Chapter 07
பாலைவனத்தின் சுடு மணலில் நடந்து கொண்டிருப்பவளின் கண் முன்னால் குளிர் நிழல் நிரம்பிய பாலைவனச்சோலை தென்பட்டால் அவள் என்ன செய்வாள்..? இளைப்பாற மாட்டாளா..?
சசிரேகாவும் அதைத்தான் செய்தாள்.. அவளுக்காக காத்திருக்கும் காராக்கிருகத்தை மறந்து இதமான மோகத்தீயில் இளைப்பாற முயன்றாள்..
காரின் வேகம் குறைந்தது.. அவன் அவளது தோளில் தலை சாய்த்தான்.. அவனது வெப்ப மூச்சுக்காற்றில் அவளுடைய ஈர மூச்சுக் காற்று நடுநடுங்கியது..
“தாழம்பூவு ஈரமாச்சு..
தலையில் சூட நேரமாச்சு..
சூடுகண்டு ஈரமூச்சு
தோளைச் சுத்தக் காயமாச்சு..”
அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் மென் சிரிப்புடன் தலையை விலக்கிக் கொண்டதில் அவளது தேகம் அதிர்ந்தது.. காரை ஓட்டியபடி அவன் அவளையே பார்த்தான்.. இருளிலும் ஊடுறுவிய அவனது லேசர் பார்வையில் அவள் கிளர்ந்தாள்.. அவனது பார்வைக்கு பதில் பார்வையை அளிக்காமலிருக்க அவளால் முடியவில்லை..
மௌனம்..! வார்த்தைகளற்ற மௌனம்..! வார்த்தைகள் தேவைப்படாத மௌனம்..!
இதுபோன்ற தருணங்களும் தன் வாழ்வில் வரக்கூடும் என்று அன்றுவரை அறிந்திராத அவளது பிஞ்சு மனம் அவனது அண்மையில் தான் பெண் என்பதை உணர்ந்தது..
“பார்வையாலே நூறு பேச்சு..
வார்த்தை இங்கே மூர்ச்சையாச்சு..
போதும்.. போதும்.. காமதேவனே..!
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே..”
பாடல் பரிந்துரை செய்தாலும் காமதேவன் அதைக் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை.. மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் அவள் நெஞ்சினில் தாக்கின.. அவன் காரை ஓட்டியபடி அவளது தோளைச் சுற்றிக் கை போட்டு இறுக்கிக் கொண்டான்.. சசிரேகா விலக மனமில்லாமல் அவன் தோள்மீது சாய்ந்து விட்டதில் அவன் குனிந்து அவளது உச்சந்தலையில் முத்தம் பதித்து விட்டான்..
‘ஹ..!..’ மோகத்தீயின் சுழற்சி சுழன்று எழுந்து சசிரேகாவின் மீது வீழ்ந்தது..
“பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து..?
நெஞ்சுக்குள்ளே சாரக்காத்து..
தொட்டபாகம் தொட்டுப் பார்த்து
சாய்வதென்ன கண்கள் பூத்து..”
இதமான இன்னிசை அந்த இரவுப் பொழுதின் மோகத்தை அதிகரித்து வைத்தது.. பின்சீட்டில் படுத்திருந்த வத்சலா சீரான சுவாசத்துடன் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து விட்டிருந்தாள்.. இப்போது அவளது தூக்கத்தைப் பார்த்து சசிரேகா பொறாமைப் படவில்லை.. நிம்மதியடைந்தாள்.. எந்தவித இடையூறும் இல்லாமல் அவனது கரம் அவளது தோள் தடவி இறங்கி கன்னங்களை வருடியதில் கிறங்கிப் போனவளாக கண்களை மூடிக் கொண்டாள்..
“அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து..
தலைக்கு மேலே தண்ணி ஊத்து..
விடியச் சொல்லிக் கோழி கூவுது..
இந்த வேளையில் நெஞ்சு தாவுது..”
சசிரேகாவின் மனம் குழுங்கியது.. விடியச் சொல்லிக் கோழி கூவுது என்ற வரியில் நிலைத்தவள் சட்டென்று விலகி அமர்ந்தாள்.. அவன் முகம் சுளித்தான்..
“என்ன..?”
விலக்கத்தை விரும்பாத வேட்கையின் கோபம் அவனது குரலில் ததும்பியது..
“வேண்டாம்..”
“ஏன்..?”
அவள் சினத்துடன் அவனைப் பார்த்தாள்.. அவளை கொன்றுதின்று கொண்டிருந்த மோகத்தைத் தூண்டி விட்ட அந்த இரக்கமில்லாத அழகிய அசுரனை வெறித்தாள்..
“ஏனா..? உங்களுக்குத் தெரியாதா..?”
வத்சலாவிற்கு கேட்டு விடக்கூடாது என்று அடிக்குரலில் சீறினாள்.. அவனும் அதைப் போலவே பதிலுக்கு சீறினான்..
“தெரியலை..”
“தெரியாது… எப்படித் தெரியும்..? நீங்க ஆம்பளையாச்சே..” அவள் குமுறினாள்.
“ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் மனசுங்கிறது ஒன்னுதான்..”
“மனசைப் பத்தி நீங்க பேசக்கூடாது..”
“ஏனாம்..?”
“உங்களுக்கு அந்தத் தகுதியில்லை..”
“அதுதான் ஏன்னு கேட்கிறேன்..”
“மனச்சாட்சி இருக்கிறவங்கதான் மனசைப் பத்திப் பேசனும்..”
“எனக்கு மனச்சாட்சி இல்லேங்கறியா..?”
அவன் மரியாதையைக் கைவிட்டு ஒருமையில் கேள்வி கேட்டதில் மனம் சுணங்கிப் போனாள் சசிரேகா.. இது அவள் கொடுத்த தைரியத்தினால்தானே..
“உங்களைச் சொல்லிக் குற்றமில்லை..”
“உன்னைச் சொல்லியும் குற்றமில்லை.. இன்னும் சொல்லப் போனா இதில் குற்றம்ன்னு எதுவுமே இல்லை..”
“என்னது..?”
அவள் வெறி பிடித்தவளைப் போல விதிர்த்துப் பார்த்ததில் அவன் பேசாமல் காரை ஓட்ட ஆரம்பித்தான்.. ஜன்னல் பக்கமாக உடலைச் சுருக்கி ஒடுங்கிக்
கொண்டாள் சசிரேகா.. அவளைப் பார்க்காமல் அவன் காரை ஓட்டுவதில் மட்டுமே கவனமாக இருந்ததும் அவளை பாதித்து வைத்தது..
‘இவ்வளவுதானா..?’ மனம் முரண்டியது..
ஒருகடுமையான வார்த்தையில் அவன் விலகிப் போய் விடுவானா..?
லேசாக முகம் திருப்பி அவனை அவள் பார்த்த அதே நொடியில் அவனும் அவளைப் பார்த்து வைக்க அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள் சசிரேகா.. அவன் முகத்தில் தவழ்ந்த இளநகையை மெல்லிய வெளிச்சம் கலந்த அந்த இருளில் கண்டு கொண்ட சசிரேகாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது..
‘என்னைப் பத்தி என்னன்னு நினைப்பான்..’ லஜ்ஜையில் கண்கலங்கி விட்டாள் சசிரேகா..
“சசி..” மென்மையாக அழைத்தான் அவன்..
அவள் பெயரைச் சொல்லி அவன் அழைத்ததில் அவளுக்குள் திரும்பவும் மோகம் வந்து உட்கார்ந்தது..
“ம்ம்ம்…” அவளையுமறியாமல் முணுமுணுத்து விட்டாள்..
“எதுக்கு இந்தக் கோபம்..?”
“நீங்க என் மனசை பலவீனமாக்கறிங்க..”
“ஹா..ஹா..”
“அதில் குளிர் காயப் பார்க்கறிங்க..”
“ஈஸிட்..?”
மிகப்பெரும் நகைச்சுவையை அவள் சொல்லி விட்டதைப் போல ரசித்துக் கேட்டவன் அவள் பக்கமாக சரிந்தான்.. அவன் மீது இருந்த அவனுடைய பிரத்யேக நறுமணத்தை நுகர்ந்தவளின் மனம் மயங்கித் தடுமாறியது..
“ஆக்சுவலா சசி.. இந்தக் குற்றச்சாட்டுக்களை யெல்லாம் நான்தான் உன்னைப் பார்த்துக் சொல்லனும்..”
“வாட்..?”
“யெஸ் மை டியர்..! நீதான் என்னைப் பலவீன மாக்கற.. நிமிர்ந்து நிற்கிற நான் உன்னைப் பார்த்ததும் ‘எண்ணிக்க’ன்னு சொல்லி தோப்புக்கரணம் போடற அளவுக்கு வந்திருக்கேன்னா நீ எந்த அளவுக்கு என்னை ‘அபெக்ட்’ பண்ணியிருக்கேன்னு நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கனுமா..?”
“சும்மா எதையாவது பேசனும்னு பேசக்கூடாது..”
“இல்லேங்கிறதை உன் மனசு சொல்லும்.. நான் பேசறதெல்லாம் உண்மைன்னு உனக்கே நல்லாத் தெரியும்..”
“ம்ப்ச்..”
“எதுக்கு இந்த அலுப்பு..?”
“விடிஞ்சாக் கல்யாணம்.. இப்ப லவ் டயலாக்கா..?”
சசிரேகா தன்நிலைமையை தனக்குத்தானே நினைவு படுத்திக் கொண்டபடி அவனுக்கும் நினைவூட்டினாள்.. அவனோ அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல்..
“ஸோ வாட்..?” என்று கேட்டுவைத்தான்..
“ஸோ வாட்டா..?” சசிரேகாவுக்கு கோபம் வந்து விட்டது..
ஏன் சொல்ல மாட்டான்..? கொட்டுகிற மழையில் அவனைப் போன்ற கண்ணியவானை நம்பி காருக்குள் ஏறியிருக்கிறாளே.. அப்படிப்பட்ட முட்டாளைப் பார்த்து அவன் இதுவும் சொல்வான்.. இன்னமும் சொல்வான்..
“மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கத்தான் செய்யும்..” கோபத்தில் மூச்சிரைத்தாள்..
“ஊஹீம்..?” அவன் புருவங்களை உயர்த்தியது எதிரே வந்த காரின் வெளிசத்தில் தெரிந்து அவளை இம்சையுடன் வசீகரித்தது..
“மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டுமில்லை.. என் வீட்டுத் தோட்டத்தோட மல்லிகையும் மணக்கத்தான் செய்யும்..”
“என்ன ஒரு கண்டுபிடிப்பு..!”
“இந்தக் கண்டுபிடிப்போட தூண்டுதலே நீதான்.. அதனால் எல்லாக் கிரெடிட்டும் உனக்கே உனக்குன்னு வைத்துக்க..”
“அதுக்கென்ன.. சார் சொல்லிட்டா அப்பீல் ஏது..? சாரு யாரு..?”
அவளது கிண்டல் கலந்த கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் இருந்த தீட்சண்யத்தில் அவள் குழம்பிப் போனாள்.. விசித்திரமான வகையில் அவனது பார்வை அவளிடம் ஏதோ சேதி சொல்ல முயன்று கொண்டிருந்தது..
“நான் யாருன்னு உனக்குத் தெரியுமா..?”
“ஏன் தெரியாது..? நம்பிக் காருக்குள்ள ஏரியிருக்கிறவ மனசைக் கலைக்கப் பார்க்கிற புண்ணியவான்..”
“ஓ..! அதான் இந்தக் கோபமா..?”
அவன் இலகுவாக சிரித்து வைத்து அவளது எரிச்சலைக் கிளப்பி விட்டான்.. பேசாமல் காரின் கதவைத் திறந்து குதித்து விடலாமா.. என்று யோசித்தாள் சசிரேகா.. இப்படி கடமைக்கும், மோகத்துக்கும் இடையில் அல்லாட வேண்டிய துன்பமில்லாமல் செத்து விடலாம்..
நினைத்ததை செயல்படுத்த அவள் காரின் கதவைத் திறக்க முயன்றாள்.. அது திறக்கவில்லை..
“எப்படித்திறக்கும்..? இதென்ன அந்தக் காலத்து காருன்னு நினைச்சியா..? லாக் என் கையில் இருக்கு.. நான் நினைச்சாத்தான் நீ வெளியிலகுதிக்க முடியும்..” என்றான் அவன்..
‘நான் மனசில நினைச்சதை இவன் எப்படி கண்டுபிடிச்சான்..?’
பல்லைக் கடித்தபடி அவனை வெறித்தாள் சசி.. அவன் இமை சிமிட்டி சிரித்ததில் அவள் மனதில் மோகம் பொங்கித் ததும்பியது.. அவனைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்போல இருந்தது..
‘வேண்டாம்.. என் உணர்வுகளுடன் விளையாடாதே..’ அவள் உடல் நடுங்கியது..
‘இவன் அனைத்தும் அறிந்தவன்.. என் மனதையும் அறிந்தவன்.. இவனுக்கா எதுவும் தெரியாது..?’
செயல்பட முடியாத துக்கத்தில் அவளுக்கு கண்ணீர் வந்தது.. இதிலிருந்து விடுபட முடியாதா என்று அவள் தவித்துக் கொண்டிருந்தபோது அவளைக் காக்க வந்த ரட்சியாய்..
“ஹாவ்..!” என்ற கொட்டாவியுடன் எழுந்து உட்கார்ந்தாள் வத்சலா..
‘அப்பாடி..’ சசிரேகாவின் மனதில் ஏமாற்றம் கலந்த நிம்மதி பரவியது..
“ஹலோ டிரைவர்..”
விரல் சொடுக்கி வத்சலா அழைத்ததில் சசிரேகாவின் மனதில் தோன்றியது கோபமா இல்லை சந்தோசமா..?
‘இவனைப் பார்த்த நொடியில இருந்துதான் என் மனசு எனக்கே பிடிபட மாட்டேங்குதே..’
சசிரேகாவிற்கு முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.. எதில் முட்டிக் கொள்வது என்று தெரியாமல் அவள் மௌனமானாள்.. அதை அறிந்தவனைப் போல அவன் திரும்பி சசியை மௌனப் பார்வை பார்த்தான்..
“கூப்பிட்டது அவ..” சசிரேகா முகத்தைத் திருப்பிக் கொண்டு சன்னக் குரலில் முணுமுணுத்தாள்..
“தெரியுது..” அவனும் முணுமுணுத்தான்..
“தெரிஞ்சு என்ன பண்ண..? கேட்கனும்..”
“நான் செவிடில்ல..”
அவன் மிதப்பாக சொல்லிக் கொண்டிருந்த போதே அடுத்த சொடக்கொலி வத்சலாவிடமிருந்து கிளம்பியது..
“ஹலோ டிரைவர்..! உங்களைத்தான்..”
அவன் காரின் வேகத்தைக் கூட்டி பின் பக்கம் திரும்பாமல்..
“நான் டிரைவரில்ல..” என்றான்..
“என்னது..? டிரைவரில்லையா..? என்னடி சசி இது.. இவரு இப்படிச் சொல்றாரு..”
“என்கிட்டக் கேட்காதே..”
“பின்னே..?”
“காரை ஓட்டிக்கிட்டு இருக்கிறவர்கிட்டக் கேளு..”
சசிரேகா ரோட்டைப் பார்த்தபடி சொன்னாள்.. அவன் அவளைப் பார்த்தான்.. கூர்மையான அவனது பார்வையில் அவளுக்குள் மோக அலை அடித்துத் தொலைத்தது.. அவள் பல்லைக் கடித்தாள்..
“காரை ஓட்டறவங்க எல்லாம் டிரைவரில்ல..”
“வேற யாராம் வத்சலா..? விஞ்ஞானியா..?”
“யாருக்குடி தெரியும்.. மெய்ஞானியாக் கூட இருக்கலாம்..”
“அப்படிங்கற..?”
“ஆமாங்கறேன்..”
தோழிகள் இருவரும் தாக்கிய தாக்கலை கண்டு கொள்ளாமல் அவன் காரோட்டுவதிலேயே கவனமாக இருந்தான்..
“இது வேலைக்கு ஆகாதுடி சசி..” என்றாள் வத்சலா.
“தெரியுதில்ல.. வாயை மூடிக்கிட்டு வா..”
“அதுக்கு சூடா ‘டீ’ வேணுமே..”
வத்சலா அலுத்துக் கொள்ள அவன் காரின் வேகத்தைக் குறைத்து..
“இதுதான் உங்க பிரச்னையா..! இதை அப்பவே சொல்கிறதுக்கு என்ன..?” என்று கேட்டான்..
“அதுக்குத்தானே உங்களை சொடக்குப் போட்டு ஹலோ டிரைவர்ன்னு கூப்பிட்டேன்..?”
“நான் டிரைவரில்ல..”
“அப்படிங்களா ஆபிசர்..? எங்களுக்குத் தெரியாதுங்க ஆபிசர்.. இனிமே ஆபிசர் உங்களைக் கூப்பிடனும்னா ஆபிசர்.. டிரைவர்ன்னு கூப்பிட மாட்டோம் ஆபிசர்.. ஆபிசர்ன்னே கூப்பிடறோம் ஆபிசர்..”
வத்சலா அடுக்கிய ‘ஆபிசர்’களில் சசிரேகா வாய் விட்டு சிரித்தாள்.. துளைக்கும் அவன் பார்வையில் அவளது சிரிப்பு நின்றாலும் முழுவதும் மறையவில்லை.. வாயைத் துடைப்பதைப் போன்ற பாவனையுடன் சிரிப்பை மறைத்துக் கொண்டாள்..
கார் சாலையோர காபி ஷாப்பருகே நின்றது.. வத்சலா காரை விட்டு இறங்கி நெட்டி முறித்து விட்டு பூஞ்சாரலாய் தூவிக் கொண்டிருந்த மழைச்சாரலில் கை நீட்டி ரசித்தாள்..
“மழை நின்னிருச்சில்ல..”
அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் வானத்தில் மின்னல் வெட்டி இடி இடித்தது.. சடசடவென்று மழை வலுத்ததில் அவள் ஓடோடிப் போய் காபி ஷாப்பிற்குள் அடைக்கலம் புகுந்தாள்.. பின்னால் வந்தவன் அவளைப் பார்த்து சிலாகிப்பாக..
“அருமையான வாய்..!” என்று மெச்சிப் போனான்..
சசிரேகாவுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது..
“நீ என்னடி ஸேம் சைடு கோல் போடற..?” வத்சலா சண்டைக்கு வந்தாள்..
சசிரேகா பதில் சொல்வதற்குள் காபி ஷாப்பிலிருந்த பெரியவர் ஒருவர்..
“ஏம்மா.. வாயை வைத்துக்கிட்டு சும்மா இருக்கலா மில்ல.. அடிச்சுக் கொட்டின மழை இப்பத்தான் கருணை காட்டி நின்னுச்சு.. உனக்கு அது பொறுக்கலையா..? உன்னை யாரும்மா மழை நின்னிருச்சில்லன்னு மகிழ்ந்து போகச் சொன்னது..?” என்று வத்சலாவிடம் சண்டைக்கு வந்தார்..
“தேவைதாண்டி உனக்கு..!” சசிரேகா முணு முணுத்தாள்..
“நான் என்னடி பண்ணினேன்..? நின்னு போன மழையை வா.. வா.. ன்னு நானா வெத்தலை பாக்கு வச்சு அழைச்சேன்..?” அழ மாட்டாத குறையாக வினவினாள் வத்சலா..
“இதை அந்தப் பெரியவர்கிட்டேயே கேளு..”
“எதுக்குடி வம்பை விலை கொடுத்து வாங்கச் சொல்ற..?”
“நீ விலையில்லாமலே வாங்குகிறவளாச்சே..”
பேசியபடியே காருக்கு அருகே வந்த சசிரேகா.. இயல்பாக வத்சலாவுடன் பின் சீட்டில் உட்கார்ந்து விட்டாள்.. அவன் முகம் மாறினான்.. அவளை உறுத்துப் பார்த்தான்.. சசிரேகா கண்டு கொள்ளாமல் வத்சலாவுடன் பேசிக் கொண்டிருப்பதைப் போல பாவனை செய்தாள்.. காரில் ஏறிக் கதவைச் சாத்தியவனின் கோபம் ‘படார்..’
என்ற சப்தத்தில் வெளிப்பட்டது.. வத்சலா அவனைப் பார்த்துவிட்டு சசிரேகாவின் காதருகே ரகசியம் பேசினான்..
“எதுக்குடி கதவைப் போட்டு உடைக்கிறான்..?”
“எனக்கென்ன தெரியும்..? அவன் கிட்டேயே கேளு..”
“கேட்கவா..?”
“கேட்டாலும் சொல்லிட்டுத்தான் வேற வேலை பார்ப்பான்.. அந்த காபி ஷாப்பில நீ இழுத்து வைத்த பஞ்சாயத்தை நினைச்சு காண்டாகிட்டானோ என்னவோ..”
“இவன் எங்கேடி பஞ்சாயத்து பண்ண வந்தான்..? அந்த கிழவன் திட்டறத சந்தோசமா வேடிக்கை பார்த்துக் கிட்டில்ல இருந்தான்..”
“விடுடி.. இவன் காரு.. இவன் உடைச்சுட்டுப் போறான்..”
“அப்ப.. ஆபிசரு டிரைவரில்ல.. காருக்கு ஓனர்ங்கிற..?”
“இருக்கலாம்..”
“அதென்ன ‘இருக்கலாம்’ங்கிற..? தெரியாம எதையும் சொல்லக்கூடாது..”
‘இவனைப் பற்றி எனக்கென்ன தெரியும்..?’
சசிரேகாவின் மனம் கேட்டது.. எதுவும் தெரியாமல் அவன் மீது மோகம் கொண்ட மணித்துளிகளை நினைத்துப் பார்த்த போது அவளது நெஞ்சம் அதிர்ந்தது..
“என்னவோ போடி.. உன்னோட அங்குசாமி பெரியப்பா சரியான ஆளைப் பிடிச்சுத்தான் உன்னைக் கைப்பற்றிக்கிட்டு வர அனுப்பி வைச்சிருக்காரு..”
‘ஆமாம் இவன் என்னைக் கைப்பற்றிக்கிட்டுப் போயி வேற ஒருத்தன் கையைப் பிடிக்க வைக்கப் போறான்..’ சசியின் மனம் குழுங்கியது..
வேறு எவர் இதைச் செய்தாலும் இவன் செய்யக் கூடாதென்று அவள் மனம் மருகினாள்.. அவன் பார்வையை நினைத்துக் கொண்டாள்..
‘எப்படி இவனால் என்னை அப்படியொரு பார்வை பார்க்க முடிந்தது..?’
அனிச்சையாய் அவள் பார்வை உயர்ந்தபோது அவன் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள்.. முடிவில்லாத தொடர்ச்சியான அந்தப் பார்வைக்கான எதிர்காலம் எத்தகையது என்பதை இவன் அறிவான்தானே.. இருந்தும் ஏன் இப்படிப் பார்த்து வைக்கிறான் என்று சினம் கொண்டாள்..
‘சசிரேகா கிள்ளுக்கீரைன்னு நினைத்து விட்டானா..?’
தன்னிரகத்தில் அவள் மனம் தளும்பியது.. வத்சலா வேண்டிய மட்டும் தூங்கி விட்டாள் போல.. தொண தொணத்துக் கொண்டே வந்தாள்.. சசிரேகா அவளது தொணதொணப்பைக் கவனிக்காமல் வேகம் குறைந்திருந்த மழையை வேடிக்கை பார்த்தவண்ணம் மௌனமாக இருந்தாள்.. தூரத்தில் அன்னவாசலின் விளக்குப் புள்ளிகள் தெரிந்தன..
விடியலுக்கு அறிகுறியாய் கீழ்வானம் வெளுக்க ஆரம்பத்திருந்தது.. அவள் வாழ்வில் இருள் நெருங்கி விட்ட நிதரிசனத்தில் சசிரேகாவின் மனம் நடுங்கியது..
“ஊர் வந்திருச்சுடி..” கவலையுடன் சொன்னாள்..
எந்தவிதக் கவலையுமின்றி தொணதொணத்துக் கொண்டிருந்த வத்சலாவின் பேச்சு நின்று விட்டது.. ஒரு பெருமூச்சுடன்..
“நீ பேசாம அந்த பிரவீன்கூட ஓடிப் போயிருக்கலாம்..” என்று சொன்னாள்..
சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் நின்று விட்டது.. அவன் புருவங்கள் முடிச்சிடத் திரும்பிப் பார்த்தான்..
“பிரவீனா..? யார் அது..?” வத்சலாவிடம் கேட்டான்..
“எல்லாம் இவளோட காதலன்தான்..” இயல்பாகச் சொன்னான் வத்சலா..
சசியைக் காதலித்தவன் என்பதற்கும் சசியின் காதலன் என்பதற்கும் மலையளவு வித்தியாசம் உண்டு.. அது தெரியாமல் வத்சலா வாய் விட்டுவிட.. அதை உணராமல் சசிரேகா எதிர் கொள்ளப் போகும் இடரை நினைத்து மனம் கலங்கிக் கொண்டிருந்தாள்.. அவனது தீர்க்கமான பார்வை அவளைத் துளைப்பதை அவள் அறியவில்லை..
“காதலன்னா..?”
“காதலன்னா காதலன்தான் ஆபிசர்..! இவ மேலே உயிராய் இருந்தவன் கல்யாணம் பண்ணிக்கலாம் வான்னு கூப்பிட்டா இவ பின்னாடி ஓடியிருக்கனுமா வேணாமா..? அதை விட்டுவிட்டு பெரியப்பாகிட்டக் கேளுங்கன்னு அனுப்பி வைச்சா.. பெரியப்பா ஆப்பு வைச்சிட்டார்.. ஒருவேளை இப்படியாகும்ன்னு தெரிஞ்சிருந்தா பிரவீன் கூப்பிட்டப்பவே அவன்கூட ஓடிப் போயிருப்பாளோ என்னவோ..”
“ஓ…!”
ஒற்றை எழுத்தை ஒரு கோடி உணர்ச்சிகளுடன் உச்சரித்தான் அவன்.. சசிரேகாவின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.. வத்சலாவுக்கும் அவனுக்குமான கலந்துரையாடலைக் கவனிக்காமல் காத்திருக்கும் திருமணத்தைப் பற்றிய பயத்தில் அவள் உறைந்து போயிருந்தாள்..
“நீங்க எதுக்கு ஆபிசர் ‘ஓ’ போடறீங்க..?”
வத்சலாதான் அவனிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தாள்.. எங்கோ தொலை தூரத்தின் தொடுவானத்தை வெறித்துக் கொண்டிருந்த சசிரேகாவை வெறித்துப் பார்த்த ‘அவன்’ சொன்னான்..
“காதலிக்கிறவனை விட்டுவிட்டு யாரோ ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டப் போய்க்கிட்டிருக்கிற உங்க பிரண்டை பார்க்கிறப்ப புல்லரிக்குதுங்க.. அதான்.. என்னையறியாம ‘ஓ’ போட்டுட்டேன்..”
“நக்கல்..? ஆம்பளையாய் பிறந்துட்டிங்கள்ல.. நக்கல், நையாண்டியெல்லாம் இருக்கத்தான் செய்யும்.. இவளுக்கு மட்டும் பிடிக்காத ஆளுக்கு கழுத்தை நீட்டனும்னு வேண்டுதலா என்ன..? இவளோட பெரியப்பாதான் நன்றிக்கடன்ங்கிற பெயரில இவளை அடிமைப்படுத்தி வைச்சிருக்காரே..”
“ஆக.. அந்த நன்றிக் கடனைக் கழிக்கத்தான் அம்மணி பிடிக்காத ஆளுக்கு கழுத்தை நீட்டப் போறாங்கன்னு சொல்றீங்க..”
“ஆமாம் ஆபிசர் ஆமாம்.. இதைவிட புளி போட்டுத் தேய்த்து விளக்கமா ‘செப்ப’ முடியாதுன்னு நினைக் கிறேன்.. ‘மனசிலாயி..?’ அதனால ‘மாட்டாடுறத’ விட்டுப்புட்டு ஜரூரா வண்டியப் பத்துங்க வாத்தியாரே..”
“வண்டியா..?”
“பின்னே இல்லையா..? வெறும் வண்டி இல்ல ஆபிசர்.. கட்டை வண்டி..! காரா இது..? முதுகெல்லாம் வலிக்குது.. இப்படியா நடந்து போகிறவன்கூட ஓவர்டேக் பண்ற மாதிரி மெதுவா ஊர்ந்துக்கிட்டுப் போகும்..? விரட்டுங்க ஆபிசர்..”
அவனிடமிருந்த குறும்பு மறைந்து சிந்தனை அவன் முகத்தில் படிந்திருந்தது.. வத்சலாவின் பேச்சுக்கு விரட்டிட்டாப் போச்சு என்று சொல்லாமல் காரைக் கிளப்பினான்.. எதுவும் பேசாமல் ஓட்டிக் கொண்டிருந்தவன் திடிரென்று திரும்பிப் பார்த்துக் கேட்டான்..
“அந்த பிரவீன் எப்படி..?”
“எப்படின்னா..? என்னத்தைச் சொல்றது..? பார்க்கிறதுக்கு ஹீரோ போல ஹேண்ட்சம்மா இருப்பான்.. பணக்காரன்..”
“ஓ…”
“திரும்பவும் ‘ஓ’ போட்டுட்டிங்களா..? உங்க மனசில என்ன பெரிய ‘சிய்யான்’ விக்ரம்ன்னு நினைப்பா ஆபிசர்..?”
அவன் பதில் சொல்லவில்லை.. கார் ஊர் எல்லையைத் தொடப் போகும் போது தனக்குத்தானே சொல்லிக் கொள்பவனைப் போலச் சொன்னான்..
“கல்யாணத்தை கல்யாணமா பண்ணிக்காம தியாகமா பண்ணிக்கப் போறாங்க போல உங்க பிரண்ட்..”
“ஆமா.. அப்பத்தானே இவளுக்கு ‘தியாகி’ பட்டம் கிடைக்கும்..? அன்னவாசல் கிராமத்தில இவளுக்கு சிலை வைப்பாங்க..?”
“…..”
“என்ன ஆபிசர் இதுக்கு ‘ஓ’ போடாம இருக்கீங்க..?”
“…..”
“என்னாச்சு ஆபிசர்..! இவ கூட கூட்டுச் சேர்ந்துக்கிட்டிங்களா..?”
அந்த வார்த்தைகளில் உயிர் துடிக்க சசிரேகா அவனைப் பார்த்தாள்.. அதே நொடியில் அவளைப் பார்த்தவனின் பார்வையில் தெரிந்த ஒட்டாத தன்மையில் அவள் மனம் வெறுத்துப் போனது..
‘வேசக்காரன்..! என்னைக் கடத்திக் கொண்டு வந்து பெரியப்பா வோட கால்களில என்னைத் தள்ளிட்டான்ல்ல.. வேலை முடிஞ்சாச்சுன்னு ஒட்டாத பார்வை பார்க்கிறான்.. பழைய பார்வையைப் பார்த்தா இவன் போட்டிருந்த கண்ணியவான் வேசம் கலைஞ்சு போயிரும்ல்ல..’
அவள் விழிகளில் தெரிந்த வெறுப்பில் அவன் முகம் சுருங்கியது.. ஊர் எல்லையில் கொட்டு மேளத்துடன் காத்திருந்த ஆள்கள் வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்தார்கள்.. சசிரேகா மனம் உடைந்தாள்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.