Chapter 24
பிரவீனின் முகத்தைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்வாள் சசிரேகா.. அப்படியாவது அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டு அவன் விலகிவிட மாட்டானா என்ற எண்ணம் அவளுக்கு.. அந்த முகம் திருப்புதல் பிரவினின் ஈகோவை சீண்டி விடும்.. இவளுக்கெல்லாம் இவ்வளவு திமிரா என்று அவன் கொதித்துப் போய்விடுவான்.. அவளுடைய கொட்டத்தை அடக்காமல் விடக்கூடாது என்று கருவுவான்..
அப்படிப்பட்டவனின் முகத்துக்கு நேரே பட்ட வர்த்தனமாக உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்குப் பதிலாக தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து விடலாம் என்று சசிரேகா சொன்னால் அவனுக்கு எப்படியிருக்கும்..?
“உன்னைப் பத்தின அத்தனை புள்ளி விவரமும் எனக்கு அத்துபடி.. உனக்கு அடைக்கலம் கொடுத்து சோறு போட்டு வளர்த்த அங்குசாமி பெரியப்பா.. பணத்தத் தூக்கிப் போட்டா உன்னைத் தூக்கிட்டுப் போகச் சொல்லி கையைக் காட்டி விடுவான்னு கணக்குப் போட்டுத்தான் போனேன்.. அதுக்குள்ளதான் நீ இவனை கணக்குப் பண்ணித் தப்பிச்சிட்டயே..”
பேசிக்கொண்டே போனான் பிரவின்.. விட்டால் இன்னம் கொஞ்சம் பேசித் தள்ளியிருப்பான்.. அதற்குள் அவன் முதுகில் ஓங்கி ஒர் அடி விழுந்தது.. அடியின் வேகத்தில் தள்ளாடி அவன் விழுந்தான்.. அவன் முகத்துக்கு நேரே ஆள்காட்டி விரலை உயர்த்தி எச்சரித்தான் கருணாகரன்.. அவன் முகம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது..
“யாரைப் பார்த்து ‘வா, போ’ன்னு கை நீட்டிப் பேசிக்கிட்டு இருக்க..? வகுந்துடுவேண்டா நாயே..! என் பெண்டாட்டிகிட்ட நின்று பேசக்கூட நீ யோசிக்கனும்.. பயம் பத்தில்லாம இந்த அளவுக்கு பேசிக்கிட்டு இருக்க..? பொலி போட்டிருவேன்.. இவ உன்கிட்டயிருந்து தப்பிச்சதப் பத்தி அப்புறமா பேசிக்கலாம்.. இப்ப நீ என்கிட்ட இருந்து எப்படித் தப்பிக்கறேன்னு நானும் பார்க்கிறேன்..”
கருணாகரன் விட்ட உதையில் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு பந்து போல சுருண்டு துடித்தான் பிரவின்..
“தெரியாம பேசிட்டேன்.. விட்டு விடுங்க..” என்று கெஞ்சினான்..
“ஒழுங்காப் பேசிப்பழகு.. இல்லேன்னா நீ இருக்கிற இடத்துக்குத் தேடி வந்து உன்னை அடிப்பேன்.. எல்லா இடத்திலயும் எனக்கு ஆள்கள் இருக்காங்க.. செல்வாக்கும் இருக்கு.. தொலைச்சுக் கட்டிருவேன்.. ஓடியே போயிரு..” கடுமையாக எச்சரித்தபின்தான் அவனை போக விட்டான் கருணாகரன்..
படம் பார்க்க மனமில்லாமல் ஹோட்டலுக்குத் திரும்பி விடலாம் என்று சொல்லி விட்டாள் சசிரேகா.. கருணாகரனும் அதை மறுக்கவில்லை.. அறைக்குள் வந்தவுடன் அவன் மார்பில் சாய்ந்தவள் அடக்கி வைத்திருந்த துயரத்தையெல்லாம் வெளியில் கொட்டி “ஹோ..” வென்று அழுது தீர்த்து விட்டாள்..
“சசி..” அவளை இழுத்து அணைத்து இறுக்கிக் கொண்டான் கருணாகரன்.. அவன் கண்களும் கலங்கிச் சிவந்திருந்தன..
“எப்படியெல்லாம் பேசினான்..” பொருமினாள் சசிரேகா..
“நான் சோற்றுக்கு வழியில்லாம அங்குசாமி பெரியப்பா வீட்டிலே வளர்ந்தேனாம்.. சொல்லிக் காட்டறான்.. என்னைப் பெத்தவங்க உயிரோட இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..?”
“சசி..”
“எங்கப்பா வசதியானவர்ங்க.. என்னை இளவரசியைப் போல வளர்த்தார்.. எங்கம்மா என்னை இடுப்பிலேயே தூக்கி வைச்சிருப்பாங்க.. கீழே இறக்கி விட்டதில்லை.. என்னை அநாதையா விட்டுட்டுப் போகப் போறோம்ன்னுதான் எங்கம்மா அப்படித் தரையில விடாம என்னை வளர்த்தாங்களா..?”
சசியின் கண்ணீரில் கரைந்து போனான் கருணாகரன்.. கண்ணீரில் நனைந்திருந்த மனைவியின் முகத்தைத் துடைத்து.. கலைந்திருந்த அவளின்
கூந்தலை சீர் செய்து.. ஆதுரத்துடன் மடியில் சாய்த்துக் கொண்டான்.. அவன் மடியை தாயின் மடியாக உணர்ந்தாள் சசிரேகா..
“உனக்கு உங்க அம்மான்னா ரொம்பப் பிடிக்கும் போல..”
“ம்ம்ம்.. அப்பாவையும் ரொம்பப் பிடிக்கும்தான்.. ஆனா அம்மா எப்பவுமே ஸ்பெசல்தானே..?”
“ஷ்யூர்.. ஷ்யூர்..”
“அப்பா பெரியப்பாவோட குடும்பத்து மேலே பாசமா இருப்பார்.. அம்மா எதனாலோ அதை கண்ட்ரோல் பண்ணனும்னு நினைச்சாங்க.. இதைப் பத்தின வாக்கு வாதங்கள் சின்ன வயசில நான் கேட்டதா நினைவு..”
“பெண்களுக்கு எப்பவுமே நுட்ப உணர்வு அதிகம் சசி.. உன் அம்மாவுக்கு உன் பெரியப்பாவோட குணத்தைப் பத்தி தெரிஞ்சிருக்கலாம்..”
“அப்படித்தான் தோணுது.. என்ன சொல்லி என்ன பண்ண..? எங்கப்பா என்னை அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டார்.. கட்டிக் காப்பாத்த அம்மா துணைக்கு
நிற்காம அப்பா கூடவே போயிட்டாங்க.. என்னைக் காப்பாத்த என் தாய்மாமன் வந்தாராம்.. அங்குசாமி பெரியப்பா அதுக்கு விடலையாம்..”
சொல்லிக் கொண்டே வந்தவள் அவனிடம் அசைவில்லாமல் போனதில் அண்ணாந்து அவன் முகத்தை கேள்வியாக பார்த்தாள்.. அவனது இமைகள் துடித்துக் கொண்டிருந்தன..
“ஒன்னுமில்லை.. நீ சொன்னதை யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. உன்னோட தாய் மாமனைப் பத்தி நீ நினைச்சுப் பார்ப்பியா சசி..?”
“எத்தனையோ நாள் நினைச்சிருக்கேன்.. அங்குசாமி பெரியப்பா வீட்டில என்னை அடிமையை விடக் கேவலமா நடத்துவாங்க.. எத்தனையோ நாள் எனக்குப் பழைய சோறு கூட கிடைக்காமல் போயிருக்கு.. அப்பல்லாம் நான் என்னோட தாய் மாமாவ நினைச்சுத்தான் அழுதிருக்கேன்..”
“சசி..” கருணாகரனின் குரல் கரகரத்தது.. இரண்டு சொட்டுக் கண்ணீர் அவளது உச்சந்தலையில் விழுந்து நனைத்ததில் அவள்..
“அழுகறிங்களா..?” என்று அவன் முகம் பார்த்தாள்..
“ஆம்பளைக அழுக மாட்டாங்கன்னு யாருடி சொன்னது..?” அவன் அவளை மார்போடு அணைத்துக் கொண்டான்..
பேச முடியாத பேச்சுத் தேவைப்படாத மௌனம் அங்கே நிறைந்திருந்தது.. கிளர்ச்சிகளற்ற.. தூண்டுதல் தேவைப்படாத நெருக்கம் அவர்களுக்குள் நிலவியது.. காதலுமற்ற.. காமமுற்ற தோழமையுடன் அவர்கள் பேசிக் கொண்டார்கள்..
இதுபோன்ற தருணங்கள் சுகமானவை.. வாழ்க்கைத் துணை என்பது கட்டிலைச் சார்ந்தது மட்டுமல்ல என்று உணர்த்துபவை.. சசி மனம் விட்டுப் பேசினாள்.. அதை ஒரு வார்த்தை கூட விடாமல் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டான் கருணாகரன்..
மனதிலிருக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் போது.. அதன் மதிப்புத் தெரிந்தவரிடம் இறக்கி வைக்க வேண்டும்.. அப்போதுதான் இறக்கி வைப்பவரின் பாரம் உண்மையிலேயே குறையும்.. இல்லையென்றால் பாரம் அதிகமாகி விடும்..
“ஏன் சசி..”
கருணாகரனின் பீடிகையே அவன் முக்கியமாக எதையோ கேட்கப் போகிறான் என்பதை உணர்த்தியதில்.
“என்னங்க..?” என்றாள் சசி..
“உனக்குத்தான் அந்த பிரவினைப் பிடிக்காதே.. அதை அவன் முகத்துக்கு நேரா சொல்லியிருக்கையே.. அதை ஏன் என்கிட்டச் சொல்லலை.. நீ அவனை விரும்பினயோன்னு நான் நினைச்சிட்டேனில்ல.. இல்லேன்னு ஏண்டி நீ மறுக்கலை..?”
சசி கசப்புடன் சிரித்தாள்.. கருணாகரனின் மனம் வேதனைப்பட்டது.. அவனைத் தவிர வேறு யாரையும் நினைக்காதவளை அவன் எப்படியெல்லாம் பேசி விட்டான்..?
“இல்லேன்னு நான் மறுத்தாமட்டும் நீங்க கேட்டுக்கிட்டு இருப்பீங்களா..? உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால நான் பொய் சொல்றேன்னு நினைக்கலாமில்ல..? அதை என்னால தாங்கிக்க முடியாது..”
“பொய்யா..? நீ பொய் சொல்வியா..? சேச்சே.. அப்படி உன்னை நினைப்பேனாடி..? உன் முன்னாடிதான் வத்சலா சொன்னாப்புல.. நீயும் அதை மறுக்கலை..”
“என்னன்னு..?”
“அந்த பிரவீன் உன் காதலன்னு..”
“அவ அப்படித்தான் பினாத்திக்கிட்டு இருப்பா.. மனுசங்களை பணத்தை வைச்சு எடை போடக் கூடாது.. குணத்தை வைச்சு எடை போடனும்.. அவன் குணம் கெட்டவன்.. வத்சலாவுக்கு அது புரியாது.. அவன் பணக்காரன், அப்படி, இப்படின்னு என்னை ஃபோர்ஸ் பண்ணுவா..”
“ஓ..”
கருணாகரன் மனம் தெளிந்தவனாக மனைவியை அணைத்துக் கொண்டான்.. அவனது அணைப்புக்குள் அடங்கிய சசிரேகாவின் மனதில் எல்லையற்ற அமைதி நிலவியது.. அது அவள் மனதில் என்றுமே பிரவினுக்கு இடம் இருந்ததில்லை என்பதை கருணாகரன் புரிந்து கொண்டான் என்பதில் வந்த நிம்மதி..
‘ஆனாலும்..’ அவள் மனம் சிணுங்கியது..
“என்னடி..?”
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கருணாகரன் அவளது கன்னத்தில் விரலால் கோடு போட்டு இழுத்தபடி கேட்டான்..
“என்ன.. என்ன..?” என்றாள் அவள்..
“உன் மனசில என்னன்னு கேட்கிறேன்..”
“என் மனசிலயா..? எதுவுமில்லையே..”
“உனக்குப் பொய் சொல்லவராதுடி.. மனசில இருக்கறதைக் காட்டற பளிங்கு முகம்.. உன் முகம்.. ஏதோ இருக்கு.. அது என்னன்னு சொல்லு..”
“அது.. அது வந்து..”
சசிரேகா தயங்கினாள்.. கண்களை மூடித் திறந்தவளின் முகத்தில் தீர்மானம் வந்தது.. கேட்டு விட வேண்டும் என்ற முடிவுடன்..
“நீங்களும் எனக்கு அநியாயம்தானே பண்ணியிருக் கீங்க..? பிரவீன் சொன்னதைப் போல அங்குசாமி பெரியப்பாகிட்ட அன்னவாசல் சொத்தையும் ஏற்காட்டு வீட்டையும் தூக்கிப் போட்டிங்க.. அவரும் என்னைத் தூக்கிட்டுப் போகச் சொல்லி உங்ககிட்டச் சொல்லிட்டாரு.. நீங்களும் என் கழுத்தில தாலியைக் கட்டி என்னைத் தூக்கிட்டு வந்திட்டீங்க.. பிரவின் செய்ய நினைச்சதைத் தானே நீங்களும் செய்திருக்கீங்க..? அவன் என்னை எப்படி எடை போட்டானோ.. அப்படித்தானே நீங்களும் என்னை எடை போட்டுட்டீங்க..? ஆக.. இந்த சசிரேகா அங்குசாமி பெரியப்பாவின் வீட்டில வளர்ந்த ஒரு அடிமை.. அவரிடம் விலைபேசி தூக்கிட்டு வந்திரலாம்.. இதுதானே உங்க ரெண்டு பேரோட கணக்கு..? இது என்னை ளெரவப் படுத்துமா..?”
சசிரேகா குமுறி விட்டாள்.. கருணாகரன் யோசனையுடன் அவளையே பார்த்தான்.. மனைவியின் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் வலியை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. எப்பேற்பட்ட வலி அது..! நெஞ்சில் தைத்த நெருஞ்சி முள்ளின் வலியல்லவா அது..? அதைப் பிடுங்கி எறியா விட்டால் வாழ்நாள் முழுவது அந்த நெருஞ்சிமுள் அவள் மனதை நிரடிக் கொண்டிருக்காதா..?
“சசி..! முள்ளை முள்ளால்தான் எடுத்தாகனும்.. அதை வார்த்தைகளில் சொல்லி புரிய வைக்க முடியாது.. கிளம்பு..”
“எங்கே..? காரமங்களத்துக்கா..?”
“இல்லை.. ஆத்தூருக்கு..”
“அங்கே யார் இருக்காங்க..?”
“நம்ம சொந்தக்காரங்க.. வா.. போகலாம்..”
சசிரேகா அதற்கு மேலும் கேள்வி கேட்காமல் அவனுடன் கிளம்பினாள்.. காரில் போகும் போதும் சரி.. வழியில் சாப்பிட இறங்கிய போதும் சரி.. கருணாகரன் ஆத்தூரில் இருக்கும் உறவுக்காரர் யார் என்று சொல்ல வேயில்லை.. வேறு எதையெதையோ பேசிக் கொண்டு வந்தான்.. பிற்பகல் தாண்டிய வேளையில் ஆத்தூருக்குள் கார் நுழைந்தது.. பல தெருக்களைத் தாண்டிய பின்னர்.. விஸ்தாரமான வீதியில் இருந்த பெரிய பங்களாவின் முன்னால் நின்றது.. ஒரு புறம் பிரம்மாண்டமான திருமண மண்டபமும்.. இன்னொரு புறம் சினிமாத் தியேட்டருமாக இருந்த அந்த பங்களாவின் செக்யூரிட்டி கருணாகரனின் காரைக் கண்டதும் சல்யூட் அடித்து கேட்டைத் திறந்து விட்டான்..
பிரதான சாலையிலிருந்து வீட்டின் போர்டிகோ வரை நீண்டு சென்ற சாலையின் இருபக்கமும் தோட்டம் இருந்தது..
“வீடு அழகா இருக்கு.. யாரோட வீடு..” ஆவலுடன் கேட்டாள் சசி..
“இந்த வீடு மட்டும்தான் அழகா..? ரெண்டு பக்கமும் இருக்கிற கல்யாண மண்டபமும், சினிமாத் தியேட்டரும் அழகாய் இல்லையா..?” கருணாகரன் சிரித்தான்..
“அழகா இருக்கே.. பர்ட்டிகுலரா இந்தக் கேள்வியைக் கேட்கறிங்களே.. ஏன்..?” வியப்புடன் கேட்டாள் சசிரேகா.
“அது ரெண்டும் இந்த வீட்டில இருக்கிறவங்களைச் சேர்ந்ததுதான்.. அது போக பெட்ரோல் பங்க் இருக்கு.. ஆத்தோரமா தென்னந்தோப்பு இருக்கு.. ஆத்தூர் கடைவீதியிலே ஜவுளிக்கடை இருக்கு.. பார்னிச்சர் மார்ட் இருக்கு..” அடுக்கினான் அவன்..
“அடேங்கப்பா.. பெரிய பணக்காரங்க போல..” என்றாள் சசி..
கருணாகரன் அவளைப் பார்த்த பார்வையில் ஏதோ செய்தியிருக்க..
“இப்படியேதான் அடிக்கடி பார்த்து வைக்கறிங்க..” என்று அலுத்துக் கொண்டாள்..
“எப்படிப் பார்க்கிறேன்..?”
“புதிர் போடறதைப் போலப் பார்க்கறிங்க..”
“புதிரை விடுவிக்கத்தானே இங்கே கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கேன்..”
ஓடி வந்த வேலையாள்களிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டு சசிரேகாவுடன் படியேறினான் கருணாகரன்.. அகன்ற வழவழப்பான தூண்களுடன் ஜமீன் மாளிகை போல அந்த வீடு இருந்தது.. அவனைக் கண்டதும் வேலையாள்கள் ஓடி வந்ததைப் பார்த்த சசிரேகா.. அவன் அடிக்கடி அங்கே வந்து போகிறவன் போல என்று நினைத்துக் கொண்டாள்..
“வாம்மா..”
மங்கல ஆரத்தியுடன் அவளை வரவேற்றாள் ஒரு பெண்மணி.. அச்சு அசப்பில கருணாகரனையும், கவிதாவையும் போல ஜாடையில் இருந்தாள்.. கவிதாவின் காருண்யப் பார்வை அப்படியே அவளிடம் இருந்தது.. பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் அம்பிகையின் அருள் வடிவாக கருணாகரனுக்கும் சசிரேகாவிற்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துக் கொண்டாள்..
“யாரு வந்திருக்கிறாங்க கயல்விழி..”
உள்ளே சப்தம் கேட்டது.. கயல்விழி சிரித்தபடி குரல் கொடுத்தாள்..
“யாரு வந்திருக்கிறாங்கன்னு வந்து பாருங்க..”
கயல்விழியின் குரல் கேட்டு வந்தவர் ஆஜானு பாகுவாக கருணாகரனின் கம்பீரத்தோடு நடுவயதைத் தாண்டியவராய் இருந்தார்.. தூய்மையான வெள்ளை வேட்டி, சட்டையில் இருந்தவர்..
“கருணா..” என்று பாசத்துடன் கைவிரித்தார்..
“அப்பா..” கருணாகரன் அவர் கைகளுக்குள் புகுந்து கொண்டான்..
‘அப்பாவா..? அப்படின்னா இவங்க கருணாவோட அம்மாவா..?’ திகைத்து விழித்தாள் சசிரேகா..
கயல்விழியின் பார்வை ‘ஆம்’ என்றது..
“உங்க மருமகளை அழைத்துக்கிட்டு வந்திருக் கேன்ப்பா..”
கருணாகரன் சசிரேகாவைக் காட்டினான்.. அவளைப் பார்த்தவரின் உதடுகள் துடித்தன.. கண்கள் கலங்சிச் சிவந்தன..
“அம்மாடி..!” நாத்தழுதழுக்க அழைத்தார்..
“உன் தாய்மாமனான தயாளனைப் பார்க்க இத்தனை வருசங்களைத் தாண்டி வந்திருக்கியா என் தங்கமே..!”
சசிரேகாவினால் அவள் காதுகளை நம்ப முடியவில்லை.. அவள் கேட்பது உண்மையா..? எதிரில் நிற்பவர் அவளுடைய அம்மாவின் அண்ணனா..?
பதறி நகர்ந்த விழிகள் ஹாலின் சுவரில் மாட்டப் பட்டிருந்த பெரிய புகைப்படங்களைப் பார்த்தன.. அந்தப் புகைப்படங்களில் சசிரேகாவைப் பெற்றவர்களான ரங்கசாமியும் தாரிணியும் மாலையுடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள்..
“உயிருக்குயிரா வளர்த்த ஒரே தங்கைம்மா.. என் தாரிணி.. படிக்கப் போனவ ரங்கசாமியைக் காதலிச்சுக் கல்யாணமும் பண்ணிக்கிட்டா.. என்னால அதைத் தாங்க முடியலை.. கோபப் பட்டேன்.. அவளும் கோபப்பட்டு உன் வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா.. தள்ளி நின்னு அவளைக் கவனிச்சேன்.. நீ பிறந்தப்ப உன்னைப் பார்க்க கருணாகரனோட வந்திருந்தேன்.. உங்கம்மா என் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டேன்னு சொல்லிட்டா..”
என்னை முதன் முதலாக எப்போது பார்த்தாய் என்ற சசிரேகாவின் கேள்விக்கு.. நீ பிறந்த போதே பார்த்து விட்டேன் என்று ஏன் கருணாகரன் சொன்னான்.. என்பது அப்போது சசிக்குப் புரிந்தது..
“ரங்கசாமி தாரிணியை நல்லபடியா கவனிச்சுக் கிட்டான்.. உன்னையும் நல்லாத்தான் வளர்த்தான்.. என்னோட கோபம் பறந்திருச்சு.. உங்கப்பா அம்மா கூட சமாதானமாப் போகனும்னு இடையில இருந்த சொந்தக்காரங்க மூலமாக தூது விட்டேன்… என் தங்கையோட மனசில இருந்த கோபம் படிப்படியா குறைஞ்சுக்கிட்டே வந்தது.. ஒருநாள் என் தங்கை எனக்குப் போன் பண்ணி.. குடும்பத்தோட என் வீட்டுக்கு விருந்து சாப்பிட வா அண்ணா.. நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னாகிரலாம்ன்னு சொன்னா.. நானும் என் தங்கை எனக்குத் திரும்பக் கிடைச்சிட்டான்னு ஏற்காட்டுக்கு குடும்பத்தோட கிளம்பி ஓடினேன்.. அங்கே என் தங்கை இருந்தா.. அவ உயிர்தான் இல்லை..”
“மாமா..”
சசிரேகா பொங்கி அழுதாள்.. அவள் தாயை தாயினும் சாலப்பரிந்து நேசித்த, நேசிக்கும் ஒரு ஜீவனைக் கண்டு விட்ட சொந்தத்துடன் கண்ணீர் விட்டு அழுதாள்.. தயாளன் தங்கை மகளைத் தன் தோளில் தாங்கிக் கொண்டார்..
“உன் அப்பாவோட உன் அம்மாவும் போயிட்டா.. என் தங்கை கடைசி வரைக்கும் என்கிட்ட முகம் பார்த்துப் பேசாமலே போயிட்டா.. இந்த வீட்டோட வாசல் படியை மிதிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போனவ கடைசி வரைக்கும் இந்த வீட்டின் வாசல் படியை மிதிக்கவே இல்லை..”
“மாமா..”
“என் தங்கையோட மக நீ.. அவளோட ரத்தம்.. வாரிசு.. உன்னைக் கைப்பற்றி இந்த வீட்டுக்கு கொண்டு வந்துடனும்னு நான் போராடினேன்ம்மா.. அந்த அங்குசாமி ஜெயிச்சுட்டான்.. வருசா வருசம் குடும்பத்தோட ஏற்காட்டில டேரா போட்டு ரங்கசாமியோட சம்பாத்தியத்த உறிஞ்சிப் பிழைச்சதை ஒட்டுறவா காரணம் காட்டிட்டான்.. தள்ளி நின்னு தங்கச்சிக்காக மறுகின என்னை யாரோ ஒருத்தனாக்கிட்டான்.. பஞ்சாயத்துப் பண்ணக் கூடின அக்கம் பக்கத்து ஆளுகளுக்கு அவனை அடையாளம் தெரிந்திருந்தது.. என்னை தங்கச்சியை தள்ளி வைச்சிட்ட கிராதகனா சொல்லிட்டாங்க..”
“மாமா..”
“நான் விடலைம்மா.. கோர்ட்டுக்குப் போனேன்.. சாட்சிகள் அவனுக்குச் சாதகமா இருந்தாங்க.. ரங்கசாமியோட நண்பர்கள் எல்லோருமே அங்குசாமியைத் தான் உன்னோட பெரியப்பாங்கிற உறவு முறையில தெரியும்.. நான் உன்னோட தாய்மாமன்னு யாருக்குமே தெரியாதுன்னு சொல்லிட்டாங்க.. இவ்வளவு ஏன்..? கோர்ட்டில கூட்டத்தோடு கூட்டமா என்னையும், அங்குசாமியையும் நிறுத்தி வைச்சு அடையாளம் காட்டச் சொல்லி சின்னப் பிள்ளையான உன்கிட்டச் சொன்னாங்க.. நீ அங்குசாமியை பெரியப்பான்னு அடையாளம் காட்டின.. தாய்மாமனான என்னை உனக்கு அடையாளம் தெரியாமலே போயிருச்சு.. மாமான்னா யாருன்னு தெரியாதுன்னு நீயே சொல்லிட்டம்மா..”
“எனக்குத் தெரியலையே மாமா.. தெரிஞ்சிருந்தா என் தலையிலே நானே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கிட்டு இருப்பேனா..?”
“அப்படிச் சொல்லாதேடாம்மா.. உனக்கு என்னை எப்படிம்மா அடையாளம் தெரியும்..? ஒருநாள் ஒரு பொழுதாவது ஒரு தாய்மாமனா லட்சணமா சீர்வரிசையோட உன் வீட்டுக்கு வந்து நின்னிருப்பேனா..? அப்படி வந்து நின்னு.. உன் அம்மா உன்னைக் கூப்பிட்டு என்னைக் காட்டி.. இவர்தான் என் கூடப்பிறந்த அண்ணன் சசி.. உன்னோட தாய்மாமன்னு அடையாளம் சொல்லியிருந்தா நீயும் இவன்தான் என் தாய்மாமன்னு கோர்ட்டில் என்னை அடையாளம் காட்டியிருப்ப.. உன் மேல என்னடா குற்றமிருக்கு..?”
“உங்க மேலயும் குற்றம் இல்லையே மாமா..”
சசிரேகாவின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனார் தயாளன்.. தங்கை மகளின் முடி கோதி கயல்விழியைப் பார்த்து..
“என் தங்கம் பேசறதைக் கேட்டியா கயல்..?” என்று மகிழ்ந்து போனார்..
“தாரிணியின் ரத்தம்.. எப்படிங்க பேசும்..?” பாசத்துடன் சொன்னாள் கயல்விழி..
“கோர்ட்டில் அங்குசாமி ஜெயிச்சுட்டாலும்.. வேற ஒரு வகையில அவனுக்கு நான் விலங்கு போட்டுட்டேன்.. என் தங்கை காதலிச்ச காரணத்துக்காக நான் விலக்கி வைச்சிருந்தாலும் என் தங்கை போன பின்னால அவளோட மகளுக்கு நானும் ஓர் கார்டியன்ங்கிற உத்தரவை வாங்கிட்டேன்.. என் தங்கை மகளோட படிப்புக்கோ பாதுகாவலுக்கோ தடை ஏற்பட்டதுன்னா உடனடியா என் தங்கை மகளை என் வசம் ஒப்படைச்சுரனும்னு கோர்ட் தீர்ப்பு சொல்லிருச்சு.. அதோட.. ஏற்காட்டு வீட்டை நீ மேஜரான பின்னால உன் வசம் ஒப்படைக்கனும்னும்.. அதுவரைக்கும் அந்த வீடு கோர்ட்டின் பொறுப்பில்தான் இருக்கும்ன்னும்.. அந்த வீட்டோட வாடகைப் பணத்தை உன் பேரில பேங்கில கட்டிக்கிட்டு வரனும்னு கோர்ட்டு உத்தரவு போட்டுச்சு.. அன்னவாசலில ரங்கசாமி யோட பங்குச் சொத்துக்கள்ல வர்ற வருமானத்தை உன்னை வளர்க்கிறதுக்கான செலவுத் தொகையா அங்குசாமி சொன்னதினால அந்தச் சொத்து அவனோட மேற்பார்வையிலும், ஏற்காட்டு வீடு என்னோட மேற் பார்வையிலும் இருக்கனும்னு கோர்ட் சொல்லிருச்சு.. அங்குசாமியால ஏற்காட்டு வீட்டையும் கைப்பற்ற முடியலை.. உன் படிப்பையும் நிறுத்த முடியலை..”
சசிரேகாவுக்கான தனது போராட்டத்தை தயாளன் விவரிக்க விவரிக்க சசிரேகா கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்..
அவளுக்காக போராட அவளது தாய்மாமன் துணிந்து நின்றிருக்கா விட்டால் அவள் என்ன கதிக்கு ஆளாகியிருப்பாள்..
“நீங்க மட்டும் போராடலைன்னா.. என்னோட கதி..?”
அவள் விம்மியபோது கல்யவிழி பதறிப் போனவளாக மருமகளின் வாயைப் பொத்தி அப்பேச்சைத் தடுத்தாள்..
“இவர் போராடாம எப்படி இருப்பார்..? உன் மாமாவுக்கு இருக்கிற செல்வாக்குக்கு அந்த அங்குசாமிய எப்பவோ அந்தல சிந்தலயா ஆக்கி விட்டிருப்பார்.. நீ அவன் பொறுப்பில அகப்பட்டிருந்த.. உன்னை அங்கேயிருந்து விடுவிக்காம எதையும் செய்ய முடியாதுன்னு பொறுமையா காத்துக்கிட்டு இருந்தார்..”
மருமகளின் கண்ணீரைத் துடைத்து விட்டு அவளை சோபாவில் அமர வைத்தாள் கயல்விழி.. கருணாகரனை பார்வையிலே அதட்டி மருமகளின் பக்கத்தில் அமரச் சொன்னாள்.. அவளது கண்ணசைவில் பாலும், பழமும் வந்தன.. அதை டீப்பாயில் வைக்கச் சொல்லிவிட்டு..
“முதலில் பூஜை ரூமில விளக்கை ஏத்தி விடம்மா..” என்று அன்புடன் மருமகளை அழைத்துக் கொண்டு போனாள்..
‘இது என் வீடா..?’
நம்ப முடியாத பிரமிப்புடன் விளக்கை ஏற்றினாள் சசிரேகா.. விளக்கின் ஒளியில் தெரிந்த கடவுள்களின் திருவுருவங்கள் அவளை ரட்சிப்பதைப் போல அனுகிரகத்துடன் அவளை ஆசிர்வதித்தன..
‘நீங்க எப்போதும் என்னுடனே இருந்திருக்கீங்க.. இது தெரியாத முட்டாளா நான் மருகிக்கிட்டு இருந்திருக்கேன்.. நன்றி தெய்வங்களே..!’
மனமார கடவுள்களுக்கு நன்றி கூறினாள் சசிரேகா..
மகனுக்கும், மருமகளுக்கும் பால், பழம் கொடுத்து உண்ணச் சொன்னாள் கயல்விழி.. அருகேயிருந்த சோபாவில் உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தயாளனின் முகத்தில்தான் எத்தனை நிறைவு..!
அது தங்கையின் மகளை அங்குசாமியின் பிடியிலிருந்து விடுவித்து அவரின் குடும்பத்திற்குள் கொண்டுவந்து விட்ட நிறைவு..!
“இது ஒருநாள்.. ரெண்டு நாளில போட்ட திட்டமில்லம்மா.. வருசக்கணக்கா நாங்க போட்டதிட்டம்.. தாரிணி போன பின்னால நீ அங்குசாமியோட பொறுப்பில வளர ஆரம்பிச்ச.. கருணா அப்ப காலேஜில படிச்சுக்கிட்டு இருந்தான்.. படிப்பை முடிச்சவனை காரமங்களத்தில பிஸினெஸை ஆரம்பிக்கச் சொன்னேன்.. எங்கிருந்தோ வந்த இளம்வயது தொழிலதிபனா.. புதுப் பணக்காரனா.. கருணா காரமங்களத்தில காலை ஊண்டினான்.. அப்பாம்மா ஃபாரின்ல இருக்காங்கன்னு கதை சொன்னான்.. கவிதாவும், தியாகராஜனும் கருணாகூட இருந்தாங்க.. ஹாஸ்டலில தங்கிப் படிச்சுக்கிட்டு இருந்த கருணாவை அங்குசாமி பார்த்ததேயில்ல.. கருணா பிஸினெஸ் பண்ண ஆரம்பிச்சான்.. முதலில் ஜவுளிக்கடை.. அடுத்து பர்னிச்சர் மார்ட்.. அதற்கடுத்து சூப்பர் மார்க்கெட்ன்னு இவன் தொழிலை விரிவு பண்ணப் பண்ண அந்த சுத்து வட்டாரத்தில இவனோட செல்வாக்கு கூட ஆரம்பிச்சுச்சு.. ரொம்பச் சீக்கிரத்திலேயே காரமங்களத்தில பெரிய மனிதனா உயர்ந்து நின்னுட்டான்..”
தயாளனைப் பற்றிய விவரங்களை வெளிப் படுத்தாமல் சுய முகவரியை மாற்றி காரமங்களத்தின் புதுப் பணக்காரனாக கருணாகரன் அடையாளம் காணப்பட்ட கதையைச் சொல்ல ஆரம்பித்தார் தயாளன்..
“எங்களோட இலக்கு நீ மட்டும்தான்.. உன்னை அங்குசாமியிடமிருந்து மீட்கனும்னா இரண்டு வழிகளில் தான் மீட்டாகனும்.. ஒன்னு, நீ மேஜராகிற வரைக்கும் காத்திருந்து.. உன்னைப் பார்த்து விசயங்களை தெளிவு படுத்தி அங்குசாமியின் பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வர வைக்கனும்.. அது முடியுமான்னு எங்களுக்குச் சந்தேகமா இருந்தது.. என்னை உனக்குத் தெரியாது.. கோர்ட்டில என்னை அடையாளம் காட்ட முடியாத நீ.. எந்த அளவுக்கு என் பேச்சை நம்புவேன்னு எங்களுக்கு யோசனையாக இருந்தது..”
இந்த அளவுக்கு அவளுக்காக ஒரு குடும்பமே யோசித்ததா..? தான் அநாதையென்று மருகிக் கொண்டிருந்த சசிரேகா விழி கலங்க சுவரில் மாட்டப் பட்டிருந்த தாயின் புகைப்படத்தைப் பார்த்தாள்..
‘அம்மா..! உன் பிறந்தவீடு இத்தனை பாசமுள்ளதா..!’
“இரண்டாவது வழிதான் உகந்ததுன்னு எங்க மனசுக்கு பட்டுச்சு.. அது கருணாவுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி எங்க வீட்டின் மருமகளா ஆக்கிக்கிற வழி.. இதுதான் நிரந்தரமா உன்னை எங்களோட சேர்த்து வைக்கும்ன்னு நான் நினைச்சேன்.. கருணாவும் கேட்டுக்கிட்டான்..”
‘ஆக.. என்னோட அத்தான்.. அத்தை மகளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகத்தான் காரமங்களத்தோட புதுப் பணக்காரனா மாறியிருக்கார்..’
சசி விழிகளையுயர்த்தி கருணாகரனைப் பார்த்தாள்.. அவன் மற்றவர்கள் அறியாதவண்ணம் கண் சிமிட்டினான். சசிக்கு வியர்த்து விட்டது.. பக்கத்தில் அத்தையும், மாமாவும் இருக்கிறார்கள் என்ற நினைவில் அவசரம் அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..
‘கள்ளன்..’
ஓரக் கண்ணால் அந்தக் கள்வனைப் பார்த்தபோது அவன் நமட்டுச் சிரிப்பைச் சிந்திக் கொண்டிருந்தான்..
“உன் கல்யாண விசயத்தில அங்குசாமி கவனமாக இருப்பான்னு எங்களுக்குத் தெரியும்.. கோர்ட்டுக்கு பயந்து உன்னைப் படிக்க விட்டவனுக்கு நீ புத்திசாலித்தனமா படிச்சு வேலை தேடிக்கிட்டது பெருத்த அதிர்ச்சியா இருந்தது.. உன்னைப் போல படிச்சு வேலை பார்க்கிற ஒருத்தன் உன்னைப் பெண் கேட்டு வந்திட்டா என்ன செய்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.. படிச்சவன் சும்மா இருக்க மாட்டான்.. உன்னோட சொத்து நிலவரங்களைப் பத்தி தூண்டித் துருவி விசாரிக்க ஆரம்பிச்சிருவான்.. அதுக்கு விடக் கூடாதுன்னு அங்குசாமி நினைச்சான்.. அநாதைக் கழுதைக்கு சோறு போட்டு வளர்த்தேன்.. அந்த நன்றிக் கடனைக் கழிக்க நான் கை நீட்டற மாப்பிள்ளைக்கு அவ கழுத்தை நீட்டித்தான் ஆகனும்னு அவனுக்கு நெருக்கமானவங்ககிட்ட அவன் அடிக்கடி சொல்லுவானாம்..”
‘நான் அனாதைக் கழுதையா..?’ சசிக்கு அழுகை வந்துவிட்டது..
“இப்ப எதுக்காக அழுகற..?” கருணாகரன் கண்டித்தான்..
“அவன் சொல்லிட்டா நீ அநாதையாகிருவியா..? உனக்காக ஊர், உறவை மறந்து காரமங்களத்தில புதுப் பணக்காரனா அவதாரமெடுத்தேனே.. நான் உன் கண்ணுக்குத் தெரியலையா..? அதுக்காக என்னை அனுப்பி வைத்த என் அப்பாம்மா உன் கண்ணுக்குத் தெரியலையா..? இல்லை.. தம்பிக்காகன்னு என் அக்கா தன் புருசனோட காரமங்களத்தில எனக்குத் துணையா இருக்க வந்துச்சே.. அது உன் கண்ணுக்குத் தெரியலையா..? ஆள், அம்பு, படைபலம்ன்னு நீ ஸ்ட்ராங்கான உறவோடு இருக்கிற ஆளுடி.. அவன்தான் அநாதை..”
‘ஆமாமில்ல..’ சசிரேகாவின் அழுகை நின்றுவிட்டது.
“எங்களுக்கு என்ன செய்கிறதுன்னு தெரியலை..” தயாளன் தொடர்ந்தான்..
“கருணா பெண் கேட்டா நிச்சயமா அங்குச்சாமி சரின்னு சொல்லி உன்னைக் கட்டிக் கொடுத்திர மாட்டான்.. படிச்ச மாப்பிள்ளைக்கே பயப்படறவன்.. கருணாவைப் போல படிப்பும் பணமும் சேர்ந்த புதுப்பணக்காரனுக்கு உன்னைக் கட்டிக் கொடுக்க எப்படிச் சம்மதிப்பான்..?”
‘சம்மதிக்கத்தான் மாட்டார்..’ சசிரேகா தலையை அசைத்தாள்..
“இதுக்கு இடையில் உன்கூட வேலை பார்த்த ஒருவன் உன்னைப் பெண் கேட்டு வந்திட்டான் போல..”
‘பிரவினைச் சொல்கிறார்..’
சசி கருணாகரனைப் பார்த்தாள்.. அவன் இமை மூடித்திறந்து ஆமாம் என்பதைப் போல சமிக்ஞை செய்தான்..
“அங்குசாமி அலறிட்டான்.. அவசரமாக உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சான்.. அப்பத்தான் அங்குசாமியோட ஒன்னுவிட்ட மச்சினனான பொன்னுசாமி உன்னைப் பொண்ணு கேட்டிருக்கான்..”
“அவனா..?” சசியின் விழிகள் பயத்தில் மிரண்டு விழித்தன..
அந்தப் பொன்னுச்சாமி மழைக்குக்கூட பள்ளிக் கூடத்தின் பக்கம் ஒதுங்கி அறியாதவன்.. குடி, குட்டியென்று அனைத்துப் பழக்கங்களும் உள்ளவன்.. குடியிருக்க ஓர் கூரை வீடு மட்டுமே உண்டு.. அதுவும் காற்றடித்தால் பறந்து விடும்.. பெருங்கொண்ட ஆள்களின் கைத்தடியாக வேலை செய்து.. கிடைக்கும் பணத்தைக் குடித்து கும்மாளமிட்டு அழிப்பவன்..
அவன் பெண் கேட்டதைக் கேட்டுக் கொண்டு அங்குசாமி பெரியப்பா சும்மா இருந்தாரா..?
“சரின்னு சொல்லிட்டானாம் அங்குசாமி..” என்றார் தயாளன்..
“என்னது..?” சசி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்..
விடிந்தால் திருமணம் என்று அவளுக்குப் போன் வந்து புறப்பட்டு வந்தாளே.. காத்திருந்த மண மேடையில் அவள் கழுத்தில் தாலியைக் கட்டியது பொன்னுசாமியாக இருந்திருந்தால் அவள் என்னவாகி இருப்பாள்..?
“மாமா..” சசி மயக்கம் போட்டு விட்டாள்..
“சசி.. சசி..”
அவள் முகத்தில் தண்ணீரை அடித்து எழுப்பி உட்கார வைத்தார்கள்..
“அம்மாடி..! அந்தக் கதிக்கு ஆளாக விட்டிரு வேனாம்மா..? உன் மாமன் மகன் உனக்காகத்தானே காரமங்களத்தில காலை ஊண்டியிருக்கான்..? அங்குசாமியை கருணா கண்காணிச்சுக் கிட்டிருந்தான்.. பொன்னுச்சாமிக்கு உன்னைக் கட்டிக்கொடுக்கப் போகிறதா அங்குசாமி சொல்லிக்கிட்டு அலையறதைக் கேள்விப் பட்டதும் அங்குசாமியை மடக்கிட்டான்..”
‘அதுக்காகத்தான் நாய்க்கு எழும்பைத் தூக்கிப் போடுவதைப் போல.. ஏற்காட்டு வீட்டை அங்குசாமி பெரியப்பாவுக்கு தூக்கிப் போட்டாரா..?’ நன்றியுடன் கணவனை பார்த்தாள் சசிரேகா.. கருணாகரனின் கண்கள் மின்னின..
“ஏற்காட்டு வீட்டில எங்களுக்கு ஒரு பத்திரம் கிடைச்சிருந்தது.. அந்தப் பத்திரத்தில அன்னவாசலிலே இருக்கிற பூர்விக நிலங்களில அங்குசாமியோட பங்கு மொத்தத்தையும் ரங்கசாமி பேரில அவன் கிரயம் பண்ணிக் கொடுத்துட்டதா பதிவாகியிருந்தது.. அந்தக் கிரயப் பத்திரத்தத் தேடி அவன் ஏற்காட்டு வீட்டுக்கு வந்தானாம்.. வீட்டைத் தான் வாடகைக்கு விட்டாச்சே.. குடியிருந்தவங்க வீட்டில எந்தப் பத்திரத்தையும் பார்க்கலைன்னு சொல்லிட்டாங்களாம்.. அந்தப் பத்திரம் எங்க கையில இருக்குன்னு அவனுக்குத் தெரியாது.. எங்கேயோ தொலைஞ்சிருச்சு போலன்னு நிம்மதியா அன்னவாசலுக்கு திரும்பிட்டான்.. கருணா அந்தப் பத்திரத்தோட அவன் முன்னால போயி நின்னதும் ஆடிப் போயிட்டானாம்.. அன்னவாசல் சொத்து அவனுக்கு நிலைக்கனும்னா உன்னைக் கருணாவுக்கு கட்டிக் கொடுக்கனும்னு கருணா கண்டிசன் போட்டிருக்கான்.. அங்குசாமி சரின்னு சொல்லி உன்னை கருணாவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டான்..” தயாளன் கதை சொல்லி முடித்தார்..
“இல்லேன்னா என்ன ஆகியிருக்கும்..?” அப்போதும் பயம் அகலாமல் மிரண்டு விழித்தாள் சசிரேகா..
“ம்ம்ம்.. உன்னை வீடு புகுந்து தூக்கிட்டு வந்து தாலி கட்டியிருப்பேண்டி.. போதுமா..?”
கருணாகரன் அதட்டியதும் தயாளனும், கயல்விழியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.. சசியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.. உயிர்ப்பு நிரம்பிய அந்த வீட்டையும்.. அந்தச் சூழலையும் அவள் நேசித்தாள்.. அந்த வீட்டின் மருமகள் அவள்.. அதைவிட அவளுக்கு வேறென்ன வேண்டும்..?
“அன்னவாசல் சொத்தைப் பற்றி என்னைக்குமே நான் நினைச்சதில்லை மாமா.. ஏற்காடு வீடு..? அது அம்மாவும், அப்பாவும் வாழ்ந்த வீடாச்சே..” சசியின் குரல் தழதழத்தது.
“வீடில்லம்மா.. கோவில்..!” உருக்கமாக சொன்னார் தயாளன்..
“என்னைக் காப்பாத்தறதுக்காக அந்த வீட்டை நாம பறிகொடுக்கப் போகிறோமே மாமா.. அதான் கஷ்டமா இருக்கு..”
“பறிகொடுக்கப் போகிறோமா..? யார் சொன்னது..?” கம்பீரமாக கேட்டான் கருணாகரன்..
சசி புரியாமல் விழித்தாள்.. தயாளன் மீசையை வருடியபடி மர்மமாக சிரித்தார்.. கயல்விழி கனிவுடன் மருமகளை அணைத்துக் கொண்டாள்..
“பொய்மையும் வாய்மையிடத்துன்னு வள்ளுவரே சொல்லியிருக்காரும்மா..”
“அத்தை..”
“கருணா அங்குசாமிகிட்ட பத்திரத்த நீட்டினானே.. அது அசல் பத்திரமில்ல.. போலிப் பத்திரம்.. அதை அங்குசாமிக்கே விட்டுக் கொடுத்திரதாச் சொன்னான்.. அந்த மனுசனும் வாங்கி வைச்சுக்கிட்டாப்புல.. கருணா கொடுத்தது ஒரிஜினல் பத்திரமில்லையே.. இதில கருணாவும் வாக்குத் தவறல.. அங்குசாமிக்கும் அன்னவாசல் சொத்து கிடைக்கல..” கயல்விழி விவரிக்க..
“இது எப்படியிருக்கு..? ஹா..ஹா..” என்று சூப்பர் ஸ்டாரைப் போலக் கேட்டு ஸ்டைல் காட்டினான் கருணாகரன்..
“ஏற்காடு வீடு..?”
“ஏற்காட்டு வீட்டை எழுதி தரச் சொல்லிக் கேட்டான்.. பார்ப்போம்ன்னுதான் சொன்னேன்.. எழுதித் தரச் சொல்றேன்னு சொல்லலையே.. பார்ப்போம்ங்கிறதுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்குடி.. என் அத்தை மகளைக் கல்யாணம் பண்ணி என் வீட்டில கொண்டு போய் பத்திரமா சேர்த்திட்ட பின்னாலே உன்னை ஒரு கை பார்ப்போம்ங்கிற அர்த்தத்திலதான் அதைச் சொன்னேன்.. அங்குசாமி வேறு விதமாப் புரிஞ்சுக்கிட்டா என்ன பண்றது..? ம்ம்ம்..?”
கருணாகரன் புருவங்களை உயர்த்திய போது சசிக்கு சிரிப்புத்தான் வந்தது.. அவள் மனதிலிருந்த அத்தனை பாரங்களும் இறங்கிப் போனவளாக அவள் மனம் விட்டுச் சிரித்தாள்..
“பாவம் மாமா.. எனக்கு ஏற்காடு வீடு மட்டும் இருந்தாப் போதும்.. அந்த வீட்டில எங்கப்பாம்மாவோட மூச்சுக்காற்று நிறைஞ்சிருக்கு.. அன்னவாசல் சொத்து வேணாம்.. அதை அங்குசாமி பெரியப்பாவுக்கே கொடுத்துருங்க..” என்றாள் சசிரேகா..
“ஊஹீம்.. அது சரிவராது.. அன்னவாசல் சொத்து மொத்தத்தையும் உன் அப்பா பெயருக்கு கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்து அறுபது லட்சரூபாய் பணத்தைக் கொள்ளையடிச்சதைப் போலப் பிடுங்கிக்கிட்டுப் போயிருக்கான் அந்த அங்குசாமி.. அந்தப் பணத்தில காரமங்களத்தில அவன் வாங்கிப் போட்டிருக்கிற வீட்டோட மதிப்பு இப்ப மூணுகோடி ரூபாயைத் தாண்டுதாம்.. அந்த வீட்டோட மதிப்புல ஆறுல ஒருபங்கு கூட அன்னவாசல் சொத்துக்கு வராது.. அவன் ஒன்னும் ரோட்டில இல்லைம்மா.. காரமங்களத்தில இருக்கிற வீட்டை வித்தா அவன் கோடிஸ்வரன்.. அந்த வீட்டை வாங்கினது அவனோட சொந்தப் பணத்தில இல்லம்மா.. உன் அப்பா வன்பாடு பட்டுச் சம்பாதிச்ச பணத்தில வாங்கினது.. ஏமாறுகிறதுக்கும் ஒர் அளவு இருக்கனும்.. அவ்வளவு செய்த தம்பியோட மகளை தன் வீட்டில அகதியைப் போல வாழ வைத்தவனுக்குப் பாவம் பார்க்கக் கூடாது.. அதை உன் அப்பாவோட ஆன்மாவும் ஏற்றுக்காது.. உன் அப்பாவோட சொத்தை நீதான் ஆண்டு அனுபவிக்கனும் மருமகளே..! அப்பத்தான் உன் அப்பாவோட ஆத்மா சாந்தியடையும்..”
தயாளன் சொல்லச் சொல்ல.. அது சரியென்றே சசிரேகாவின் மனதுக்குப் பட்டது..
“இத்தனை நாளும் காற்றில் கரைஞ்சு நின்னு நீ படற பாட்டைப் பார்த்து உன் அப்பாம்மாவோட ஆத்மாக்கள் எப்படியெல்லாம் துடிதுடித்ததோ.. கூடப்பிறந்த அண்ணனை நம்பின உங்கப்பாவுக்கு உன்னோட பெரியப்பா துரோகம் பண்ணிட்டான்.. அவனுக்குப் போய் சொத்தை விட்டுக் கொடுக்கிறதா..? அதை உன் அப்பா ஏத்துக்க மாட்டார்ம்மா..?”
சசிரேகாவின் மனதில் உறுதி வந்தது.. அவளும் கருணாகரனும் ஆத்தூரில் ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு காரமங்களத்திற்கு கிளம்பினார்கள்..
“நீங்க முன்னாடி போங்க.. நாங்க பின்னாடியே வர்றோம்..” என்று சொல்லி அனுப்பி வைத்தார் தயாளன்..
சசிரேகாவையும் கருணாகரனையும் மறுவீட்டு விருந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அங்குசாமியும் பானுகீதாவும் காரமங்களத்திற்கு வந்து நின்றார்கள்.. அந்தச் சாக்கில் ஏற்காட்டு வீட்டை சசியிடமிருந்து எழுதி வாங்கி விட வேண்டுமென்பது அவர்களின் திட்டம்.. அதை கருணாகரனுக்கும் அறிவித்திருந்தார்கள்..
“அதுக்கென்ன..? செய்திட்டாப் போச்சு.. நீங்க அன்னவாசலில இருக்கிற பெரிய மனுசங்களைக் கூப்பிட்டுக்கிட்டு வாங்க.. நாங்க பொண்ணு வீட்டுக்காரங் களுக்கு காரமங்களத்தில விருந்து வைக்கனும்.. இது எங்க பக்கத்து முறை..” என்று சொல்லியிருந்தான் கருணாகரன்..
அதன்படி மறுவீட்டு விருந்துக்கு அழைக்கிறேன் பேர்வழியென்று கருணாகரனின் வீட்டு விருந்தை உண்ண அன்னவாசலில் இருந்த பெரிய மனிதர்களை அழைத்து வந்திருந்தார் அங்குசாமி.. விருந்தில் காரமங்களத்தின் பெரிய மனிதர்களும் கலந்து கொண்டார்கள்.. விருந்து முடிந்த பின்னால் மறுவீட்டு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது..
“அது எங்க வீடாச்சே.. அங்கேயா மறுவீட்டு விருந்தைக் கொடுக்கப் போறிங்க..” என்று நிதானமாக கேட்டு வைத்தான் கருணாகரன்..
“என்னது..?” அங்குசாமி அலறினார்..
கருணாகரன் பத்திரத்தைத் தூக்கிப் போட்டான்.. அது ஒரிஜினல் பத்திரம்.. அதில் தெள்ளத் தெளிவாக அன்னவாசலின் வீடு முதற்கொண்டு அனைத்துச் சொத்திலும் அங்குசாமிக்கு இருந்த பங்கை ரங்கசாமிக்கு கிரயம் பண்ணிக் கொடுத்திருந்தார் அங்குசாமி..
“அன்னவாசலின் பெரிய மனசங்க இதைப் படிச்சுப் பாருங்க.. எல்லாச் சொத்தையும் என் மாமனாருக்கு இவர் வித்திட்டார்.. இப்ப அன்னவாசல் சொத்து முழுமைக்கும் சொந்தக்காரி என் பெண்டாட்டிதான்.. இவருக்கு உரிமையில்லாத வீட்டில இவர் மறுவீட்டு விருந்தைக் கொடுத்தா என்னோட அப்பா அதை ஏத்துக்க மாட்டார்..” என்றான் கருணாகரன்..
பத்திரத்தைப் படித்துப் பார்த்த காரமங்களத்தின் பெரிய மனிதர்களும்.. அன்னவாசலின் பெரிய மனிதர்களும்.. ஒரு மனதாக கருணாகரன் சொல்வதை ஏற்றுக் கொண்டார்கள்..
“இதென்னப்பா அங்கு..? அத்தனை சொத்துக் களையும் உன் தம்பிக்கு கிரயம் பண்ணிக் கொடுத்துட்டு அதைப்பத்தி மூச்சே விடாம இத்தனை நாளா இருந்திருக்கயே..? உனக்கு உரிமை இல்லாத சொத்தையா இத்தனை வருசமா சொந்தம் கொண்டாடியிருக்க..?”
அங்குசாமியின் தகிடுதத்தங்களை அறிந்த இரண்டு ஊர்களின் பெரிய மனிதர்களும் கேள்வி கேட்ட போது அவர் முகத்தில் ஈயாடவில்லை..
“உங்க அப்பா ஃபாரின்ல இருந்து வந்திட்டாரா..?” ஒருவர் விசாரித்தார்..
“இல்லைங்க.. பக்கத்தில இருக்கிற ஆத்தூரில இருந்துதான் வந்திருக்கார்..” அமர்த்தலாகச் சொல்லி விட்டு..
“அப்பா..” என்று அழைத்தான் கருணாகரன்..
“வணக்கம்..”
கை குவித்தபடி வந்த தயாளனைக் கண்டதும் அங்குசாமியின் முகம் வெளுத்து விட்டது..
“நீ..நீ..நீ..” கருணாகரனைப் பார்த்து தந்தியடித்தார்.
“நான் தயாளனின் மகன் கருணாகரன்.. சசிரேகாவின் தாய்மாமனின் மகன்.. என்னிடம்தான் நீங்க சசிரேகாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் பேரம் பேசினீங்க..”
அங்கிருந்தவர்களின் முன்னால் அங்குசாமி போட்ட நிபந்தனைகளை பிட்டுப்பிட்டு வைத்தான் கருணாகரன்.. வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறியதில் மென்று விழுங்கிய அங்குசாமி..
“நீ ஏற்காட்டு வீட்டை எழுதித் தரச் சொல்றேன்னு ஒப்புக்கிட்டு இப்ப ஏமாத்துகிறவன்தானே..” என்று பாய்ந்தார்..
“இல்லவே இல்லை.. ஏற்காட்டு வீட்டை எழுதி வைக்க சசிகிட்டச் சொல்லச் சொல்லி நீங்க கேட்டுக் கிட்டிங்க.. பார்ப்போம்ன்னுதான் நான் சொன்னேன்.. நான் சொன்ன பார்ப்போம்ங்கிறதுக்கான அர்த்தம் இதுதான்..” என்றான் கருணாகரன்..
“போலிப் பத்திரத்தக் கொடுத்து ஏமாத்தினதுக்கு என்ன சொல்லப் போற..?”
“பத்திரத்தக் கொடுத்திடறேன்னு சொன்னேன்.. கொடுத்துட்டேன்.. ஒரிஜினல் பத்திரத்தைக் கொடுத்திட றேன்னு சொல்லலையே.. கையில வாங்கின பத்திரம் ஒரிஜினலா இல்லை அசலான்னு நீங்கள்ல செக் பண்ணியிருக்கனும்..?”
அதற்கு மேலும் கேள்வி கேட்க முடியாமல் அடங்கிப் போனாலும் அன்னவாசல் சொத்தையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று மல்லுக்கட்டினார் அங்குசாமி.
“இத்தனை நாளா ஆண்டு அனுபவிச்ச பூமிய விட்டுப் போன்னு சொன்னா எப்படிப் போறது..?”
“காலிருக்கில்ல..? நடந்து போறது..”
“அது எங்கப்பாவோட பூர்விகச் சொத்து..”
“உங்க ஒருத்தருக்கு மட்டும் உடந்தைப்பட்ட சொத்தில்ல.. உங்க தம்பிக்கும் உடந்தைப் பட்ட சொத்துதான் அது.. உங்க பங்கை உங்க தம்பிக்கு கிரயம் பண்ணிக் கொடுத்தது நீங்கதான்..”
“எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டா வயதுக்கு வந்த இரண்டு பெண்பிள்ளைகளோடயும் பெண்டாட்டியோடயும் நடுத்தெருவில நிற்கிறதா..?”
“ஏன் நடுத்தெருவில நிற்கனும்..? காரமங்களத்தில வாங்கிப் போட்டிருக்கிற வீட்டுக்குப் போக வேண்டியது தானே..? அன்னவாசல் சொத்தை வித்து வந்த அறுபது லட்ச ரூபாயில நீங்க வாங்கிப் போட்ட வீட்டோட மதிப்பு இப்ப மூணுகோடி ரூபாயாமே..”
கருணாகரன் போட்டு உடைத்ததில் வாயை மூடிக் கொண்டு ஓடி விட்டார் அங்குசாமி.. அடுத்த சில நாள்களில் அவர் அன்னவாசலை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு குடி பெயர்ந்து விட்டதாக காற்றில் தவழ்ந்து வந்த செய்தி சொன்னது..
“காரமங்களத்து வீட்டை வித்து வந்த பணத்தில அங்கே ஒன்னுக்கு நாலா வீடுகளை வாங்கிப் போட்டிருக் காராம்.. பேங்கில வேற பணம் போட்டு வைச்சிருக்காராம்.. வட்டிப்பணம், வாடகைப் பணம்ன்னு கொகுசாத்தான் வாழறாராம்.. ம்ம்ம்.. எங்கே போனாலும் அங்குசாமிக்குன்னு ஒரு காத்து காத்திருந்து அடிக்கத்தான் செய்யுது..” என்று வியந்து போனான் கருணாகரன்..
குடும்பத்துடன் ஏற்காட்டு வீட்டிற்குப் போனாள் சசிரேகா.. வீட்டின் ஒவ்வொரு அங்கலத்திலும் ஒளிந்திருந்த கதைகளை அவள் சொல்லச் சொல்ல கண்களில் நீர் மல்கக் கேட்டுக் கொண்டார் தயாளன்..
எந்த அன்னவாசல் வீட்டில் அகதியாக சசிரேகா வளர்ந்தாளோ.. அந்த அன்னவாசல் வீட்டின் உரிமைக் காரியாக மகாராணியாக ஆனாள்.. அங்கும் அவளுக்குச் சொல்வதற்கான கதைகள் இருந்தன.. கருணாகரன் அதட்டி பழைய நினைவுகளின் புதை குழியிலிருந்து அவளை மீட்டான்..
காரமங்களத்திற்கு அவர்கள் திரும்பினார்கள்.. அன்றைய இரவில் புதுப்பொலிவுடன் நெருங்கிய மனைவியை மோகத்துடன் ஆட்கொண்டான் கருணாகரன்.. மனதில் இருந்த அனைத்து சிணுங்கல்களும் மறைந்து விட்ட நிலையில் அந்த மோகத்திற்குதாகத்துடன் ஈடு கொடுத்தாள் சசிரேகா..
மோகத்தைக் கொன்று விடு என்று அதை வெல்ல முடியாதவர்கள்தான் சொல்வார்கள்.. மோகத்தை ஏன் கொல்ல வேண்டும்..? அதை வென்று காட்டி வாழ்ந்து காட்டலாமே..
– முற்றும் –
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.