Chapter 08

0Shares

‘இனித் தப்பிக்க மார்க்கம் இல்லை..’

பதுமை போல கண்ணாடி முன்னால் அமர்ந்திருந்த சசிரேகா நினைத்துக் கொண்டாள்.. ஈரக் கூந்தல் உலர்வேனா என்று அடம் பிடித்துக் கொண்டிருக்க.. அவளது முகத்திற்கு கடமையே கண்ணாக ஒப்பனை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண்..

“எங்கே பியூட்டி பார்லர் வைச்சிருக்கீங்க..?” வத்சலா விசாரித்தாள்..

“பக்கத்து டவுனில..”

“அதானே பார்த்தேன்.. அன்னவாசலில பியூட்டி பார்லரான்னு அசந்துட்டேன்..”

“கொஞ்ச நாளில இங்கேயும் வந்திரும்.. ஊர் முன்னேறிக்கிட்டு இருக்கு..”

“என்னத்தை முன்னேறி என்ன பண்ண..?”

“ஏங்க அலுத்துக்கறிங்க..?”

“கல்யாண மாப்பிள்ளையைக் கண்ணிலகூட காட்டாம கட்டாயப் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க.. இதுதான் முன்னேற்றமா..?”

“என்னது..?”

அந்தப் பெண் சசிரேகாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள்..

“இவங்க மாப்பிள்ளையைப் பார்த்ததே இல்லையா..?”

“இல்லைப்பா..”

“சரியாப் போச்சு போங்க.. இப்படியா இருப்பீங்க..?”

“என்னவோ இருக்கோம்..”

“மாப்பிள்ளை யார்ன்னு நினைச்சீங்க..?”

“எவனோ ஒரு இரக்கமில்லாத இதயமில்லாத ராட்சசன்னு நினைக்கிறோம்.. இதயமிருக்கிறவன் பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணு கழுத்தில தாலி கட்ட நினைப்பானா..?”

அந்தப் பெண் எதையோ சொல்ல வந்து விட்டு நமக்கென்ன என்ற ரீதியில் தோள்களைக் குலுக்கி விட்டு வேலையில் ஆழ்ந்தாள்.. சசிரேகாவின் மனம் முந்தைய இரவுப் பயணத்திலேயே நிலைத்திருந்தது..

‘ஏன் அப்படிப் பார்த்தான்..? எதனால் என் மனதை கலைத்தான்..?’

அவளை ஏமாற்றி அழைத்து வரும் யுக்தியோ என்று குன்றிப் போனாள் சசிரேகா..

தப்பிக்கும் நினைவு வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.. அவளை மோக வலையில் சிக்க வைத்து கடத்தியிருக்கிறான்..

‘உனக்கு வேறு வழியே தெரியலையாடா..?’ சசியின் மனம் வலித்தது..

உலர்ந்தும் உலராமலும் இருந்த கூந்தலைப் பின்ன ஆரம்பித்த அந்தப் பெண் தன் போக்கில்..

“கல்யாண மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு இவங்க சொல்கிறாங்களா..? ஆச்சரியமா இருக்கு..” என்றாள்..

“ஏனாம்..? அவரு பெரிய மன்மதனோ..” வத்சலா எகத்தாளமாக கேட்டாள்..

“இந்தப் பக்கத்தில அவருக்கு அப்படித்தான் பேர் இருக்குங்க..”

“மன்மதன்னா..?”

“ம்ம்ம்..”

“ஜோக்கடிக்காதீங்கப்பா.. மைனர்ன்னு பேர் இருக்கு மாயிருக்கும்.. நீங்க மன்மதன்னு சொல்கிறீங்க..”

“மைனரா..? இவரா..? நீங்க வேற.. பொண்ணுக கிட்ட அனாவசியமா ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார்.. பொண்ணுகதான் இவருகூடப் பேசப் போட்டா போட்டி போடுவாக..”

“ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை போல..”

“அவர் இந்த ஊர்க்காரர் இல்லேங்க.. பக்கத்து டவுனுக்காரர்..”

“நீங்கதானேம்மா இந்தப் பக்கம்ன்னு சொன்னீங்க..?”

“இந்தப் பக்கம்ன்னுதான சொன்னேன்..? இந்த ஊர்க்காரர்ன்னா சொன்னேன்..?”

அந்தப் பெண் புருவங்களை வில் போல உயர்த்தி விட்டு சசிரேகாவின் பின்னலை அலங்கரிக்கத் தொடங்கினாள்..

“இது ஒன்னுதான் குறைச்சல்..” அலுப்புடன் சொன்னாள் சசிரேகா..

“உங்களுக்கு ஒரு குறைவும் இல்லேம்மா..” என்றாள் அந்தப்பெண்..

“பாருடி.. இந்தப் பெண் என்னவோ குற்றாலக் குறவஞ்சி போல ஜோசியம் சொல்றத.. கையில தங்க முலாம் பூசின பிரம்புதான் இல்லே.. மத்தபடி குறி சொல்கிற குறவஞ்சி போலதான் தெரியறாங்க..”

வத்சலாவின் ‘பாருடி..’க்கு ஸ்லோ மோசனில் விழியுயர்த்தி பார்த்து வைத்தாள் சசிரேகா..

“ஏன்டி டக்குன்னு பார்க்கச் சொன்னா இப்படியாடி பார்த்து வைப்ப..? இதுதானாடி உன்னோட ‘டக்கு..’?”

வத்சலாவின் கேள்விக்கு அந்தப் பெண் சிரித்து வைக்க சசிரேகா மௌனத்தாரகையாக விட்டத்தை வெறித்து வைத்தாள்..

“விட்டா காவியக் கட்டிக்கிட்டு சாமியாராப் போயிருவாங்க போல.. இத்தனை விரக்தி தேவை யில்லைங்க.. சூப்பர் மாப்பிள்ளைக்கு வாக்கப்படப் போறீங்க..” அந்த பெண் தைரியம் சொன்னாள்..

எவருக்கு சொல்லப்படும் தைரியமோ என்று சசிரேகா விட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த பல்லியைப் பார்க்க..

“பொண்ண அழைச்சுட்டு வாங்கம்மா..” என்று அறைக்கு வெளியே சத்தம் கேட்டது..

“ஆச்சா..?” என்றபடி உள்ளே வந்த பானுகீதா சசிரேகாவைப் பார்த்த பார்வையில் வண்டி வண்டியாய் துவேசம் கொட்டிக் கிடந்தது..

‘இது ஏன் இப்படிப் பார்க்குது..?’ சசிரேகாவுக்கு புரியவில்லை..

அத்தனை காலமாக பட்ட துயருக்கு விடிவு வந்து விட்டது என்று நிம்மதியாக சென்னையில் வேலை 

பார்த்துக் கொண்டிருந்தவளை இழுத்து வந்து பிடிக்காத வாழ்க்கையில் தள்ளி விடப் போகிறவள் பானுகீதா.. கொழுந்தன் மகளின் தலைவிதியை சரியாக விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவளுக்கு எதற்காக இந்த காழ்ப்புணர்ச்சி..?

‘அதான் உன் புருசனைத் தூண்டி விட்டு நினைச்சதைச் சாதிச்சிட்டியே..’

வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சசிரேகா.. அதில் முகம் கடுத்துப் போன பானுகீதா.. சசிரேகாவின் தலை அலங்காரத்தை சரி செய்கிறவள் போல குனிந்து சன்னக்குரலில்..

“என்னடி..? குளிர் விட்டுப் போச்சா..? கழுத்தில் தாலி ஏறப் போகுதுங்கிற ஆணவமா..?” என்று அதட்டினாள்..

‘அடிமை சாசனம் வாங்கப் போகிறவளுக்கு ஆணவம் எங்கேயிருந்து வரும்..?’

சசிரேகா முகத்தைச் சுளித்தபடி எழுந்து கொண்டாள்.. பானுகீதாவின் முகரையைப் பார்ப்பதை விட பிடிக்காத திருமணம் நடக்கப் போகிற மேடைக்குப் போய் விடுவதே சாலச் சிறந்தது என்று அவளுக்குத் தோன்றி விட்டது..

தெரியாத பல முகங்கள் அந்த திருமண வீட்டில் தென்பட்டன.. சசிரேகாவை மேடைக்கு அழைத்துக் கொண்டு போன பெண்மணிகளில் ஒருத்தியைக் கூட சசிரேகா அதற்கு முன்னால் பார்த்ததில்லை.. பட்டும், வைர நகைகளுமாக மங்களகரமான முகத்துடன் காட்சியளித்தவர்களைப் பார்த்து இவர்களுக்கும் அங்குசாமி வகையாறாவுக்கும் என்ன சொந்தபந்தம் இருக்கக்கூடும் என்று குழம்பிப் போனாள் அவள்..

மணமேடைக்குப் போகும் வழியில் மலர்கொடியும், மாலதியும் நின்றிருந்தார்கள்.. அவர்களின் விழிகளில் வழிந்த பொறாமையில் சசிரேகா திகைத்துப் போனாள்..

‘இதுகளோட அம்மா என்னடான்னா.. வெட்டுவேனா இல்லே குத்துவேனாங்கிறதைப் போல பார்த்து வைக்குது.. இதுக என்னடான்னா இதுகளோட சொத்து கொள்ளை போகப் போறதைப் போல முறைச்சு வைக்குது.. என்னதான் நடக்குது..?’

எதுவும் புரியாமல் மணமேடையை நோக்கி நடந்தாள் அவள்.. படிகளில் ஏறிய போது ‘அவன்..’ நினைவில் பாதம் தடுமாறியது..

“பார்த்தும்மா..”

கூட வந்த பெண்களில் ஒருத்தி சிநேகிதப் புன்னகையுடன் கை கொடுத்தாள்.. அவளது தோழமையான சிரிப்பு சசிரேகாவின் புண்பட்ட மனதிற்கு ஒத்தடம் கொடுப்பதைப் போல இருந்தது..

இதயம் கனக்க.. கால்கள் பின்ன மணமேடையில் ஏறியவளை மாலையும் கழுத்துமாக உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையின் பக்கத்தில் உட்கார வைத்தார்கள்..

மாப்பிள்ளையின் முகத்தைக் கூடப் பார்க்காமல் சசிரேகா குனிந்த தலை நிமிராமல் உட்கார.. அவள் பக்கத்தில் தோழிப் பெண்ணாய் நின்றிருந்தாள் வத்சலா.. இப்படி கட்டாயக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அந்த வில்லாதி வில்ல மாப்பிள்ளையின் 

திருமுகம் எந்த லட்சணத்தில் இருக்கிறதென்று பார்த்து விடவேண்டு மென்ற மனத்துடிப்புடன் மாப்பிள்ளையை பார்த்து வைத்தாள்..

பார்த்த விழி பார்த்திருக்க ‘ஆ’  வென்று வாய் பிளந்தவள்..

“சசி..!” என்று குனிந்தாள்.. அதற்குள்

“கெட்டிமேளம்..! கெட்டிமேளம்..!” என்று யாரோ ஒருவர் குரல் கொடுக்க கெட்டி மேளம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது..

சசிரேகாவின் கழுத்தில் மாங்கல்யக் கயிறு படிந்தது.. அவள் அதிர்ச்சியுடன் விழியுயர்த்தி பார்த்த போது அவளையே பார்த்தபடி ‘அவன்..’ அவள் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான்..

‘இவனா..?’

அவளின் ஆனந்த அதிர்வை கண்டு கொள்ளாமல் பாறை போல இறுகிய முகத்துடன் அவன் தாலி கட்டி முடித்துவிட்டு நகர்ந்து உட்கார்ந்து கொள்ள.. இவள் நடுக்கத்துடன் வத்சலாவின் கையை இறுக்கிப் பிடித்தாள்..

“வத்சு..”

“நான் அப்பவே கவனிச்சுட்டேன்.. இவன்தான் கல்யாண மாப்பிள்ளைன்னு மூச்சுக்கூட விடலை பார்த்தியா.. சரியான கல்லுளி மங்கன்டி..”

ஆக.. அவன் கண்ணியவான் வேடம் போடவில்லை.. இன்னொருவனுக்காக அவளைக் கடத்திக் கொண்டு வரவில்லை.. மாற்றானுக்கு மாலையிடப் போகிறவளின் மோகத்தீயைத் தூண்டி விட்டுக் குளிர் காயவில்லை.. அவனுக்குச் சொந்தமாகப் போகிறவளிடம் தான் சொந்தம் கொண்டாடியிருக்கிறான்..

சசிரேகாவின் மனதில் அமைதி விரவியது… அது அவன்தான் அவளுக்கு தாலி கட்டியிருக்கிறான் என்பதினால் வந்த அமைதியா.. இல்லை.. அவன் கண்ணியவான் போல வேடம் போடவில்லை என்ற உண்மை புரிந்ததினால் வந்த அமைதியா என்று புரியாவிட்டாலும்.. அதுவரை அனுபவித்து வந்த மன வேதனையிலிருந்து விடுபட்டாள் சசிரேகா..

அவன் கையைப் பிடித்துக் கொண்டு அக்கினியை வலம் வந்தபோது அவளது உள்ளம் குளிர்ந்தது..

“ஆனாலும் ஆபிசர் இத்தனை அழுத்தக்காரராக இருக்கக் கூடாதுடி..”

வத்சலா அங்கலாய்த்த போதுதான் சசிரேகா அதை உணர்ந்தாள்..

ஓர் இரவு முழுவதும் பயணம் செய்திருந்தாலும்.. அவன் பெயரை அறியாமல் அவள் பயணித்திருக்கிறாள்..

அந்த உண்மையில் அவள் மனம் படபடத்தது..

இவன் பெயர் என்னவாக இருக்கக்கூடும் என்று அவள் யோசித்தாள்..

‘பெயரில்லாதவளுக்கு ‘அனாமிகா’ன்னு பெயர் வைச்சுக்கறதைப் போல.. இவன் ‘அனாமிகன்’ன்னு சொல்லிக்குவானோ..’

அவன் முகம் பார்த்தாள்.. உணர்ச்சிகள் துடைக்கப் பட்டிருந்த அந்த முகத்தைக் கண்டு குழப்பமடைந்தான்..

‘ஏன் இப்படியிருக்கான்..? எனக்குத்தான் இவன் மாப்பிள்ளைன்னு தெரியாது.. இவனுக்கு என்னைத் தெரியுமே.. நைட் ஜர்னியில நல்லாத்தானே பேசிக்கிட்டு வந்தான்..’

அவனுடைய பேச்சுக்களையும்.. பார்வைகளையும் நினைத்துப் பார்த்தவளின் நெஞ்சம் இனித்தது.. அவன் மீதான மோகத்தீ அணைக்க வேண்டிய அவசியமின்றி கொழுந்து விட்டு எரிந்தது..

“பெரியவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க கருணா..”

சசிரேகாவிடம் சிநேகிதமாய் சிரித்த அந்தப் பெண் உரிமையுடன் கூறினாள்..

‘இவன் பெயர் கருணாவா..?’

அவன் பெயரை மனதில் பதிய வைத்துக் கெண்டாள் சசிரேகா.. பெரியவர்களின் கால்களில் விழ வேண்டும் என்றால் அங்குசாமியின் கால்களிலும் விழ வேண்டுமே என்றிருந்தது அவளுக்கு.. அவர் பெரியவரா..? வயதாகி விட்டால் மட்டும் அவர் பெரியவராகி விடுவாரா..?

“தேவையில்லை..”

அவன் மறுத்ததில் ஓர் விடுதலையுணர்வை உணர்ந்தாள் சசிரேகா..

‘ஆஹா..!’ என்று மகிழ்ந்து போனாள்..

அங்குசாமியின் கால்களிலும் பானுகீதாவின் கால்களிலும் விழ வேண்டிய கொடுமையை தவிர்த்து விட்டானே..

அதிலும் அவன் மறுத்ததும் அங்குசாமியின் முகம் கருத்து விட்டது.. அதைப் பார்க்க அவளுக்கு ஆனந்தமாக இருந்தது..

“நான் தாலிகட்டும்போதே பெரியவங்க எல்லாம் அட்சதையைத் தூவி ஆசிர்வாதம் பண்ணிட்டாங்கக்கா.. புதுசா ஆசிர்வாதம் வாங்கத் தேவையில்லை..”

அவன் விளக்கம் சொன்னான்.. அவன் அக்கா என்று அழைத்த பெண் அவனுடைய உடன்பிறந்த அக்காவா இல்லை உறவு முறையில் அக்காவா என்று சசிரேகாவுக்கு தெரியவில்லை.. பாலும், பழமும் சாப்பிட என்று புதுமனத் தம்பதிகளை உட்கார வைத்த போது அந்த அக்காவே அதற்கான விடையை அளித்தாள்..

“நான் கவிதா.. கருணாகரனோட அக்கா..”

சசிரேகாவின் கன்னம் தடவி அவள் சொன்ன போது நெகிழ்ந்து போனாள் சசிரேகா.. அது போன்ற பாசத்தை அவளுடைய பெற்றோர் இறந்த பின்னால் அவள் அனுபவித்ததில்லை.. உண்மையான பாசத்தை விழிகளில் பிரதிபலித்த கவிதாவின் கைகளை பிடித்துக் கொண்டாள்.. கவிதாவின் விழிகளில் பிரியம் கொட்டிக் கிடந்தது..

“கவிதா..” என்று அழைத்தபடி உள்ளே வந்தவனைக் காட்டி..

“இவர்தான் உன் அண்ணா..” என்று அறிமுகம் செய்து வைத்தாள்..

“அண்ணாவா..?” மெய் சிலிர்த்தாள் சசி..

“அண்ணாதான்.. என் புருசன் உனக்கு அண்ணாதானே..”

பாசத்துடன் சிரித்தவளின் தலையில் குட்டினான் கவிதாவின் கணவன்..

“திடிர்ன்னு பாசமலரை வளர்க்கச் சொன்னா தங்கச்சி என்ன பண்ணும்..? பாவம்.. மெது மெதுவாகத்தான் நம்ம பக்கத்து சொந்தங்க இதுக்குப் பழக்கமாகும்..”

கவிதாவை விடவும் இதமாகப் பேசியவனின் பெயர் தியாகராஜனாம்.. அவர்களின் குட்டிக் குழந்தை ‘ரகுராம்’ ஓடி வந்து சசிரேகாவின் மடியில் ஏறி கழுத்தைக் கட்டிக் கொண்டது..

“அத்தை..” என்று கொண்டாடியபோது சசிரேகாவின் காதுகளில் அமுதும், தேனும் பாய்ந்தன..

சிறுவனை கட்டியணைத்து முத்தமிட்டவளின் மனதில் கருணாகரனின் குடும்பத்தில் ஒருத்தியாகி விட்ட சொந்தம் வந்திருந்தது..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link