Chapter 04
நதியோரம் நடந்தபோது
நகர்ந்து செல்லும் மேகம் பார்த்தேன்..
கரிய நிற மேகம் சிதைந்து
குளிர் நீராய் பொழியக் கண்டேன்
…நதியோரம் நான் நடந்த போது…
“அந்தப் பெண்ணுக்கு உன் அண்ணன் மேல் காதலிருந்தால் பெற்றவரை மீறித் தேடி வந்திருக்கலாமே..”
“இல்லையே.. கார்த்திகா வரவேயில்லை வித்யா.. அதற்குப் பதில் அடுத்த மாதமே அவளது கல்யாண இன்விடேசன் வந்தது..”
“அடிப்பாவி..” வித்யா ஆத்திரப்பட்டாள்..
“ஆனால் அண்ணன் மனதை அது ரொம்ப பாதிச்சிருக்கலாமோ என்னவோ வெளியே காட்டிக் கொள்ளவில்லை வித்யா.. அவர் நினைத்திருந்தால் எங்களைக் கை கழுவி விட்டுக் கார்த்திகாவிடம் போயிருக்கலாம்.. காதலியும் கடைத்திருப்பாள்.. கோடிக்கணக்கான சொத்தும் கிடைத்திருக்கும்.. என் அண்ணன் போகவில்லை.. மாறாக மாடாக உழைத்தார்.. இரவு பகல் பாராமல் வேலை பார்த்தார்.. தொழிலாளர்களோடு கலந்து பழகினார்.. அவர்களது பிரச்சனைகளை கண்டறிந்து தீர்த்தார்.. வெளிநாட்டில் படித்ததை இங்கே செயலாக்கினார்.. எங்கள் தொழில் அழியாமல் தப்பித்தது.. எங்கள் குடும்பம் தலை நிமிர்ந்தது.. அப்போதுதான் என் அம்மா அந்த ஏற்பாட்டைச் செய்தார்கள்..”
“எந்த ஏற்பாடு..?”
“என் பெரிய அண்ணனின் திருமண ஏற்பாடு.. அப்போது எனக்கு பதினைந்து வயது.. நைன்த் படித்துக் கொண்டிருந்தேன்.. என் அண்ணனுக்கு முப்பது வயதாகி விட்டது.. எங்கள் தாய் மாமாவின் பெண் மீனலோசனி தேவியை மணம் பேசி முடித்தார்கள்.. என் அண்ணன் மறுக்கவில்லை.. அப்போதுதான் அது நடந்தது..”
“என்னடி ஆச்சு..?” வித்யா பதட்டமாகக் கேட்டாள்.. அவள் மனதில் நரேந்திரனின் கல்யாணம் நல்ல முறையில் நடந்திருக்க வேண்டும் என்ற வேண்டுதல் எழுந்தது..
“திருமணத்திற்கு முதல் நாள் என் இரண்டாவது அண்ணன் மகேந்திர பூபதி என் பெரிய அண்ணனிடம் அழுதிருக்கார்..”
“எதற்காம்..?”
“அவருக்கும், மீனலோசனி அண்ணிக்கும் ரொம்ப நாள்களாகவே காதலாம்.. அது தெரியாமல் வீட்டில் பெரிய அண்ணனுக்கு நிச்சயம் பண்ணிவிட்டார்களாம்..”
“அதை முதலிலேயே சொல்லித் தொலைப்பதுதானே..?”
“வீட்டை மீறக்கூடாது என்று நினைத்தாராம்..”
“அப்படியே இருக்க வேண்டியதுதானே..”
“முடியவில்லையாம்… மீனலோசனி செத்து விடுவேன் என்று அழுகிறாளாம்.. அதனால் வீட்டிற்குத் தெரியாமல் அவளை இழுத்துக் கொண்டு ஓடுவதாக இருந்தாராம்.. போவதற்கு முன் அண்ணனிடம் ஒரு வார்த்தை மன்னிப்புக் கேட்டுச் சொல்ல வந்தாராம்…”
“என்னடி நாடகம் இது…?” என்றாள் வித்யா ஆற்றாமையுடன்..
“நாடகம்தான் வித்யா.. அது ஒரு வகையான பிளாக்மெயில்.. பெரிய அண்ணனுக்கு திருமணமாகி அதற்கு பின் மாலினி அக்காவிற்கு திருமணம் ஆகி.. மகேந்திர அண்ணன் திருமணம் நடக்க எப்படியும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.. திட்டம் போட்டு கழுத்தில் கத்தியை வைத்துவிட்டார் என் மகேந்திர அண்ணன்..”
“அப்புறம் என்ன ஆனது..?” பரிதவித்தாள் வித்யா.. அவள் இதயம் நரேந்திரனுக்காக பாகாய் உருகியது..
“என்ன ஆகும்..? என் பெரிய அண்ணன் வழக்கம் போல் தியாகம் செய்தார்.. மறுநாள் திருமண மேடையில் மீனலோசனி கழுத்தில் மகேந்திர அண்ணன் தாலிகட்டினார்..”
“என்னடி அநியாயம் இது..?”
“இது மட்டுமா நடந்தது.. இன்னும் கொடுமைகளைச் சொல்கிறேன் கேள்.. மாலினி அக்காவிற்கு தகுந்த இடத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கொடுத்தார்கள்.. அடுத்து பெரிய அண்ணனுக்கு திரும்பவும் கல்யாணம் பேச ஆரம்பிக்கும்போது என் மூன்றாவது அண்ணன் யுகேந்திர பூபதியின் பிரச்சனை வந்தது…”
“அவர் கதை என்னவாம்..?”
“என் அத்தை மகள் பிரபாவதியின் மேல் அவருக்கு ஆசை.. பிரபாவதியை வேறு இடத்தில் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்.. உடனே ‘நான் அவளை மணமுடிக்கா விட்டால் வேறு இடத்தில் கொடுத்து விடுவார்கள்’னு ரகளை பண்ணினார்..”
“உங்கள் வீட்டில் என்ன பண்ணினார்கள்..?”
“யுகேந்திர அண்ணனுக்கும் பிரபாவதி தேவிக்கும் கல்யாணம் பண்ணினார்கள்..”
“என்னடி சொல்றே..? உங்கள் பெரிய அண்ணன் எப்போதுதான் திருமணம் பண்ணினார்..?”
“பண்ணிக்கவே இல்லைடி..”
“என்ன பூர்ணிமா சொல்கிறாய்..?”
“ஆமாம் வித்யா.. அதற்குப் பின் மாலினிக்கு வளைகாப்பு, குழந்தைப் பிறப்பு, காதணி விழா, மீனலோசனி அண்ணிக்கு வளைகாப்பு, குழந்தை பிறப்பு, காதணி விழா, அப்புறம் பிரபாவதி அண்ணிக்கு வளைகாப்பு..”
“குழந்தை பிறப்பு, காதணிவிழா.. ஏண்டி உன் வீட்டில் யாருக்குமே மனச்சாட்சி இல்லையா..?”
“இல்லையே..”
“உன் அம்மாவிற்குமா..?”
“என் அம்மா பெரிய அண்ணனிடம் போராடிப் பார்த்து விட்டாங்க வித்யா.. நரேன் அண்ணா கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டார்..”
“அதற்காக அப்படியே விட்டுவிடுவதா..?”
“அம்மா விட்டுவிட்டார்கள் வித்யா.. நான் விடவில்லை..”
“உன்னால் என்ன செய்ய முடியும்..?”
“கல்யாணத்தை மறுக்க முடியும்..”
வித்யாவிற்கு இப்போது புரிந்தது.. பூர்ணிமாவின் போராட்டம் தெளிவாகியது.. வித்யா ஒன்றை யோசித்தாள்..
“ஏன் பூர்ணி.. இந்த பிரகாஷ் உனக்குச் சொந்தமா..?”
“ம்ம்.. என் அத்தை மகன்.. பிரபாவதி தேவியின் அண்ணன்..”
“சிறுவயதிலிருந்தே தெரியுமா..?”
“என் நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் மணப் பெண், அவர்தான் என் மாப்பிள்ளைன்னு சொல்லியே வளர்த்தார்களா.. நானும் அதே நினைவுடன்தான் வளர்ந்தேன்.. யுகேந்திர அண்ணனின் கல்யாணத்தின் போது.. அப்போது நான் பிளஸ் டூ முடித்திருந்தேன்.. எனக்கும் பிரகாஷிற்கும் அதே திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடத்திவிட்டார்கள்..”
“உனக்கு அதில் இஷ்டமில்லையா..?”
“வித்யா.. எனக்கு பிரகாஷின் மேல் இஷ்டம்.. ஆனால் கல்யாணத்தில் இஷ்டமில்லை..”
“உளராதே.. நீ சொல்வதன் அர்த்தம் புரிகிறதா..?”
“புரியாமல் என்ன..? எனவேதான் நான் கல்யாணத்தை தள்ளிப்போட என்ஜினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.. அவர்களிடமிருந்து தூர விலகி நிற்க விரும்பி சென்னைக்குப் படிக்க வந்தேன்..”
“இப்போது என்ன பிரச்சனை..?”
“கல்யாணம் பண்ணிக்கொண்டு படி என்கிறார்கள்.. நான் என் அம்மாவிடம் தெளிவாய் சொல்லிவிட்டேன்..”
“என்னவென்று..?”
“என் பெரிய அண்ணன் அவர் மனைவியோடு வந்து என்றைக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறாரோ அன்றைக்கு எனக்குக் கல்யாணம் பண்ணட்டும்ன்னு..”
“உன் அம்மா என்ன சொன்னார்கள்..?”
“என் நரேன் அண்ணனிடம் சொன்னார்கள்.. பெரிய அண்ணன் என்னைத் திட்டினார்.. சிறு பெண் போல் இருக்க வேண்டுமென்றார்..”
“நீ என்ன சொன்னாய்..?”
“சிறு பெண்ணுக்கு ஏன் கல்யாணமென்றேன்..”
வித்யா புன்னகைத்தாள்.. பூர்ணிமாதேவி எப்போதையும் விட இப்போது அவள் கண்ணுக்கு மிக அழகாகத் தெரிந்தாள்..
‘குடும்பமே சுயநலமாய் ஒருவனது உழைப்பிலும் தியாகத்திலும் வாழ இவள் மட்டும் அவனுக்காக மறுகுகிறாள்.. இப்படி ஒரு மனுஷியின் தோழமை கிடைக்க நான் என்ன தவம் செய்தேன்..?’
தோழியின் தலையை வருடிக் கொடுத்தாள்..
“நீ உன் போராட்டத்தில் உறுதியாய் இருக்கிறாய் இல்லையா.. அப்புறம் ஏன் வருத்தப்படுகிறாய்.. ஒரு வேளை பிரகாஷ் வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவாரோன்னு பயப்படுகிறாயா..”
“அப்படிப் பண்ணிக்கிட்டால்தான் தேவலையே..”
“என்னடி சொல்கிறாய்.. பிரகாஷ் மேல் உனக்குக் காதல் இல்லையா..?”
“அதைவிட அதிகமாக என் பெரிய அண்ணன் மேல் பாசம் வைத்து இருக்கிறேன்.. அதனால்தான் பிரகாஷிடம் வேறு பெண்ணை மணந்து கொள்ளச் சொல்லிச் சொன்னேன்..”
“எப்போது..?”
“இன்று காலையில்.. ஆறு மணிக்கெல்லாம் போன் பண்ணினார்..”
“என்ன சொன்னார்..?”
“வழக்கம்போல் காதல் வசனம் பேசினார்.. கல்யாணம் பண்ணிக்கிட்டுப் படின்னார்..”
“நீ என்ன சொன்னாய்..?”
“அவரை வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேன்..” பூர்ணிமாவின் கண்கள் கலங்கின.. வித்யா அவளை இரக்கத்துடன் பார்த்தாள்..
“அவர் அதுக்கு என்ன பதில் சொன்னார்..?”
“திட்டினார்டி.. உன் குடும்பத்துக்கே இதுதான் பழக்கமா..?” என்கிறார்..
“குடும்பப் பழக்கமா.. எதற்கு அப்படிச் சொல்கிறார்..?”
“நரேன் அண்ணா காதலியை வேணாம்ன்னு சொன்னாரில்லையா.. அதைச் சொல்கிறார்டி..”
“கோபத்தில் சொல்லியிருப்பார் விடு..”
“அப்படியில்லைடி வித்யா.. அண்ணா அன்றைக்கு மட்டும் காதல் பெரிதுன்னு போயிருந்தால் அவர் நன்றாக வாழ்ந்திருப்பார்..”
“அதைச் சொல்ல வேண்டியதுதானேடி..”
“சொன்னேனே.. ஏன் செய்யவில்லைன்னு கேட்கிறார்.. அத்தோடு விட்டாரா.. ‘அவர் தியாகிப் பட்டம் வாங்கினது மாதிரி எனக்கும் வாங்க ஆசையில்லை’ன்னு வேறு சொல்கிறார்..”
வித்யா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்..
பூர்ணிமாவிற்கு கோபம் வந்தது.. வித்யாவின் முதுகில் ஓர் அறை விட்டாள்..
“ஏண்டி என் வேதனை உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா..?”
“பூர்ணி.. ஹா.. ஹா.. பூர்ணி.. ஹிஹி.. இந்தப் பிரகாஷை.. ஹாஹா..”
“சொல்லிவிட்டுச் சிரி.. இல்லை சிரித்துவிட்டு சொல்லு..”
வித்யா முதலில் மனதார சிரித்து முடித்தாள்.. பின்னர் வாய் திறந்தாள்..
“பூர்ணி.. பிரகாஷ் ரொம்ப பிராக்டிகலா பேசுகிறார்.. நீ எமோசனலா ஃபீல் பண்ணுகிறாய்.. இதுதான் மேட்டர்.. உன் சோகக் கதையில் அவர் மட்டும் சீரியஸா இருந்தார்ன்னு வை.. உன் காதல் அம்பேல்தான்..”
“இப்போ மட்டும் என்ன வாழ்கிறதாம்..”
“அதெல்லாம் வாழும்.. எழுந்திரு..”
“எங்கே..?”
“சாப்பிட.. நீ கதை சொல்ல.. நான் கதை கேட்க.. பார்.. மணி ஒன்றாகி விட்டது.. காலைச் சாப்பாடுதான் வேண்டாம்.. மதியச் சாப்பாடாவது சாப்பிட வேண்டாமா.. பசிக்குதுடி..”
“அச்சச்சோ.. நீயும் சாப்பிடலையில்ல.. வா போகலாம்..”
தோழியின் பசிக்காக அவசரமாய் எழுந்து கொண்டவளை அணைத்துக் கொண்டாள் வித்யா..
“பூர்ணிமா.. நீ தேவதைடி.. வற்றாத ஜீவநதி நீ.. உன்னைப் போல்தானே உன் அண்ணனும் இருப்பார்.. அவருக்கு ஒரு குறையும் வராது.. உனக்கும் வராது.. நீ போராடு.. உன் பிரகாஷ் உன்னை விட்டுப் போகமாட்டார்.. அதுக்கு நான் கேரண்டி..”
“அவரையே நீ முன்ன, பின்ன பார்த்ததில்லை.. கேரண்டி கொடுக்கிறாயே..”
“ப்ரீத்தீக்கு ஊரே கேரண்டி கொடுக்குது.. உன்னவருக்கு நான் கேரண்டி கொடுக்கக்கூடாதா..?”
“வாய்தாண்டி உன்னை வாழ வைக்குது.. வா சாப்பிடப் போகலாம்..”
அன்றிலிருந்து தினமும் ஒருமுறை பூர்ணிமாவின் நினைவுகளை தட்டி எழுப்பி நரேந்திரனைப் பற்றி பேச வைத்து கேட்டுக் கொண்டிருப்பது வித்யாவின் வழக்கமாகிப் போனது..
மெல்ல மெல்ல நரேந்திரனைப் பற்றிய நினைவுகள் அவளை ஆக்ரமித்தன.. அவனே அவளது சுவாசமாகிப் போனான்.. அவன் மேலான கருணை காதலாகிப் போனது.. வரலாற்று நாயகனின் சாகசங்களைக் கேட்பது போல் அவனைப் பற்றிய கதைகளை அவள் வாய் திறந்து கேட்பாள்.
“அப்புறம் உங்க நரேன் அண்ணன் அதை எப்படிச் சமாளித்தார்..?”
“அதையேன் கேட்கிறாய்.. உனக்கும் எனக்கும்தான் மாட்டிக் கொண்டால் திணறல் வரும்.. வேர்த்துக் கொட்டும்.. பெரிய அண்ணாவுக்கு அதெல்லாம் அல்வா சாப்பிடுகிற மாதிரி.. அந்த சுமதிப் பொண்ணு அண்ணன்கிட்ட வழிந்துக்கிட்டே நிற்கும்.. அதை அவாய்ட் பண்ணத்தான் அவர் வேகமாய் போனார்.. பச்சைத்தாவணி மேல் தடுக்கி விழுந்துவிட்டார்.. கல்யாண வீட்டில்களே பரம் ஆகிவிட்டது.. இதில் ஜோக் என்னன்னா பச்சைத் தாவணி அதுமேல் ஆசைப்பட்டுத்தான் அண்ணன் மேலே வந்து விழுந்தார்ன்னு ஓர் தப்புக் கணக்கு போட்டுக் கிட்டு பார்த்துச்சு பார் ஓர் பார்வை.. அண்ணன் முகம் ஓர் அண்டா விளக்கெண்ணை குடித்தது மாதிரி ஆகிவிட்டது..”
“அப்புறம்..”
“அண்ணா சுமதிப் பொண்ணைப் பார்த்தாரே ஓர் பார்வை.. மஜ்னு கெட்டுப் போனான்.. உடனே சுமதி பச்சைத்தாவணி மேல் தடுக்கி விழுந்ததது தான்தான்னு ஒரே போடா போட்டிருச்சு..”
“அப்புறம்..”
“அண்ணன் தப்பித்தார்… கதையில் சுபம் போட்டாச்சு.. இன்னைக்கு இது போதும்.. நாளைக்கு வேற கதை சொல்கிறேன் போய் தூங்கு..”
பூர்ணிமா கேலி போல் சொன்னாலும் அவளுக்கு நரேந்திரனைப் பற்றிப்பேச அலுப்பதேயில்லை.. மறுநாள் வித்யாவை இழுத்து வைத்து அவளாகவே, “அப்படித்தான்.. ஓர் நாள்.. எங்க பெரியண்ணா..” என்று ஆரம்பித்துவிடுவாள்..
இப்படித்தான் காதல் என்னும் மாயவலையில் வித்யா சிக்கிக் கொண்டது.. இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் இன்று வரை வித்யா என்று ஒரு ஜீவன் தனக்காக உருகுவது நரேந்திர பூபதிக்கு தெரியாது.. அதேபோல் போட்டோவில் அன்றி நேரில் வித்யா அவனைப் பார்த்த தில்லை..
எனவே மதிய உணவு இடைவேளையில் பூர்ணிமா கண்கலங்கியபோது வித்யாவும் மனதிற்குள் கலங்கினாள்.. ஆனாலும் வெளியே,
“பூர்ணி.. பிரகாஷ் உனக்காக காத்திருப்பார் கவலைப் படாதே..” என்றாள்..
“அவரை யார் காத்திருக்கச் சொன்னது..?”
“உன்மேல் அவருக்கு இருக்கும் காதல்தான் சொல்கிறது..”
“இல்லை வித்யா.. என்னால் அவர் துன்பப்படுவது எனக்குச் சகிக்கவில்லை..”
“காத்திருப்பது காதலில் சுகம்.. இதில் துன்பம் இல்லை பூர்ணி..”
“உனக்கு காதலைப் பற்றி என்ன தெரியும் வித்யா..? எனக்காகச் சொல்லாதே..” என்று இயல்பாக சொல்லி விட்டுக் கை அலம்பச் சென்றாள் பூர்ணிமா.. வித்யா மனதிற்குள் கூறிக் கொண்டாள்..
‘எனக்கா காதலைப் பற்றித் தெரியாது..? நான்கு வருடங்களாய் உன் நரேந்திர அண்ணனை மாய்ந்து மாய்ந்து மனதிற்குள் காதலிக்கிறேன் என்று உனக்குத்தான் தெரியாது பூர்ணிமா..’
பூர்ணிமா திரும்பிப் பார்த்து சிரிக்க வித்யாவும் சிரித்தாள்…
“காதலைப் பற்றி எனக்கென்ன தெரியும் பூர்ணி..? சும்மா கேள்வி ஞானம்தான்..”
Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.