Chapter 08

0Shares

நதியோரம் நடந்தபோது

நத்தையொன்று மெல்லப்போகும்..

வித்தையான முகம்காட்டி வினயமாக கதை கேட்கும்

   சத்தமொன்று கேட்டுவிட்டால் சடுதியாக கூடில் மறையும்

      …நதியோரம் நான் நடந்த போது…

‘நீ யாரென்று நேரில் பார்க்காமலே அறிந்தவள் நான்.. நான் யாரென்று உனக்குத்தான் தெரியாது.. தெரியப்படுத்தவும் மாட்டேன்.. உன் போராட்டத்தின் தீரத்தில் என் மனதைப் பறி கொடுத்துவிட்டேன்.. உன் முகம் பார்த்து வாழ மனம் துடிக்கிறேன்.. ஆனால் யார் மேல் யார் காதல் கொள்வது..? வைரத்தால் இழைத்த ஆடைகளை அணியும் குடும்பத்தைச் சேர்ந்தவன் நீ.. வெள்ளியில் ஒரு கொலுசை வாங்கக்கூட பணம் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளவள் நான்.. உன்னைக் காதலிப்பது உனக்கே உனக்காக என்றா இந்த உலகம் சொல்லும்..? உன் பணத்திற்காக நான் பறக்கிறேன் என்றல்லவா பழிக்கும்..? என் காதல் தூய்மையானது.. உயர்வானது.. உன்னதமானது.. உன்னை அடைந்தால்தான் என் காதல் ஜெயிக்குமா..? உன்னை நினைத்துக் கொண்டே வாழ்ந்தாலும் என் காதல் ஜெயிக்கும்..!’

அடுத்த கணத்தில் மனத்தை அடக்கி அமைதியாக நிமிர்ந்து பார்த்தாள் வித்யா..

“நீங்கள் என்ன பண்ணீனீர்கள்..? என்னை சாப்பாட்டை எடுத்துக் கொள்ள மறந்து போகும்படி நீங்களா சொன்னீர்கள்..?” என்று சிரித்துக் கொண்டே வினவினாள் வித்யா..

“நான் உங்களை பூர்ணிமான்னு நினைத்து..” சொல்ல முடியாமல் தடுமாறினான் நரேந்திரன்.. அந்த நினைவில் மனம் நிறைந்த வித்யா..

“தெரியாமல்தானே செய்தீர்கள்.. விட்டு விடுங்கள்.. நாம் பேச வந்த விசயத்தைப் பேசுவோம்..” என்று கூறினாள்.

“வித்யா.. பூர்ணிமா நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று என்னை நிர்ப்பந்திக்கிறாள்..”

“அப்படியா.. எனக்கு அப்படித் தோன்றவில்லையே.. அவள் கல்யாணத்தை மறுக்கிறாள் என்று தான் தோன்றுகிறது..”

“வித்யா உங்களுக்கு எல்லாம் தெரியும்.. இரண்டும் ஒன்றுதானே.. என் திருமணத்திற்கு உன் மனைவியோடு வந்து தாரை வார்த்துக் கொடுன்னு சொல்வது நிர்ப்பந்தம் இல்லையா..?”

“உங்கள் மேல் அவளுக்கிருக்கும் அக்கறை என்று கூடச் சொல்லலாமே..”

“குட்.. எனக்குத் தேவையில்லாததை என்மேல் திணிக்கப் பார்ப்பது அக்கறையா..?”

“தேவையில்லை என்று தோன்றும் ஒன்றிற்காகவா.. ஒன்றுக்கு இரண்டு முறை கமிட் ஆனீர்கள்..?”

“எனக்குப் புரிகிற மாதிரிப் பேசுகிறீர்களா..?”

“முதலில் கார்த்திகாயினிதேவியின் மேல் காதல்.. அடுத்து மீனலோசனி தேவியுடனான கல்யாண ஒப்பந்தம்.. இரண்டும் உங்கள் சம்மதத்தோடுதானே நடந்தது..?”

“அதைப்பற்றி இனிப் பேச வேண்டாம் வித்யா.. இரண்டு பேருமே மணமானவர்கள்.. குழந்தைகள் இருக்கிறார்கள்.. அதிலும் கார்த்திகாவைத்தான் நான் காதலித்தேன்.. மீனலோசனி என் மாமாவின் பெண்.. உறவுக்காரப் பெண் என்ற பாசம் மட்டும்தான்.. திருமணம் என்று ஒன்று செய்தாக வேண்டுமே என்ற கட்டாயத்தால் நான் சரி சொன்னேன்.. எப்போது அவள் என் தம்பியின் மனைவியாகி விட்டாளோ அப்போதிருந்து அவள் என் தங்கை..”

வித்யாவிற்கு அவனை நினைத்து அவன் கண்ணியத்தை நினைத்துப் பெருமையாக இருந்தது.. எவ்வளவு உயர்ந்த மனம் இவனுக்கு..?

“சரி.. கல்யாணம் என்பது தேவையான ஒன்று தானே.. அதை ஏன் வெறுத்து ஒதுக்க வேண்டும்..? நீங்கள் தனிமரமாக நின்று கொண்டிருக்கும் போது பூர்ணிமாதான் மனம் ஒப்பி எப்படி மணம் செய்து கொள்வாள்..?”

“அதற்காக ஒரு பெண்ணின் வாழ்வை நான் வீணடிப்பதா..?”

“புரியவில்லை.. புதிர்போல் பேசாமல் தெளிவாய் பேசுங்கள்.. யார் வாழ்வு பாழாகும் என்கிறீர்கள்..?”

“நான் மணந்து கொண்டால்.. என்னை மணந்து கொண்ட பெண்ணின் வாழ்வு வீணாகும்..”

நிதானமாய் தெளிவாய் இந்த வார்த்தைகளை உச்சரித்தான் நரேந்திரன்.. வித்யாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.. இவனுக்கென்ன பைத்தியமா..? இவன் கண்ணசைத்தால் வரிசையில் நின்று இவனை மணக்க பெண்கள் காத்திருப்பார்கள்.. அதற்கான வசதியும்.. அழகும்.. படிப்பும்.. பாரம்பர்யமும்.. தகுதியும் உடையவன்.. இவனை மணப்பதால் ஒரு பெண்ணின் வாழ்வு மேம்படத்தானே செய்யும்.. வீணாக எப்படிப் போகும்..

நினைத்ததை வாய்விட்டுக் கூறினாள் அவள்..

நரேந்திரன் கனிவாகச் சிரித்தான்.. அந்தச் சிரிப்பில் நன்றி இருந்தது.. நட்போடு அவளை நோக்கி..

“நீங்களும் பூர்ணிமா போலவே பேசுகிறீர்கள்.. என்மேல் உள்ள உயர்ந்த அபிப்ராயத்திற்கு நன்றி.. ஆனால் வித்யா.. நான் பூர்ணிமாவை விடப் பதினைந்து வயதுப் பெரியவன்.. இப்போது பூர்ணிமாவின் வயது இருபத்தி ஒன்று.. உங்கள் வயது கூட அதேதான்.. இல்லையா..?”

“ஆமாம்.. ஆனால் முப்பத்தாறு வயது ஆண்களுக்கு அதிக வயதென்று எனக்குத் தோன்றவில்லையே.. இப்போதெல்லாம் பெண்களே முப்பதியிரண்டு வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள் தெரியுமா..?”

“அது மட்டும் காரணமில்லை வித்யா.. எனக்கு பெண் பார்த்தால் எந்த மாதிரிப் பெண்கள் பார்ப்பார்கள்.. நீங்களே சொல்லுங்கள்..”

“ஏன் அழகான.. படித்த.. நல்ல குணமுள்ள.. நல்ல குடும்பத்துப் பெண்ணாகப் பார்ப்பார்கள்.. நீங்கள் ராஜ பரம்பரையென்பதால் அதையும் சேர்த்துப் பார்ப்பார்கள்.. அதற்கு என்ன..?”

“நான் நல்ல குணமான.. குடும்பப் பெண்ணை மணந்து கொள்ளத் தகுதியானவன் இல்லை வித்யா.. ஏனென்றால்.. ஏனென்றால்.. நான் கல்யாணமாகாதவன் தான்.. ஆனால் பிரம்மச்சாரியில்லை..”

நரேந்திரன் அவள் விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.. வித்யா மனதில் அடிவாங்கினாள்.. அவன் சொல்வதன் அர்த்தம் புரிந்தது.. ஆனால் அது எப்படி என்று.. அதைப்பற்றி நினைத்துக்கூட பார்த்திராத வித்யாவுக்கு பிடிபடவில்லை.. இந்த நிலைமையில் இந்த இடத்தில் என்ன பேசுவது என்று புரியாமல் தர்மசங்கடமடைந்தாள் அவள்.. திரைப்படங்களில் கூட விரசமான காட்சிகளைப் பார்க்க விரும்பமாட்டாள்.. இப்போது அவள் மனதுக்கு இனியவன் தன் மனதில் இருப்பதை அவளிடம் கொட்டுகிறான்.. கசடு படிந்த தன் மறு பக்கத்தை அவன் முன்பின் அறியாத பெண்ணிடம் காட்டுகிறான்.. எதற்காக.. ஒரு பெண்ணின் வாழ்வை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காக.. கரைபடிந்த தன் நடத்தையைப் பற்றி.. கறைபடியாத தூய உள்ளத்தோடு எடுத்துரைத்தான் அவன்.. அந்த நிமிடம் அவள் அவனது தோழியானாள்.. மனம் விட்டுப் பேசினான் அவன்.. அவன் மனம் புண்படாமல் கேட்டுக் கொண்டாள் அவள்..

“யோசித்துப் பாருங்கள் வித்யா.. காதலித்த கார்த்திகாயினி என் நெருக்கடியான நேரத்தில் என்னைக் கைவிட்டாள்.. காதலுக்காக என் குடும்பத்தைக் கைவிட என் மனம் இடம் கொடுக்கவில்லை.. காதலுக்காக என்னுடன் வந்து என் கஷ்டங்களில் பங்கேற்க அவள் விரும்பவில்லை.. பொடிப்பொடியாக நான் நொறுங்கிப் போனேன்.. உடைந்த உள்ளத்தை நினைக்கக் கூட நேரமில்லாமல் என் குடும்பத் தொழில் என்னை அழுத்தியது.. எல்லாம் சீரானவுடன் என் மனதில் கார்த்திகாவின் நினைவு தலை தூக்கியது.. அதை மறக்கவே கல்யாணத்திற்கு சம்மதித்தேன்.. ஆனால் நிலைமை மாறிவிட்டது..”

வித்யாவுக்கு கதறி அழ வேண்டும் போல் இருந்தது.. ஒருவேளை அவன் காலாகாலத்தில் கல்யாண பந்தத்தில் சிக்குண்டிருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காதே.. நரேந்திரன் தொடர்ந்தான்..

“அப்புறம் வீட்டில் தம்பிகள்.. தங்கை திருமணங்கள்.. குடும்ப விழாக்கள்.. அவரவருக்கு குடும்பம் ஏற்பட்டு விட நான் தனிமைப்பட்டுப் போனேன்..”

வித்யா கண் கலங்கினாள்.. அவன் முடிகோதத் துடித்த கைகளைக் கட்டிப் போட்டாள்.. அவன் பேசிக் கொண்டிருந்தான்..

“பூர்ணிமாவும் வீட்டை விட்டு சென்னைக்கு வந்து விட்டாள்.. அப்போதுதான் மதுப் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.. அதற்காக வெளியூர் சென்று ஹோட்டல்களில் தங்குவது என் வழக்கம்.. போதைப் பழக்கத்தை தொடர்ந்து..” நரேந்திரன் பேச முடியாமல் நிறுத்தினான்.. வித்யா மௌனமாக இருந்தாள்..

“இப்போது சொல்லுங்கள் வித்யா.. என் பாதை மாறி விட்டது.. இனி என்னால் நேர்வழியில் போக முடியாது.. எனவே திருமணத்தை தவிர்க்க முடிவு செய்துவிட்டேன்.. இதை எப்படி என் தங்கையின் முகம் பார்த்துச் சொல்வேன்.. ஒரு அண்ணன் தங்கையிடம் பேசும் விசயமா இது..? என்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்..”

“இதில் நான் என்ன செய்ய முடியும் என்றுதான் புரியவ்லலை..”

“முடியும்.. நீங்கள் மனது வைத்தால் முடியும்..”

“எப்படி..?”

“நீங்கள் என் வருங்கால மனைவியாக நடிக்க வேண்டும்..”

“என்னது..?”

வித்யா அதிர்ந்து நிமிர்ந்தாள்.. பசி வயிற்றைக் கிள்ளியது.. சூரியன் மேலே எழுந்து வெயில் சுள்ளென்று உறைக்க ஆரம்பித்திருந்தது.. சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஆரம்பித்திருந்தது.. இவை எதுவும் அவள் மனதில் பதிவாகவில்லை.. அவன் கூறிய வார்த்தைகள் மட்டுமே அவள் காதுகளில் எதிரொலித்தது.. நம்ப முடியாமல் கண்களை விரித்தவாறு இமைகளைக் கொட்டியவள்..

“என்ன சொன்னீர்கள்.. திரும்பவும் சொல்லுங்கள்..” என்று கேட்டாள்.. அவள் முகத்தையே பார்த்தவாறு கூறினான் அவன்..

“என் வருங்கால மனைவியாக நடிக்க வேண்டும் என்று சொன்னேன்..”

“வாட்.. என்னைப் பார்த்து எப்படி நீங்கள் இந்த மாதிரி சொல்லலாம்..”

“என் வருங்கால மனைவியாக வர வேண்டுமென்று சொல்லவில்லையே.. நடிக்க வேண்டும் என்றுதானே சொன்னேன்..”

‘நீ முதலாவதைச் சொல்லியிருந்தால் மறுக்காமல் உன்னைப் பின் தொடர்ந்து வருவேனே.. என்னை நடிக்க அல்லவா சொல்கிறாய்..’ என்று மனதிற்குள் பரிதவித்தவள் வெளியே கேட்டாள்..

“என்னைப் பார்த்தால் நடிகை போலவா தோன்றுகிறது..?”

“இல்லை.. என் தங்கைக்கு மட்டுமல்ல எனக்கும் நம்பிக்கையான தோழியாகத் தோன்றுகிறது..”

“தோழியிடம் மனம் விட்டுப் பேசலாம்.. நீங்கள் பேசினீர்கள்.. நான் கேட்டுக் கொண்டேன்.. அதுதான் எனக்குக் கௌரவம்..”

“இப்போது மட்டுமல்ல எப்போதுமே உங்களுக்கு கௌரவக் குறைவு ஏற்பட நான் விட மாட்டேன்.. தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.. பூர்ணிமாவிடம் எனக்குத் தொழிலில் வெளியில் சொல்ல முடியாத கஷ்டம்.. அதை சரி செய்து கொள்ள குறைந்தது ஒரு வருடம் ஆகும்.. அது சரியானதும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லப் போகிறேன்..”

“அப்போதே நானும் கல்யாணம் செய்து கொள்கிறேனென்று அவள் சொல்வாளே..”

“ஆமாம்.. அப்படித்தான் சொல்வாள்.. அப்போது நான் சொல்வேன்.. உனக்குப் பிடித்த பெண்ணையே, எனக்கும் பிடித்திருக்கிறது.. வித்யாவை நான் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் ‘ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாமா..’ என்று அவளிடம் கேட்டேன் அவள் சம்மதித்துவிட்டாள் என்று சொல்வேன்..”

“ஐயையோ.. என்ன சார் இது..?”

“வேறு வழியில்லை வித்யா.. அவள் உங்களிடம் வந்து கேட்பாள்.. நீங்கள் ஆமாம் என்று சொல்லி விடுங்கள்.. அப்புறம் அவளை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிடலாம்..”

வித்யா யோசனையில் ஆழ்ந்தாள்..

‘பூர்ணிமா பிரகாஷைக் காதலிக்கிறாள்.. பிரகாஷும் அப்படியே.. வித்யாவை தாய்க்கும் மேலாக பாசத்துடன் அரவணைத்துக் கொண்டவள் பூர்ணிமா.. இந்த நான்கு வருடங்களாக வித்யா தன் தாய் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பதைப் போல் பாதுகாப்பாய் வசித்து வருவதற்கு பூர்ணிமாதான் காரணம்.. வீடில்லாத விடுதிவாசிக்கு வீட்டில் இடம் கொடுத்தாள்.. தாயில்லாத பெண்ணுக்கு தாயானாள்.. அவள் வாழ்வின் துயர் துடைக்க இந்தப் பொய்யைச் சொன்னால் என்ன..?’

வித்யா நரேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள்..

“சரி சார்.. நீங்கள் பூர்ணிமாவிடம் பேசுங்கள்..”

“உண்மையாகவா ஒத்துக் கொண்டீர்கள்.. நான் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று பயந்து போனேன்.. நன்றி வித்யா நன்றி..”

நரேந்திரன் உணர்ச்சி மிகுதியால் அவள் இரு கரங்களையும் தன் கரங்களால் இறுகப் பற்றிக் கொண்டான்.. வித்யா நம்ப முடியாமல் சிலிர்த்துப் போனாள்.. முதன் முறையாக ஒரு ஆணின்.. அதுவும் அவள் உயிராய் காதலிக்கும் ஆண்மகனின் ஸ்பரிசம் உணர்ந்தவள் உடல் நடுங்கியது.. அதையுணர்ந்தவனாய் அவள் கரங்களை அவசரமாய் விடுவித்தவன்..

“ஐ ஆம் ஸாரி.. உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்..” என்றான் குற்றம் செய்த பாவனையில்..

வித்யாவுக்கு மனம் வலித்தது..

‘குற்றம் செய்தது நீயல்ல.. என் விதி..’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவள் எழுந்து கொண்டாள்..

“போகலாமா.. மணி ஒன்பதாகிவிட்டது.. பூர்ணிமாவும்.. ஆன்ட்டியும் கவலைப்பட்டு விடுவார்கள்.. நீங்கள் பேச வேண்டும் என்று சொன்னதால் செல்லை ஸ்விட்ச் ஆப் பண்ணிவிட்டேன்.. அதற்கு மேல் கவலைப் படுவார்கள்..”

“ஓ.. ஆமாம்.. ஆமாம்.. போவோம்..”

அவன் காரை செலுத்த சற்றுப் பொறுத்து வித்யா ஸ்கூட்டியில் தொடர்ந்தாள்.. தாமதமாக வந்ததற்கு பூர்ணிமாவிடம் டோஸ் வாங்கிக் கட்டிக் கொண்டவள்.. கண்ணம்மா செய்து வைத்திருந்த பூரி பொங்கலை ஒரு பிடி பிடித்துவிட்டு அறைக்குள் அடைக்கலம் புகுந்து உறங்கிப் போனாள்.. சற்று நேரத்திலேயே கதவு தட்டப் பட்டது.. எழுந்து திறந்தாள்..

கண்களில் சந்தேகப் பார்வையோடு பூர்ணிமா நின்றிருந்தாள்..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link