Chapter 12
வத்சலாவுக்கு லஜ்ஜையாகி விட்டது.. கருணாகரன் அவளையே பார்க்கிறான் என்று சசிரேகாவிடம் அவள் பினாத்தியதையும் அவன் கேட்டு விட்டானா என்ற வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது.. சசியைப் பார்த்தாள்.. அவள் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டாயா என்று முறைத்து வைத்தாள்..
“நீங்க ரகசியமாப் பேசினதே எட்டு ஊருக்கு கேட்குது.. சாதாரணமாப் பேசினா இந்த சுத்து வட்டாரத் துக்கே கேட்கும் போல இருக்கு.. எதுக்கும் நீங்க அக்கம் பக்கம் யாருமே இல்லாத நேரம் பார்த்து ரகசியம் பேசறது பெட்டர்ங்க..” கருணாகரன் சிரிக்காமல் யோசனை சொன்னான்..
“அக்கம் பக்கம் ஆளில்லாதப்ப எதுக்காக ஆபிசர் ரகசியம் பேசனும்.. ஸ்ட்ரெயிட்டா விசயத்துக்கு வந்திர வேண்டியதுதானே..”
“அதையும் செய்யலாம்..”
“நீங்க எதையோ செய்ங்க.. என்னோட ஆளை எதுக்காக இழுத்தீங்க..”
“நான் ஆம்பளைங்க.. இழுத்தா ஒன்னும் தப்பில்லை..”
“இதுவேறயா..? முடியல சாமி..”
“இல்லே.. நீங்க மட்டும் என் ஆளுதான் எனக்கு மட்டும்தான்னு நினைக்காம தாராள மனதோட உங்க ஆளை தண்ணி தெளிச்சு விட்டு விடுவீங்களா..?”
இதையும் சிரிக்காமல்தான் கேட்டு வைத்தான் கருணகாரன்.. வத்சலா அவனை தீர்க்கமாக ஓர் பார்வை பார்த்து விட்டுத் தோழியைப் பார்த்தாள்.. சசிரேகாவின் மனதிற்குள் பரவாயில்லையே, வத்சலாவையே பேச்சில் மடக்குகிறானே.. கில்லாடிதான் என்ற பாராட்டு தோன்றத் தான் செய்தது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதற்குத்தான் வாயை அடக்கு என்றேன், கேட்டாயா என்ற பதில் பார்வையை பார்த்து வைத்தாள்..
“இன்னைக்கு காலைல வரைக்கும் இவளும் நானும் ஒன்னு.. நீங்க மட்டும் வேறங்கிற மாதிரி சிச்சுவேசன் இருந்துச்சு.. இப்ப டோட்டலா நிலைமை தலைகீழா மாறிப் போயி இவளும் நீங்களும் ஒன்னு, நான் மட்டும் வேறங்கிற மாதிரி ஆகிப் போயிருச்சில்ல.. புருசனும், பெண்டாட்டியும் கூட்டணி போட்டுக்கிட்டு என்னை வாரத்தான் செய்வீங்க..” வத்சலா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்..
சசிரேகாவிற்கு வருத்தமாகி விட்டது.. அவளுக் கென்று இருக்கும் ஒரே துணை வத்சலா மட்டும்தான் என்பதில் அவள் மனம் இளகி விட்டது..
“விடுடி.. விளையாட்டுப் பேச்சை சீரியஸா எடுத்துக்கிட்டு..” தோழியை சமாதானம் செய்தாள்..
“உன் புருசன் பேசினா அது விளையாட்டுப் பேச்சு.. அதுவே நான் பேசினா அது வினையா..?”
“அப்படின்னு யார் சொன்னது..?”
“உன் ஆருயிர் கணவர்தான்..”
“அதெல்லாமில்ல.. நீ இன்னைக்கு நைட்டே ஊருக்குக் கிளம்ப வேணாம் வத்சலா.. நாளைக்குப் போ..”
“எதுக்கு..? உன் புருசன் என்னை மட்டம் தட்டறதை வேடிக்கை பார்க்கிறதுக்கா இருக்கச் சொல்ற..?”
“இல்லைடி.. எனக்குத் துணையா இருக்கச் சொல்றேன்.. எனக்குன்னு யாருடி இருக்கா..? நீ ஒருத்திதான் இருக்கிற.. நீயும் கிளம்பிப் போயிட்டியின்னா எனக்கு வெறிச்சுன்னு ஆகிரும் வத்சலா..” சசி ரேகாவின் குரல் தழதழத்தது..
“இருடின்னு சொன்னா இருந்துட்டுப் போறேன்.. அதுக்காக அழுவாச்சியாத்தான் பேசனுமா..?” தோழியை கட்டிக் கொண்டாள் வத்சலா..
அவள் உடனடியாகக் கிளம்பப் போவதில்லை என்பதில் சசிரேகாவின் மனதிலிருந்த தனிமையுணர்வு குறைந்தது.. வத்சலாவின் விரல்களோடு விரல்களைப் பிணைத்தபடி கருணாகரனைப் பார்த்தவள் திகைத்துப் போனாள்.. அவன் முகத்தில் கடுமை பரவியிருந்தது.. பிணைந்திருந்த தோழிகளின் கைகளை உறுத்துப் பார்த்தவன் எழுந்து போய் விட்டான்..
சசிரேகாவின் மனதில் விடுதலையுணர்வும் ஏமாற்றமும் ஒன்று சேர்ந்து தோன்றின.. அவளுக்கு அழ வேண்டும் போல இருந்தது.. வத்சலாவின் மடியில் முகம் புதைத்து அழ வேண்டும்.. மனதில் உள்ள பாரத்தை கண்ணீரில் கரைத்து விட வேண்டும்…
முடியவில்லை.. மனம் விட்டு அழுவதற்கும் வரம் வாய்த்திருக்க வேண்டும்.. அதை மறைத்து எதுவும் நடக்காததைப் போல சிரித்துப் பேசி வாழ வேண்டிய சூழலில் அவள் மனம் உழன்றாள்..
சும்மாவா சொல்லி வைத்தார் கண்ணதாசன்..?
‘சொல்லி அழுதால்
தீர்ந்து விடும்
அதைச் சொல்லத்தானே
வார்த்தையில்லை..’
என்று எழுதி வைத்தாரே.. மனித மனங்களின் பாரம் சுமக்கும் துயரைப் பற்றி அவர் அறிந்திருந்தாரா..?
“என்னடி..?”
சசியின் முகத்தை உள்ளங்கையில் ஏந்தி அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்து வத்சலா கேட்டாள்..
“ஒன்னுமில்லையே..” சோகையாக சிரிக்க முயன்றாள் சசிரேகா..
“ஒன்னுமில்லாததுக்கா உன் முகம் வாடியிருக்கு..? ம்ம்ம்..?”
தோழியின் அதட்டலில் பொலபொலவென கண்ணீர் உகுத்தாள் சசிரேகா.. பதறிப் போனவளாக தோழியை அணைத்துக் கொண்டாள் வத்சலா.. சசிரேகாவின் மனபாரம் குறைவதைப் போல இருந்தது..
“உன்னைக் கேட்காம முடிவு பண்ணின கல்யாணம்.. கஷ்டமாத்தான் இருக்கும்.. ஏத்துக்க முடியாதுன்னுதான் தோணும்.. ஆனா சசி.. இந்த கருணாகரன் ஹீரோ ரேன்ஜீக்கு இருக்கிறாரேடி.. அப்புறமும் எதுக்காக அழுகற..?”
அதைச்சொல்ல முடியாமல் மௌனக் கண்ணீர் விட்டாள் சசிரேகா.. வத்சலா யோசனையானாள்..
“ஒருவேளை பிரவினைக் கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு அழுகறியாடி..? அவன் புரபோஸ் பண்ணினப்பவே ஓகேன்னு சொல்லி கல்யாணம் பண்ணியிருந்திருக்கணும்.. அப்பக் கோட்டை விட்டுட்டு இப்ப அழுது என்னடி பிரயோசனம்..? கிடைக்காததை நினைத்து ஏங்குவதற்குப் பதில் கிடைச்சதை இறுக்கிப் பிடிச்சு வாழப் பழகிக்க சசி.. அதுதான் புத்திசாலித்தனம்..”
வத்சலா கூறிய தேறுதலில் சசிரேகாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது..
‘இவ என்ன சொல்கிறா..? பிரவீனை நினைச்சு நான் ஏங்கறேனா..? கடவுளே..!’
சசிரேகா மறுத்துப் பேச வாய் திறந்தபோது அறை வாசலில் நிழலாடியதைப் போல இருந்தது.. எட்டிப் பார்த்தாள்.. கருணாகரன் போய் கொண்டிருந்தான்..
‘இவன் இங்கேயா நின்னுக்கிட்டு இருந்தான்..? அப்போதே போனானே..’
சசிரேகாவிற்கு ‘திக்’கென்று இருந்தது.. வத்சலா பேசியதை அவன் கேட்டிருப்பானோ என்ற சஞ்சலம் அவள் மனதில் நிம்மதியை வதைத்துக் கொண்டிருந்தது..
‘கேட்டாக் கேட்கட்டும்..’ மனதுக்குள் வீம்பு எழுந்தது..
‘இவன் யோக்கியவானா..? என்னோட அப்பாம்மா வாழ்ந்த வீட்டை அங்குசாமி பெரியப்பாவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறதா ஆசை காட்டி என் கழுத்தில் தாலி கட்டினவன்தானே இவன்..!’
சசிரேகா வத்சலாவிடம் வந்தாள்.. என்னவென்று வினவியவளுக்கு ஒன்றுமில்லையென்று பதில் சொன்னாள்..
“வேலையைப் பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க சசி..?” வத்சலா கேட்டாள்..
“தெரியலை.. யோசிக்கணும்..”
“நம்ம லேடிஸ் ஹாஸ்டல்ல உன்னோட டிரஸ்ஸஸ் திங்க்ஸ்ன்னு நிறைய இருக்கே.. ரூமை வெகேட் பண்றதைப் பத்தி ஹாஸ்டலில் நீ சொல்லலை..”
“சொல்கிற மாதிரியா சிச்சுவேசன் இருந்துச்சு..?”
“அதுக்கு என்ன செய்யப் போற..?”
“பார்க்கலாம்..”
சசிரேகா விரல்களைக் கோர்த்துப் பிரித்தபடி சிந்தனையாக இருந்தாள்.. வத்சலா ஏதோ சொல்லிக் கொண்டிருக்க சிந்தனையுடன் தலையை அசைத்து வைத்தாள்.. அவர்களைத் தேடி வந்த கவிதா..
“சாப்பிட்டிருங்கம்மா.. அப்புறமா குளிச்சுட்டு தயாராகனுமில்ல..?” என்று சசிரேகாவிடம் சொன்னபோது அவளுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை..
“எதுக்குத் தயாராகனும்..?” என்று கவிதாவிடம் கேட்டுவைத்தாள்..
“அதுவா..?” கவிதா சிரித்தபடி சசிரேகாவின் கையைப் பிடித்து எழுப்பினாள்..
“இவ மண்டுங்க.. நான் விளக்கம் சொல்றேன்..” என்ற வத்சலாவிடம்..
“அதை அப்புறமா எடுத்துச் சொல்லும்மா.. இப்ப சாப்பிடப் போகலாம்… உங்களுக்காக எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க..” என்று சொன்னாள் கவிதா..
அவர்கள் சாப்பிடப் போனபோது உண்மையாகவே டைனிங் ஹாலில் இருந்தவர்கள் அவர்களுக்காக காத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள்..
நீண்டிருந்த டைனிங் டேபிளில் இருபக்கமும் நாற்காலிகள் போடப் பட்டிருந்தன.. அப்படிப்பட்ட டைனிங் ரூமை சசிரேகா அப்போதுதான் பார்க்கிறாள்.. ஒரு வீட்டின் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய ஹாலை டைனிங் ஹால் என்று பணக்காரர்கள் சொல்வார்கள் என்பதை அன்று கண்டுணர்ந்தாள் அவள்..
“கருணா பக்கத்தில உட்காரும்மா..”
கவிதா சசிரேகாவின் தோள்களைப் பிடித்து அழுத்தினாள்.. கருணாகரனின் பக்கத்தில் உட்கார்ந்த சசிரேகாவின் மனம் படபடத்தது.. வத்சலா எங்கே உட்காருகிறாள் என்று பார்த்தாள்.. அவளுக்கு எதிரே சற்றுத் தள்ளியிருந்த நாற்காலியில் வத்சலாவை உட்காரச் சொல்லிக் கொண்டிருந்தாள் கவிதா.. தோழிக்கும் அவளுக்குமான இடைவெளி அதிகரிப்பதைப் போல தோன்றியது சசிரேகாவிற்கு.. அவள் மனதில் பதுங்கியிருந்த தனிமையுணர்வு தலை தூக்கியது..
சுற்றிலும் பார்த்தாள்.. எங்கு பார்த்தாலும் தெரியும் செல்வச்செழுமையில் அவள் மனம் ஒட்டவில்லை..
‘இதற்கான விலை.. எனது தாயும், தந்தையும் வாழ்ந்த வீடா..?’ என்று மனம் கசந்தாள்..
டைனிங் ஹாலை நிறைந்திருந்த உறவினர்கள் அவளை அன்போடு பார்த்தார்கள்.. யார் எவர் என்று தெரியாமல் விழித்தாள் சசிரேகா.. ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்தி வைத்தால் விடிந்து விடும் என்பதால் பொத்தாம் பொதுவாக பேசிச் சிரித்தபடி பணியாள்களை பரிமாறச் சொல்லி விட்டு கருணாகரனுக்கும், சசிரேகாவிற்கும் மட்டும் தானே பரிமாற ஆரம்பித்தாள் கவிதா..
விருந்து அருமையாக இருந்தது.. அறுசுவை உணவு என்பது இதுதான் போல என்று நினைத்துக் கொண்டாள் சசிரேகா..
அருகிலிருந்த கருணாகரன் தாழ்ந்த குரலில் கூட அவளிடம் பேச முனையவில்லை.. இந்த லட்சணத்தில் அவனுடைய உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி.. அவன் தண்ணீர் குடிக்க குனிந்ததைப் பார்த்து விட்டு..
“நம்ப கருணா அதுக்குள்ள பொண்டாட்டிகிட்ட ரகசியம் பேச ஆரம்பிச்சுட்டாப்புல..” என்று கேலி பண்ணி வைத்தாள்..
சசி முதல்நாள் இரவுப் பயணத்தை நினைத்துக் கொண்டாள்.. கிடைத்த சின்னச் சின்னச் சந்தர்பங்களையும் விடாமல் பற்றிக் கொண்டு அவள் மனதில் மோக நெருப்பை மூட்டி விட்டவன் இவன்தானா என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்..
“உங்க வீட்டு டின்னர் சூப்பர்டி சசி.. இந்தச் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கறதுக்காகவே அடிக்கடி இங்கே வந்து போகலாம் போல இருக்கே..”
விருந்து முடிந்து வந்தவுடன் வத்சலா சொன்னாள்.. சசிரேகா பதிலேதும் சொல்லவில்லை..
“குளிச்சுட்டு வாடி..” என்று வத்சலா பாத்ரூமுக்குள் அவளைத் தள்ளி விட்ட போது அவளுக்கு எதுவும் தோன்றவில்லை..
இரவுக் குளியல் அவளுக்குப் பழக்கம்தான் என்பதால் இயல்பாக அதை எடுத்துக் கொண்டாள்.. காலையிலிருந்து திருமண மேடையின் ஹோமப்புகை.. திருமணச் சடங்குகள்.. புகுந்த வீட்டிற்கு வந்தது.. அது, இது என்று அலைச்சலாக இருந்ததில் அவளுக்கு கசகசவென்று இருந்தது.. குளித்து முடித்து நைட்டிக்கு மாறியவளுக்கு கண்கள் சொக்கியது..
“வெண்ணீர் குளியல்.. சுகமாய் தூக்கம் வரும்.. நீயும் தூங்குடி..”
வத்சலாவிடம் சொல்லியபடி கட்டிலில் விழுந்து போர்வையை போர்த்திக் கொண்டவளைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள் வத்சலா.. சசிரேகாவின் போர்வையைப் பிடித்து இழுத்து அவளை எழுப்பி உட்கார வைத்தாள்..
“உயிரைக் குறைக்காதே சசி.. என்னால முடியல..”
“ஏண்டி..?”
“நீ இன்னொஸென்டுன்னு தெரியும்.. இத்தனை இன்னொஸென்டுன்னு தெரியாது.. நீ பாட்டுக்குத் தூங்கப் கிளம்பற..?”
விசித்திரமாக சசிரேகாவைப் பார்த்தபடி கேட்ட வத்சலாவை அதைவிட விசித்திரமாக பார்த்தாள் சசிரேகா..
“என்னடி ஆச்சு உனக்கு..?”
“நீ..? என்னைக் கேட்கிறயா..? நேரம்டி சசி..”
“நேத்து நைட்டு நீ தூங்கிட்ட.. ஒரு பொட்டுக்கூட நான் கண்ணை மூடல.. தூக்கம் சொக்குதுடி வத்சலா.. தூங்க விடு..”
“அப்படியே அடிச்சேன்னா பாரு.. தூங்கறதுக்கு எந்த ராத்திரியை செலக்ட் பண்ணியிருக்கிற..?”
“ஏன்..? இந்த ராத்திரிக்கென்ன..?”
“என்னவா..? சசி.. உனக்குக் காலையிலே கல்யாணம் ஆகியிருக்கு..”
“அதுக்கு..?”
“இன்னைக்கு நைட் உனக்கு பர்ஸ்ட் நைட்டில்லையா..?”
‘கடவுளே..!..’ வியர்த்துப் போனாள் சசிரேகா..
இப்படி ஒன்று இருக்கிறதா..? இதை ஏன் சசிரேகா மறந்து போனாள்.. கருணாகரனை எவனோ ஒருவனைப் போலப் பார்த்தபடி ஒதுங்கி வாழ்ந்துவிட அவளால் முடியுமா..?
“அசமஞ்சம் போல நிக்காம இந்த டிசைனரி சேலையைக் கட்டிக்க.. இந்த விசேசத்துக்குன்னே
பார்த்துப் பார்த்து எடுத்த சேலையாம்.. உன் நாத்தனார் கொடுத்தாங்க..”
சசிரேகாவின் கைகளில் அந்தப் புத்தம் புது சேலையைத் திணித்தாள் வத்சலா.. மிகமிக அழகாக இருந்த சேலையின் வேலைப்பாடுகளில் மனதைச் செழுத்த முடியாமல் விதிர்த்துப் போய் நின்றாள் சசிரேகா..
‘இதிலிருந்து தப்பிக்க முடியாதா..?’
“ஆக்சுவலா உன்னோட ரூம் மாடியில இருக்கிற உன் புருசனோட ரூம்தானாம்.. நல்ல நேரம் பார்த்து உன்னை அந்த ரூமுக்குள்ள அனுப்பனும்னு இங்கே தங்க வைச்சாங்களாம்.. உன் நாத்தனார்தான் சொன்னாங்க. இன்னையில இருந்து நீ உன் புருசன் ரூமிலதான் இருந்தாகனும்.. புரிஞ்சதா..?”
சசிரேகா மிரண்டாள்.. அவள் மிரட்சியை புதுமணப் பெண்ணின் மிரட்சி என்று எடுத்துக் கொண்டாள் வத்சலா.. அவளே சசியின் கையிலிருந்த புடவையைப் பிடுங்கி கட்டி விட்டாள்.. தலை வாரித் தழையப் பின்னலிட்டு அதில் மொட்டுக்களாக நெருக்கிக் கட்டப் பட்டிருந்த மல்லிகைப் பூச்சரத்தை வைத்து விட்டாள்.. அதிக நகைகளைத் தவிர்த்த எளிமையான அலங்காரத்தில் சசிரேகா தேவைதையைப் போல மிளிர்ந்தாள்..
“மயக்கறேடி.. ஆபிசர் உன்னைக் கண்டதும் அல்வா சாப்பிடறதைப் போல அலேக் பண்ணப் போறார் பாரேன்..” வத்சலா திருஷ்டிகழித்தாள்..
“ரெடியா..?” கவிதா வந்து விட்டாள்..
அவளும் வத்சலாவும் சசிரேகாவை மாடியறையின் வாசலில் கொண்டு போய் நிறுத்தினார்கள்..
“போடி..” என்று வத்சலா நெட்டித் தள்ளினாள்..
சசிரேகாவின் கால்கள் பின்னின.. முதல்நாள் அவள் உணர்ந்த அவனது ஸ்பரிசங்களின் நினைவில் அவளுக்குள் மோகத்தீ மூண்டது.. தள்ளி நிற்க வேண்டிய கட்டாய மில்லை என்பதை அவள் கழுத்தில் புரண்டு கொண்டிருந்த கனத்த தாலிச்சரடு சொல்லியது.. அடிவயிறில் பந்து உருள அவள் கருணாகரனின் அறைக்குள் பிரவேசித்தாள்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.