Chapter 15

0Shares

“பிரவீன்.. பிரவீன்.. பிரவீன்..! அவன் பெயரைச் சொல்லி உங்க பித்தலாட்டத்தை நியாயப் படுத்தப் பார்க்கறிங்களா..?”

“கத்தாதே..”

“நீங்க கத்த வைக்காதீங்க.. யாருங்க நீங்க..?”

“உன் புருசன்..”

“இப்பத்தான் என் புருசன்.. இதுக்கு முன்னாலே எனக்கு நீங்க யாரு..?”

அவன் அசையாமல் அவளைப் பார்த்தபடியே நின்றான்.. புரிபடாத அவன் பார்வையிலே குழம்பிப் போனாலும் கேட்க வேண்டிய கேள்விகளை சசிரேகா அடுக்க ஆரம்பித்தாள்..

“இதுக்கு முன்னாலே உனக்கு நான் யாரோதான்.. அதுக்கு இப்ப என்ன..?”

“அப்படியிருக்கிறப்ப எந்த உரிமையில என் வீட்டைத் தானம் கொடுக்க நீங்க துணிஞ்சீங்க..? தானம் கொடுக்கிறதா இருந்தா உங்க பொருளைக் கொடுக்கனும்.. அடுத்தவங்க பொருளைக் கொடுக்கறேன்னு வாக்குக் கொடுக்கக் கூடாது..”

“நீ அடுத்தவ இல்லை.. என் பெண்டாட்டி..”

அந்த நிலையிலும் அந்த வார்த்தை இனித்துக் தொலைத்தது.. அவளைக் கவிழ்க்கவென்று வேண்டு மென்றே அந்த வார்த்தையை அழுத்தமாக உச்சரிக் கிறானோ என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது..

“உங்க பெண்டாட்டியா இருந்தா அவ உங்களுக்கு அடிமையாகிருவாளா..?”

“உரிமையாகிருவா..”

விடாமல் அவன் பேசிய விதத்தில் அவளுக்கு வெறி வெறியாக வந்தது.. எங்கிருந்து இவன் வந்தான் என்று அவள் வெகுண்டாள்.. அவளுக்கான கல்யாணம் சிறைமீட்பாக இல்லாமல் இன்னொரு சிறையாக இருப்பதா..? 

“அப்படி அவளோட சொத்துக்களை உரிமை கொண்டாடத்தான் அவ கழுத்தில தாலியைக் கட்டி பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டிங்களா..?” வேகத்துடன் அவள் கேட்டாள்..

“ஆமாண்டி.. எனக்கு சொத்து சுகம் இல்லை.. உன் கழுத்தில தாலியைக் கட்டி உன்னோட ஓட்டை உடைசல் வீட்டைச் சொந்தம் கொண்டாடத்தான் நான் திட்டம் தீட்டினேன்.. எனக்கு இருக்க வீடில்லை பாரு.. வந்துட்டா நியாயம் பேச.. இதையெல்லாம் எவன்டி உன் காதில ஓதினது..?”

“எங்க வீடொன்னும் ஓட்டை உடைசல் வீடில்லை..”

“ரோசத்துக்கு வராம நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு…”

“உங்க தங்க அங்குசாமி மாமனார்தான் செப்பினார்..”

“நான் நம்ப மாட்டேன்..”

“ஏனுங்க..? அவரென்ன அப்படியாப்பட்ட உத்தம புத்திரருங்களா..?”

இமைகளை அவள் கேட்ட விதத்தில் அவன் கவரப் பட்டான்.. அப்படியே அவளைக் கடித்துத் தின்று விடலாம் போல அவனுக்கு இருந்தது..

‘இவ பண்ற அழும்புக்கு..’ அடி உதட்டை மடித்துக் கடித்தபடி ஆழ்ந்து பார்த்து வைத்தான்..

சசிரேகாவின் முகம் சிவந்தது.. அவளை ஆகர்ஷிக்கும் அவனது ஒவ்வொரு செய்கையும் அவளது மன உறுதியைக் குலைப்பதாகவே இருந்ததில்..

‘இவன் வேண்டுமென்றே செய்கிறான்..’ என்று அவள் கோபம் கொண்டாள்..

“உத்தம புத்திரர் வெளியே சொல்லிருவார்.. இவரைப் போல அடுத்தவங்க சொத்துக்கு ஆளாப் பறக்கிற மனுசர் சொல்ல மாட்டார்..”

“பரவாயில்லையே.. மனுசங்களைச் சரியாத்தான் எடை போட்டு வைச்சிருக்கீங்க..” அவள் பாராட்டினாள்..

“வஞ்சகப் புகழ்ச்சியா..?” நம்பாத குரலுடன் அவன் கேட்டான்..

“இதென்னங்க வம்பாப் போச்சு..? உங்க திறமையைப் பாராட்டினா அது குத்தமாங்க..?” போலியாக அவள் அலுத்துக் கொண்டாள்..

“நீ சொல்வதும் சரிதான்..”

“பார்த்தீங்களா.. நீங்களே ஏத்துக்கிட்டிங்க..”

“நான் மனுசங்களை எடை போடறதில் திறமை சாலிதான்..” 

அவன் கண்கள் இடுங்கின..

‘ஆஹா..! மாப்பிள்ளை ஏதோச் சொல்லப் போறான்..’ அவளது அனுமானம் சரியாக இருந்தது..

“உன்னை எடை போடறதிலதான் நான் சொதப் பிட்டேன்..” என்று அவன் திருவாய் மலர்ந்தருளினான்..

“அப்படி என்னத்தை சொதப்பிட்டிங்க மச்சான்..?” என்று அவளும் கேட்டு விட்டாள்..

“மச்சானா..?” அவன் கள்ளூரும் போதையுடன் பார்த்து வைக்க.. அவள் ஒற்றை விரலை உயர்த்தி..

“பேச்சு பேச்சா இருக்கனும்..” என்று முன் ஜாக்கிரதையாக எச்சரித்து வைத்தாள்..

“இல்லேன்னா.. என்னடி செய்வ..? அடிச்சுருவியா..?”

“டிராக் மாறாதீங்க.. என்னை எப்படி எடை போட்டிங்க.. பிரவீனைக் காதலிச்சுட்டு.. வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி தியாகி பட்டம் வாங்கப் போய்க்கிட்டு இருந்தவ வழியில உங்களைப் பார்த்ததும் ஜொள்ளு விட்டேன்னுதானே எடை போட்டிங்க..?” அவள் பட்டவர்த்தனமாக போட்டுத் தாக்கி விட்டாள்..

“சசி..” அவன் ஏதோ சொல்ல முனைந்தான்..

“ஊஹீம்..” ஒற்றை விரலை ஆட்டி மறுத்தவள்..

“சசின்னு கூப்பிடாதீங்க.. இவ்வளவு மட்டமா என்னை எடை போட்டுட்டு சசின்னு கூப்பிட உங்களுக்கு எப்படி வாய் வருது..?” என்று குமுறினாள்..

“உன் பிரண்டுதான் சொன்னாள்..”

“என்னன்னு..?”

“பிரவீன் உன் காதலன்னு.. உன் முன்னாலேதான் சொன்னாள் நீயும் அதை மறுக்கலை..”

“சொல்லுவீங்க சார்.. இதை மட்டுமா சொல்லுவீங்க.. இதுக்கு மேலேயும் சொல்லுவீங்க.. நேத்து ராத்திரி காரில டிராவல் பண்ணினப்ப நான் குத்துயிரும் குலையுயிருமா இருந்தேன்.. அவ என்ன சொன்னான்னு கவனிக்கிற நிலைமையில நானில்ல..”

“அந்த பிரவீனுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லைங்கறியா..?”

“அதுக்கான விளக்கத்தை உங்களுக்குச் சொல்லனும்கிற அவசியம் எனக்கில்லைங்கறேன்.. என் பிரண்டு சொன்னாளாம்.. இவர் அதைக் கேட்டாராம்.. நீங்ககூட அவளையே உத்து உத்துப் பாத்தீங்களாம்.. சைட்டடிச்சீங்களாம்.. ஜொள்ளு விட்டீங்களாம்.. இதையும் அவதான் சொன்னா.. உங்க முன்னாலதான், காருக்குள்ள வைச்சு என் காதில சொன்னா.. நீங்க அதை மறுக்கலைன்னு நான் சொல்லவா..?”

“சேச்சே..! வத்சலா என் தங்கை மாதிரி..”

“அவ உங்களை அத்தான் மாதிரின்னு சொன்னாளே.. அது உங்களுக்கு மறந்து போச்சா..?”

“நீ வேணும்னே விதண்டாவாதம் பேசற..”

“உண்மையைத்தான் பேசறேன்.. இங்க கிளம்பி வர்றதுக்காக முகம் கழுவிக்க அங்குசாமி பெரியப்பாவோட ரூமில இருக்கிற பாத்ரூமுக்குப் போனேன்.. நான் உள்ளே இருக்கிறது தெரியாம ரூமுக்குள்ளே நுழைந்து பெரியப்பாவும் பெரியம்மாவும் பேசிக்கிட்டது என் காதில விழுந்து தொலைச்சுச்சு.. தெள்ளத் தெளிவா பெரியப்பா சொன்னார்.. அன்னவாசல் சொத்துக்கள என் தம்பி பேருக்கு பத்திரம் போட்டுக் கொடுத்துப் பணம் வாங்கி கார மங்களத்தில வீட்டை வாங்கிப் போட்டேன்.. அந்தப் பத்திரம் எப்படியோ கருணாகரனோட கைக்குப் போயிருச்சு.. அதைத் திருப்பிக் கொடுக்கனும்னா இந்த அநாதைக் கழுதையை அவனுக்குக் கட்டித் தரனும்னு சொல்றான்னு சொல்லிக்கிட்டு இருந்தார்..”

“அப்படியா சொன்னார்..? என்ன தைரியம்..? என் முன்னாலே சொல்லியிருக்கனும்.. உண்டு இல்லைன்னு ஒரு வழி பண்ணியிருப்பேன்..”

“நீங்க சொல்லாததையா அவர் சொன்னார்..?”

“அதைச் சொல்லலை..”

“வேற எதைச் சொன்னீங்க..?”

“உன்னை அநாதைக் கழுதைன்னு சொல்லி யிருக்காரே.. அதைச் சொன்னேன்..”

“நான் அநாதைதானே..?” துக்கத்துடன் அவள் கேட்டாள்..

“சசி..” அவன் விழிகளில் அதிர்வு வந்தது..

“என்னைப் பெத்தவங்க மட்டும் உயிரோடு இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..?” தன்னிரகத்தில் அவள் அழுது விட்டாள்..

“ஏய்ய்.. உனக்கு நானில்லையா..?” கருணாகரன் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள முயன்றான்..

“தொடாதீங்க..” அவன் கையைத் தட்டி விட்டு அவள் நகர்ந்து போனாள்..

“ஏய்ய்.. நான் உன் புருசன்டி..”

“எங்கப்பாம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படியொரு புருசனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்க மாட்டாங்க..”

“சசி..”

“ஏற்காடு வீட்டையும் உங்க பேருக்கே மாத்தித் தரேன்னு கருணாகரன் சொல்லியிருக்கான்னு பெரியப்பா சொல்றாரு.. ஆஹான்னு பெரியம்மா மகிழ்ந்து போகிறாங்க.. அன்னவாசல் சொத்துக் கூட பெரிசில்லை.. என்னோட அப்பாம்மாவே உயிரோடு இல்லை.. அந்தச் சொத்து எனக்கெதுக்கு..? ஆனா ஏற்காடு வீடு..? அது சொத்தில்லைங்க.. என் உயிர்..! எங்கப்பாம்மா வாழ்ந்த இடம்.. அவங்க மூச்சுக்காத்து நிறைந்திருக்கிற கோவில்..! உங்களுக்கு வேணும்னா அது ஓட்டை உடைசல் வீடா இருக்கலாம்.. நீங்க மாளிகையில வாழ்கிறவர்.. பெரிய பணக்காரர்.. எனக்கு அதுதாங்க பொக்கிசம்..”

“சசி..”

“வேண்டாம்ங்க.. என்னை அப்படிக் கூப்பிடாதீங்க.. சசிரேகான்னே கூப்பிடுங்க.. இப்படிப்பட்ட புருசனோட வாழ்கிற வாழ்க்கை எனக்கு வேணாம்.. நான் போறேன்..”

அழுது சிவந்திருந்த முகத்தைத் துடைத்தபடி உறுதியுடன் சசிரேகா சொன்னாள்.. கருணாகரனின் முகத்திலிருந்த குற்ற உணர்வு மறைந்து கோபம் வந்து சேர்ந்தது..

“எங்கே போற..?”

“சென்னைக்கு..”

“என்ன..? அங்கே என்ன இருக்கு..?”

“என் வேலையிருக்கு..”

“கூடவே பிரவீனும் இருப்பானே..”

சசி கருணாகரனை முறைத்துப் பார்த்தாள்.. அவன் கோபத்தை அடக்கிக் கொள்ள பிரயத்தனங்களை 

மேற் கொண்டிருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. ஆனாலும் அவள் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை..

“இப்படிப்பட்ட நினைப்பை வைச்சிருக்கிறவர் கூட என்னால வாழ முடியாது..”

“முடியலைன்னா விடு.. நானும் உன்னை அழைக்கலை.. அதுக்காக சென்னைக்குப் போறேன்னு ஆரம்பிச்ச.. நான் நானா இருக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்..”

“இந்த வீட்டில உங்ககூட இருந்தா நானும் நானாக இருக்க மாட்டேன்தான்..”

“ஏய்ய்..”

அவன் திரும்பவும் அவள் கழுத்தில் கையை வைக்க அவள் தள்ளி நின்று விட்டாள்..

“கொன்னு புதைச்சிருவேன்.. பேசாம படு..”

“இந்தக் கட்டிலிலேயா..? நான் மாட்டேன்..”

சசிரேகா போர்வையையும், தலையணையையும் உறுவி தரையில் விரித்துப் படுத்து விட்டாள்.. கருணாகரன் வந்து தலையணையை உதைத்த வேகத்தில் அது விட்டத்தை நோக்கிப் பறந்தது..

“என்ன..? ரௌடித்தனம் பண்றீங்களா..?” சசிரேகா கொதிப்புடன் கேட்டாள்..

“நான் ரௌடித்தனம் பண்ணினேன்னு வைய்யி.. நீ தாங்க மாட்ட.. பஞ்சு.. பஞ்சா பறந்திருவ.. பாவம்.. சின்னப் பெண்ணாச்சேன்னு நான் அடக்கி வாசிக்கிறதினால தப்பிச்சிருக்கடி.. எழுந்திரு..”

“எதுக்கு..?”

அவள் சந்தேகமாக நகர்ந்து உட்கார்ந்ததில் அவளைத் துவம்சம் பண்ணி விடும் வெறி அவனுக்குள் வந்தது.. அவளைச் சூறையாடக் காரணம் தேடி அவள் மீதான அவனது மோகம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.. அதை அறியாமல் தகராறு செய்து கொண்டிருந்த சசிரேகாவை என்ன செய்வது என்று பற்களை நறநறத்தான் கருணாகரன்..

“ம்ம்ம்.. உன்கூட குடும்பம் நடத்தறதுக்கு.. வர்றியா..?”

சசிரேகாவின் விழிகளில் திகிலுடன் கூடிய எதிர்பார்ப்பு வந்தது.. வேட்டையாடப் படுவதை விரும்பும் புள்ளி மான்களை படுக்கையறையில் மட்டுமே பார்க்க முடியும்.. ஆண்சிங்கம் மானை வெறித்தபடி பக்கத்தில் வந்தது.. சசிரேகா பதறி நகர்ந்ததில் அப்படியே நின்று விட்ட கருணாகரன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு கட்டிலுக்குத் திரும்பினான்..

‘அப்பாடி.. போயிட்டான்..’ ஏமாற்றத்துடன் கூடிய நிம்மதி சசிரேகாவின் மனதில் வந்தது..

மலர்ச்சரங்கள் தொங்கிய இரட்டைக் கட்டிலை அணுகிய கருணாகரன் அவளைத் திரும்பிப் பார்த்தான்..

‘வந்திருவானோ..’ ஸ்தம்பித்துப் போன சசிரேகாவின் இதயம் ஓர்நொடி நின்று மறுநொடியில் வேகமாக அடித்து வைத்தது..

அவள் பயந்ததைப் போலவே கருணாகரன் அவளருகில் வந்தான்.. குனிந்தான்.. அவள் இடுப்பில் கை கொடுத்துக் தூக்கி விட்டான்.. கட்டிலை நோக்கி நடந்தான்..

“விடுங்க.. என்னை விடுங்க..”

அவள் திமிறினாள்.. இரும்புப் பிடியாக அவன் பிடி இருந்தது.. அவளைக் கட்டிலில் போட்டவன் அவள் மேல் கவிழ்ந்தான்.. அவள் கட்டிலின் மறு கோடிக்கு புரண்டாள்.. அவன் வாகாக காலை நீட்டிப் படுத்து கட்டிலின் தலைமாட்டிலிருந்த விளக்கை அணைத்து விட்டு..

“தூங்குடி..” என்றபடி கண்களை மூடிவிட்டான்..

சற்று நேரத்தில் சீரான சுவாசம் அவனிடமிருந்து கிளம்பியது.. கட்டிலின் மறுகோடியிலிருந்த சசிரேகா மட்டும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள்..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link