Chapter 17

0Shares

தீபாதரனை வெளிச்சத்தில் அம்மனின் வைர மூக்குத்தி ஒளிர்ந்தது.. பச்சை வண்ணப்பட்டு உடுத்தி மரகதப் பதுமை போல வீற்றிருந்தாள் அம்பிகை.. அவளது அருள் பாலிக்கும் விழிகள் கருணையுடன் சசிரேகாவைப் பார்த்து ‘கலங்காதே மகளே..!’ என்று சொல்வதைப் போல உணர்ந்தாள் சசிரேகா..

தீபாதரனையின் கற்பூர ஒளியைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவள் நெற்றியில் குங்கும் பிரசாதத்தை இட்டுக் கொண்டாள்..

“டோட்டலா மாறித் தெரியறடி சசி..” என்றாள் வத்சலா..

அவர்கள் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள்.. சற்றுத் தொலைவில் உறவினர் களுடன் பேசிக் கொண்டிருந்த கருணாகரனைத் திரும்பிப் பார்த்தவள்..

“ரியலி ஹி இஸ் எ ஹீரோ சசி..!” என்றும் சொன்னாள்..

சசிரேகா பேசவில்லை.. மௌனமாக கருணாகரனைப் பார்த்தாள்.. பட்டுவேட்டி சட்டையுடன் அவன் ஒரு கதாநாயகனுக்குரிய அனைத்து அம்சங்களுடன் நின்றிருந்தான்..

“இவர் உனக்கு ஹஸ்பெண்டா கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கனும் சசி..”

‘எதை..? ஏற்காட்டு வீட்டையா..?’

கேட்க நினைத்த கேள்வியை கேட்க முடியாமல் வெறுமையாக சிரித்தாள் சசிரேகா.. தூரத்தில் நின்று உறவினர்களுடன் பேசியபடி அவள் முகத்தின் உணர்வுகளையே அவதானித்துக் கொண்டிருந்த கருணாகரன் என்னவென்பதைப்போல புருவங்களை உயர்த்தினான்.. சசிரேகா அவளையுமரியாமல் எதுவு மில்லை என்பதைப் போல தலையை ஆட்டினாள்.. 

“ஒருநாள் நைட்டுக்குள்ள பார்வையாலேயே பேசிக்கிற அளவுக்கு டெவலெப்பாகிட்டயா..? நடத்து.. நடத்து..”

வத்சலா கேலி செய்த போதுதான் அவனுடைய புருவ உயர்த்துதலுக்குத் தான் பதில் அளித்து விட்டதை உணர்ந்தாள் சசிரேகா..

‘இது எப்படி..?’ அவளுக்கு திகைப்பாக இருந்தது..

வீட்டுக்குத் திரும்பியவுடன் மாடியறைப் பக்கம் எட்டிப் கூடப் பார்க்காமல் வத்சலாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்..

“டிரெஸ் ரேன்ஜ் பண்ணிட்டு வாயேண்டி..” வத்சலா சொல்லிப் பார்த்து விட்டாள்..

சசிரேகா அசையவில்லை.. வத்சலாவை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஒட்டிக் கொண்டே அலைந்தவள்..

“இருக்கட்டும்டி..” என்று சொல்லி விட்டாள்..

“பெரிய மனுசன் பெண்டாட்டி..! பட்டும் வைரமுமா இருக்கனும்னுதான் நினைப்ப..”

அதற்கும் கருணாகரனைக் காரணம் காட்டினாள் வத்சலா.. அவனைத் தவிர்த்த சசிரேகாவாக அவளால் இருக்கவே முடியாதா என்ற ஆதங்கம் பொங்கியது சசிரேகாவிற்கு..

மதிய உணவுக்குப் பின்னால் வத்சலாவின் அறையிலேயே படுத்து அயர்ந்து தூங்கி விட்டாள் சசிரேகா.. மாலையில் காபி பலகாரத்துடன் வந்த கவிதா சசிரேகாவைப் பார்த்து விட்டு..

“சசி இங்கேயா தூங்கறா..?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்..

“எனக்கும் இதே எண்ணம்தாங்க.. உங்க தம்பி போல ஒரு ஹஸ்பெண்டு எனக்குக் கிடைச்சிருந்தா நான் இப்படி பிரண்டுகூட ஜோடி போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்க மாட்டேன்.. பசை போட்டதைப் போல ஹஸ்பெண்டு கூட ஒட்டிக்கிட்டு சுத்தியிருப்பேன்.. இவ என்னடான்னா இங்கே தூக்கம் போட்டுக்கிட்டு இருக்கா..?” என்று சொல்லி விட்டு கவிதாவிடம் மொத்து வாங்கினாள் வத்சலா..

“என்ன பேச்சுப் பேசற..? என் தம்பியைப் பார்த்தா கண்ணு வைக்கிற..? உன்னைச் சொல்லக் கூடாது.. கட்டின புருசனை முந்தானையில முடிஞ்சு வைக்காம இங்கே இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கிட்டு இருக்கிற என் தம்பி பொண்டாட்டியச் சொல்லனும்..” சசியை எழுப்பினாள் கவிதா..

“டிரை பண்ணுங்க.. எழுந்திருக்கிறாளான்னு பார்ப்போம்.. நானும் அப்போப் பிடிச்சு உலுக்கறேன்.. அசைய மாட்டேங்கிறா..” காபியைக் குடிக்க ஆரம்பித்தாள் வத்சலா..

“இந்தத் தூக்கம் தூங்கறாளே..” எழுப்பிக் களைத்துப் போன கவிதா முணுமுணுத்தாள்..

“பாவம்.. நைட்டெல்லாம் கண்முழிச்சு உழைச் சிருப்பா.. டயர்டா இருக்காதா..? தூங்கட்டும் விடுங்க..” என்று வாய் விட்ட வத்சலா மறுபடியும் கவிதாவிடம் மொத்து வாங்கினாள்..

“கல்யாணம் ஆகாத பொண்ணு மாதிரியா பேசற..?”

“இதுக்கெல்லாம் கல்யாணம் ஆகியிருக்கனுமாங்க..? கேள்வி ஞானம் போதாதா..?”

“அப்பாடி..! உன் வாயை காரமங்களம் தாங்காதும்மா..”

“எனக்கும் இந்தக் கவலைதான்.. எங்கே..? நேத்து நைட்டே இந்தக் காரமங்களத்தைக் காப்பாத்திப் புடலாம்ன்னு சென்னைக்கு டிரெயின் ஏறப் பார்த்தேன்.. ஆபிசர் விடலை.. இன்னைக்குப் பத்திரமா காரில அனுப்பி வைக்கிறதாச் சொன்னாரு.. சொன்ன வார்த்தையை காத்தோட விட்டுட்டு குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட அழைச்சுக்கிட்டுப் போயிட்டாரு.. இன்னைக்கு நைட் டிரெயினில கிளம்பிரலாம்ன்னு பார்த்தா அதுக்கும் ‘தடா’ போட்டுட்டீங்க.. இனி நாளைக்குத்தான் போயாகனும்..”

“எங்ககூட இருக்கிறதுக்கு இத்தனை அலுப்பா..? எங்களுக்காக இல்லைன்னாலும் இங்க தூங்கிக்கிட்டு இருக்கிற உன் சிநேகிதியோட முகத்துக்காக இரும்மா..”

“ஏங்க.. சிநேகியோட ஹஸ்பெண்ட் முகத்துக் கென்னங்க குறைச்சல்..? அவர் முகத்துக்காக நான் இருந்தால் ஆகாதா..?”

“உன்னை..”

கவிதா கையிலிருந்த பித்தளைச் சொம்பினால் இன்னும் இரண்டு மொத்துக்களை வழங்கி விட்டுப் போய் விட்டாள்.. மாலை மயங்கி இருள் பரவும் நேரத்தில் விழித்துக் கொண்ட சசிரேகா அவசரமாக எழுந்து உட்கார்ந்தாள்.. கவிதா கொடுத்து விட்டுச் சென்றிருந்த பலகாரத்தை மொக்கியபடி அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த வத்சலாவிடம் பாய்ந்தாள்..

“ஏண்டி குரங்கே என்னை எழுப்பலை..?”

“லுக் சசி..! இந்தக் குரங்குன்னு கூப்பிடற வேலையையெல்லாம் சென்னையோட மறந்துரு… காரமங்களத்தில இப்படிக் கூப்பிட்டு வைக்காதே.. தப்பித் தவறி இந்தப் பக்கமா உன் ஹஸ்பெண்டு வந்துட்டா என்னோட இமேஜ் என்னாகிறது..?”

“உன் மண்ணாங்கட்டி இமேஜைத் தூக்கிக் குப்பையில் போடு..”

“அதென்ன அப்படிச் சொல்லிட்ட..? இமேஜ் முக்கியம்மா.. உன் ஹஸ்பெண்ட் முன்னாடி நான் கெத்துக் காண்பிக்க வேணாமா..?”

“அவர்கிட்ட நீ எதுக்காக பில்ட்-அப் பண்ணனும்..?”

“எல்லாம் ஒரு இதுக்காகத்தான்..”

“நீ உருப்பட மாட்டேடி..”

சசிரேகா அவசரமாக முகம் கழுவி.. தலைவாரி பின்னலிட்டு கவிதாவைத் தேடிப் போனாள்.. பூஜையறைக்குள் இருந்த கவிதா சசிரேகாவைக் கண்டதும் பரிவுடன் புன்னகைத்து..

“சரியான நேரத்துக்கு வந்துட்ட… சாமிக்கு விளக்கேத்தும்மா..” என்றாள்..

இருட்டும் வரை உறங்கி விட்ட குற்ற உணர்வு அகன்றவளாக நிம்மதியுடன் சுவாமிகளுக்கு விளக்கேற்றி வழிபட்டாள் சசிரேகா.. குத்துவிளக்கின் ஒளியைத் தொட்டுக் கண்களில் ஒற்றியபின் பெண்கள் இருவரும் பூஜையறையை விட்டு வெளியே வந்தார்கள்..

“கருணாவுக்கு காபி பலகரம் கொடுத்திட்டேன்.. நீ சாப்பிடு..”

டைனிங் ஹாலுக்கு அவளை அழைத்துப் போனாள் கவிதா.. தாய்ப்பசுவைத் தொடரும் கன்றைப் போல அவளைத் தொடர்ந்து போன சசிரேகாவுக்கு சூடான காபி உள்ளே இறங்கியதும் தெம்பாக இருந்தது..

“ஸாரி அண்ணி..”

“எதுக்கு..?”

“ரொம்ப நேரம் தூங்கிட்டேன்..”

“அதனால என்ன..?”

மயிலிறகாய் மனதை வருடும் வார்த்தைகள்.. இதமான புன்சிரிப்பு.. கருணையைப் பொழியும் பார்வை..

‘யார் இவள்..? தேவதையா..?’

சசிரேகாவின் மனம் பொங்கியது.. அன்பு காட்ட யாருமில்லாத அநாதைச் சிறுமியாக வளர்ந்தவளுக்கு கவிதாவின் தாயன்பு உயிர்பபை அளித்தது..

“கருணா என்ன செய்கிறான்னு பார்த்திட்டு வாம்மா..”

நாசுக்காக சசிரேகா கருணாகரனைத் தேடிச் செல்லாததை உணர்த்தினாள் கவிதா.. உதட்டைக் கடித்தபடி மாடிக்குப் போனாள் சசிரேகா.. அறையில் கருணாகரன் இல்லை..

‘எங்கே போயிருப்பான்..?’

அவன் எங்கே போயிருந்தாலும் அறையில் அவனில்லை என்பதே அவளுக்கு விடுதலையுணர்வை அளித்தது.. தன் போக்கில்..

“சிட்டுக் குருவிக்கென்ன..

கட்டுப்பாடு..?

தென்றலே..! உனக்கெது

சொந்த வீடு..?”

என்று பாடியபடி உடை மாற்ற ஆரம்பித்தாள்.. பட்டுச் சேலையிலிருந்து மைசூர் கிரேப் சேலைக்கு மாறியவள் சேலையை மடித்தபடி திரும்பிப் பார்த்தாள்.. அங்கே கைகளை முன்னால் மடித்துக் கட்டியபடி நின்றிருந்த கருணாகரனைக் கண்டதும் மடிக்க ஆரம்பத்திருந்த புடவையை நழுவ விட்டாள்..

‘இவன் இங்கேதான் இருந்தானா..?’

அவள் பாடிய பாடலை அவன் கேட்டுக் கொண்டிருந்ததில் அவளுக்கு யாதொரு கவலையும் இல்லை.. கூடவே அவள் சேலையையும் மாற்றிக் கொண்டிருந்தாளே..

‘பார்த்திருப்பானோ..’

அவளால் நினைக்கக் கூட முடியவில்லை..

“தென்றலுக்கு வேணும்ன்னா சொந்தவீடு இல்லாம இருக்கலாம்.. உனக்கு இருக்கு.. அதை நினைவில் வை.. கட்டுப்பாடில்லாம பறந்துக்கிட்டு இருக்க நீ சிட்டுக் குருவியில்லை.. இந்தக் கருணாகரனோட பெண்டாட்டி..” அவன் அழுத்தமாக பேசினான்..

‘பாட்டுப் பாடினாக் கூடத் தப்பா..?’ அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்து விட்டது..

“இதெல்லாம் இன்னைக்குப் புதுசா வந்த அடையாளங்க.. முந்தாநாள் வரைக்கும் எனக்குன்னு வீடுமில்ல.. கட்டுப் படுத்தவும் யாருமில்ல..” என்று படபடத்தாள்..

“நேத்துக் கதை நேத்தோடு..”

அவன் நிதானமாக அவளருகில் வந்தான்.. சசிரேகா பதட்டத்துடன் பின்னால் நகர்ந்தாள்.. அவன் நெருங்கியதில் அவள் சுவரில் சாய்ந்து நின்றுவிட அவளது தோள்களின் பக்கம் இரண்டு கைகளையும் ஊன்றி அவளை சிறை பிடித்தவன் அவளது விழிகளுக்குள் ஊடுறுவிப் பார்த்தான்.. அதில் தெரிந்த மிரட்சியில் அவனது புருவங்கள் முடிச்சிட்டன..

“நீ பேரழகின்னு உன்னைக் கட்டிக்கனும்னு நினைக்கலை..”

உதட்டை வளைத்து மடித்து அலட்சியமாக அவன் சொல்லிய விதத்தில் அவள் காயப்பட்டாள்..

“நானும் பேரழகின்னு என்னைச் சொல்லிக்கலை.. அங்கேதான் ஏற்காட்டு வீட்டைக் காட்டி ஆசை வார்த்தை சொல்லி என் கழுத்தில தாலியைக் கட்டி சிறை வைச்சிருக்காங்க..” என்றாள்..

“இது சிறையா..?” கண்கள் இடுங்க அவன் கேட்டான்..

“பின்னே இல்லையா..?”

“இந்தச்சிறையிலிருந்து தப்பித்து எங்கே போகனும்னு நினைக்கிற..?”

“சென்னைக்குப் போகனும்னு நினைக்கிறேன்..”

“அங்கேதானே அந்த பிரவீன் இருக்கான்..”

“அங்கேதான் என்னோட வேலையும் எனக்கான அடையாளமும் இருக்கு..”

“ஓ..”

அவன் குனிந்தான்.. அவனது மூச்சுக் காற்றின் வெப்பத்தை அவளது முகம் உணர்ந்தது.. அவனது மீசையின் முடிகள் அவளது கன்னத்தில் உரசியதில் அவளுக்குள் மோகத்தீ பற்றிக் கொண்டது..

‘வேண்டாம் கடவுளே..!’ அவள் மனம் கெஞ்சியது..

‘மோகத்தைக் கொன்று விடு.. இல்லாவிட்டால் இந்த மோகத்தீயில் நான் விழுந்து எரிந்து சாம்பலாகி விடுவேன்.. உருத்தெரியாமல் போய் விடுவேன்.. என்னைக் காப்பாற்று..’

மோகத்தின் கனல் தாங்காமல் அவள் மறுகினாள்.. உருகினாள்.. அவனிடம் தோற்றுப் போய் விடுவோமோ என்று அஞ்சினாள்..

அதை உணர்ந்தவனைப் போல அவளது முகத்தோடு முகம் பதித்தவன்.. தொய்ந்து நின்றவளின் காதருகே ரகசியக் குரலில்..

“நீ பேரழகிதாண்டி..” என்றான்..

சசிரேகா எங்கோ போய் கொண்டிருந்தாள்.. ஆழ்ந்த மயக்க நிலையில் அமிழ்ந்து கொண்டிருந்தாள்.. அவன் பேசுவது கிணற்றுக்குள் இருந்து பேசுவதைப் போல அவளது காதினில் விழுந்தது..

“உனக்காக எதையும் செய்யலாம்.. உன் கழுத்தில் தாலியைக் கட்ட எந்த ஆசை வார்த்தையை வேண்டும்ன்னாலும் சொல்லலாம்.. அதைத்தான் நான் செய்தேன்.. இதில எந்த வில்லத்தனமும் இருக்கிறதா எனக்குத் தோணல..”

சசிரேகாவின் புத்தியில் அவன் சொன்னது உறைத்ததும் அவள் மோகத்திலிருந்து விடுபட்டவளாக அவனைத் தள்ளினாள்.. இலகுவாக அவளது தள்ளுதலை புறக்கணித்து அவள்மீது சரிந்தவனிடமிருந்து விடுபட முயன்றாள்..

அவளது போராட்டத்திற்கு அவசியமில்லாமல் அவனே அவளை விடுவித்து விலகி நின்றான்.. அவள் முகத்தில் படிந்த ஏமாற்றத்தின் சாயலை அவன் இனம் கண்டு கொள்வானோ என்ற அச்சத்துடன் அவள் முகம் திருப்ப.. அவன் மெதுவாக கேட்டான்..

“நான் பேரழகன் இல்லைதாண்டி.. ஆனா.. அந்த பிரவின் என்னை விடப் பேரழகனா..?”

‘இவன் இதை விடவே மாட்டானா..?’

அவள் அவனையே வெறித்தாள்.. அவன் மீதான மோகத்தின் மென்னியைப் பிடித்துக் கொன்று 

புதைத்து விட வேண்டும் போல ஆவேசம் அவளுக்குள் உண்டானது..

“ஆமாம்..” என்றாள்..

அவன் முகத்தில் ரௌத்ரம் தோன்றியது.. அது அவளுக்கு உவப்பாக இருந்தது.. அவன் அவள்மீது மறுபடியும் சரிந்தான்.. இந்தச் சரிதல் மோகத்தினால் வந்ததில்லை என்பது சசிரேகாவுக்குப் புரிந்தது..

அதுகோபத்தினால் வந்தது.. அவன் மீதான மோகத்தின் மென்னியைப் பிடிக்க அவள் நினைத்தால்.. அவனோ அவளின் மென்னியைப் பிடித்துக் கொல்ல ஆசை கொண்டிருந்தான்.. அவள் கழுத்தில் பதித்த அவன் விரல்களை விலக்க முனையாமல் அசையாமல் அவன் கைகளுக்குள் கழுத்தைக் கொடுத்தபடி அவள் நின்றிருந்தாள்..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link