு ஒத்தைக்காலிலே நிற்கிறாளே..”
“இது உண்மையா..” என்று ப்ரீதியிடம் கேட்டாள் பிரதாப்..
“ஆமான்டா அண்ணா..” என்றாள் அவள்.
அத்தோடு நிறுத்தாமல்.. ஒற்றைக் காலில் நிற்பதால் வலி ஏற்படுவதாகவும் அந்த அவதியிலிருந்து அவளைக் காப்பாற்றி இரண்டு காலிலும் அவள் நிற்பதற்கு பிரதாப் தான் ஆவன செய்ய வேண்டுமெனவும் அவள் விண்ணப் பித்தும் வைத்தாள்..
“திமிரா..?” பிரதாப் பல்லைக் கடித்தான்..
“இந்த பல்லை நறநறக்கிற வேலையெல்லாம் என்னிடம் வைச்சுக்காதே.. இதுக்கெல்லாம் அஞ்சனாதான் லாயக்கு.. நீதான் பாசமலரை வளர்க்கிற அண்ணனாச்சே.. எனக்காக இதைக்கூட செய்ய மாட்டியா..?”
“நான் அஞ்சனாவைக் காதலிக்கிறேன் ப்ரீதி..”
“நீயும் உன் காதலும்! வெளியே சொல்லிராதே.. எனக்காக உன் காதலியையே தூக்கி எறிகிறவனாச்சே நீ.. காதலையும் சேர்த்து தூக்கி எறிய மாட்டியா என்ன..?”
“உனக்கு நான் மாப்பிள்ளை பார்க்கிறேன் ப்ரீதி..”
“எரிச்சலைக் கிளப்பாதே… அஞ்சனாவோட அப்பாவாவது ஒன்றுக்கு இரண்டாய் மாப்பிள்ளைகளை கொண்டு வந்து நிறுத்தினார்… நீ அதைப்போல யாரையாவது கொண்டு வந்து நிறுத்தினியா..? அதை விட்டுட்டு அவர் கொண்டு வந்த மாப்பிள்ளைகளை விரட்டியடிக்கிற வேலையைத்தான பார்த்த..?”
“உனக்காகத்தானே ப்ரீதி..”
“அப்ப.. எனக்காக இதையும் செய்..”
இரக்கமில்லாம கூறிவிட்டு நகர்ந்துவிட்டாள் ப்ரீதி..
அஞ்சனாவை தனிமையில் பிடித்து நிறுத்தினால்.. அவள் “யார்.. நீ” என்று கேட்டாள்..
“அடிப்பாவி நான் உன் காதலன்டி..” அலறினான் பிரதாப்..
“இல்லை.. நீங்க ப்ரீதிக்கு அண்ணன்..” அவள் முறைத்தாள்..
“ஏண்டி.. ஒரு அண்ணனா லட்சணமா.. தங்கை மேல பாசமா இருந்தா அது குத்தமாடி..?”
“காதலனா லட்சணமா.. காதலியைக் காப்பாற்றவராம கையைக் கட்டிக்கிட்டு இருந்தா.. அது குத்தம்தான்..”
“இந்த கல்யாண ஏற்பாட்டைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதுடி.. என்னை நம்பு..” கெஞ்சினான் பிரதாப்..
“நம்பி நம்பித்தான்.. இந்த நிலைமையில வந்து நிற்கிறேன்.. இனியும் நம்ப நானொன்றும் முட்டாளில்லை..”
“இதில எனக்கு விருப்பமில்லை அஞ்சனா..”
“உங்க தங்கைக்கு விருப்பமாமே.. நீங்க அவளுக்காக எதையும் செய்யும் அண்ணனாச்சே..”
அஞ்சனாவின் கை தனது கன்னத்தை தடவிக் கொண்டது..
“அதுவும்.. இதுவும் ஒன்னில்லை அஞ்சனா..”
“எனக்கொன்னும் எந்த வித்தியாசமும் தெரியலை.. உங்க தங்கைக்காக எத்தனையோ செய்திட்டீங்க.. இதைச் செய்ய மாட்டீங்களா..?”
அவளும் இரக்கமில்லாமல் விலகிப்போய் விட்டாள்..
இப்படி ஒரேயடியாய் தங்கையும், காதலியும் அவன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் கை கழுவி விட்டார்களேயென்று அவன் நொந்து போய் சதிஷிடம் புலம்பினான்..
“என்கிட்டப் பேசாதேப்பா..” என்றான் அவன்..
“ஏன் சார்..?”
“நானும் உமாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு.. காதலை வாழ வைச்சவங்க.. உன்கூட சேர்ந்தா அந்தக் காதல் எங்களை கோவிச்சுக்கும்ன்னு உமா கோபப்படறா..” அவன் கழன்று கொண்டான்..
“இதுவேறா..?” பிரதாப் நொந்து.. நொந்து நூலாகிப் போனான்.. அவன் முன்னால் தப்பிக்கும் மார்க்கம் தெரியாததினால் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டான்.
பிரம்மநாயகம் குறிப்பிட்ட அந்த நல்லநாளும் வந்தது.. வேறு வழியின்றி அந்த அபார்ட்மெண்டில் குடியிருந்த மற்ற ஐந்து குடும்பத்தாரும் கலந்து கொண்டார்கள்.. அழுது வீங்கியிருந்த அஞ்சனாவின் முகத்தை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.. அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்த ப்ரீதியிடம்..
“இந்த கல்யாணம் நடக்காது ப்ரீதி.. நான் இந்த நிச்சயத்தை நிறுத்திடுவேன்..” என்றான் பிரதாப்..
“அண்ணனாடா நீ..” ப்ரீதி முறைத்தாள்..
“அதோட.. அஞ்சனாவுக்கு காதலனாகவும் இருக்கேனே..”
“முடிஞ்சா.. இந்த நிச்சயத்தை நிறுத்து பார்ப்போம்..”
ப்ரீதி சவால் விட்டாள்.. நிச்சய தாம்பூலம் மாற்றும் நேரம் வந்தது.. அதைத் தடுக்க பிரதாப் தயாரானான்..
“இவர்தான் மாப்பிள்ளை.. இவரோட ஒன்றுவிட்ட தங்கையான அஞ்சனாவைத்தான் என் மகன் பிரதாப்புக்கு பேசி முடிச்சிருக்கேன்..” என்று பிரம்மநாயகம் சொன்னதும் எல்லோரும் விழிகளை அகல விரித்தார்கள்..
அவர்களை பெருமிதமாகக் பார்த்துக் கொண்டே பிரம்மநாயகம் கோதண்டத்தின் தோள் மீது கை போட்டார்.
“என்ன..? எல்லோரும் முழிக்கறீங்க..? என்னடா.. இவங்க ரெண்டு பேரும் ஜாதிவெறி பிடிச்சவங்களாச்சே எப்படி ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக்கிறாங் கன்னு தானே முழிக்கறீங்க..? அவங்கவங்களோட இனத்தைப் பற்றி உயர்வா பேசினா இனவெறி பிடிச்சவங்கன்னு அர்த்தமாகிடுமா..? எனக்கும் கோதண்டத்துக்கும் இவங்களோட காதல் விவகாரத்தைப் பத்தி தெரிய வந்ததுமே.. நாங்க உட்கார்ந்து பேசினோம். பிரதாப்பைத் தவிர அஞ்சனா வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஒப்புக்கமாட்டா.. வருகிற மாப்பிள்ளைக ளெல்லாம் துரத்தி விட்டுக்கிட்டே இருப்பான்னு தெரிஞ்ச பின்னாலே அஞ்சனாவோட பெயர் கெட்டுப் போயிரும்ன்னு கோதண்டம் பயந்தார்.. ப்ரீதியின் கல்யாணம் முடிந்தால்தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.. நானும் மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கிறேன்னு சொன்னேன்.. அப்பத்தான் அவர் தன்னோட அண்ணன் மகன் சாப்ட்வேர் என்ஜினியரா இருக்கிறார்ன்னு சொல்லி அவனுக்கு ப்ரீதியைக் கொடுக்க முடியுமான்னு பெண் கேட்டார்..
ஒரே பையன், கை நிறைய சம்பளம், ப்ரீதிக்கும் அவரோட கம்பெனியில வேலை வாங்கிக் கொடுக்கப் போகிறார்.. அடுத்த மாதமே அவங்க இரண்டு பேரும் யு.எஸ்.ஏ க்கு பறக்கப் போறாங்க.. இதைவிட நல்ல சம்பந்தம் தேடினாலும் கிடைக்குமா..? ஓ.கேன்னு சொல்லிட்டேன்.. பெண் கொடுத்து பெண் எடுக்கிற இந்த சம்பந்தத்தை நாங்க பேசி முடிச்சிட்டோம்..”
பிரம்மநாயகம் விவரிக்க.. விவரிக்க மற்றவர்களின் முகத்தில் ஆச்சரியத்தின் சாயல் அதிகமாகிக் கொண்டே இருந்தது..
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாம்பூலத்தை மாற்றிக்கங்க..”
அய்யர் குரல் கொடுக்க.. அங்கே இரண்டு திருமணங்களின் நிச்சயதார்த்தமும் இனிதே நடந்து முடிந்தது…
“என்னவோ ஒருத்தன் பெரிய வீரனைப் போல நிச்சயத்தை நிறுத்தியே தீருவேன்னு சபதம் போட்டானே. அவன் எங்கே காணோம்..”
ப்ரீதி கண்களின் மேல் கையைக் குவித்தபடி தேடுவதைப் போல பாவனை செய்தாள்.. அதுவரை கூம்பியிருந்த அஞ்சனாவின் முகம் மலர்ந்தது.. இமைகளை உயர்த்தி பிரதாப்பை விழுங்கி விடுவதைப் போல அந்த பழைய பார்வையினை பார்த்து வைத்தாள்.. பிரதாப் உயிர்த்தெழுந்தான்..
“ஹப்பா.. இந்தப் பார்வையை பார்த்து எத்தனை நாளாச்சு..” அவன் கண்கள் மின்னின..
“என்ன அஞ்சனா.. நீ என்ன நினைச்சுக்கிட்டு இருந்த..?” ப்ரீதி அஞ்சனாவிடம் கேட்டாள்..
“உங்க அண்ணன் பாசமலராச்சே.. தங்கைக்காக காதலைத் தூக்கிதூரப் போட்டுட்டாரோன்னு நினைச்சேன்.” அஞ்சனா தன் மனச்சிணுங்கலை வெளிப்படுத்தினான்..
“நீ வேற.. உனக்காக என்னைத்தான் தூக்கிப் போட்டான்..”
ப்ரீதி தன் பங்குக்கு உருவேற்றிவிட அஞ்சனாவின் காதல் உயிர் பெற்றது..
அடுத்து வந்த மூகூர்த்தத்தில் அஞ்சனாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான் பிரதாப்.. அஞ்சனாவின் பெரியப்பா மகனான அரவிந்தன் ப்ரீதியின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான்.. இரண்டு ஜோடிகளுக்கும் விருந்து ஒன்றைக் கொடுக்க வேண்டு மென்ற முடிவை எடுத்தார்கள் வைசாலி அபார்ட்மெண்ட் வாசிகள்.
“ஹோட்டல் வோணம் நிஷா.. நாமே பிரிப்பேர் பண்ணிரலாம்..”என்றாள் ஸ்ரீதேவி..
“அதுவும் சரிதான்.. பெண் வீடும்.. மாப்பிள்ளை வீடும் விருந்தாளிகள்.. அதனால அவங்க விருந்தை மட்டும் சாப்பிட வரட்டும்.. நாம நான்கு வீடுகளும் சேர்ந்து விருந்தைக் கொடுக்கலாம்..” நிஷா கூறினாள்..
“ஹப்பா.. பரிமளம் ஆன்ட்டியின் வடையடியிலிருந்து தப்பிச்சிரலாம்” லலிதா சந்தோஷித்தாள்…
“ஏம்ப்பா.. எல்லாமே வெஜிடேரியன்தானே..” உமா மகேஸ்வரி அவள் கவலையை வெளிப்படுத்தினாள்..
“நல்ல கதையாய் இருக்கே.. நிஷாவோட மட்டன் பிரியாணியும் லலிதாவோட சிக்கன் வறுவலும் இல்லாத விருந்தா..? அந்த விருந்துக்கா என் மகனும் மருமகனும் வரணும்..?” பரிமளம் சண்டைக்கு வந்தாள்..
“விடுங்க ஆன்ட்டி.. நீங்க சொன்ன இரண்டையும் இவங்க இரண்டு பேரும் ஜமாய்க்கட்டும். வடை, பாயசத்தை நான் பார்த்துக்கிறேன்.. மல்லிகைப்பூப் போல சாதத்தையும், அவியல், கிச்சடியையும் உமா பார்த்துக் கட்டும்” ஸ்ரீதேவி வழக்கை தீர்த்து வைத்தாள்..
“எப்படிடீ..?” என்று ஸ்ரீதேவியின் கணவன் ராமன் ஆரம்பிக்க..
“லலிதா.. நீ டவுனுக்காப் போற..? போகிற வழியில சாரத்தில இருக்கிற எங்க அம்மா வீட்டில என்னை இறக்கி விட்டுட்டுப் போறியா..?” என்று குரல் கொடுத்தாள் ஸ்ரீதேவி..
“விடுடி.. நான் வாயைத் திறக்கவேயில்லை…” ராமன் சமாதானத்திற்கு வந்தான்…
பிரதாப் அஞ்சனாவை சொந்தத்துடன் பார்த்தான். அவள் பின்னால் தெரிந்த வானில் மின்னல் கீற்று வந்தது..
அன்று இரவில் சொந்தத்துடன் அவன் அஞ்சனாவை அணைத்துக் கொண்டபோது அவள் அவன் கைக்குள் அடங்கினாள்.. அதில் பிரதாப்புக்கு திருப்தி வந்தது..
“என்னை என்னன்னு நினைச்ச அஞ்சனா..? தங்கைக்காக உன்னைக் கை விட்டிருவேன்னு நினைச்சியா..?”
“ஊம்…”
“முட்டாள்… உனக்காக அவளைக் கைவிட முடியாதுன்னுதான் நான் சொன்னேன்.. அப்படிப்பட்டவன் ப்ரீதிக்காக.. உன்னை விட்டுக் கொடுப்பேனா..? நீ மின்னலாக என் வாழ்வில் வந்தவடி.. நீயில்லாம என் வாழ்க்கை இல்லை.. உன்னை விட்டுக் கொடுத்து நான் வாழ வேண்டியதில்லை…”
பிரதாப்பின் பேச்சில் அஞ்சனாவின் மனம் அமைதியடைந்தது.. இடி மின்னல் மறைந்து அவள் கண்களில் சந்தோச மின்னல் வந்தது…
– முற்றும் –
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.