Chapter 07

0Shares

நதியோரம் நடந்தபோது

நிலாச் சோற்றை நெஞ்சம் தேடும்

சுமையில்லா மனமிருந்தால்

சுவையான உணவு கூடும்

…நதியோரம் நான் நடந்த போது…

சோர்ந்த விழிகளை நீரில் கழுவி முகம் துடைத்துக் கொண்ட வித்யா கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டு அலுவலகம் விட்டு வெளியே வந்தாள்.. ஸ்கூட்டியைத் தேடி அதன் சாவியை பொருத்திக் கொண்டிருந்தபோது..

“குட்மார்னிங்..” என்று குரல் கேட்டு நிமிர்ந்தாள்.. எதிரே நரேந்திரன் நின்று கொண்டிருந்தான்.. ‘கனவோ’ என்று அவசரமாய் கண்களை கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தாள்..

“என்ன இந்நேரத்தில் நம்மைத் தேடி வந்திருக் கிறானேன்னு பார்க்கிறீர்களா..? உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்..” என்றான் அவன்..

“என்னுடனா..?”

“ஆமாம்..”

“வீட்டிற்குத்தானே வருகிறேன்.. வீட்டில் பேசிக் கொள்ளலாமே..”

“இது பூர்ணிமா சம்பந்தப்பட்டது.. அவளுக்குத் தெரியாமல் பேச விரும்புகிறேன்..” என்றான் அவன் நிதானமாக தன் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்தவாறு நின்றபடி..

வித்யா தயங்கினாள்.. பூர்ணிமாவின் பெயர் அவளைக் கட்டிப்போட்டது..

“அது வந்து.. ம்ம்.. உள்ளே வாருங்கள்.. ரிசப்ஷனில் உட்கார்ந்து பேசலாம்..”

“அதற்குப் பதில் என்னோடு காரில் வாங்களேன்.. கடற்கரைச் சாலையில் பார்க் பண்ணிவிட்டுப் பேசலாமே..”

“இல்லை சார்.. நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன்.. என்னைத் தவறாய் நினைக்க வேண்டாம்.. நான் மற்றவர்கள்..”

“வண்டியில் ஏறுவதில்லை.. அப்படித்தானே.. பூர்ணிமா சொன்னாள்.. சரி நான் வேண்டுமானால் உங்கள் வண்டியில் ஏறி வரவா..?”

வித்யா திகைத்துப் போனாள்.. ‘இது என்னடா வம்பு’ என்று நினைத்துக் கொண்டாள்..

‘எண்ணம் கவர்ந்தவன் எதிரில் நிற்கிறான்… அவனுக்கு இடம் கொடுத்த மனதில் மற்ற யாருக்கும் இடம் கொடுக்கப் போவதில்லை.. அவன் காரில் ஏற ஏன் மறுக்க வேண்டும்..?’

அவளது ஒரு மனம் இப்படிக் கேள்வி கேட்டது..

‘அவசரப்படாதே வித்யா.. அவனோ ராஜ வம்சத்து கோடிஸ்வரன்.. நீயோ அன்றாட செலவிற்கு வேலை பார்க்க வேண்டிய தொழிலாளி.. மலை மேல் மடு காதல் கொள்வதா..?’

இன்னொரு மனம் இடித்தது.. வித்யா நிலை குலைந்தாள்.. தனக்குள் அவள் யோசித்து ஓர் முடிவிற்கு வந்தவளாய் தெளிவுடன் அவனை ஏறிட்டாள்..

“சார்.. நீங்கள் உங்கள் காரில் போங்க.. நான் பின் தொடர்ந்து என் ஸ்கூட்டியில் வருகிறேன்..” என்றபடி அவன் பதிலுக்கு காத்திராமல் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்..

அவன் விழிகளில் வியப்பு தெரிந்தது.. பூர்ணிமா அவளைப் பற்றிக் காரணமில்லாமல் புகழவில்லை போலும் என்று எண்ணமிட்டபடி தன் காரில் ஏறி ஓட்டலானான்.. வித்யா பின் தொடர்ந்தாள்.. கடற்கரைச் சாலையில் ஜனநட மாட்டம் தெரிந்த பகுதியில் அவன் காரை நிறுத்திவிட்டு இறங்க அவள் அவன் காரின் அருகே தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள்.. அங்கேயிருந்த சிமிண்ட் பெஞ்சைக் சுட்டிக்காட்டி..

“உங்களுக்கு ஆட்சேபணையில்லைன்னா அந்த பெஞ்சில் உட்கார்ந்து பேசாலாமா..?” என்று வினவினான்.. அவள் ஒப்புதலாய் தலை அசைத்துவிட்டு அந்த பெஞ்சை நோக்கிச் சென்றாள்.. அவளது நிமிர்ந்த நடையையும் நேர் கொண்ட பார்வையையும் ரசித்தபடி அவளருகே அமர்ந்தான் நரேந்திரன்.. குளிர்காற்று வீச கனமான காட்டன் துப்பாட்டாவினால் தோளோடு போர்த்திக் கொண்டாள் அவள்.. தூரத்தில் கடல் அலைகள் வந்து கரையைத் தொட்டுச் செல்வது தெரிந்தது.. மீனவர்கள் கரைக்கு திரும்பும் கட்டு மரங்கள் தென்பட்டன.. சூரியனின் கதிர்கள் கீழ்வானத்தில் செந்நிறமாய் காட்சி தந்தன.. நீலப் போர்வையில் செய்த வெள்ளை டிசைன்கள் போல் கடலின் மேல் அலையின் கோடுகள் தெரிந்தன.. அதிகாலை கடலின் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் வித்யா.. அவள் முகத்தைப் பார்த்தவன்..

“இந்நேரத்தில் கடல் பக்கம் வந்ததில்லையோ..?” என்று கேட்டான்.. திரும்பி அவன் முகத்தைப் பார்த்தவள்..

“இல்லை சார்.. வந்ததில்லை.. வேலை.. படிப்புன்னு நேரம் சரியாக இருக்கும்.. அத்தோடு..”

“அத்தோடு..?”

“பெண் என்பதலாயே பல ரசனைகள் மறக்கப்பட வேண்டியதாகிப் போகின்றன.. அவற்றில் இதுவும் ஒன்று..”

“நீங்கள் ரசிப்பதை யார் தடுத்தார்கள்..?”

“மனம்தான்..”

“மனமா..?”

“ஆமாம்.. மனம்தான்.. பெண்மனம்..”

“ம்ம்.. இதைப்பற்றி இன்னொரு நாள் பேசலாம்.. இப்போது நான் பூர்ணிமாவைப் பற்றி பேச வேண்டும்..”

“பேசுங்கள் சார்..”

“பிரகாஷ் பற்றி பூர்ணிமா சொல்லியிருப்பாள்ன்னு நினைக்கிறேன்..”

“ம்ம்.. சொல்லியிருக்கிறாள்..”

“பிரகாஷிற்கு அவன் வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள்.. அம்மாவானால் நிச்சயித்த கல்யாணம் நின்று போக வேண்டுமா என்று அழுகிறார்கள்..”

“இது உங்கள் குடும்பத்திற்குப் புதிதில்லையே..” ‘நறுக்’ கென்று பதில் சொன்னாள் வித்யா..

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை..”

“இதற்கு முன் இரண்டுமுறை நிச்சயித்த கல்யாணம் உங்கள் வீட்டில் நின்று போயிருக்கிறதே.. அதற்காக உங்கள் அம்மா ஒருமுறை கூட கண்ணீர் சிந்தவில்லை.. இப்போது சிந்துகிறார்களா..?”

“நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்..?”

“நின்றுவிட்ட உங்களிரு நிச்சயதார்த்தங்களைச் சொல்கிறேன்.. முதல்முறை கார்த்திகாவுடன் பேசிய கல்யாணம் முறிந்து போனது.. மற்றதை தம்பிக்கு தாரை வார்த்துக் கொடுத்தீர்கள்..”

நரேந்திரன் கொதித்துப் போனான்.. யார் இந்தப் பெண்.. இவளுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்..? எவ்வளவு தைரியம் இருந்தால் இவள் அவனிடமே இப்படிப் பேசுவாள்..? முகம் சினத்தால் சிவக்க..

“பூர்ணிமாவிற்கு குடும்ப விசயத்தை வெளியாரிடம் பேசக்கூடாது என்பது இன்னும் தெரியவில்லை..” என்றான் பல்லைக் கடித்தபடி..

“அவளுடைய அண்ணனுக்கு மட்டும் தெரிந்திருக்கிறதா..?”

“வாட் டு யூ மீன்..?”

“ஐ மீன்.. நீங்கள் தானே என்னிடம் வந்து உங்கள் குடும்ப விசயம் பேச இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு அழைத்தீர்கள்..?”

அவன் வாயடைத்துப் போனான்.. சரியான பதில் அல்லவா இது..? அவனும்தானே தன் தங்கையைப் பற்றி அவளிடம் பேசினான்.. பாராட்டும் தொனியில்..

“நீங்கள் புத்திசாலி என்று வாய்க்கு வாய் பூர்ணிமா உங்கள் புகழ் பாடுவது எதனால் என்பது இப்போது தெரிகிறது” என்றான்..

“தேங்க்ஸ் பார் யுவர் காம்ளிமென்ட்.. இப்போது நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..?”

“பை தி வே மிஸ் வித்யா.. உங்களுக்கு எங்கள் குடும்ப விசயங்கள் அனைத்தும் தெரிந்திருக்கிறது.. பிரகாஷ், பூர்ணிமா மேல் உயிரையே வைத்து இருக்கிறான்..”

“பூர்ணிமாவும் அப்படித்தான்..” என்றாள் வித்யா.. நரேந்திரன் பரபரப்புடன் அவளை நோக்கி..

“வெல்.. அது புரிகிறதல்லவா..” என்றான் குதுகலத்துடன்..

“நன்றாகவே புரியும்.. பூர்ணிமா என் உயிர்தோழி..”

“அப்படியானால் அவள் வாழ்க்கை சீராக நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்..”

“என்ன செய்ய வேண்டும் சார்..” என்று மனப்பூர்வமாக கேட்டாள் வித்யா..

“பூர்ணிமாவிடம் நீங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும்..”

“என்னவென்று..?”

“எங்கள் குடும்ப கௌரவமே பிரகாஷ்-பூர்ணிமா திருமணத்தில் அடங்கியிருக்கிறது என்பதை அவளுக்குப் புரியவைக்க வேண்டும்..”

“எப்படி..? இல்லை.. எப்படியென்று எனக்குப் புரிய வில்லை சார்… அவள் திருமணத்தை தள்ளிப் போடுவதற்கும் உங்கள் குடும்ப கௌரவத்துக்கும் என்ன சம்பந்தம்..? இது எனக்கே புரியவில்லை.. எனக்குப் புரிந்தால்தானே அவளுக்குப் புரிய வைக்க முடியும்..?”

நரேந்திரன் நிதானமாக அவளை நேருக்கு நேராய் கண்களை ஊடுறுவிப் பார்த்தான்.. வித்யா விழிகளை விலக்கிக் கொள்ளவேயில்லை.. நரேந்திரன் முகத்தில் மெலிதான எரிச்சல் தென்பட்டது..

“வித்யா முதலில் எனக்கு ஓர் உண்மை தெரிய வேண்டும்..”

“என்ன உண்மை சார்..?”

“நீங்கள் பூர்ணிமாவின் செயல்தான் சரியென்ற முடிவில் இருக்கிறீர்களா..?” அவன் பார்வை அவளை துளைத்தது.. அவள் அசரவில்லை.. உணர்ச்சிகளைத் துடைத்த முகத்துடன்..

“தவறென்று நினைக்கவில்லை சார்…” என்றாள் தெளிவான குரலில்..

“ஸ்ஸ்.. வித்யா.. அவள் சிறு குழந்தை.. எங்கள் குடும்பப் பெண்ணை நிச்சயம் செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணக்க விட்டு விடுவது எங்கள் குடும்ப கௌரவத்தை பாதிக்கும் வித்யா..”

“அப்படியென்றால் அவள் கேட்பதை நீங்கள் செய்ய வேண்டியது தானே..?” என்றாள் வித்யா கடலைப் பார்த்த படி மனதை அடக்கியபடி..

“அவள் கேட்பது என்ன நகையா.. புடவையா.. நான் உடனே செய்து முடிக்க..” என்று சலித்துக் கொண்டான் நரேந்திரன்..

“ம்ம்.. வேறு என்ன கேட்கிறாள்..?”

“ஏன் உங்களுக்குத் தெரியாதா..? இத்தனை தெரிந்த உங்களுக்கு அவள் என்ன கேட்கிறாள் என்று தெரியாதா..? அதை உங்கள் ஆருயிர் தோழி உங்களிம் சொல்லவில்லையா..?”

“உங்கள் வாயால் கேட்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..”

நரேந்திரன் நிதானமாய் அவளைப் பார்த்தான்.. பின் தன் சட்டைப் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை வெளியில் எடுத்தான்..

“இந்தக் குளிருக்கும் டென்சனுக்கும் எனக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.. நான் சிகரெட் பிடிப்பதில் உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லையே..” என்றவாறு அவள் மறுக்க மாட்டாள் என்ற நிச்சயத்துடன் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளப் போனான்..

“ஆமாம்.. ஆட்சேபணை இருக்கிறது..” என்று கோபத்துடன் பதில் சொன்னாள் வித்யா..

“என்ன..” அதிர்ச்சியில் அவன் வாயிலிருந்த சிகரெட் கீழே விழுந்தது.. எவ்வளவு கடுமையாகப் பேசுகிறாள்..? அதுவும் அவனிடம்..? சினத்துடன் அவன் முறைப்பதை லட்சியம் செய்யாமல்..

“எனக்கு சிகரெட் பிடித்தால் பிடிக்காது.. அவர்களுடன் பேசுவதை கூடுமானவரை தவிர்த்து விடுவேன்.. என்முன் சிகரெட் பிடித்துக்கொண்டே என்னிடம் பேசுவதை எனக்குச் செய்யும் அவமானமாகக் கருதுகிறேன்.. ஸோ.. என்னோடு பேச வேண்டுமானால் சிகரெட்டை அவாய்ட் பண்ணுங்கள்.. இல்லையென்றால் நான் எழுந்து போய் விடுவேன்..” என்றாள் கறார் குரலில்..

“எனக்குக் குளிர்கிறதே..”

“எனக்கும்தான் குளிர்கிறது..”

அவன் கோபத்துடன் சிகரெட் பாக்கெட்டை தூர விட்டெறிந்தான்.. அவள் அவன் கோபத்தை அலட்சியம் செய்து உதிக்கும் சூரியனின் உதயக் கதிர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

“லுக் மிஸ் வித்யா.. என்னோடு யாரும் இப்படிப் பேசியதில்லை..”

“நானும் வேறு ஆண்களிடம் இவ்வாறு உட்கார்ந்து பேசியதில்லை.. பிடிக்கவில்லையென்றால் பட்டென்று எழுந்து போய் விடுவேன்.. நீங்கள் பூர்ணிமாவின் அண்ணன் என்பதால் நீங்கள் கூப்பிட்ட இடத்திற்கு வந்து உங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்..”

அவள் மனம் ‘பொய்’ என்றது.. ‘பூர்ணிமாவின் மற்ற மூன்று அண்ணன்களில் எவரேனும் வந்து அழைத்திருந்தால் அந்த அழைப்பை நீ ஏற்றிருப்பாயா..?’ என்று கேலி செய்தது.. அவள் ‘பொறு மனமே’ என்று அதை அடக்கினாள்.. நரேந்திரன் முகம் பார்த்து..

“நேரமாகிறது.. நான் நேற்று மாலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.. சொல்ல வந்ததை சீக்கிரம் சொன்னீர் களானால் வீட்டிற்கு சீக்கிரம் போய்விடுவேன்..” என்றாள்..

“இன்று ஞாயிறுதானே..? காலேஜ் இல்லையே..” என்றவன் எழுந்து தள்ளுவண்டியில் காபி விற்றுக் கொண்டிருந்தவனிடம் இரண்டு பிளாஸ்டிக் கப்புகளில் சூடான காபி வாங்கிக் கொண்டு வந்து ஒன்றை அவளிடம் நீட்டினான்.. அவனுடைய கோபம் இப்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது.. மனதில் இருப்பதை நேருக்கு நேராய் பேசிவிடும் அவளது கண்டிப்பான குணம் அவனை இப்போது மிகவும் கவர்ந்து விட்டிருந்தது..

“வாங்கிக்கங்க.. சிகரெட்தான் பிடிக்கக் கூடாது.. காபி குடிக்கலாம் இல்லையா..?” என்றான் புன்னகையுடன்.. அது அவளையும் தொற்றிக் கொள்ள வாங்கிக் கொண்டாள்.. ஒரு வாய் குடித்தவுடன் கொஞ்சம் தெம்பு வந்தது.. ரசித்து காபி குடித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடி முகம் மென்மையுற..

“எப்படி பசி தாங்குகிறீர்கள்..” என்று கேட்டான்..

“பழகிவிட்டது..” என்று அலட்சியமாய் பதில் சொன்னாள் அவள்..

“ஆபிஸில் யாரையாவது அனுப்பி ஏதேனும் வாங்கிச் சாப்பிடலாமே..”

“நடுராத்திரியில் என்ன கிடைக்கும்..?”

“அப்புறம் என்ன தான் செய்வீர்கள்..?”

“எப்போதும் வீட்டிலிருந்து ஏதாவது டிபன் டப்பாவில் வைத்து எடுத்துப் போய்விடுவேன்.. நேற்று கொண்டு போக மறந்து விட்டேன்..”

“என்னால்தானே..” என்று அவன் குற்ற உணர்ச்சி யுடன் கேட்டான்.. அந்தக் கேள்வி அவள் மனதைத் தாக்கியது.. நிமிர்ந்து கடல் காற்றில் தலைமுடி அலைபாய அந்த அதிகாலை நேரத்தில் கம்பீரமும் ஆண்மையும் ததும்பும் தோற்றத்துடன் இருந்த அவனையே பார்த்தாள்.. மனம் ‘ஆமாம் உன்னால்தான்..’ என்று சொல்லத் துடித்தது.

‘உன்னால்தான். உள்ளம் முழுவதும் நிரம்பியிருந்த உன்னை நேரில் கண்ட ஆனந்த அதிர்ச்சியில்தான்.. நான் உணவை எடுத்துக் கொள்ள மறந்துபோனேன்..’ என்ற உண்மையைச் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள் வித்யா..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link