Chapter 23
மோகத்தை அவள் கொல்லவில்லை.. அதனுடன் சமரசம் செய்து அதை கருணாகரனின் துணையோடு வென்று விட்டாள்.. அவனுடன் போராடிய அவளது போராட்டத்தை சிறு மழலையின் செய்கை போல சிரிப்புடன் வெகு இலகுவாக அவன் முறியடித்து அவளை ஆண்டு விட்டான்.. இறுக்கமான அவன் அணைப்பும்.. இதழோர முத்தங்களும்.. செவியோரம் அவன் பேசிய ரகசியப் பேச்சுக்களும்.. புரியாத ஓர் உலகத்திற்குள் அவளை அழைத்துச் சென்றன.. அவன் திறந்து விட்ட
பல கதவுகள் உணர்த்திய அனுபவங்களில் அவள் நிராயுதபாணியாகி அவனிடம் சரணடைந்து விட்டாள்..
காலையில் அவள் கண்விழித்த போது.. அவன் அவளை சிறைபிடிப்பதைப் போல இறுக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.. அவள் மீதிருந்த வலிமையான கையையும், காலையும் அகற்ற முடியாமல் அவன் முகம் பார்த்தாள்.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.. அவன் கன்னத்தில் அவள் நெற்றியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தது..
சசிரேகாவின் முகம் சிவந்தது..
‘இப்படியே இவன் ரூம் சர்வீஸைக் கூப்பிட்டு வைச்சான்னா என்ன செய்யறது..?’
வெட்கத்துடன் அவன் கன்னத்திலிருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்தாள்.. அவனது மீசையின் முடி அவள் விரல்களில் பட்டது.. முதல்நாள் இரவில் அவன் மீசையை முறுக்கியதை நினைத்துப் பார்த்தவளுக்கு சுகமாக இருந்தது..
‘இவனா என்னைத் தொடலையாம்..’
தோற்று விட்ட உணர்வு வந்தது.. தோல்வி இனிப்பது எப்படியென்று புரியாமல் அவள் திகைத்தாள்..
அவன் பேசிய பேச்சுக்களுக்கும்.. இழைத்திருக்கும் துரோகத்திற்கும்.. அவனுடைய நிழலைக்கூட அவள் திரும்பிப் பார்த்திருக்கக் கூடாது.. அப்படித்தானே அவள் வைராக்கியம் வைத்திருந்தாள்..? இப்போது என்ன நடந்திருக்கிறது..? மிக எளிதாக அவனிடம் தோற்றுப் போயிருக்கிறாள்..
“ரொம்பவும் யோசிக்காதே..”
திடிரென்று கேட்ட அவன் குரலில் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
‘தூங்கிக்கிட்டு இருந்தானே..’
அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.. அவன் கண்களை மூடி உறங்குவதைப் போல்தான் படுத்திருந்தான்.. ஆனால் இதழ்களில் குறுஞ்சிரிப்பிருந்தது..
“கள்ளச் சிரிப்பு..!” வாய் விட்டுச் சொல்லி விட்டாள்.
“ஆமாண்டி.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?” அவன் கண் விழித்தான்.. முரட்டுத்தனமாய் அவளை இழுத்துக் கொண்டான்.. விடுவிக்க வெகு நேரம் எடுத்துக் கொண்டான்.. விடுபட்டவுடன் வெட்கிச் சிவந்த முகத்துடன் அவள் குளியலறைக்குள் தஞ்சம் புகுந்து விட்டாள்.. வெந்நீர் குழாயைத் திறந்து விட்டு ஷவரின்
கீழ் நின்ற பின்னாலும் சற்று முன் நடந்த நிகழ்விலேயே அவள் மனம் நிலைத்திருந்தது.. இரவின் நிகழ்வுகள் நினைவலைகள்..! சற்றுமுன் நடந்தது..!
அவளின் முகச் சிகப்பு அடங்க வெகு நேரமானது.. குளித்து உடைமாற்றி அவள் வெளியே வந்தபோது அவன் காலைக் காபியுடன் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தான்.. அவளைக் கண்டதும் புருவங்களை உயர்த்தி..
“காபி குடிக்கலை..?” என்று எதுவுமே நடக்காததைப் போலக் கேட்டு வைத்தான்..
அவளால் அவன் முகம் பார்த்துப் பேச முடியவில்லை.. பெட்டியை அடுக்குபவள் போல சிவந்த முகத்தைத் திருப்பிக் கொண்டு..
“வேண்டாம்..” என்று முணுமுணுத்தாள்..
அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு அவன் குளிக்கப் போய் விட்டான்..
‘அப்பாடி..’ என்றிருந்தது அவளுக்கு..
அறைக்குள் அவனில்லை என்ற விடுதலை யுணர்வுடன் ஈரமுடியை விரித்து விட்டபடி அறையை ஒட்டியிருந்த பால்கனியில் போய் நின்றாள்.. அங்கிருந்து பார்த்த போது சென்னை மாநகரம் அழகாக தெரிந்தது.. தோட்டத்திற்கு அடுத்திருந்த நீச்சல் குளத்தின் பளிங்குக் கல் பதிக்கப்பட்ட கரையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலிகளிலும்.. நிழல் குடைகளின் கீழிருந்த நாற்காலிகளிலும் கையில் குளிர்பானத்தோடு சிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.. அது போன்ற அறையில் தங்கியிருப்பதை அவளால் நம்ப முடிய வில்லை.. கருணாகரன் கட்டிய தாலி அவள் கழுத்தில் ஏறியவுடன் அவளது வாழ்க்கையே மாறிவிட்டதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது..
‘பணக்காரர்களின் உலகமே தனிதான்..’
யோசித்துக் கொண்டிருந்தவளின் வயிற்றில் சூடான கரங்கள் படிந்தன.. அவளது முதுப்புறத்தில் கருணா கரனின் உடல் ஒட்டிக் கொள்ள அவனோடு அவளை இறுக்கிக் கொண்டு அவள் கூந்தலில் அவன் முகம் புதைத்து முகர்ந்தான்..
“ம்ஹா..! செண்பகப் பாண்டியனுக்கு ஏண்டி சந்தேகம் வராது..?”
“என்ன சந்தேகம்..?” அவள் விடுபட முயன்றபடி கேட்டாள்..
“பெண்டாட்டியின் கூந்தலில் வரும் வாசனையைப் பற்றிய சந்தேகம்..! இப்படி மணத்தா எந்தப் புருசன்தான் பெண்டாட்டிகிட்ட மயங்க மாட்டான்..? ம்ம்ம்..? மயில் தோகையைப் போல உன் கூந்தல் இருக்குடி.. மயக்கற மோகினிடி நீ..”
அவன் தாகத்துடன் அவளது பின்னங்கழுத்தில் சூடான முத்தத்தைக் கொடுத்தான்.. கிளர்ந்த உணர்வுகளுடன் அவள் போராடினாள்..
“நானாத் தொடலை.. நீதான் தொட்டேங்கிற தெல்லாம் வெறும் கதையா..?” என்று சினந்தாள்..
“ஹை..! தப்பிக்க எப்படியெல்லாம் யோசிக்கிறடி என் பெண்டாட்டி..! முதல் ‘டச்’ என்னோடதா இருக்காதுன்னு தான் நான் சொன்னேன்.. ஒவ்வொரு தடவையும் நீ ‘டச்’ பண்ணாம நானா ‘டச்’ பண்ண மாட்டேன்னு சொல்லலை.. முதல்ல தொட்டது நீதான்.. தொட்டவளை நான் விடறதாயில்லை.. அதனால இப்படித் தப்பிக்க நினைக்கிறதையெல்லாம் விட்டுவிடு..”
“நல்ல கதையாய் இருக்கே..? கையைப் பிடின்னு கையை நீட்டினது நீங்க.. நீட்டின கையைத் தொட்டவுடன் இறுக்கிப் பிடிச்சுக்கிட்டதும் நீங்க.. இது அழுகுணி ஆட்டம்.. நான் ஏற்றுக்க மாட்டேன்..”
“நான் கையை நீட்டினா விரல் தொட மாட்டேன்னு நீ தள்ளி நிற்க வேண்டியதுதான..? உன்னை யாரு என் கைமேல உன் கையை வைக்கச் சொன்னது..?”
அவன் மடக்கியதில் திணறிப் போனாள் சசி.. கருணாகரனின் அணைப்பில் சுகம் கண்டவளைத் திருப்பி அவள் முகத்தோடு முகம் வைத்து விழிகளுக்குள் அவன் பார்த்தபோது அவளால் பேச முடியவில்லை..
“ஏண்டி..? என்னைப் பிடிக்கலையா..?”
ஆழ்ந்த குரலில் அவன் கேட்டபோது அவளது மனம் அதிர்ந்தது.. அவனை அவளுக்குப் பிடிக்காதா..? அவனை மட்டும்தான் அவளுக்குப் பிடிக்கும் என்பதை அவன் அறிவானா..?
விம்மலுடன் அவன் மார்பில் சாய்ந்தவளை அணைத்து அவள் முடி கோதி விட்டான் கருணாகரன்.
“முட்டாள்..! என்னை முந்திக்கிட்டு ஒருத்தன் உன்னைக் காதலிச்சிருக்கான்.. உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பிக் கேட்டிருக்கிறான்.. நீ அவனை உன்னோட பெரியப்பாகிட்டப் பேசச் சொல்லி அனுப்பியிருக்கிறன்னு கேள்விப் பட்டவுடன் எனக்குக் கோபம் வராதா..? பொறாமை வராதா..? எனக்கே எனக்குன்னு நான் நினைச்சுக்கிட்டிருந்தவ.. விடிஞ்சா என்னோட மணமேடையில உட்கார்ந்து நான் கட்டற தாலியை கழுத்தில வாங்கிக்கப் போறவங்கிற உரிமை உணர்வில நானிருக்கிறப்ப அந்த பிரவின் பத்திக் கேள்விப் பட்டவுடன் ஆத்திரம் வந்திருச்சுடி.. இதெல்லாம் ஆம்பளைகளுக்கே இருக்கிற அடிப்படை கோபம்.. பொறாமை..”
“நீங்க அதிகமா பேசினீங்க..”
“மன்னிச்சிரு.. போதுமா..?”
இலகுவாக கேட்டவனின் முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சசிரேகா.. கருணாகரனா மன்னிப்புக் கேட்பது..?
‘இவனுக்கு மன்னிப்புக் கேட்கக்கூடத் தெரியுமா..?’
“பெண்டாட்டியோட காலைக் கூடப் பிடிக்கலாம்.. தப்பில்லை..”
அவன் கண்களைச் சிமிட்டினான்.. அவள் முகத்தில் வெட்கம் வந்து அமர்ந்து கொண்டது.. மனக் கிலேசத்தில் பாதி குறைந்தவளாக அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள்..
“இப்பத்தான் நீ என் பெண்டாட்டிங்கிறதை புரூவ் பண்ற..”
கருணாகரனின் குரலில் திருப்தி இருந்தது.. அவளுடன் சுகித்திருந்த பொழுதில் அவன் பேசிய ரகசியப் பேச்சுக்களில் கூட அப்படியொரு திருப்தியை அவள் உணரவில்லை..
காலை உணவுக்குப் பின்னால் சசிரேகா பெட்டியில் துணிகளை அடுக்க முற்பட்டாள்..
“இப்ப எதுக்கு அதை நோண்டற..?” விச்ராந்தியாய் கட்டிலில் புரண்ட கருணாகரன் தலையணையை எடுத்துப் போட்டு அதில் கையூன்றிப் படுத்து அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான்..
“என்ன இப்படிக் கேட்கறிங்க..?”
“எப்படிக் கேட்கிறேன்..?”
“நாம வந்த வேலைதான் முடிஞ்சிருச்சே..”
“எந்த வேலை..?”
அவன் கண்சிமிட்டியதில் அவள் முகம் சிவந்தாள்.. அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது.. தலையைக் குனிந்து கொண்டாள்.. மனைவியின் வெட்கத்தில் அவன் உல்லாசம் கொண்டு விசில் அடித்தான்.. அவள் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தபடி..
“ஊருக்குக் கிளம்ப வேணாமா..?” என்று கேட்டாள்.
“கிளம்பனும்.. ஆனா இப்ப இல்லை..”
“என்ன..?”
ஆச்சரியமாகக் கேட்டவளின் முக பாவத்தை அவன் ரசித்தான்..
“எதுக்கு மொச்சைக் கொட்டைக் கண்ணை இப்படி விரிக்கிற..?”
“இப்ப ஊருக்குக் கிளம்பலைன்னா எப்பக் கிளம்பறோம்..? சாயங்காலம் கிளம்பறோமா..?”
“இல்லை..”
“நாளைக்கு..?”
“ஊஹீம்..”
“எப்பத்தான் கிளம்பப் போறோம்..?”
“ஒரு வாரம் கழிச்சு..”
“ஒருவாரம் கழிச்சா..? அது வரைக்கும்..?”
“இங்கேதான் இருக்கப் போறோம்..”
“இங்கேயா..?”
பெட்டியில் துணிகளை அடுக்க மறந்து அவள் மீண்டும் விழி விரிக்க.. அவன் உரக்கச் சிரித்தான்..
“ஏண்டி..?”
“நிறைய செலவாகாதா..?”
“ஆகட்டும்.. உன் புருசன் பணக்காரன் தான்டி..”
“அதுக்கில்லைங்க..”
“எதுக்கில்லை..? இங்கே நாம தங்கப் போறோம்ன்னா தங்கப் போறோம்தான்.. நீ பெட்டியை விட்டுட்டு இங்கே வா..”
ஏஸியின் குளிருக்கு அவன் போர்வையானான்.. காரமங்களத்தில் இல்லையென்ற சுதந்திர உணர்வில் அவர்கள் நினைத்த நேரத்தில் சாப்பிட்டார்கள்.. நினைத்த நேரத்தில் தூங்கினார்கள்.. மாலை வேளைகளில் மனைவியுடன் ஊர் சுற்றினான் கருணாகரன்..
சசிரேகா பார்த்த சென்னைதான் அது… கருணாகரனோடு சுற்றும் போது வேறு முகம் காட்டியது.. மெரினாக் கடற்கரையும் சில ஷாப்பிங் மால்களும் மட்டுமே சசிரேகா அறிந்த இடங்கள்.. கருணாகரன் ஊரைச் சுற்றிக் காட்டியபோது இந்தச் சிங்காரச் சென்னையிலா நாம் வேலை பார்த்தோம் என்று அதிசயப்பட்டுப் போனாள் அவள்..
“என்னத்தடி இங்க வேலை பார்த்த..? எங்கே கூப்பிட்டுக்கிட்டுப் போனாலும் ‘ஆ’ன்னு முழிச்சுக்கிட்டுப் பார்க்கிற..?” கருணாகரன் அவளை கிண்டல் செய்தான்..
“வேலை பார்த்து சம்பளம் வாங்க ஆரம்பிச்ச பின்னாலதான் நல்ல துணிகளையே நான் வாங்கிக்க முடிஞ்சது.. அதுக்கப்புறம் லேடிஸ் ஹாஸ்டல் பீஸ், என் டிரான்ஸ்போர்ட் செலவு.. மீதமிருந்த பணத்தை பேங்கில் போட்டுச் சேர்த்துக்கிட்டு வர்றேன்.. பணத்தோட அருமை எனக்குத் தெரியும்.. வத்சலா நிறைய செலவளிப்பா.. ஊர் சுத்துவா.. நான் ஜாயின் பண்ணிக்க மாட்டேன்.. அதுக்கெல்லாம் வேற செட்டைப் பிடிச்சு வைச்சிருக்கா.. நல்ல சாப்பாடு, துணி.. இதெல்லாம் என் வாழ்க்கையில கிடைக்குமான்னு நான் சின்ன வயசில ஏக்கப்படுவேன்.. பழைய சோறு.. மட்டமான துணி.. அதுவும் வருசத்துக்கு ஒன்னுதான் கிடைக்கும்.. சமையல் ரூமில கிழிஞ்ச பாயிலதான் படுத்துத் தூங்குவேன்.. கட்டில் மெத்தை யெல்லாம் நான் வேலைக்குப் போக ஆரம்பிச்ச பின்னாடி கிடைச்சதுதான்.. இப்படிப்பட்டவ கையில பணம் கிடைச்சா அதைப் பொத்தி வைச்சு செலவளிக்க நினைப்பாளா.. இல்லை.. மனம் போன போக்கில செலவளிக்க நினைப்பாளா..?” சசிரேகா கேட்டாள்..
கருணாகரனிடமிருந்து பதில் வரவில்லை.. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.. அவன் முகம் மாறி கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.. சசிரேகாவுக்கு என்னவோ போல ஆகி விட்டது.. அவளது துயரத்தை அவன் மனதில் ஏற்றி விட்டாளா..?
முட்டுக்காட்டில் அவர்கள் போட்டிங் போய் கொண்டிருந்தார்கள்.. அந்தி வெயில் தண்ணீரில் பட்டு அவர்கள் மீதும் படிந்தது.. படகை கரையை நோக்கித் திருப்பினான் கருணாகரன்..
“ஐ ஆம் ஸாரி..” வருத்தத்துடன் சொன்னாள் சசிரேகா..
“எதுக்கு ஸாரி கேட்கிற..?” அவன் புருவங்களை உயர்த்தினான்..
“உங்க மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்..”
“அடிதாண்டி வாங்கப் போற.. நீ கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த காலத்தில நான் சொகுசா வாழ்ந்துக்கிட்டு இருந்தேன் பாரு.. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு.. உன்னை அப்பவே மீட்டிருக்கனும் சசி..”
“என்ன..?”
‘இவன் என்ன சொல்கிறான்..?’ சசிரேகாவுக்குப் புரியவில்லை..
படகு கரைக்குத் திரும்பியது.. கருணாகரன் வேறு பேச்சிற்குத் தாவி விட்டான்.. அவர்கள் மாயாஜாலுக்குள் பிரவேசித்தார்கள்.. சுற்றிப் பார்த்து விட்டு படம் பார்க்கலாம் என்று சசிரேகா கேட்டுக் கொண்டதால் அதைச் சுற்றி வந்தார்கள்.. ஐஸ்கிரிம் வேண்டும் என்று சசி கை காட்டினாள்.. சின்ன்ப பெண்ணாடி நீ என்று கேலி செய்தபடி ஐஸ்கிரிம் வாங்கித் தந்தான் கருணாகரன்.. அதைச் சுவைத்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த சசிரேகா.. திடிரென்று..
“நீங்க முதன் முதலா எப்ப என்னைப் பார்த்தீங்க..?” என்று கேட்டு வைத்தாள்..
“நீ பிறந்தப்பவே பார்த்துட்டேன்..” என்றான் அவன்..
“என்ன..?”
“ஹா..ஹா..”
அவன் கண்சிமிட்டியதும் அவன் விளையாடுகிறான் என்று புரிந்து கொண்டாள் சசி.. மெல்ல கோபத்துடன் அவனை அடித்தாள்..
“ஹப்பா.. வாயைத் திறந்தா பொய்தான்..”
“ஆமாம்.. பொய்தான்..”
அவள் விழிகளுக்குள் பார்த்தபடி சொன்னான் கருணாகரன்.. அவன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் திகைத்துப் போனாள் சசி..
‘அடிக்கடி இப்படிப் பார்த்து வைக்கிறானே.. என்னவா இருக்கும்..?’ அவள் மனம் குறுகுறுத்தது.. அவனிடம் கேட்டபோது..
“ஒன்றுமில்லையே..” என்று தோள் குலுக்கினான்..
“இல்லை.. நான் பார்த்தேன்..” பிடிவாதமாக அவள் கேட்டாள்..
“உனக்கு மன பிரமைடி..” என்று சொல்லி விட்டான் கருணாகரன்..
படம் பார்க்கலாம் என்று அவர்கள் நகர்ந்த போது..
“மிஸ்டர் கருணாகரன்..” என்று யாரோ ஒருவர் அழைத்தார்.. திரும்பிப் பார்த்த கருணாகரன்..
“தெரிஞ்சவர்டி.. ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்திடறேன்.. நீ வேடிக்கை பாத்துக்கிட்டு இரு..” என்று சொல்லி விட்டுப் போனான்..
சசிரேகா அங்கிருந்த கடைகளைப் பார்த்தபடி நடந்தாள்.. அவள் பின்னாலேயே யாரோ தொடர்வதைப் போல இருந்தது.. உள்ளுணர்வின் உறுத்தலில் யாரென்று பார்த்தாள்..
“கடைசியில புளியங்கொம்பா பிடிச்சிட்ட போல.. கொழுத்த பணக்காரனா இருக்கான்.. ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டிருக்கான்.. பணத்தை தண்ணியா செலவளிக் கிறான்.. இப்படி ஒருத்தன கணக்குப் பண்ணி கையில வைச்சிருக்கிற திமிரிலதான் அன்னைக்கு என்னை வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சியா..?” என்று கேட்டபடி அங்கே நின்றிருந்தான் பிரவீன்..
“ச்சீ..” அருவெறுப்பில் முகம் சுளித்தாள் சசிரேகா..
“இப்படித்தானே அன்னைக்கும் முகம் சுளிச்ச..? உன்னைக் கல்யாணம் பண்ணி உன் கொட்டத்தை அடக்கனும்னு நினைச்சேன்.. தப்பிச்சிட்ட..”
“உன்புத்தி இப்படித்தானே யோசிக்கும்..? உன்னை மாதிரியான ஆளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்குப்
பதிலா தண்டவாளத்தில தலையைக் கொடுத்திரலாம்.. எனக்குத்தான் உன்னைப் பிடிக்கலைன்னு உனக்குத் தெள்ளத் தெளிவா தெரியுமே.. அப்புறமும் என்ன அலுவலுக்கு என் பெரியப்பாகிட்டப் பெண் கேட்டுப் போன..?” வெறுப்புடன் முகம் சுளித்தாள் சசிரேகா..
அதைக்கண்ட பிரவீனின் முகம் படுபயங்கரமாக மாறிவிட்டது..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.