Chapter 10
கருணாகரனைத் திருமணம் செய்து கொள்ள அங்குசாமியின் மகள்கள் ஆசைப்பட்டார்களா..? பானுகீதா வயிற்றெரிச்சல் படுகிற அளவுக்கு அவன் பெரிய பணக்காரனா..?
ஆமாம் என்பதை வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருந்த அங்குசாமியின் மனைவியும் மகள்களும் சசிரேகாவிற்கு புரிய வைத்தார்கள்..
“எந்தக் கூட்டத்தில் அவன் வந்து நின்னாலும் முதல் மரியாதை அவனுக்குத்தான் கிடைக்குது.. தொட்ட தெல்லாம் துலங்குது.. நம்மள மாதிரி ஆளுகளுக்கு இப்படியாப்பட்ட பணக்காரங்கள எட்ட நின்னு பார்க்கிறதே பெரிய விசயம்.. அவன் கிட்டக்க வந்தா கோழிய அமுக்கறாப்புல ஒரே அமுக்கா அமுக்கி நீங்க பெத்து வைச்சிருக்கிற பொண்ணுகள்ல ஒருத்திய அவன் தலையில கட்டி வைச்சிருந்தா நீங்க புத்திசாலி மனுசன்னு பெருமைப் பட்டிருப்பேன்.. உங்களுக்கு வாக்கப்பட்டு குடும்பம் நடத்தி புள்ளைகளைப் பெத்துக்கிட்டதில சந்தோசப் பட்டிருப்பேன்.. எங்கே..? அதுக்கெல்லாம் எனக்கு குடுப்பினை இருக்கா..?”
“அதைச் சொல்லுங்கம்மா… மூத்தவளாப் பொறந்திருக்கிற என்னையில்ல அவனுக்கு கட்டிக் கொடுத்திருக்கனும்..?”
“அப்படி எதுவும் சட்டமிருக்கா மலர்க்கொடி..? ஏன்..? இளையவளான என்னைக் கட்டிக் கொடுத்திருக்கலாமில்ல..?”
“எதிலதான் போட்டிக்கு வர்றதுன்னு விவஸ்தை யில்லையாடி உனக்கு..?”
“இல்லேங்கிறேன்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?”
அடித்துக் கொண்ட அக்கா தங்கைகளை ஆளுக்கு நான்கு அப்பு அப்பி அடக்கி வைத்தாள் பானுகீதா..
“இப்ப அவன் பொண்ணு கேட்டு நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்கிறானாடி..? அறிவில்லாம அடிச்சுக்கறீங்களே..”
“வந்தான்ம்மா.. அப்பாதான் அவனை அந்த அநாதைக்கு விட்டுக் கொடுத்திட்டார்.. இல்லேன்னா அவன் என் கழுத்திலதான் தாலியைக் கட்டியிருப்பான்..”
“இல்லவே இல்லை.. என் கழுத்தில்தான் கட்டியிருப்பான்..”
“மூத்தவ நான்தான்டி..”
“இளையவதான் என்னைக்கும் ஸ்பெசல்..”
“மூத்தவ இருக்கிறப்ப இளையவளை கட்டிக் கொடுப்பாங்களா..?”
“அப்படின்னா ரெண்டு பேருமே அவனைக் கட்டிக்கலாம்.. என்ன சொல்ற..?”
“அடிப் பாவிகளா..”
கையில் கிடைத்த தலையணையால் மகள்களை வாங்கு வாங்கென வாங்கிய பானுகீதாவிற்கு தலைவலியே வந்து விட்டது..
“இம்புட்டு அழும்பும் உங்களாலே..” அவள் கணவனிடம் சண்டைக்குப் போனாள்..
“என்னை என்னடி பண்ணச் சொல்ற..? அவனுக்கு சசியைக் கட்டிக் கொடுக்கலைன்னா நம்ம சொத்து நம்ம கிட்ட நிலைக்காதுடி..” அலுத்துக் கொண்டார் அங்குசாமி.
“இது என்ன புதுக்கதையா இருக்கு..? நம்ம சொத்துக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்..?”
“ஒரு சம்பந்தமுமில்லைடி பானு.. ஆனா நம்ம சொத்தப் பத்தின அத்தனை ரகசியமும் அவன் கையில இருக்கு..”
“என்னங்க சொல்கிறீங்க..”
“ஆமாண்டி பானு.. இவன் என்னைப் பார்க்க தோப்புக்கு வந்தப்ப நான் நம்ம மகள்கள்ல ஒருத்தியை இவனுக்கு கட்டிக் கொடுத்திரனும்னுதான் ஆளாப் பறந்தேன்.. பயபுள்ள எம்புடாம கட் அண்ட் ரைட்டா டீலைப் பேசிட்டாண்டி..”
“டீலா..?”
“இது நமக்கு ‘நோ டீல்’டி பானு.. ஒரு சமயம் ரங்கசாமிக்கு ஏற்காட்டுப் பக்கத்தில நிலம் வித்த பணம் வந்துச்சு.. ஞாபகம் இருக்கில்ல..?”
“மறக்குமா..? அந்தப் பணத்த அபேஸ் பண்ணித்தானே கார மங்களத்தில வீட்டை வாங்கிப் போட்டோம்..”
“லட்சக் கணக்கான பணம்.. கடனாக் கேட்டாத் திருப்பிக் கொடுக்கணும்.. பணமுடைன்னு கேட்டா பத்தாயிரம் இருபதாயிரம் கிடைக்கும்.. முள்ளங்கிப் பத்தை போல அறுபது லட்சமும் ஒட்டு மொத்தமா கைக்கு கிடைச்சிருக்குமா..? அதுக்காகத்தானே அந்த வேலையைப் பண்ணியேன்..? சிறுகச்சிறுக விவசாயத்துக்காக வாங்கின கடன் வட்டியோட ஒன்னாச்சேர்ந்து அறுபது லட்சத்துக்கு வந்து நிக்குது.. என்பங்கு சொத்தயும் உன் பேருக்கே எழுதிக் கொண்டு வந்திருக்கேன்.. இதை வைச்சுக்கிட்டு பணத்தைக் கொடுன்னு கேட்டேன்.. வாங்க மாட்டேன்னு சொன்னவன்கிட்ட வம்படியா பத்திரத்த திணிச்சுட்டு பணத்த கைப்பத்திக்கிட்டு வந்தேன்..”
“தெரியாதவகிட்டச் சொல்றதப் போல என்கிட்ட கதை சொல்றீங்களே.. இந்த யோசனையைச் சொல்லிக் கொடுத்தவளே நான்தானே.. பத்திரம் எங்கே போகப் போகுது.. அதான் வருசத்தில பாதி நாளு ஏற்காட்டிலதான நாம விருந்தாடப் போகப் போறோம்.. அப்பச் சமயத்தில அந்தப் பத்திரத்த அபேஸ் பண்ணிட்டு வந்திரலாம்ன்னு திட்டம் போட்டேன்.. எங்கே..? அதுக்குள்ளதான் உங்க தம்பி மண்டையைப் போட்டுட்டானே..”
பாத்ரூமில் நின்றிருந்த சசிரேகாவின் ரத்தம் கொதித்தது.. அவளுடைய தந்தைக்கு எதிராக என்னவெல்லாம் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்..? இது ஏமாற்றுகிறவர்களுக்கான காலமா..? உண்மையான நேசத்துடன் இருக்கின்ற ஒருவரை வாழ்க்கையில் பார்க்கவே முடியாதா..? காலம் அப்படி எவரையும் கை காட்டவே காட்டாதா..? பாசம் வைத்த கொடுமைக்காக அனைத்தையும் இழக்க வேண்டுமென்பதுதான் தலைவிதியா..?
நிற்க முடியாமல் கால்கள் தொய்ந்து போக.. பற்றுக் கோடாய் சுவரைப் பிடித்துக் கொண்டு அதில் சாய்ந்து நின்றாள் சசிரேகா..
“ஏற்காட்டு வீட்டில இருந்தப்ப அந்தப் பத்திரத்த தேடோ தேடுன்னு தேடினேன்.. கைக்கு அகப்படல.. அதுக்குள்ள தாரிணியோட அண்ணன்காரன் கோர்ட்டுக்குப் போயிட்டான்.. வீடு கோர்ட்டோட பொறுப்பில போயிருச்சு..”
“இப்பத்தான் இந்தக் கழுதைக்கு இருபத்தியொரு வயசு முடிஞ்சுருச்சில்ல.. மேஜர்ன்னு கோர்ட் இவ பொறுப்பில வீட்டைக் கொடுத்திருச்சுல்ல.. உடனடியா எழுதி வாங்கியிருக்க வேண்டியதுதான..? அத விட்டுட்டு கங்கு கரையில்லாம பணம் கொழிக்கிறவனுக்கு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டில்ல நிக்கறிங்க..? இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுவேன்..?”
“நானே வயிறெரிஞ்சு போயி கிடக்கிறேன்.. நீயும் ஏண்டி தூண்டி விடறதைப் போலப் பேசற..? எனக்குமட்டும் இந்தக் கழுதையை அந்தப் பணக்காரனுக்கு கட்டிக் கொடுக்கனும்னு ஆசையா..? அப்படி எதுவும் நேர்த்திக்கடனா நேர்ந்துக்கிட்டு இருக்கேன்..? இல்லேடி பானு.. அந்த பிரவின்பய பொண்ணு கேட்டு வந்தப்பவே.. எனக்கு அடிவயிறு கலங்கிப் போச்சு.. கழுதைக்கு கல்யாண வயசாச்சு.. நம்ம கையை எதிர்பார்க்காம சுய சம்பாத்தியத்தில காலை ஊண்டி நின்னுட்டா.. நாளைக்கே கூட வேலை பார்க்கிறவன் எவனையாவது கோவில்ல வைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு மாலையும் கழுத்துமா வந்து நின்னாலும் நிப்பா.. அந்த பிரவின்பய நல்லவனா இருக்கப்போயி வீடு தேடி வந்து பொண்ணு கேட்டான்.. நாமளும் விரட்டி விட்டோம்.. எல்லாரும் அப்படியே இருப்பாங்களான்னு யோசிச்சுத்தான் ஏற்காடு வீடு முதற்கொண்டு அன்னவாசல் சொத்து வரைக்கும் அத்தனை சொத்தையும் என் பேருக்கு மாத்தி எழுதி வாங்கிடனும்னு பிளான் போட்டிருந்தேன்.. அதுக்குள்ள இந்தக் கருணாகரன் வந்து நின்னுட்டான்..”
“வந்தா என்னங்க..? அவனே நம்ம பொண்ணுகள பொண்ணு கேட்டு வரலைங்கிறப்ப அவனை எதுக்காக உக்கார வைச்சுப் பேசினீங்க..?”
“என்னத்தன்னு சொல்லுவேன் பானு..? அவன் கையில நான் ரங்கசாமிக்கு எழுதிக் கொடுத்த பத்திரம் இருந்துச்சுடி..”
“என்னது..?”
“ஆமாண்டி பானு.. ஏற்காடு வீடு எங்கேயோ கண்காணாத இடத்தில இருக்கு.. அது இல்லாம போனாலும் மனசைத் தேத்திக்கலாம்..”
அங்குசாமி சோகத்துடன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த சசிரேகாவிற்கு ‘என்னடா உலகம் இது..’ என்று வெறுத்துப் போய் விட்டது..
யாருடைய சொத்தை யார் உரிமை கொண்டாடுவது..? ஏற்காடு வீட்டிற்காக ஒற்றைச் செங்கலையாவது அங்குசாமி எடுத்து வைத்திருப்பாரா..? அதை உரிமைக்காரியான சசிரேகாவிடம் இழந்து விட்டதற்காக அவர் மனதைத் தேற்றிக் கொள்வாராம்..
‘என்ன கொடுமை இது..!’
“அன்னவாசல் சொத்து அப்படியில்லைடி பானு.. ஆத்தோரப் பாசனம்.. தோப்பும் துரவும் வயலும் வாழ்வுமா இந்த ஊரில பெயர் சொல்கிற அளவுக்குப் பொழைச்சுக் கிட்டு இருக்கோம்.. இந்தச் சொத்த இழந்துட்டா எங்கேடி போறது..? நம்மால அதைத் தாங்கிக்க முடியுமா..?”
“கடன்காரன்.. ரங்கசாமிக்கு நீங்க எழுதிக் கொடுத்த பத்திரம் அவன் கைக்கு எப்படி வந்துச்சாம்..?”
“எப்படியோ வந்துச்சு.. அதைப்பத்தி உங்களுக் கென்னன்னு கேட்டான்.. வாயை மூடிக்கிட்டேன்.. சசிரேகாவ அவனுக்குக் கட்டிக் கொடுத்தா பத்திரத்த
என் கையில கொடுத்திட்டு சசிரேகாவ கல்யாணம் பண்ணிக்கிறதாச் சொன்னான்.. வேற வழியில்லாம மனசே இல்லாம இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேண்டி..”
“அப்படியே அந்த ஏற்காட்டு வீட்டையும் எழுதிக் கொடுக்கச் சொல்ல வேண்டியதுதானே..”
“சொல்லாம இருப்பேனா..? பார்ப்போம்ன்னு சொல்லியிருக்கான்..”
‘பார்ப்பானா..? எதைப் பார்ப்பான்.. சசி பிறந்து வளர்ந்த வீட்டை.. அவளுடைய பெற்றோர் வாழ்ந்த வீட்டை.. அங்குசாமியைப் போன்ற கயவன் பெயருக்கு அவள் மாற்றிக் கொடுப்பதை பார்ப்பானா..? யார் சொத்துக்கு யார் வாக்குறுதி கொடுப்பது..?’
சசிரேகாவின் முகம் ரத்தமென சிவந்தது.. அன்னவாசல் சொத்தைப் பற்றி அவளுக்கு யாதொரு கவலையும் இல்லை.. அவளுடைய அன்னை வந்து செல்லாத அன்னவாசலின் சொத்துக்களை என்றைக்குமே அவள் பெரிதாக நினைத்ததில்லை.. ஆனால் ஏற்காடு வீடு..? அதில் அவளைப் பெற்றவர்களின் உயிர் மூச்சு நிறைந்திருக்கிறதே.. அதை அவள் அங்குசாமியின் கைகளில் தூக்கிக் கொடுப்பாளென்று எந்த தைரியத்தில் கருணாகரன் வாக்குக் கொடுத்தான்..
யார் சொத்தை யார் யாருக்கு தானம் கொடுப்பது..?
அவளது மார்பில் புரண்ட தாலிச்சரடு இப்போது உறுத்தியது.. அதை எடுத்துப் பார்த்தவளின் கண்களில் வெறுப்பு அப்பிக் கொண்டது.. சற்று முன் இதே தாலிச்சரடுதான் அவளை இன்பமயமான எண்ணங் களுக்குள் இழுத்துச் சென்று நினைவுகளையெல்லாம் இனிக்க வைத்தது..
‘இதை என் கழுத்தில் கட்ட அவன் விலை வைத்திருக்கிறானா..?’
சசிரேகா திருமதி கருணாகரனாக ஆக வேண்டு மானால் அவளுடைய பெற்றோர் வாழ்ந்த வீட்டை அங்குசாமிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.. அன்னவாசலில் அவளுக்கு இருக்கும் சொத்தின் பாகத்தை அங்குசாமியின் பெயருக்கு எழுதிக் கொடுத்து விட வேண்டும்..
‘இவன் யார் இதை நிர்ணயிப்பதற்கு..?’
“அதிக நேரம் அவன் பார்வையில் படாம இருந்தா என்ன சதித்திட்டம் தீட்டறிங்கன்னு கேட்டு வைப்பான்டி.. அவனையும் அந்த சசிரேகாக் கழுதையையும் வழியனுப்பி வைச்சுட்டு வந்து பேசலாம்..”
பாத்ரூமுக்குள் உயிர் துடிக்க சசிரேகா நின்றிருப்பதை அறியாதவர்களாக அங்குசாமியின் குடும்பம் அறையை விட்டு வெளியேறி விட்டது.. சசிரேகா முகத்தில் தண்ணீரை ஓங்கி அடித்துக் கழுவினாள்.. சோர்வு நீங்கவில்லை..
உடல்சோர்வாக இருந்தால் நீங்கியிருக்கும்.. மனச் சோர்வு எப்படி நீங்கும்..?
தளர்ந்த நடையுடன் அறையை விட்டு வெளியே வந்தவளைத் தேடி வந்த கவிதா..
“என்னம்மா.. இவ்வளவு நேரமா எங்கேயிருந்த..? உன்னைக் கானோம்ன்னு நாங்கள்ளாம் தேடிக்கிட்டு இருக்கோம்…” என்றாள்..
“நைட்டெல்லாம் கண்முழிச்ச அசதி அண்ணி.. கண்ணைக் கட்டிக்கிட்டு வந்துச்சு.. படுத்துட்டேன்..” அவள் முகம் பார்க்காமல் பதில் சொன்னாள் சசிரேகா..
“அடடா..! தலையை வலிக்குதா..?”
கவிதாவின் அக்கறையில் சசிரேகாவின் கண்கள் கலங்கி விட்டன.. நேற்றுவரை அவளைப் பற்றிக் கவலைப் பட யாருமில்லை.. இன்று கவிதாவைப் போல ஒரு தாய்மையுள்ளம் கொண்ட நாத்தனார் கிடைத்திருக்கிறாள்..
ஆனால் இந்த உறவுக்காக சசிரேகா கொடுக்கப் போகும் விலை என்ன..?
“வாம்மா.. நேரமாகிருச்சுன்னு கருணா கத்திக்கிட்டு இருக்கான்..”
‘ஏன் கத்த மாட்டான்..? கண்ணி வைச்சு வலையில் சிக்க வைச்சிருக்கானில்ல.. கத்தத்தான் செய்வான்..’
மௌனமாக கவிதாவைப் பின் தொடர்ந்தாள் சசிரேகா.. காத்திருந்த கருணாகரனின் விழிகள் அவளை உறுத்துப் பார்த்தன..
ரத்தமெனக் கலங்கிச் சிவந்திருந்த சசிரேகாவின் விழிகளைக் கண்டதும் அவன் புருவங்கள் முடிச்சிட்டன.. அவன் பார்வையைச் சந்திக்காமல் சசிரேகா தவிர்த்ததில் அவன் முகம் இறுகிப் போனது..
“கிளம்பலாம்..”
அவன் பொத்தாம் பொதுவாகச் சொன்னதும் அங்கிருந்தவர்கள் விரைந்து கிளம்பினார்கள்.. காத்திருந்த பஸ்ஸிலும் கார்களிலும் அவனுடைய உறவுக்காரர்கள் ஏறிக்கொள்ள அவை வரிசையாக கிளம்பின..
“ஹப்பா..! ஒரு அரசனைப் போல இருக்காருடி..” வத்சலா கைகளை கன்னங்களில் வைத்து அதிசயித்தாள்..
“எவர்..?” எரிச்சலுடன் கேட்டாள் சசிரேகா..
“உன் ஹஸ்பெண்ட்தான்..”
“அவரா..? அவன், இவன்னுதான பேசுவ..?”
“அது அப்ப.. இது இப்ப..”
“இப்ப என்ன ஆகிப் போச்சாம்..”
“சாரு யாருன்னு தெரிஞ்சு போச்சுல்ல..”
“யாராம்..?”
“ஹி மேன்..”
அப்படியா என்பதைப் போல அருகில் வந்தவனை வெறித்துப் பார்த்தாள் சசிரேகா.. அவனோ புருவச் சுளிப்புடன் காரில் ஏறினான்.. வத்சலா உந்தித் தள்ளியதில் வேறு வழியில்லாமல் காரில் ஏறி அவன் பக்கத்தில் உட்கார்ந்த சசிரேகா இடைவெளி விட்டு விலகி அமர்ந்தாள்..
“தள்ளி உட்காருடி.. எனக்கு இடம் வேணாமா..?”
வத்சலா சசியை இடித்துக் கொண்டு உட்கார்ந்ததில் ஏறக்குறைய கருணாகரனின் மடிமீது விழுந்தாள் சசி.. ஒருவரையொருவர் உராய்ந்து கொண்ட அந்த நொடியில் முதல்நாள் இரவுப் பயணத்தைப் பற்றிய நினைவு இருவர் மனதிலும் வந்து தொலைத்தது.
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.