Chapter 06

0Shares

பூக்கள் சொறிவதைப் போல மழை பூச்சாரலாய் சொறிந்து கொண்டிருந்தது.. அடித்துக் கொட்டிய மழை வேகம் தணித்ததில் ‘அப்பாடா’ என்ற ஆறுதல் தோன்றி விடவில்லை சசிரேகாவிற்கு..

தலைக்கு மேல் வெள்ளம் போய் கொண்டிருக்கிற போது இனி சாண் போனால் என்ன.. முழம் போனால் என்ன.. என்ற விரக்தி மனநிலையில் அவள் இருந்தாள்..

“மழை நின்னுருச்சு.. தூறல்தான்..”

அதே கிசுகிசுப்பான தொனியில் அவன் சொல்லி வைத்தான்.. அந்தத் தொனி சசிரேகாவின் ஆழ்மனதை உசுப்பியதில்..

‘இதைக்கூட ரகசியமாகத்தான் சொல்லித் தொலைக்கனுமா..?’ என்று அவள் எரிச்சலடைந்தாள்..

“மழை நேரமே ஒரு சுகம்தான்..”

அனுபவித்து ரசித்து அவன் சொன்ன விதத்தில் ஈர்க்கப்பட்டாள் சசிரேகா.. அவன் பேசிய அனைத்துமே அவளை ஈர்க்கத்தான் செய்தன.. என்ன பேசுவது என்று வார்த்தைகளைத் தேடாமல்.. ஏதாவது ஒன்றைப் பற்றி வார்த்தைகளைக் கோர்த்து அவன் பேசும் விதம் அலாதியான ஒன்றாக இருந்தது.. மழையிலிருந்து.. அந்த இரவு நேரத்துப் பயணம் வரை அத்தனையையும் அவன் ரசித்துச் சொன்னான்..

அதுபோன்ற ஆழ்ந்த உரையாடல்களை அவள் செவி மடுத்ததில்லை..

சின்னஞ்சிறு வயதில் ரங்கசாமியும், தாரிணியும் அவளைக் கொஞ்சிப் பேசிய இதமான உரையாடல்கள் பசுமரத்தாணி போல அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தன.. அவற்றில் அன்பும் பாசமும் கொட்டிக் கிடந்தன.. ஆழ்ந்த உரையாடல்கள் இல்லை.. சின்னஞ் சிறுமியிடம் ஆழ்ந்து உரையாட முடியுமா..? கொஞ்சத் தானே முடியும்..?

எட்டு வயதுக்குப் பின்பு அவள் வாழ்வில் உரையாடல்களே இன்றி தொலைந்து போய் விட்டன.. அங்குசாமி மனைவி, மகள்களுடன் உரையாடுவார்.. சசிரேகாவை ஒரு மனிதஜீவனாக நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்.. பானுகீதாவைப் பற்றியும் அவள் 

பெற்ற அருமந்தப் புதல்விகளைப் பற்றியும் சொல்லவே வேண்டியதில்லை.. வேலை ஏவ மட்டுமே அவள்.. கூடிப்பேச இல்லை.. என்ற மனோபாவத்துடன் அவர்கள் இருந்தார்கள்..

பள்ளியில் பழகும் சிநேகிதிகள் பேச வருவார்கள்.. சசிரேகா ஒதுங்கிப் போய் விடுவாள்.. பள்ளிக்கூடத்திற்குச் சென்றோமா.. வாயை மூடிக்கொண்டு படித்தோமா என்றிருக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு கூடப் படிக்கும் பிள்ளைகளிடம் வீட்டில் நடப்பதைச் சொல்லி வைத்தால் கால் முறிக்கப்படும் என்று சசிரேகாவை பானுகீதா அரட்டி வைத்திருந்தாள்.. கால்கள் முறிவதைப் பற்றிக்கூட சசிரேகா கவலைப்படவில்லை.. அப்படி நடந்து விட்டால் பள்ளிக்கூடம் செல்ல இயலாதே என்று வாயிருந்தும் ஊமையாக மௌனித்து விடுவாள்..

‘அப்படிப் போராடி படித்த படிப்பு இது..’ சசிரேகாவின் மனம் விம்மியது..

எதற்காக அவள் படித்தாள்..? கல்வியும், கல்வி மூலமாக கிடைக்கும் தன்னம்பிக்கையும், வேலையும் அவளை சிறை மீட்டு விடும் என்ற நம்பிக்கையில்தானே படித்தாள்..? அது நிகழ்ந்ததா..? படித்த படிப்புக்கு வேலை கிடைத்தது.. அவளும் அங்குசாமியின் வீடு என்ற சிறையிலிருந்து விடுபட்டு தன் காலில் நின்றாள்.. என்ன பிரயோசனம்..? இதோ.. நன்றிக்கடன் என்ற போர்வையில் அவளை மறுபடியும் அங்குசாமி சிறைபிடித்து விட்டாரே..

“நெஞ்சுக்குள் பெய்திடும்..

மாமழை..!”

காரின் சிடி பாடியது.. தூக்கக் கலக்கத்தில் இருந்த வத்சலா அந்தப் பாட்டைக் கேட்டதும் லேசாக கண் திறந்து பார்த்து விட்டு இமைகளை மூடிக் கொண்டாள்..

‘இவள் ஒருத்திதான் நான் பேசினாலும் பேசாட்டியும் அதைப்பத்திக் கவலைப் படாம லொடலொடன்னு வாயடிப்பா..’ சசிரேகா நெகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டாள்..

சசிரேகா பதில் சொல்கிறாளா இல்லையா என்று வத்சலா கவனிக்கவே மாட்டாள்.. ஒதுங்கிப் போகிறவளை இழுத்து வைத்துப் பேசுவாள்.. காலப் போக்கில் நத்தை 

தன் கூட்டிலிருந்து வெளியே வருவதைப் போல சசிரேகாவும் தனது மௌனக் கூட்டிலிருந்து வெளியே வந்தாள்.. வத்சலாவுக்கு இணையாக பேசிப் பழக ஆரம்பித்தாள்..

“இப்படி வாயடிக்கிறவ எதுக்காகடி ஊமை வேசம் போட்ட..?” வத்சலா ஆற்றாற்றுப் போவாள்..

அவளும் கூட ஆழ்ந்த பேச்சுக்களைப் பேச மாட்டாள்.. அதை சசிரேகாவிற்கு முதன் முதலாக உணர்த்தியவன் அவன்தான்..

“அருமையான பாட்டில்ல..?”

ரகசியக் குரலில் சிலாகித்த அவன் சிலாகிப்பு அவளையும் உடன் சிலாகிக்கச் சொல்லி அழைத்தது..

‘இது ஒன்னுதான் குறைச்சல்..’ வேதனையில் வெம்பியது சசிரேகாவின் மனம்..

அவளை மீளாச் சிறையில் தள்ள அழைத்துப் போகிறவன் எதற்காக ரகசியப் பார்வைகளும்.. ஆழ்ந்த உரையாடல்களுமாக அழைத்துப் போக வேண்டும்..?

“பசிக்குது.. நைட் டிபனை இந்த டவுனில் முடிச்சுரலாமே..”

அபிப்ராயம் கேட்காமல் முடிவாக அவன் சொல்லியதில்.. இதை எதற்காக என்னிடம் சொல்கிறாய் என்று அவனை முறைத்தாள் சசிரேகா.. அவளுடைய அபிப்ராயம் தேவையே இல்லையா..?

“இல்லை.. இதற்கடுத்து பெரிய டவுனா எதுவும் இல்லை.. சின்ன ஊர்களிலும் ஹோட்டல்களை இழுத்து மூடியிருப்பாங்க.. ராத்திரி பத்து மணியாகிருச்சு.. இங்கே விட்டா எங்கேயும் நைட் டிபன் கிடைக்காது..”

அவளது முறைப்பிற்கு தழைந்த குரலில் அவன் விளக்கம் சொன்னது ஏதோ ஒரு வகையில் அவளைச் சமாதானப் படுத்தியது..

“எனக்குப் பசிக்கலை..” என்றாள்..

“இவங்களுக்குப் பசிக்காதா..?”

அவன் வத்சலாவை கை காட்டியதை அவள் விரும்பவில்லை..

“அவ்வளவு அக்கறையிருந்தா இவளை எழுப்பிச் சாப்பிடக் கூப்பிட்டுக்கிட்டுப் போங்க..” சிடுசிடுத்தாள்..

அவன் நிதானமாக அவள் முகத்தை ஊன்றிப் பார்த்தான்.. ஓட்டலின் முன் பக்க விளக்குகளின் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் அவனுடைய துளைக்கும் பார்வை அவள் முகத்தை மொய்த்து மனதுக்குள் இறங்கி வைத்தது..

‘இப்படிப் பார்த்துத் தொலைக்காதே..’ அவளுக்கு அழுகைவந்தது..

உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டவளைப் பார்த்தவனின் புருவங்கள் சுருங்கின.. ஏதோ சொல்ல வாயெடுத்தவன் தலையைக் குலுக்கிக் கொண்டு வேறு சொன்னான்..

“அக்கறைதான்.. நீங்க சாப்பிடலைன்னா இவங்களும் சாப்பிட மாட்டாங்கங்கிற அக்கறைதான்..”

அவனது ஆழ்ந்த பார்வை அவளை அள்ளி உண்டது.. வத்சலாவை முன்னிருத்தி அவளை சாப்பிட அழைக்கும் அவனது யுக்தி புரிந்ததில் அவள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்..

அவனது அக்கறை சசிரேகாவின் மீதானது என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் அவன் பார்வையைச் சந்திக்கும் சக்தி சசிரேகாவிற்கு இல்லை..

அதற்குள் காரின் ஓட்டம் நின்று போனதை உணர்ந்தவளாய் கண்களை கசக்கியபடி விழித்துப் பார்த்தாள் வத்சலா..

“என்னாச்சுடி.. டயர் வெடிச்சுருச்சா..?” சந்தோசமாக விசாரித்தாள்..

“இல்லை..” எரிச்சலுடன் சொன்னாள் சசிரேகா..

“ம்ப்ச்.. ரயில் பயணம் போல கார் பயணமும் புட்டுக்குச்சோன்னு சந்தோசப்பட்டுப் போனேன்.. அதுவும் இல்லையா..? என்னடி வரம் வாங்கிப் பிறந்திருக்க..? டயர் வெடிக்கலைன்னா எதுக்காக கார் நின்னிருக்கு..? கார் ஓடினாத்தானேடி தொட்டிலில படுத்திருக்கிறதைப் போல நான் ஜாலியாத் தூங்கிக்கிட்டே வர முடியும்..?”

“உனக்கு உன் பிரச்னை..!”

தப்பிக்க முடியாத பிரச்னையில் மாட்டியிருந்த சசிரேகா பொறாமையுடன் சொன்னாள்..

“உன் பிரச்னையை ‘உஃப்’ன்னு ஊதறதுக்கு ஒரு வழி சொல்றேன் கேட்கிறயா..?”

“வேண்டாம்..”

“இப்படிப் பிடிவாதமா கண்ணைக் கட்டிக்கிட்டு மலையுச்சியில இருந்து குதிச்சுத்தான் தீருவேன்னு நீ ஒத்தைக் காலில நின்னா நான் என்னடி பண்றது..?”

“எதுவும் பண்ண வேண்டாம்.. ஹோட்டலில வந்து நைட் டிபனைக் கொட்டிக்க..”

“இது பேச்சு..”

காரை விட்டு இறங்கினாள் வத்சலா.. லேசான தூறலை கை நீட்டி ஏந்தியபடி ஹோட்டலை நோக்கி நடந்தாள்.. காரை விட்டு இறங்காமல் உட்கார்ந்திருந்தாள் சசிரேகா.. அவளுக்காக கார்கதவை திறந்து விட்ட ‘அவன்’ குனிந்து காருக்குள் பார்த்து..

“வாங்க..” என்றான்..

‘வேறு வழியில்லை..’ பெருமூச்சுடன் காரை விட்டு இறங்கிய சசிரேகா காருக்குள் ஏறும்போது தடுமாறியதைப் போல தடுமாறி விழப் போனாள்..

“பார்த்து..” சட்டென அவளை அவன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்..

காரில் ஏறும் போது தாங்கிப் பிடித்ததை விட இந்தப் பிடி இறுக்கமான பிடியாக இருந்தது.. அவளது இடையில் ஓர் கரத்தைக் கொடுத்து.. மறுகரத்தால் அவள் தோளைப் பற்றி இழுத்தவன் அணைத்துக் கொண்டதில் சசிரேகா மூச்சுத் திணறி விட்டாள்..

அவள் அதை எதிர்பார்க்கவில்லை.. ஓர் ஆண்மகனின் நெருக்கமான முதல் ஸ்பரிசம்..!

அவளது உடல் நடுங்கியது.. அவனிடம் உணர்ந்த இதமான நறுமணம் அவளது நாசியை வருடி நுழைந்ததில் அவள் கிறங்கிப் போனாள்.. அவளது இடையில் அழுந்தப் பதிந்திருந்த வலிமையான அவனது கரத்தின் வெப்பம் அவளது உடலுக்கு இடம் மாறியது..

சாலையில் சென்ற பஸ் ஒன்றில் கேட்ட பேச்சுக்குரலில் தன்னுணர்வுக்கு மீண்ட சசிரேகா அவசரமாக விலகிக் கொண்டாள்.. அவனது தொடுகையில் அவளுக்குள் மூண்டு விட்டிருந்த மோகத்தீ அவளை பொசுக்க ஆரம்பித்திருந்தது.. உல்லாசமான அவனது உரிமைப்பார்வை கட்டிக் கொண்டவனைப் போல சொந்தம் பாராட்டியதில் அவள் வெகுண்டாள்..

‘எவ்வளவு தைரியமிருந்தா இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக கூப்பிட்டுக்கிட்டுப் போகிற பொண்ணை இவன் கட்டிப் பிடிப்பான்..?’

விருவிருவென அவள் வத்சலாவிடம் போய் விட்டாள்.. நிதானமாக அவர்களை நெருங்கி வந்தவனின் பார்வை ஏதோ ஓர் செய்தியைச் சொன்னது.. என்ன அது என்று மனம் குழம்ப முடியாமல் சற்று முன் நடந்த ஆலிங்கனத்திலேயே மனம் லயித்திருந்ததில் சசிரேகா அவன் முகம் பார்க்காமல் உள்ளே நடந்தாள்..

“என்ன வேணும்..?”

தனித்த ஏஸி ஹாலில் உட்கார்ந்தவன் சசிரேகாவைப் பார்த்துக் கேட்டான்.. அவள் எவருக்குக் கொடுக்கப்படும் விருந்தோ என்று விட்டத்தைப் பார்த்தாள்.. என்னைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் களத்தில் நான் இறங்குவேன் என்று வத்சலா..

“மெனு கார்டு எங்கே..?” என்று தேடினாள்..

“இதோ.. இங்கே இருக்கு..”

அப்போதும் அந்த மெனுகார்டை சசிரேகாவிடம் தான் அவன் நீட்டினான்.. அவள் வாங்கிக் கொள்ளாமல் முறைக்க.. வத்சலா அதைப் பறித்தாள்..

“நான் வெஜ் ஹோட்டல்தானே..?” அவனிடம் கேள்வி வேறு கேட்டாள்..

“மெனு கார்டைப் பார்த்தீங்கன்னா தெரிஞ்சுருமே..” முகம் மாறாமல் அவன் சொன்னான்..

“இந்த சிச்சுவேசனில உனக்கு நான்வெஜ் அயிட்டம் கேட்குதா..?” கொதித்தாள் சசிரேகா..

“ஏன்..? இந்த சிச்சுவேசனுக்கு என்ன..?”

அவன் புருவங்களைச் சுருக்கியதில் அவனுடைய முன்னுச்சி முடியைப் பிடித்து இழுத்து நான்கு அப்பு அப்பினால் என்ன என்ற வெறி கிளர்ந்தது சசிரேகாவுக்கு..

‘பாவி.. ரயில் நின்னு போச்சு.. நானென்ன செய்வேன்னு தப்பிக்க வழியில்லாம தேடி வந்து கடத்திக் கிட்டு வர்றவன் கேட்கிற கேள்வியைப் பாரு..’

“அதானே..” வத்சலாவும் அவனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டாள்..

“உனக்கு நான்-வெஜ்ஜை வெட்டியாகனும்.. அதுக்கு என்ன வேணும்னாலும் சொல்லுவ..” என்ற சசிரேகா அவளுக்கு இரண்டு இட்லிகளை மட்டும் ஆர்டர் செய்தாள்..

அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத வத்சலா மெனுகார்டில் அச்சடிக்கப் பட்டிருந்த ஒவ்வொரு அயிட்டத்திலும் ஒரு ‘பீஸ்’ கொண்டுவரச் சொல்லிக் கொண்டிருந்தாள்..

அதிசயத்திலும் அதிசயமாக அவனும் சசிரேகாவைப் போல இரண்டு இட்லிகளுன் நிறுத்திக் கொண்டான்..

“ஏன் சார்..?” என்ற வத்சலாவிடம்..

“ஹெவியா சாப்பிட்டா டிரைவ் பண்ண முடியாது..” என்று விளக்கம் சொன்னான்..

ஆனால் அவன் சசிரேகாவைப் பார்த்த பார்வை நீ எவ்வழியோ.. நானும் அவ்வழி என்றது..

சசிரேகாவுக்குள் இதமான இம்சை கிளர்ந்தது..

இரண்டு இட்லிகளைப் பிட்டுப்பிட்டு.. என்னவோ இருநூறு இட்லிகளைச் சாப்பிடுவதைப் போல படு நிதானமாக சசிரேகா மென்று கொண்டிருக்க.. அந்த ஹோட்டலில் தயாராகியிருந்த அத்தனை அசைவ பதார்த்தங்களிலும் ஒரு பிளேட்டை ருசி பார்த்து உள்ளே தள்ளி ஏப்பம் விட்ட வத்சலா கை கழுவ எழுந்து விட்டாள்..

“இன்னுமாடி சாப்பிடற..?”

வேற்றக்கிரகவாசியைப் பார்ப்பதைப் போல விசித்திரமாக வத்சலா பார்த்த விதத்தில் மீதமிருந்த இட்லியை ஒரே வாயில் உள்ளே தள்ளி விட்டு எழுந்தாள் சசிரேகா..

காருக்குத் திரும்பியபோது வத்சலா அடம் பிடித்தாள்.. 

“பாருடி சசி.. டிரெயின்னா பர்த் இருக்கும்.. நிம்மதியாத் தூங்கிக்கிட்டுப் போகலாம்ன்னு பார்த்தேன்.. அதுக்கு வழியில்லாம இவர் காரில தூக்கிப் போட்டுக்கிட்டு வந்துட்டார்..”

“அதுக்கு..?”

“பகல்ல டிராவல் பண்ணினாலே எனக்குத் தூக்கம் சொக்கும்.. இந்த லட்சணத்தில நைட் டிராவல் வேற.. கேட்கணுமா..? நான்வெஜ் அயிட்டங்கள் உள்ளே தள்ளினதில நீட்டி நிமிர்ந்து படுத்துத் தூங்கச் சொல்லி என் உடம்பு கெஞ்சுதுடி..”

“என்னதாண்டி சொல்ல வர்ற..?”

“நான் பின்சீட்டில படுத்துத் தூங்கிக்கிட்டே வருவேனாம்.. நீ சமத்தா முன் சீட்டில உட்கார்ந்துக்கு வியாம்..”

சசிரேகாவின் பதிலை எதிர்பார்க்காமல் வத்சலா காரின் பின் சீட்டில் கட்டையை சாய்த்து விட்டாள்.. செய்வதறியாமல் நின்ற சசிரேகாவிற்கு காரின் முன்பக்கக் கதவை திறந்து விட்டான் அவன்.. சசிரேகா நடுக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.. அவனுடைய கள்ளச் சிரிப்பும்.. சங்கேதம் கலந்த பார்வையும் அவளை ஏதோ செய்தன.. பின் சீட்டில் இருந்த போதே அவளுக்குள் மோகக் கனலை மூட்டி விட்டவன் அவன்.. பக்கத்திலேயே உட்காரப் போகிறாள் என்ன நடக்கப் போகிறதோ..

படபடக்கும் மனதோடு உட்கார்ந்தவளின் மீது அவனது விரல்கள் உராய்ந்து மீண்டன.. பற்றிக்கொண்ட மோகத்தீயில் அவள் போராடிக் கொண்டிருக்க அவன் எதுவுமே நடக்காததைப் போலச் சன்னமான விசிலுடன் காரைக் கிளப்பினான்..

என்னதான் அவள் ஒடுங்கி உட்கார்ந்தாலும் அவன் ஹேண்ட் பாரை வளைக்கும் சாக்கில் அவள்மீது பட்டுக் கொண்டே இருந்தான்.. ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் ஒடுங்க முடியவில்லை.. அவள் மனதுக்குப் பிடித்ததைப் போன்ற உருவம் கொண்ட ஆண்மகனின் ஸ்பரிசத்தை அவள் மனம் விரும்பி வரவேற்கத் தொடங்கி விட்டது..

மூண்டு விட்ட மோகத்தீயில் அவள் விழுந்து விட்டாள்.. அவள் தேகத்தின் மீது அவனது முழங்கை அழுந்தி உராய்ந்த அந்த நொடிகளில் கிளர்ந்தெழுந்த அவள் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கண்மூடி சரிந்தாள்..

“ஏதோ மோகம்.. ஏதோ தாகம்..

நேத்து வரை நினைக்கலியே..

ஆசை விதை மொளைக்கலையே..

சேதி என்ன..? வனக்கிளியே..!”

காரில் ஒலித்த பாடல் அவளது மோகம் தூண்டப்பட்டது.. இப்போது அவனது முழங்கை தைரியமாக அவளது இடுப்புப் பிரதேசத்தில் ஊன்றி அழுந்தியது.. சசிரேகா துடித்துப் போனாள்.. விலகவும் முடியாமல்.. அவன்மீது சரியவும் முடியாமல் தத்தளித்தாள்..

அங்குசாமியின் வீட்டில் அகதியாக அவள் வளர்ந்த காலத்தை மறந்தாள்.. நன்றிக்கடன் என்ற பெயரில் அவளை மீளாச்சிறையில் தள்ளிவிட அவர் அழைத் திருப்பதை மறந்தாள்.. அதற்காகத்தான் அவன் அவளை அழைத்துக் கொண்டு போகிறான் என்பதையும் மறந்தாள்.. விடிந்தால் ஊர், பெயர், முகம் தெரியாத ஒருவனுக்கு அவள் கழுத்தை நீட்டப் போகிறாள் என்பதையும் மறந்தாள்..

அவளை கொன்று தின்று கொண்டிருந்த மோகத்தீயில் அனைத்தையும் மறந்துவிட்டு சசிரேகா அமிழ்ந்து விட்டாள்..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link