Chapter 11

0Shares

“வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வாம்மா..”

ஆரத்தி எடுத்து சசிரேகாவின் நெற்றியில் குங்குமம் இட்ட கவிதா அன்புடன் அழைத்தாள்.. வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் பிரவேசித்த சசிரேகாவிற்கு அது வீடா இல்லை அரண்மனையா என்ற சந்தேகம் எழுந்தது.. அது போன்ற மாளிகைகளை அவள் திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறாள்.. முதன் முறையாக நேரில் பார்க்கிறாள்.. அந்த வீடுதான் அவள் வாழப்போகும் வீடு என்பதில் ஏன் அவள் மனதில் மகிழ்வும் பிரமிப்பும் வரவில்லை..?

“பூஜையறையில் விளக்கேத்தும்மா..”

கவிதா பொறுப்பாக வாழ வந்திருக்கும் மருமகள் செய்ய வேண்டிய வழிமுறைகளையும் நியதிகளையும் செய்ய வைத்தாள்..

சசிரேகா பூஜையறையில் விளக்கேற்றி விட்டுத் தரையில் மண்டியிட்டு குனிந்து தெய்வங்களை வணங்கி எழுந்தாள்.. கருணாகரனின் பக்கத்தில் அவளை உட்கார வைத்துப் பாலும், பழமும் சாப்பிட வைத்தார்கள்.. உறவினர்களின் கேலி அவர்கள் இருவரின் மனதிலும் ஒட்டவில்லை.. கருணாகரன் எழுந்து மாடிக்குப் போய் விட்டான்.. தனித்து நின்ற சசிரேகாவின் காதைக் கடித்தபடி இருந்தாள் வத்சலா..

“நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுத்துக்கங்க..”  கவிதா சொல்லி வாய் மூடுவதற்குள்..

“எங்கே.. எங்கே..” என்று பறந்தாள் வத்சலா..

“ஏன்..?”

“உங்களுக்குத் தெரியாதுங்க.. இவளுக்கு தோழிப் பெண்ணாக் கிளம்பி வந்தாலும் வந்தேன்.. முதுகு ஒடிஞ்சு போச்சு.. கொஞ்ச நேரத்துக்கு கட்டையை சாய்த்தினாத் தேவலைன்னு நான் ஏக்கப்பட்டுக்கிட்டு இருந்தப்ப நீங்க இந்த வார்த்தையைச் சொன்னீங்க பாருங்க.. எங்கேயோ போயிட்டிங்க.. நீங்க நல்லா இருக்கனும்..”

“சசி உன் பிரண்டு சிரிக்கச் சிரிக்கப் பேசறா..”

கவிதா சிரித்தபடி கை காட்டிய அறைக்குள் நுழைந்து கட்டில்களில் சரிந்த தோழிகள் இருவரும் தூங்கிப் போனார்கள்.. மாலையில் காபி பலகாரத்துடன் அவர்களை எழுப்பி விட்டாள் கவிதா..

“இப்பத்தான் ரிலாக்ஸா இருக்குதுங்க..” காபிக் கப்பையும் பலகாரத் தட்டையும் வாங்கிக் கொண்ட வத்சலா..

“டின்னர் முடிஞ்சதும் நான் கிளம்பறேண்டி..” என்று சசிரேகாவிடம் சொன்னாள்..

“எங்கே..?”

“சென்னைக்குத்தான்..”

“என்னை விட்டுட்டா..?”

பதட்டத்துடன் கேட்ட சசிரேகாவை விசித்திரமாகப் பார்த்தாள் வத்சலா..

“என்னடி ஆச்சு உனக்கு..? இது உன் வீடு.. என்னோட வேலை சென்னையிலதான் இருக்கு.. கூடவே என்னோட ஆளும் அங்கேதான் இருக்கான்.. உன் லைஃப் இனி இங்கேதான்.. என்னோட லைஃப் அங்கேதான்.. நாம ‘குட்பை’ சொல்லிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு சசி..”

“வேண்டாம் வத்சலா.. என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதே..”

வத்சலாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் சசிரேகா.. அவளது விரல்கள் நடுங்கிய நடுக்கத்தில் வத்சலா கவலையானாள்.. கவிதாவைப் பார்த்தாள்.. அவள் ‘பொறு’ என்று விழிகளால் சமிக்ஞை செய்து விட்டு மாடிக்குப் போனாள்.. சற்று நேரத்தில் கனத்த காலடியோசை கேட்டது..

“உன் ஆள் வர்றாரு..” கண் சிமிட்டினாள் வத்சலா..

எதிர்பார்ப்பும் வெறுப்பும் சேர்ந்த நெருப்பு சசிரேகாவின் மனதில் பற்றிக் கொண்டது.. அறைக்குள் வந்த கருணாகரனுக்கும் அப்படித்தான் இருந்தது 

போல.. சசிரேகாவை முறைத்துப் பார்த்தான்.. சசி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. அவனது கண்கள் சிவந்தன..

“நைட்டே ஊருக்குக் கிளம்பனும்னு சொன்னீங் களாமே..” வத்சலாவிடம் விசாரித்தான்..

“யெஸ் ஆபிசர்..” குறும்புடன் சொன்னாள் அவள்..

அவன் முகம் இளகியதில் சசிரேகா பொறாமை கொண்டாள்..

“நாளைக்குப் போகலாம்..”

“முடியாதே ஆபிசர்.. உங்க காரமங்களம் டவுனில இருந்து சென்னைக்குப் போக நைட்டிலதான் டிரெயின் இருக்காமே..”

“நான் காரில அனுப்பி வைக்கிறேன்..”

“உங்களுக்கு எதுக்கு சிரமம்..?”

“இதில சிரமப்பட என்ன இருக்கு..? எங்க கல்யாணத்துக்காக நீங்க இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறப்ப.. உங்களை பத்திரமா அனுப்பி வைக்கனும்னு நான் நினைக்கிறது ஒரு சிரமமா..?”

“தூள் ஆபிசர்.. இந்தப் பேச்செல்லாம் நேத்து நைட் எங்கே போயிருந்துச்சு ஆபிசர்..? அப்படியே வில்லனைப் போலவே மூஞ்சியை வைத்துக்கிட்டு இருந்தீங்களே ஆபிசர்..”

“ஹீரோவா இருக்கனும்னு ஆசைதான்..”

சசிரேகாவைப் பார்த்தபடி சொன்னான் கருணாகரன்.. அவள் முகம் கடுத்தாள்.. அவளுடைய அப்பா அம்மா வாழ்ந்த வீட்டை ஏலம் போட முயலும் இவன் ஹீரோவா..?

‘வில்லன்..!’

அவள் விழிகள் வெறுப்பைக் கக்கியதில் அவனது புருவங்கள் சுருங்கின.. அவளையே பார்த்தான் அவன்..

“வில்லனா இருந்தாத்தானே வேலை நடக்குது..” என்று வத்சலாவிடம் சொன்னான்..

இது சசிரேகாவுக்கான பதில் என்பதை புரிந்து கொண்டவள் உதட்டைக் கடித்தாள்.. அவன் பார்வை கூர்மையாக அவளது இதழ்களில் படிந்ததில் அவளுக்குள் மோகத்தீ மூண்டது..

முள்ளிலே நெருஞ்சி முள் மோகமுள்தான்.. அதை தைத்தவர் பிடுங்கினாலொழிய அதன் வலி குறையாது.. அந்த வலியை அனுபவிக்கும் சாபம் சசிரேகாவுக்கு ஏன் வாய்த்தது..?

அவளது நெஞ்சத்தினை நெருடும் நெருஞ்சி முள்ளான மோக முள்ளை அவளுக்குள் விதைத்தவன் அவன்தானே.. அவன் தைத்த முள்ளை நீக்க அவன் முன் வரலாம்.. சசிரேகாவினால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா..?

அதைவிட நெருஞ்சி முள்ளின் நெருடல் ஏற்படுத்தும் குருதி கொப்பளிக்கும் மோக வலியினைத் தாங்கிக் கொள்வதே சாலச்சிறந்தது என்று அவள் துயரத்துடன் நினைத்துக் கொண்டாள்..

“பஸ்.. பஸ்.. எதுக்கு இந்த வில்லன் வேலை..? முறைப்பெல்லாம் வேண்டாம் ஆபிசர்.. அதான் நீங்க நினைச்ச வேலையை முடிச்சிட்டிங்களே.. கல்யாணம் பண்ணிக்கப் போகிறவளைக் கொட்டற மழையிலயும் தேடி வந்து கூப்பிட்டுக்கிட்டு வந்து தாலி கட்டிட்டிங்களே.. இனி வில்லன் வேசத்தைக் கலைக்க வேண்டியது தானே..?”

வத்சலா சிரித்தாள்.. சசிரேகா கூடச் சேர்ந்து சிரிக்க வில்லை என்பதை அவன் கவனித்துக் கொண்டிருந்தான்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் நெற்றியில் ஆழ்ந்த சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன..

‘போடி பைத்தியக்காரி..! இப்ப இவன் கட்டியிருக் கிறதுதான் ஹீரோ வேசம்டி.. இவன் ஒரிஜினல் டிரேட் மார்க் வில்லன்டி..’

பொருமிக் கொண்டிருந்த சசிரேகா அவனைக் கவனிக்கவில்லை.. அவள் தன் துயரத்தில் ஆழ்ந்திருந்தாள்..

“நான் வேசம் போட்டதே இல்லைங்க.. ஒரிஜினலா எப்படி இருக்கேனோ அப்படியேதான் இருக்கேன்.. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு என்னைப் பாக்கிறவங்க பார்வையைப் பொறுத்துத்தான் எல்லாமே மாறுதுங்க..”

குத்தலாகச் சொன்னான் கருணாகரன்… இமையுயர்த்தி அவனைப் பார்த்த சசிரேகாவின் விழிகளில் முந்தைய இரவின் நிழல் அடையாளங்கள் ஏதும் மீதமிருக்கின்றதா என்று அவன் பார்வை கூர்மையாகத் தேடியது.. கசப்புடன் விழி திருப்பிக் கொண்டவளை சினத்துடன் பார்த்தான் அவன்..

“என்னவோ போங்க ஆபிசர்.. இந்த கலர் கலரான பழமொழிக்கெல்லாம் எனக்கு அர்த்தம் விளங்கித் தொலைக்காது.. எது சொல்றதா இருந்தாலும் நேரடியாச் சொன்னாத்தான் என் மண்டையில உறைக்கும்..”

“டியூப்லைட்டுன்னு சொல்லுங்க..”

“தேவைதாங்க எனக்கு.. உங்க பெண்டாட்டிக்குத் துணையா கொட்டற மழையில ரயிலேறி வந்து.. நடுக்காட்டில ரயில் நின்னு.. அதுக்கப்புறமா அவளைக் கடத்த வந்த உங்களை ஃபாலோ பண்ணின இவ பின்னால ஓடிவந்து.. இவ பட்ட கஷ்டத்த நானும் சேர்ந்து பட்டுன்னு.. நேத்து நைட் பூராவும் அல்லாடினேன் பாருங்க.. அதுக்கு இந்தப் பட்டம் மட்டும் போதாதுங்க ஆபிசர்.. இன்னும் ரெண்டு, மூணு பட்டத்தையும் யோசிச்சு நிதானமா சேர்த்துக் கொடுங்க ஆபிசர்..”

“நேத்து நைட் இவ பட்ட கஷ்டத்த நீங்களும் பட்டிங்களா..? இல்லையே.. தூக்கம் வருதுன்னு இவளை முன்சீட்டுக்கு பற்றி விட்டுட்டு பின்சீட்டில ஹாயா டிரெயினில ஏஸி பர்த்ல தூங்கிக்கிட்டு வர்றதைப் போல காலை நீட்டித் தூங்கிக்கிட்டில்ல வந்தீங்க.. மறந்துட்டிங்களா..?”

அவனுடைய துளைக்கும் பார்வை சசிரேகாவின் முகத்தையே அவதானித்துக் கொண்டிருந்தது.. வத்சலாவிடம் அவன் பேசும் ஒவ்வொரு பேச்சிற்கும் 

அவள் முகம் மாறுவதையும்.. உணர்வுகளை அவள் முகம் துல்லியமாக பிரதிபலிப்பதையும் அவன் கணக்கெடுத்துக் கொண்டுதான் இருந்தான்..

பின்சீட்டில் வத்சலா படுத்துறங்கி விட்டதை அவன் நினைவு படுத்திய நொடியில் சசிரேகாவின் உதடுகள் துடித்ததை கண்டு கொண்ட அவன் கண்கள் மின்னின.. அவன் முகத்தைப் பார்த்து விடாமல் சர்வ ஜாக்கிரதையாக வேறு திசையில் பார்த்த சசிரேகாவின் செயலில் அவன் பல்லைக் கடித்தான்..

“ஆஹா..! ஆபிசர் பாயிண்டப் பிடிச்சிட்டாரே.. அதெப்படி ஆபிசர் மறக்கும்..?”

“இல்லே.. சிலபேரு நடந்ததையெல்லாம் மறந்துடறாங்க.. அதான் கேட்டேன்..”

அடிபட்டவளைப் போல சசிரேகா அவனைப் பார்த்து வைக்க.. காத்திருந்த அவன் பார்வை அவள் பார்வையைக் கவ்விக் கொண்டது.. ஒரு நொடி பார்வையை விலக்க முடியாமல் திணறிப் போனாள் சசிரேகா.. ஆளை விழுங்கும் அவனது பார்வையின் ஆழத்தில் அவளுக்கு மூச்சுத் திணறியது.. மோக வெள்ளத்தின் சுழலில் அவள் மாட்டிக் கொண்டதைப் போல உணர்ந்தாள்..

‘தாம்.. தரிகிடோம்.. தீம்.. தீம்..’

அவள் மனதில் சிந்தா நதியின் சுழல் சுழன்றது.. இன்னது என்று வரையறுக்க முடியாத சிந்தா நதியின் சுழல்..! ஆழம் காண இயலா அதன் லாவகம்.. மூழ்கடிக்கும் மோக வெள்ளத்தில் சிந்தா நதியின் சுழலும் இணைந்து விட்டால் அவள் என்னவாகிப் போவாள்..?

“மத்தவங்களை விடுங்க ஆபிசர்.. நான் மறக்க மாட்டேன்..”

“நன்றிங்க.. அதென்ன இன்னமும் ஆபிசர்ங்கிற அடைமொழியை போட்டுக்கிட்டு..? அழகா அண்ணான்னு  கூப்பிடலாமே..”

“என்னது..?”

வத்சலா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வலியில் துடிப்பவளைப் போல பாவனை செய்தாள்..

“ஏய்ய்..! அடங்குடி..” எரிச்சலுடன் முணுமுணுத்தாள் சசிரேகா..

“எதுக்கு இந்த அடாவடி..?” கருணாகரன் விசாரித்தான்..

“சசி எனக்குக் கூடப் பிறந்தவளைப் போல ஆபிசர்..”

“அதுக்கு..?”

“அவளோட ஹஸ்பெண்ட் எனக்கு அத்தான் முறையாயில்ல ஆகனும்.. அண்ணன் முறை சொன்னா என் மனசு தாங்குமா..?”

கருணாகரனுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை.. அவன் இதுபோன்ற அதிரடிப் பதிலை எதிர் பார்த்திருக்கவில்லை.. தாடையைத் தடவியபடி சசிரேகாவின் முகத்தைப் பார்த்தான்.. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன..

“அத்தான் முறையில்ல ஆகனும்..?” என்று வத்சலாவின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டாள்..

“ஆ…” வத்சலாவுக்கு வலி தாங்கவில்லை..

“எதிலதான் வாயடிக்கிறதுன்னு விவஸ்தை யில்லை..? குரங்கே..!” சசியின் முகம் சிவந்திருந்தது..

“அதுக்காக இப்படியா அடிப்ப..?”

“அடிக்கிறதோட நிறுத்திக்கிட்டேனேன்னு சந்தோசப்படு.. உன்னை கொன்னிருக்கனும்..”

கோபத்தோடு திரும்பியவள் கருணாகரனின் ஆழ்ந்த பார்வையைக் கண்டதும் உதட்டைக் கடித்தபடி மௌனமாகி விட்டாள்..

“எல்லாம் உங்களாலே ஆபிசர்..” வத்சலா பாய்ந்தாள்.

“நானென்னங்க செய்தேன்..?”

“உங்களை யாரு ஆபிசர் அண்ணன் முறை சொல்லி பாசப்பயிரை வளர்க்கச் சொன்னது..?”

“ஏதோ சொந்தத்தில சொன்னதுங்க.. அது ஒரு தப்பா..?”

“தப்புத்தான்.. என் புருசன்தான், எனக்கு மட்டும் தான்ங்கிற பொஸசிவ் பிடிச்ச பொண்டாட்டிய பக்கத்தில வைச்சுக்கிட்டு என்னை மாதிரி யதார்த்தமா பேசறவளோட வாயைக் கிளறினா அது தப்புத்தான்.. இப்பப் பாருங்க.. என் முதுகு பழுத்திருச்சு.. உங்க பொண்டாட்டி டின் கட்டி விட்டுட்டா..”

வத்சலா ‘பொண்டாட்டி.. பொண்டாட்டி..’ என்று சொல்லும் போதெல்லாம் இனம் புரியாத ஓர் நூதன உணர்விற்கு ஆளானாள் சசிரேகா.. அந்த உணர்வு இதமானதொரு இம்சையை அவளுக்குள் விதைத்தது.. கருணாகரனின் ஆழ்ந்த பார்வைகள் வேறு அவளை அலைக்கழித்தன..

“ஒரு டவுட்டுங்க..”

“இந்த நிலைமையில உங்க டவுட்டை நான் கிளியர் பண்ணியாகனுமா ஆபிசர்..?”

“ஆமாங்க..”

“இரக்கம்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க போல.. கேளுங்க.. கேளுங்க..”

“ஆல்ரெடி உங்களுக்கு ‘ஆள்’ இருக்காருன்னு நேத்து நைட் காரில வந்தப்ப உங்க பிரண்டுகிட்ட சொல்லிக்கிட்டு வந்தீங்களே..”

“என்னது..? அதை நீங்க கேட்டுட்டீங்களா..?”

அவன் அதை மட்டும்தான் கேட்டானா.. அதற்கு மேலும் கேட்டானா என்று அதிர்ச்சியானாள் வத்சலா..

“ஒரே காரில டிராவல் பண்ணினோம்.. பின் சீட்டில நீங்க பேசினது முன்சீட்டில காரோட்டிக்கிட்டு இருந்தவன் காதில விழுந்திருக்காதா..?”

“நான் ரகசியமால்ல பேசினேன்..?”

“உங்க ரகசியக் குரலைப் பத்தி வெளியில சொல்லிராதீங்க..” கருணகாரன் தோள்களைக் குலுக்கினான்..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link