Chapter 16
குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவினாள் சசிரேகா.. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்ததில் கண் இமைகள் வீங்கி கண்கள் சிவந்திருந்தன.. விடியும்
போது தூங்கி விட்டவளை தூங்கட்டும் என்று விடாமல் இரக்கமின்றி எழுப்பி விட்ட கருணாகரனை எரிச்சலுடன் திட்டினாள்..
“இவன் குறட்டை விட்டுத் தூங்கியிருந்தா மத்தவங்களும் அப்படித்தான் தூங்கியிருப்பாங்கன்னு நினைச்சுக்கிறதா..? மடையன்..! இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ள எழுப்பி விட்டுட்டான்..”
மூடியிருந்த பாத்ரூமின் அறைக்கதவைத் தைரியமாக பார்த்தபடி இன்னும் கொஞ்சம் திட்டித் தீர்த்து விட்டு கதவைத் திறந்து வெளியில் வந்தாள்.. ஈரமுகத்துடன் இருந்தவளை கழுகு பார்வை பார்த்தபடி டவலை நீட்டினான் கருணாகரன்..
‘நான் கேட்டேனா..?’
முகத்தைச் சுளித்தபடி அவளுடைய பெட்டியெங்கே என்று தேடினாள் சசிரேகா..
“ஷெல்பில் இருக்கு…” டவலைத் தூக்கிப் போட்டபடி கருணாகரன் அறிவித்தான்..
அவனை முறைத்தபடி சுவரோடு பதிக்கப் பட்டிருந்த மர அலமாரியைத் திறந்தாள்.. உள்ளே அவளுடைய பெட்டி இருந்தது.. திறந்து டவலை எடுத்து முகத்தைத் துடைத்தாள்.. அதற்குள் ஈர முகம் உலர்ந்திருந்ததில் அவன் கேலியாக அவளைப் பார்த்தான்.. அவள் ‘போடா’ என்பதைப் போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
“காபி வந்திருக்கு.. அதான் உன்னை எழுப்பினேன்.. இல்லேன்னா உன்கிட்ட மடையன்னு திட்டு வாங்கனும்னு எனக்கு ஆசையா என்ன..?”
அவளை அடிக் கண்ணால் பார்த்தபடி டீப்பாயி லிருந்த காபிக் கப்பை அவன் காட்டினான்..
‘பாத்ரூமில தாழ்ப்பாள் போட்டுட்டுத்தான இவனைத் திட்டினேன்..? அதையும் தாண்டி இவன் காதில விழுந்து தொலைச்சிருக்கா..? மடையன்ங்கிற வார்த்தை மட்டும் தான் கேட்டுச்சா.. இல்ல.. ஒட்டு மொத்தமா நான் திட்டித் தீர்த்த அத்தனையும் கேட்டுச்சிருச்சா..’
“எல்லாமே கேட்டிருச்சு..” அவன் நிதானமாக காபியை உறிஞ்ச ஆரம்பித்தான்..
அவளால் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. புறமுதுகு காட்டியபடி காபியைக் குடிக்க ஆரம்பித்தாள்..
‘காபியைக் குடிச்சுட்டு கட்டில்ல விழுந்திரனும்..’
லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கும்போது மற்ற நாள்களில் விட்ட தூக்கத்தை ஞாயிறு முழுவதும் தூங்கி சரிசெய்து விடுவாள் சசிரேகா.. அந்த நினைவில் காரமங்களத்திலும் தூக்கம் போட்டு விடலாமென்று அவள் திட்டம் தீட்டி முடிப்பதற்குள் அறைக்கதவு தட்டப்பட்டது..
‘யாரா இருக்கும்..’
அவள் புறமுதுகு காட்டுவதை கைவிட்டு அவன் பக்கம் திரும்பி முகம் பார்த்தாள்.. அவன் அறைக் கதவை கைகாட்டி..
“திற..” என்றான்..
“நானொன்னும் உங்க வேலைக்காரி இல்லை..” கடுமையாக சொன்னாள்..
“அட..! வேலைக்காரிக்கா நான் காபியை ஆற்றி வைச்சுக்கிட்டு காத்திருக்கப் போறேன்..? நீ என் வீட்டுக்காரிடி.. அதான் காபிக்கப்ப கையில வைச்சுக்கிட்டு உன்னை எழுப்பி விட்டேன்.. முகம் துடைக்க டவலைக் கொடுத்தேன்.. இன்னும் கை, காலை அமுக்கி விடனுமா..? சொல்லு.. அதையும் செய்றேன்.. இதையெல்லாம் வீட்டுக்காரிக்குத்தாண்டி செய்ய முடியும்..” அவன் அடுக்கியதில்..
“போதுமே..” என்று முகம் சிவந்து விட்டாள் சசிரேகா..
அந்த முகச்சிகப்பை ரசனையுடன் பார்த்தவனுக்கு மழை நாளின் இரவுப் பயணம் நினைவுக்கு வந்தது..
‘அப்பவும் இப்படித்தான் முகம் சிவந்தா.. இவ வெட்கப்படறப்ப தக்காளிப்பழம் போல கன்னம் சிவந்திருதே.. எப்படி..?’
செண்பகப் பாண்டியன் தனது பட்டத்து ராணியின் கூந்தலில் இருந்து வந்த நறுமணத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியதைப் போல கருணாகரன் அவன் மனைவியின் வெட்கச் சிவப்பைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி விட்டான்..
“கருணா..”
கதவுக்கு வெளியே கவிதாவின் குரல் கேட்டதில்.. ‘நீ போ, நான் போ..’ என்று வழக்கடித்துக் கொண்டிருந்த சசிரேகா ‘கப்..சிப்..’பென்று அடங்கிப் போனவளாக கதவை நோக்கி விரைந்தாள்..
அவளை குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் கருணாகரன்.. கதவருகே போனவள் அவனது குறுஞ்சிரிப்பைப் பார்த்து விட்டாள்.. அவளையுமறியாமல் அவள் நாக்கைத் துருத்தி அழகு காட்டி விட அவன் கண்களில் மின்னல் வந்தது..
சசிரேகா கதவைத் திறந்ததில் உள்ளே வந்த கவிதா தம்பி மனைவியை ஆதுரத்துடன் பார்த்தாள்.. அவள் பார்வை சசிரேகாவின் பாதாதிகேசம் முதல் அளவிட்டதில் சசிரேகா கூச்சம் கொண்டாள்.. கருணாகரனுக்கோ சிரிப்பு வந்தது..
“அவளை ஏன் முறைக்கிற..?”
கவிதாவின் கவனத்தை அவன் திசை திருப்பியதில் சசிரேகா நன்றியுடன் அவனைப் பார்க்க அவன் கண்களில் மறுபடியும் மின்னல் வந்தது..
“உன் பெண்டாட்டியை சும்மா பார்த்தாக்கூட முறைக்கிறதா நீ கதை கட்டி விடுவியா..?”
கருணாகரனை செல்லமாக கடிந்து கொண்டவள் சசிரேகாவை அன்புடன் பார்த்தபடி..
“குளிச்சுரும்மா..” என்றாள்..
‘அதுக்குள்ளேயா..? நான் தூங்கனுமே..’ சசிரேகா ஏக்கத்துடன் கட்டிலைப் பார்த்தாள்..
‘சரியாப் போச்சு..’ கருணாகரனுக்கு மறுபடியும் சிரிப்பு வந்து விட்டது..
முதல் இரவு முடிந்த மறுநாள் காலையில் அதற்குள் குளிக்க வேண்டுமா என்ற தயக்கத்துடன் புதுமணப் பெண் கட்டிலை ஏக்கத்துடன் பார்த்தால் அதைப்
பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்..?
‘இவளுக்கு இதுகூட தெரியலையே..’
அந்த அறியாமை அவனை வசீகரித்தது.. கவிதா சங்கடத்துடன் சிரித்தபடி..
“கோவிலுக்குப் போகனும்மா.. இல்லைன்னா உங்க ரெண்டு பேரையும் நான் தொந்தரவு செய்திருப்பேனா..?” என்றாள்..
“கோவிலுக்குப் போகனுமா..? எந்தக் கோவிலுக்கு..?” சசிரேகா கேட்டாள்..
“நம்ம குலதெய்வம் கோவிலுக்கும்மா… அதுக்குத்தான் உன்னை சீக்கிரமா குளிச்சு ரெடியாகச் சொன்னேன்.. கோவிலுக்குப் போயிட்டு வந்த பின்னாலே நீ தொந்தரவில்லாம கருணாகரன் கூடப் பேசிக்கிட்டு இருக்கலாம்..”
கவிதா தயக்கத்துடன் சொன்னாள்.. அவளது தயக்கமும் சங்கடமும் எதற்காக என்று தெரியாமல் விழித்தாள் சசிரேகா.. அதிலும் அவள் கருணாகரனுடன் தொந்தரவில்லாமல் பேசிக் கொண்டிருக்கலாமா..?
‘என்ன அலுவலுக்கு..?’
எரிச்சலுடன் நினைத்தவளின் புத்தியில் மணியடித்தது..
‘அடக்கடவுளே..! இவனுடன் நான் சல்லாபிக்க ஆசைப்படுவதாக அண்ணி நினைத்துக்கிட்டாங்களா..?’
திருதிருத்தபடி கருணாகரனைப் பார்த்தாள்.. அவன் நமட்டுச்சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் நிலைமையை அவன் வேடிக்கை பார்ப்பதை புரிந்து கொண்டவள் அவனை முறைத்தாள்..
‘இவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கு..’
சொல்லித் தொலைத்திருந்தால் என்ன என்று அவள் சைகையில் கேட்டாள்.. என்ன தேவைக்கு என்று அவன் பதிலுக்கு சைகை செய்தான்.. உன்னுடைய அக்காதானே என்று இவள் சைகை செய்தாள்.. ஆனால் பிரச்னை உன்னுடையதுதானே என்று அவன் தோளைக் குலுக்கினான்..
இருவரும் இந்த லட்சணத்தில் சைகை செய்து கொண்டிருந்ததைப் பார்த்த கவிதாவின் சங்கடம் கூடியது..
“சரி..சரி.. நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா குளிச்சுட்டுக் கிளம்பி வாங்க.. எனக்கு வேலை நிறைய இருக்கு..” என்று அவர்கள் முகத்தைப் பார்க்காமல் கூறியபடி அவசரமாக ஓடி விட்டாள்..
பின்னங்கால் பிடறியில் பட ஓடியவளை விசித்திரமாக பார்த்து வைத்த சசிரேகா..
“ஏன் இப்படி ஓடறாங்க..?” என்று கருணாகரனிடம் விளக்கம் கேட்டாள்..
“உனக்கு நாத்தனாரா ஆகிற வரம் வாங்கியிருக் காங்கள்ல.. அதான் அப்படி ஓடறாங்க..” அவனும் விளக்கம் சொன்னான்..
“அப்படியில்ல சாரே.. உங்களப் போல ஒரு தம்பிக்கு அக்காவா பிறந்திருக்கும் வரம் வாங்கியிருக்காங்கள்ல.. அதான்.. அப்படி ஓடறாங்க..” என்றாள் அவள்..
“என்னவோ ஒன்னு.. ஆனா இப்போ அக்காவை துரத்தினது நானில்லை கண்ணு.. நீதான்..” என்றான் கருணாகரன்..
“நானா..?”
“நீயேதான்..”
“நானென்ன பண்ணினேன்..?”
“குளிச்சுட்டு வான்னு சொன்னா கட்டிலை ஏண்டி ஏக்கமா பார்த்து வைச்ச..?”
கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. எதற்காக இப்படிச் சிரிக்கிறான் என்று விளங்காமல் அவள் விழித்தபடி..
“இதென்ன வம்பாப் போச்சு.. நேத்து நைட்டு பூராத் தூங்கலை.. இப்பவாவது தூங்கலாமேன்னு நினைச்சுக் கட்டிலைப் பார்த்தேன்.. அது ஒரு குத்தமா..?” என்று கேட்டாள்..
அவன் அவளையே குறுகுறுவென்று பார்த்தான்.. அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது..
‘என்ன அலுவலுக்கு இப்படிப் பார்த்து வைக்கிறான்..?’ முகம் சிவக்க வேறு பக்கம் வெறித்து வைத்தாள்..
“நீ எப்பவாவது இப்படி இருப்பியா..? இல்ல.. எப்பவுமே இப்படித்தான் இருப்பியா..?” நிதானமாக கேட்டான் அவன்..
“எப்படி இருக்கேனாம்..?” ரோசத்துடன் சண்டைக்குப் போனாள் சசிரேகா..
“டியூப் லைட்டா இருக்கே..”
“என்னது..?”
“இந்த ரோசத்துக்கொன்னும் குறைச்சலில்ல.. ஏண்டி.. பர்ஸ்ட் நைட் முடிஞ்சவ நைட்டெல்லாம் தூங்கலை.. தூக்கம் தூக்கமா வருதுன்னு சொன்னா கேட்கிறவங்க என்னன்னு நினைப்பாங்க..?”
“என்ன நினைப்பாங்க..?”
அவனிடமே அவள் சந்தேகம் கேட்டு வைக்க, அவன் ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து வைத்தான்.. அவளுக்கு விளங்கி விட்டது..
‘அடக்கடவுளே..! நிஜமாவே நான் டியூப் லைட்டுதான்..’
அவளுக்கு முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிடவேண்டும் போல இருந்தது.. அவன் பார்க்கும் பார்வையை அவளால் தாள முடியவில்லை..
“அண்ணி என்னன்னு நினைச்சிருப்பாங்க..?”
“வேற என்னத்தை நினைச்சிருப்பாங்க.. நீ விடிய விடிய பர்ஸ்ட் நைட்டைக் கொண்டாடினேன்னு நினைச்சிருப்பாங்க..”
“ச்சீ..!”
இவன் வெட்கம் கெட்டவன் என்று லஜ்ஜையுடன் முகம் சிவந்தாள் சசிரேகா.. கூச்சமில்லாமல் எப்படிப் பேசுகிறான்..?
“என்னத்த ‘ச்சீ..?’ இப்படிச் சொல்கிறவதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே என் அக்கா குளிச்சுட்டுக் கிளம்பச் சொன்னதும் கட்டிலையே ஏக்கமா பார்த்து வைச்ச..”
“அது.. அது.. எனக்கு தூக்கம் தூக்கம் இருக்கு.. அதனால பார்த்து வைச்சேன்..”
“அது அக்காவுக்குத் தெரியுமா..?”
“கடவுளே..! அதனாலதான் அவங்க உங்க ரெண்டு பேரையும் வேற வழியில்லாம தொந்தரவு பண்ண வேண்டியிருக்குங்கிற மாதிரி சங்கடப்பட்டாங்களா..?”
“இப்பவாவது உன் மரமண்டையில இந்த விசயம் ஏறுச்சே..”
“கடவுளே..! கோவிலுக்குப் போயிட்டு வந்த பின்னாலே நீ தொந்தரவில்லாம கருணாகரனோட பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு அதனாலதான் சொன்னாங்களா..?”
“புரிஞ்சாச் சரி..”
“கடவுளே..! அதனாலதான் இங்கே நிற்கச் சங்கடப் பட்டுக்கிட்டு அந்த ஓட்டம் ஓடினாங்களா..?”
“ஓட வைச்சுட்டியில்ல.. கெட்டிக்காரிடி நீ..”
“கடவுளே..!”
சசிரேகா மேலும் எதையோ சொல்லப் போக கருணாகரன்.. “உஷ்ஷ்…!” என்று ஆள்காட்டி விரலை வாயில் வைத்து அவளை அடக்கினான்..
“இன்னும் எத்தனை தடவைதான் கடவுளைக் கூப்பிடுவ..? அவருக்கு என்ன வேற வேலை கெட்டியே இல்லையா..? அவருக்கு இருக்கும்மா ஆயிரம் பஞ்சாயத்து.. அதனால வாயை மூடிக்கிட்டு குளிக்க ஓடு..”
‘இவன் என்ன என்னை விரட்டறது..?’
அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. குளித்து விட்டு வந்தவளிடம் மயில் கழுத்து கலரில் காபிக்கொட்டை கலர் பார்டர் கொண்ட கெட்டி ஜரிகைப் புடவையை நீட்டினாள் கவிதா.. கூடவே வைர அட்டிகை, தொங்கட்டான், வளையல்கள்.
“அண்ணி..?” சசிரேகா மறுக்கப் போனாள்..
“இந்த நகைகளையெல்லாம் என் தம்பி பெண்டாட்டிக்குன்னு நான் பார்த்துப் பார்த்து வாங்கி வைச்சிருக்கேன்ம்மா.. உன் அண்ணியோட அன்புப் பரிசு.. மறுக்காம போட்டுக்க..” பாசத்தில் விலங்கிட்டாள் கவிதா.
மறுக்க வழியில்லாமல் போய் விட்டதில் வேறு வழியின்றி நகைகளை வாங்கி அணிந்து கொண்டாள் சசிரேகா.. தழையத் தழைய காஞ்சிபுரப்பட்டும்.. தலை நிறைய முல்லைச் சரமும்.. வைர நகைகளுமாக மாடியிலிருந்து இறங்கி வந்தவளைப் பார்த்த வத்சலா ஆச்சரியத்துடன்..
“வாவ்..” என்றாள்..
அதை கருணாகரனின் கண்கள் பிரதிபலித்தன.. காரில் ஏறிய போது அவளுடன் அவன் வேண்டுமென்றே உராய்கிறானோ என்று சந்தேகப்பட்டாள் சசிரேகா..
என்னதான் இடம் பற்றாக்குறையாக இருந்தாலும் இப்படியா ஒருவன் அவள் மடிமீது சரிந்து கொண்டு வருவான்..?
அப்படி அவன் செய்கிறான் என்று மற்றவர்களிடம் கூறி நியாயம் கேட்கவும் முடியாது என்பதினால் பல்லைக் கடித்துக் கொண்டு ஒடுங்க முயன்றாள்.. முடியவில்லை.. மாறாக அவள் மனதில் மோகம் வந்து ஒன்றிக் கொண்டது..
விலக நினைத்தவள் விலக மனமின்றி அவனது ஸ்பரிசத்தில் குளிர் காய முயன்றாள்.. ஒடுங்க முயன்றவள் அதை மறந்து அவன் பக்கமாக ஒன்றிக் கொண்டாள்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.