Chapter 09

0Shares

திருமணம் முடிந்த கையோடு கார மங்களத்துக்கு கிளம்ப வேண்டும் என்று சொல்லி விட்டானாம் கருணாகரன்..

“காரமங்களமா..? என்னடி ஊர்பேரே காரமா இருக்கு..?” என்றாள் வத்சலா..

“காரம்ன்னா உறைப்பு மட்டுமில்லங்க.. கெட்டியான பிடிப்புக்கும் அதே அர்த்தம்தான்.. எங்க ஊர்தான் இந்த சுத்துப்பட்டி ஊர்களுக்கே பெரிய டவுன்.. ரெண்டு 

ஆர்ட்ஸ் காலேஜ், ஒரு என்ஜினியரிங் காலேஜ், நாலு மெட்ரிகுலேசன் ஸ்கூல்க.. ரெண்டு ஹையர் செகண்டரி ஸ்கூல்கன்னு படிப்புக்கு பெயர் வாங்கின டவுன்ங்க எங்க டவுன்..” என்றபடி வந்தாள் மேனகா..

பியூட்டி பார்லர் பெண்ணின் பெயர் மேனகா என்பதை கண்டுணர்ந்த சாமர்த்தியம் வத்சலாவுடையது..

“ஏன்ப்பா.. உங்க பேர் என்ன ரம்பா, ஊர்வசி, திலோத்தமையா..?” என்று அவள்தான் கேட்டாள்..

“ஏங்க.. ஒருத்தங்களுக்கு மூணு பேரு இருக்க முடியுங்களா..?” என்று அந்தப் பெண் வத்சலாவை வாரி வைத்தாள்..

ஒரு மார்க்கமாக திருதிருத்த வத்சலாவைப் பார்த்ததும் சசிக்கு சிரிப்புத்தான் வந்தது..

“ஏண்டி சிரிக்க மாட்ட.. நேத்து வரைக்கும் விரக்தியோட விளிம்பில இருந்துக்கிட்டு சிரிக்கக் கூலி கேட்ட.. இன்னைக்கென்னடா மொக்கை ஜோக்குக்குக் கூட சிரிச்சு மகிழ்ந்து போகிற.. நேரம்டி..” வத்சலா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்..

“அதை விடுங்க.. நீங்க எதுக்காக இந்தப் பேர்கள என்னோட பேரான்னு கேட்டிங்க..?” அந்தப் பெண் ஊடே வந்தாள்..

“பக்கி மாதிரி இருக்கிற மூஞ்சிகளக்கூட..” வத்சலா சொல்ல ஆரம்பிக்கும் போதே..

“அதாவது இவளோட மூஞ்சி மாதிரி இருக்கிற மூஞ்சிகளக்கூடன்னு எக்ஸாம்பிள் சொல்றா..” என்று எடுத்துக் கொடுத்து வத்சலாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள் சசிரேகா..

“இப்ப அவங்க உன்கிட்ட விளக்கம் கேட்டாங் களா..?” என்று சசியின் முதுகில் நான்கு அப்பு அப்பினாள் வத்சலா..

“விடுங்க.. கல்யாணப் பொண்ணு.. பாவம்.. முதுகு வலிக்கப் போகுது..” அந்தப் பெண் பரிந்து கொண்டு வந்தாள்..

“ஆர்டினரி மூஞ்சியக்கூட அப்சரஸ் மாதிரி மாத்தி விடறிங்களே.. அதனால உங்க பேரு ரம்பா, ஊர்வசி, திலோத்தமைன்னு மூணில ஒன்னாத்தான் இருக்கும்ன்னு ஒரு கெஸ்ஸிங்..” தலையை சாய்த்து கருட பார்வை பார்த்தாள் வத்சலா..

“இந்த மூணும் இல்லாம மேனகான்னு இருக்கக் கூடாதா..? மூணோடு சேர்த்து அவங்க நாலாவது 

அப்சரஸ், ஆச்சே..” என்று தன் பெயரை தானே சொன்னாள் மேனகா..

இப்படிப் போட்டு வாங்குகிறேன் பேர்வழியென்று தலையாலே தண்ணீர் குடித்து வத்சலா கண்டறிந்த பெயர்தான் மேனகா..

“கார மங்களத்தைச் சொன்னா நீங்க எதுக்காக காரசாரமா சண்டைக்கு வர்றீங்க..?” என்று கேட்டாள் வத்சலா..

“எங்க ஊரைப் பத்திச் சொன்னாக் கேட்டுக்கிட்டு சும்மா போவேனா..” மேனகா வாசல் பக்கம் பார்க்க..

“இதுக்கேங்க அடியாள்களைக் கூப்பிடறீங்க..? வாய்ப் பேச்சு வாய்ப்பேச்சா இருக்கனும்..” என்று ஜகாவாங்கினாள் வத்சலா..

“அடியாள்களைக் கூப்பிடலைங்க.. என்னோட பார்லர் ஆள்களைக் கூப்பிடறேன்.. கொண்டு வந்திருக்கிற பைகளை எடுத்துட்டுப் போகனுமில்ல..” சிரித்தாள் மேனகா..

“அப்பச்சரி..” நிம்மதியான வத்சலா..

“உங்க ஊரில படிப்பத்தவிர வேற எதுவும் இல்லையா..?” என்று கேட்டு வைத்தாள்..

“ஏன் இல்ல..? சென்னையிலதான் ஷாப்பிங்மால் இருக்கா..? எங்க ஊரிலயும் இருக்கு..” மேனகா அறிவித்தாள்..

“பாருடா… சசி.. உங்க ஊரு ஷாப்பிங் மாலுக்கு ஒருநாள் விசிட் அடிக்கனும்டி..” என்றாள் வத்சலா..

“அவங்க ஊரு ஷாப்பிங் மாலா..? அதுக்கும் மேலே..” மர்மக்குரலில் சொன்னாள் மேனகா..

“என்னடி சசி..! உங்க ஊரு பொண்ணுககூட ‘ஐ’ பட விக்ரம் போல அசத்தறாங்க..” மூக்கின் மேல் விரலை வைத்தாள் வத்சலா..

“சூப்பர் மார்க்கெட்.. ஆறுசினிமா தியேட்டர்.. பதினைந்து கோவில்கள், பொழுது போக நாலு தெருவுக்கு ஒரு பூங்கா.. ஊருக்குப் பக்கத்திலே ஏரி.. அதில போட் ஹவுஸ்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.. கேட்கத்தான் உங்களுக்கு ஒருநாள் போதாது..” பெருமையாக முகத்தை வைத்துக் கொண்டாள் மேனகா..

“விட்டா ‘ஒருநாள் போதுமா..?’ன்னு பாட்டுப் பாடி பயமுறுத்திருவா போல இருக்குடி சசி..” பம்மினாள் வத்சலா..

சசிக்கு எல்லாமே பிடித்திருந்தது.. ஒரே ஒரு மழையிரவில் அவள் வாழ்வு வண்ணமயமாக மாறி விட்ட விந்தையில் அவள் திகைத்துக் கொண்டிருந்தாள்.. எல்லாமே புதிதாக இருந்தன..

‘நீர் புதிது.. நிலம் புதிது..

நிலத்தோடு உறவாடும்

கானும் புதிது..

வான் புதிது.. நிலவு புதிது

வண்ண மயமான 

வாழ்வும் புதிது..

காற்று புதிது.. கனவு புதிது..

கனவுகளை எனில் விதைக்கும்

மோகத்தீயும் புதிது..’

அவள் மனது கவிதை எழுதியது.. காலம் அவளை கை விட்டு விடவில்லை.. படைத்த பிரம்மதேவன் அவள் தலைவிதியை கோணலாக எழுதி விடவில்லை என்று அவள் நெஞ்சம் நன்றியுணர்வுடன் விம்மியது..

“உன்னோட ‘ஆள்..’ உடனே கிளம்பனும்னு அவசர ஆணையை பிறப்பிச்சிருக்காராம்.. அங்குசாமித் தாத்தா மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கிட்டு உக்காந்திருக்காரு..” வத்சலா அறிவித்தாள்..

“அங்குசாமி தாத்தாவா..?” அதற்கும் சிரிப்பு வந்தது சசிக்கு..

“போதும்டி.. இத்தனை நாளா அழுது வடிஞ்சதுக்கு ஒட்டு மொத்த சிரிப்பையும் இன்னைக்கே சிரிச்சுத் தீர்த்துடுவ போல இருக்கு.. கொஞ்சம் ஸ்டாக் வை.. மிச்ச நாள்களுக்கும் வேணுமில்ல.. முக்கியமா இன்னைக்கு ராத்திரிக்கு வேணாமா..?” கண்சிமிட்டினாள் வத்சலா..

“ச்சீ..” சசிரேகாவின் முகம் குங்குமமானது..

“வெட்கம்..? ம்ஹீம்.. நடத்து.. நடத்து.. எனக்கென்னவோ சசி.. மிஸ்டர் அங்குசாமியோட 

நரை முடியையும்.. லொடுக்கு முதுகையும்.. டொபுக்கு நடையையும் பார்த்தா அவரைக் கொள்ளுத்தாத்தான்னு தான் கூப்பிடத் தோணுது..”

“அடிப்பாவி..!”

“ஸோ.. அவரை தாத்தான்னு சொல்றதே அதிகம்ன்ன வாயை மூடிக்க.. பெரியப்பான்னு சொல்லச் சொன்னே.. இங்கே ஒரு கொலையே விழுந்திரும்..”

வத்சலா மிரட்டி வாய் மூடுவதற்குள்..

“கொலை விழுந்திருச்சும்மா..” என்றபடி வாசல் பக்கமிருந்து வந்தான் ஒருவன்..

“ஹைய்யோ.. நானில்ல நானில்ல..” சசியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தாள் வத்சலா..

அவளை விசித்திரமாக பார்த்த அந்த ஆள்..

“வாழைக்குலைம்மா..” என்று கையில் பிடித்திருந்த வாழை மரத்துடன் கூடிய குலையைக் காட்டினான்..

“இம்புட்டுத்தானா..?” நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியே வந்த வத்சலாவைப் பார்த்து..

“ஆனாலும் உனக்கு இம்புட்டுத் தைரியம் ஆகாதுடி.. கொலை விழ வைக்கிற மூஞ்சியைப் பாரு..” என்று கிண்டலடித்தாள் சசி.. 

“என் மூஞ்சியை விட்டுத் தள்ளிட்டு உன் மூஞ்சியை பிரஷ்ஷாக்கிக்கிற வழியைப் பாரு.. உன் புகுந்த வீட்டுக்குக் கிளம்பனுமாம்.. ஜல்தி.. ஜல்தி..”

“ஏண்டி பறக்கிற..?”

“பானுகீதா பாட்டியோட மூஞ்சியைப் பார்க்கிற கொடுமையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சாகனும் சசி.. மூஞ்சியா அது..? நசுங்கிப் போன பித்தளை அண்டா மாதிரி இருக்கு..”

“கடவுளே..! பெரியம்மா காதில விழுந்திரப் போகுதுடி..”

“அந்தக் கிழவியையெல்லாம் என்னால பெரியம்மான்னு கூப்பிட முடியாது.. இதுதான் இப்படின்னா.. இது பெத்து வைச்சிருக்கிற சூனியக்கார ஆண்டிக ரெண்டும் இதுக்கு மேலே இருக்குதுக..”

“ஆண்டிகளா..?”

“பின்னே..? அக்காக்களா..? போடி போ.. போய் பிரஷ் ஆகிட்டு வா.. ஓடிப் போயிரலாம்..”

“உன்கூடவா..?”

“என்கூட ஓடி வர என்னோட ‘ஆள்’ காத்துக்கிட்டு இருக்கான்.. நீ உன் ஆள் கூட ஓடிப்போ..”

வத்சலா கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக சசிரேகாவை விரட்டினாள்.. கருணாகரனின் கையைப் பிடித்து ஓடிப் போகப் போகும் சுகமான நினைவுகளுடன் கண்ணில் தென்பட்ட அறைக்குள் போனாள் சசிரேகா.. அது அங்குசாமியின் அறை என்பதும்.. அதுவரை அந்த அறையில் அவள் காலடி வைத்ததில்லை என்பதும் அவளுக்கு மறந்து விட்டது..

திருமணப் பெண்ணுக்கு கிடைக்கும் சிறப்புச் சலுகைகளில் ஒன்றாக அந்த அறையில் அவளை தங்க வைத்திருந்தார்கள்.. விடியலில் வந்து இறங்கிய சசிரேகா உடனடியாக குளித்து பட்டுப்புடவை உடுத்தி மணப் பெண்ணுக்கான ஒப்பனைகளை பண்ணி முடிக்க அந்த அறைதான் தோது என்று அனைவரும் அபிப்ராயப் பட்டதால் வேறு வழியின்றி அந்த அறையை சசிரேகா உபயோகப் படுத்திக் கொள்ள அனுமதித்திருந்தாள் பானுகீதா..

அந்த அனுமதியின் எல்லைக் கோடு ஒப்பனை முடியும்வரைதான் என்பதை அறியாதவளாய் சசிரேகா அந்த அறையின் பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைத் தாழ் போட முனைந்த அதே நேரத்தில் அந்த அறைக்குள் மகள்கள் பின்தொடரவந்த அங்குசாமியும், பானுகீதாவும் அறைக் கதவைத் தாழிட்டார்கள்..

‘இது பெரியப்பாவோட ரூமில்ல..?’

சசி அப்படியே நின்று விட்டாள்.. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.. அவர்கள் அறைக்குள் இருக்கும் போது பாத்ரூமை உபயோகப்படுத்துவது உசிதமானதல்ல என்று தோன்றியதால் வேறு அறைக்குப் போய் முகம் கழுவி சீர் செய்து கொள்ளலாம் என்றுஅவள் கதவைத் திறக்க முனைந்த போது அங்குசாமி குடும்பத்தினரின் பேச்சு வார்த்தை ஆரம்பமானது..

“என்னால தாங்கிக்கவே முடியலைப்பா.. இவளுக்குப் போயி இப்பேற்பட்ட மாப்பிள்ளையா..?” பொருமினாள் மலர்கொடி..

சசிரேகா தேங்கி நின்றாள்.. அவள் பாத்ரூமைவிட்டு வெளிப்பட்டால் ஒட்டுக் கேட்க ஒளிந்திருந்தாயா என்று மலர்க்கொடி அவள்மீது பாய்ந்தாலும் பாய்வாள் என்று தோன்றியதால் என்ன செய்வது என்று புரியாமல் கைகளைப் பிசைந்தாள்..

“ஆமாம்ப்பா.. இந்தப் புதுப்பணக்காரன் மேலே நிறையப் பொண்ணுகளுக்கு ஒரு ‘இது’ இருக்குதுப்பா..”

வெட்கமில்லாமல் சொன்ன மாலதியின் குமுறல்.. அவளுக்கு கருணாகரனின் மீது அந்த ‘இது’ இருப்பதை அப்பட்டமாக அறிவித்தது..

“திடிர்ன்னு வந்தவன் கார மங்களத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டான்.. இந்த சுத்து வட்டாரத்தில பெரிய மனுசனாவும் ஆகிட்டான்.. நம்ம வீட்டில பொண்ணு கேட்டு வந்தப்ப நம்ம மகள்களில ஒருத்தியத்தான் கட்டிக் கொடுக்கப் போகிறோம்ன்னு சந்தோசப் பட்டேன்.. கடைசியில பாத்தா இந்த அப்பன் ஆத்தா இல்லாத அநாதைக்கு யோகம் அடிச்சிருச்சு..” பல்லைக் கடித்தாள் பானுகீதா..

“என்னைக் கட்டிக்க வந்த மாப்பிள்ளைன்னு தான்ம்மா நானும் நினைச்சேன்..” பொங்கினாள் மலர்க்கொடி..

“நான் என்னைக் கட்டிக்க வந்த மாப்பள்ளைன்னுல்ல நினைச்சேன்..” அக்காவுடன் போட்டி போட்டாள் மாலதி..

இப்படிப்பட்ட மகள்களைப் பெற்று வைத்திருக் கிறோமே என்று தலையில் அடித்துக் கொண்டாள் பானுகீதா..

‘ரெண்டும் ரெண்டு அகப்பை..! ரெண்டுமே கழண்ட அகப்பை..!’

அவள் விட்ட பெருமூச்சின் அனலில் அந்த அறையே தகிக்க ஆரம்பித்தது..

“அடங்குங்கடி.. அதான் உங்க ரெண்டு பேரில ஒருத்திக்கும் கிடைக்காம அந்த அநாதைக்கு அவன் கிடைச்சுத் தொலைச்சிட்டானே.. இன்னும் என்ன கழுதைக்கு அடிச்சுக்கறீங்க..?” மகள்களை அதட்டினாள்..

அங்குசாமி மகள்களை முறைத்ததில் அவளது ஆத்திரம் அதிகமானது..

“எதுக்கு இதுகளை முறைக்கறிங்க..? பொம்பளைப் புள்ளைகளைப் பெத்து வைச்சிருக்கிற மனுசன் இப்படியா தானா வந்த மாப்பிள்ளையை தம்பி மகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துட்டு நிற்பான்..? உங்களைச் சொல்லிக் குத்தமில்லைங்க.. இப்படியாப்பட்ட மனுசனுக்கு ஆக்கிப் போட்டு குடும்பம் நடத்தி ஒன்னுக்கு ரெண்டா பொம்பளைப் புள்ளைகளைப் பெத்துப் போட்டிருக்கேன் பாருங்க.. என்னைச் சொல்லனும்..” காளி அவதாரம் எடுத்தாள் பானுகீதா..

அதிர்ந்து போன சசிரேகா அப்படியே நின்று விட்டாள்..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link