Chapter 22
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த தோட்டத்தில் வட்ட வடிவ மேஜைகளும் அதைச் சுற்றி நாற்காலிகளும் இடைவெளி விட்டுப் போடப் பட்டிருந்தன.. அவற்றில் உட்கார்ந்திருந்த இளஞ்ஜோடிகள் சுற்றுப் புறத்தை மறந்தவர்களாக.. ஒருவர் முகத்தை ஒருவர் ஆழமாக பார்த்தபடி ரகசியக் குரலில் அவர்களுக்கு மட்டும் கேட்கும்படி எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.. இனிமையான அந்தச் சூழல் சசிரேகாவின் மனதில் இதமான ஓர் துயரத்தைத் தோற்றுவித்தது.. எதிரே உட்கார்ந்திருந்த கருணாகரனை அடிப்பார்வையில் பார்த்தாள்..
அவன் அழகாக, கம்பீரமாக, அவள் மனதை ஈர்க்கும் வகையில் இருந்தான்.. மனதை ஈர்த்தும் வைத்தான்..
‘இருந்தும் என்ன பயன்..?’
அவள் கண்ணீரை விழுங்கிக் கொண்டாள்.. வேலையை விட்டாயிற்று.. லேடிஸ் ஹாஸ்டலையும் துறந்தாயிற்று.. இனி சென்னையில் அவளுக்கான வேலையுமில்லை.. அவளுக்கென்ற தனித்த அடையாளமு மில்லை.. மறுநாள் காலையில் அவள் காரமங்களத்திற்கு கிளம்பியாக வேண்டும்.. அங்கு அவள் கருணாகரனின் மனைவியாக அடையாளம் காணப்படுவாள்..
கனத்த மனதுடன் ஹோட்டலுக்குள் நுழைந்த போது.. வரவேற்பறையில் இருந்த பெண்..
“நீங்க கார்டனில் நடக்கிற டின்னருக்குப் போகலையா..?” என்று வியப்புடன் கேட்டு வைத்தாள்..
“எனி திங்க் ஸ்பெசல்..?” கருணாகரன் புருவங்களை உயர்த்தினான்..
“யெஸ் சார்.. புதிதா கல்யாணமான ஜோடிகள் மட்டும் கலந்துக்கிற டின்னர் இது.. நீங்க புதிதா கல்யாணமான கப்புள்தானே..?”
“யெஸ்.. யெஸ்.. நாங்களும் கலந்துக்கிறோம்..”
ஒரு பேச்சுக்குக்கூட நாமும் கலந்து கொள்வோமா என்று அவளிடம் கேட்காமல் கருணாகரன் தோட்டத்தை நோக்கி நடக்க.. ‘போடா’ என்று ரூமுக்குப் போய் விடலாமா என்று யோசித்தாள் சசிரேகா..
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரிசப்சனிஸ்டின் பார்வையில் அப்படிச் செய்ய முடியாமல் கருணாகரனைப் பின் தொடர்ந்தாள்..
ஜோடி, ஜோடியாக அமர்ந்திருந்தவர்களின் மத்தியில் காலியாக இருந்த டேபிளின் முன்னாலிருந்த சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்த கருணாகரன் அவளைப் பார்த்தான்..
அவன் பார்வையில் அவள் உட்கார வேண்டுமாம்..
‘என்னை என்னன்னு நினைச்சுக்கிட்டான்.. பார்வையிலேயே ஆர்டர் போடுகிறானாமா..?’ அவள் பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்..
“ஆர்டர் ப்ளீஸ்..”
மெனு கார்டுடன் பேரர் வந்தான்.. இங்கேயும் ஆர்டர்தானா என்று நினைத்துக் கொண்டாள் சசிரேகா.. மெனுகார்டை வாங்கிப் புரட்டியவன் ஆர்டர் பண்ணி
விட்டு அவளை அமர்த்தலாகப் பார்த்து புருவங்களை உயர்த்தினான்..
‘அடேங்கப்பா..’
அவள் என்னவென்று கேட்காமல் அவனைப் போலவே புருவங்களை உயர்த்தி வைத்ததில் அவன் கண்களில் மின்னல் வந்தது..
தோட்டத்தின் ஓரமாக மேடை இருந்தது.. அங்கே கூடியிருந்த ஜோடிகள் ஆட விரும்பினால் அங்கே வந்து ஆடலாம்.. பாட விரும்புகிறவர்கள் பாடலாம் என்று அறிவுப்பு செய்யப்பட்டது.. பல ஜோடிகள் எழுந்து சென்று விருப்பமான பாடலை ஒலிபரப்ப விட்டு ஆடி விட்டு வந்தார்கள்.. சிலர் பாடினார்கள்.. கருணாகரன் அதை ஆழ்ந்து ரசித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.. சசிரேகாவுக்கும் அந்தச் சூழல் பிடித்துத்தான் இருந்தது.. கனத்த மனதை லேசாக்கும் சக்தி அந்த ஆடலுக்கும் பாடலுக்கும் இப்பதைப் போல அவள் உணர்ந்தாள்..
இதமான குளிர் காற்றும்.. மங்கலான மெழுகு வர்த்தியின் வெளிச்சமும்.. எதிரே அமர்ந்திருந்தவனின் ஆண்மை ததும்பும் ஆகர்ஷிக்கும் தோற்றமும்
அவளை மோகத்தீயின் ஜ்வாலைக்குள் தள்ளி விட்டன.. மேஜையின் அடியில் நீண்டிருந்த அவனுடைய பாதங்கள் இயல்பாக அவள் பாதங்களின் மீது பட்டதில் அவள் தவித்துப் போனாள்.. அவளுக்கான உணவு வகைகளின் தட்டுக்களை அவள் பக்கம் நகர்த்திய அவனது விரல்களின் உராய்வில் அவன் கையில் முகத்தைப் புதைத்து விட வேண்டும் போல அவள் துடித்துப் போனாள்.. அருகிலிருந்த ஜோடிகளின் நெருக்கத்தைப் பார்த்த போது.. இவன் என் கணவன்தானே.. எனக்குப் பிடித்தமானவன் தானே.. ஏன் நான் விலகி நிற்க வேண்டும் என்ற தாபம் அவளை ஆட்கொண்டு அலைக்கழித்தது..
“அருமையான பாட்டு..”
அவன் ரசித்துக் கேட்ட பாட்டை அவள் மிகவும் ரசித்துக் கேட்பாள்.. அவளுக்குப் பிடித்த எல்லாமும் அவனுக்கும் பிடித்திருந்ததில் அவளது மனம் அசைந்தது..
அவளையும் அவனையும் ஏகாந்தமாக உணர வைத்து பிணைய வைத்த அந்த மழை நாளின் இரவுப் பயணத்தை அவள் நினைத்துக் கொண்டாள்.. அந்த நாளில் நிலை கொள்ள அவள் மனம் விரும்பியது..
“யுவர் டர்ன் ப்ளீஸ்..”
மேடையில் இருந்தவர் கருணாகரனை கை நீட்டி அழைக்க அவன் எழுந்து நின்று சசிரேகாவைப் பார்த்து..
“நாம போய்த்தான் ஆகனும்.. மத்தவங்கள்ளாம் அவங்களுக்கு தெரிந்ததை செய்துட்டு வந்திருக்கிறப்ப நாமளும் ஏதாவது செய்தாகனும்..” என்றான்..
“என்ன செய்கிறதாம்..?”
கண்ணுக்கு முன்னால் கட்டழகனாக நிற்கும் கணவனுடன் கூட முடியாத எரிச்சலுடன் கேட்டாள் சசிரேகா..
“ஏதோ ஒன்னு.. அங்கே போய் யோசிக்கலாம்.. வா..”
அவன் பிடிவாதமாக கை நீட்டியதில் வேறு வழியில்லாமல் அவன் கைமீது தன் கையை வைத்து எழுந்தாள் சசிரேகா..
அவன்தான் அவளை அவனாகத் தொட மாட்டான் என்று சொல்லியிருக்கிறானே..
மேடையில் ஏறியவர்களிடம் மைக் தரப்பட்டது.. அவன் டூயட் பாடலைப் பாடுவான் என்று எதிர்பார்த்திருந்த சசிரேகா.. அவன் அவளையே பார்த்தபடி..
“ஒருமாலை இளவெயில் நேரம்..
அழகான இலையுதிர் காலம்..
சற்றுத் தொலைவினில்..
அவள் முகம் பார்த்தேன்..
அங்கே தொலைந்தவன் நானே..”
என்று பாட ஆரம்பித்தவுடன் ஏமாற்றமடைந்தாள்..
‘இவன் பாட்டில கூட என்னைச் சேர்த்துக்க மாட்டானா..?’
ஏக்கப்பட்டுப் போனது அவள் மனது.. பாடி முடித்தவன் அவளிடம் மைக்கை நீட்டியதும் அவனையே பருகுவதைப் போலப் பார்த்தபடி அதை வாங்கிக் கொண்டு பாட ஆரம்பித்தாள்..
“எனக்குப் பிடித்த பாடல்..
அது உனக்கும் பிடிக்குமே..
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே..
என்னை பிடித்த நிலவு..
அது உன்னைப் பிடிக்குமே..
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே..
உதிர்வதென்ன பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா..?”
அங்கிருந்த அத்தனை ஜோடிகளும் ரகசியப் பேச்சுக்களைத் தவிர்த்து நிசப்தமாகி விட்டார்கள்.. அழகான ஒரு குளத்தில் மலர்கள் விழுந்தால் எழும்பும் நீரலைகளின் அசைவுகள் எழுப்பும் அமைதி நிரம்பிய சங்கீதமாக அவளது பாடல் அந்த மேடையில் ஒலித்துக் கொண்டிருந்தது.. அவளையே பார்த்தபடி கைகளைக் கட்டியபடி நின்றிருந்த கருணாகரனின் தோற்றம் அவளைக் காந்தம் போல கவர்ந்து இழுத்தது.. அவன்மீது ஏற்படும் மோகத்தின் ஜ்வாலையின் தகிப்பைத் தாங்க முடியாமல் அவள் தடுமாறினாள்..
“மெல்ல நெருங்கும் போது
நீ தூரப் போகிறாய்..
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்..
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே..
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே..
வானத்தில் பறக்கிறேன்..
மோகத்தில் மிதக்கிறேன்..
காதலில் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்..”
மோகத்துடன் அவள் பாடப்பாட அவன் கண்களில் மின்னல் கீற்றுக்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.. அவன் மீதான மோகத்தை விழிகளில் உணர்த்தியபடி நின்றிருந்தவளைக் கட்டி அணைத்து ஏனடி பைத்தியமே மருகுகிறாய்..? உன் மோகத்தீயை அணைக்க நானில்லையா..? கணவனின் துணையோடுதானே, காமனை வென்றாக வேண்டும் என்ற பாடலை நீ கேட்டதில்லையா..? என்று கேட்க வேண்டும் போல அவனுக்குள் ஆவேசம் கிளர்ந்தது..
மெதுவான தூறல் விழ ஆரம்பித்தது.. சசிரேகாவின் பாடலில் கட்டுண்டிருந்தவர்கள் எழுந்து கொள்ளாமல் சாரலை ரசித்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.. ஒரு மயிலிறகின் மன வருடலை பாடலில் உணர்த்தியபடி பாடலைத் தொடர்ந்தாள் சசிரேகா..
“வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ..
விண்ணும் மண்ணும் வந்துசேர
அது பாலம் போடுதோ..
நீர்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்..
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன்ஸ்வரம்..
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்..
மேகம் போல் எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்..”
கருணாகரனைப் பார்த்தபடி பாடிய அவள் கண்களில்தான் எத்தனை மோகம்..! மோகத்தீயின் ஜ்வாலையில் அவள் நடுங்குவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. அருகிலிருந்தும் தொலைவி லிருப்பதைப் போல தொடுவானாய் அவள் நினைக்கும் கணவனை காதலுடன் தழுவ முடியாத அவளது துயரத்தை அந்தப் பாடலில் அவள் பிரதிபலித்தாள்.. அவள் துயரம் தீர்க்க அவளது மோகத்தைத் தீர்க்க வேண்டுமென்ற வேகம் அவனுக்குள் பிறந்தது.. வெல்ல முடியாத மோகத்தீயுடன் போராடும் மனைவியின் மறுகலை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை..
இவ்வுலகில் மோகத்தை வென்றவரென்று எவருமில்லை.. அப்படி மோகத்தை துறக்க வேண்டு மானால் அவர் ஆசா பாசங்களை வென்று துறந்த சித்தராகவோ, புத்தராகவோ இருக்க வேண்டும்..
‘அச்சமில்லை.. அச்சமில்லை..
அச்சமென்பதில்லையே..’
என்று பாடிய அஞ்சா நெஞ்சன் பாரதி கூட மோகத்தீயில் வாடிய போது அதை வெல்ல இயலாமல்..
‘மோகத்தைக் கொன்று விடு- அல்லால்
என் மூச்சை நிறுத்தி விடு..’
என்றுதான் பாடி வைத்திருக்கிறான்..
உணர்வு பூர்வமானவர்களின் மனதில் எளிதில் பற்றிக் கொள்ளும் தீ.. மோகத்தீ..!
முண்டாசுக் கவிஞனை மட்டும் அது சும்மா விட்டு விடுமா..? பற்றிக் கொண்ட மோகத்தீயில்.. சுற்றி வளைத்த மோகத்தீயில் அவனே மூச்சுத் திணறிப் போனபோது மற்றவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா..?
அழகான தேவதையின் எழிலோடு.. மாசு மறுவற்ற சருமத்தின் பொழிவோடு.. களங்கமில்லா மனதை பிரதி பலிக்கும் தேவதை முகத்தோடு மேடையில் நின்று பார்வையில் மயங்கிப் போனவளிடம் அவன் மயங்கிப் போனான்.. அவன் கை நீட்ட.. அவன் விரல்களை அவள் உடனுக்குடனாக பற்றிக் கொண்ட வேகத்தில் அவன் கிளர்ந்தான்.. அவனைத் தொட்ட அவளது விரல்களை இறுக்கிப் பிடித்து பிணைந்தன அவன் விரல்கள்..
சசிரேகாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.. அவனது வலிமையான கரத்துக்குள் அவளது கரத்தை வைத்து விட்டதை அவள் உணர்ந்தாள்.. அவள் விரல்களை அழுத்திப் பிடித்த அவன் விரல்களின் ஸ்பரிசத்தில் அவள் நடுங்கினாள்..
இருவரும் கை கோர்த்தபடி மேடையை விட்டு இறங்கினார்கள்.. மெல்லிய கைதட்டலுக்கு நன்றி சொல்லும் விதமாக லேசாக தலையை அசைத்தபடி ஹோட்டலை நோக்கி நடந்தார்கள்.. அவளது விரல்களை அழுத்தி நீவிய அவனது செய்கையில் அவளுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.. கையை உறுவிக் கொள்ள முயன்றாள்.. முடியவில்லை.. வரவேற்பறையைக் கடந்து லிப்டிற்குள் நுழைந்த பின்பும் அவன் கையை விடாததில்..
“கையை விடுங்க..” என்று பலவீனமாக முணுமுணுத்தாள்..
“கட்டின பெண்டாட்டியை கை விடாதவன்டி இந்த கருணாகரன்..” அவன் பிடி இறுகியது..
ஒரு கையில் இரும்புப் பிடியாக அவளைப் பிடித்தபடி மறுகையில் மீசையை முறுக்கியவனின் கம்பீரத்தில் அவள் வசீகரிக்கப் பட்டாள்.. எதிர்ப்பை மறந்து அவன் முகத்தை ஆவலுடன் அவள் பார்த்து வைத்ததில் அவன் அவளையே பார்த்து வைத்தான்..
சசிரேகாவின் முகம் சிவந்தது.. லிப்டை விட்டு வெளியேறி நீண்ட காரிடாரில் நடந்து அவர்களின் அறையைத் திறந்து உள்ளே சென்று கதவை மூடித் தாழிட்ட பின்னாலும் அவன் அவள் கையை விடவேயில்லை..
“நான் டிரஸ் சேன்ஜ் பண்ணனும்..”
“பண்ணு..”
“கையை விட்டாத்தானே நான் டிரஸ் மாத்த முடியும்..”
“கை விட முடியாதுன்னு அப்பவே சொல்லிட்டேன்.”
“இது அநியாயம்..”
“எனக்கு இதுதாண்டி நியாயம்..”
அவன் அவள் கையைப் பிடித்துச் சுண்டியிழுத்தான்.. அவள் சுழன்று வந்து அவன் மார்பில் மோதி சரிந்தாள்.. மேலே சாய்ந்தவளை இறுக்கிப் பிடித்து, இடுப்பில் கை கொடுத்து, வளைத்துத் தூக்கி கட்டிலை நெருங்கினான்.. அவள் மீதிருந்த கையை விலக்காமல் கட்டிலில் அவளைக் கிடத்தி மேலே சரிந்து.. படர்ந்து.. பரவினான்..
‘ஹோ’ வென்று எழுந்த ஆசைப் பெருங்கடலின் அலையில் சசிரேகா அடித்துச் செல்லப்பட்டாள்.. பற்றிக் கொண்ட மோகத்தீயின் ஜ்வாலையை அவன் அணைக்க முற்பட்டபோது.. அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அவனிடம் இழந்து கொண்டிருந்தாள்..
‘இவன் வில்லனில்லை.. ஹீரோ..’ அவள் மனம் பலவீனமாக முறைத்தது..
“என்னைத் தொட மாட்டேன்னு சொன்னீங்க.. இதுதான் சொன்ன சொல்லை நீங்க காப்பாத்தற லட்சணமா..?” அவனைச் சாடினாள்..
“உன்னை நானாத் தொட மாட்டேன்னுதான் சொன்னேன்.. நீ தொட்டா உன்னை விட மாட்டேன்டி..”
அதற்கு மேல் அவன் பேசவில்லை.. அவளையும் பேச விடவில்லை..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.