Chapter 09
நதியோரம் நடந்தபோது
நாணல்களை நதியோரம் பார்த்தேன்..
நீரோடு ஒன்றிப் போகும்
நிலை மாறா தன்மைகொள்ளும்
…நதியோரம் நான் நடந்த போது…
கண்களை கசக்கி விட்டுக் கொண்டு வித்யா கேட்டாள்..
“என்னடி தூங்கவிடாமல் டிஸ்டர்ப் பண்றே..?”
“ஏன் இப்போதுதான் தூக்கம் வருகிறதா..? காலையில் ஐந்தரை மணிக்கு ஆபீஸ் முடிந்தவுடன் ஆறுக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவே.. இன்றைக்கு ஒன்பதரைக்கு வந்தாயே.. அப்போது தூக்கம் வரவில்லையா..?”
“ஊஹூம்.. பசிதான் வந்தது..”
பூர்ணிமா இளகிப் போனாள்..
“பசியோடு என் அண்ணன் கூப்பிட்டார்ன்னு பின்னாடியே போய் பீச் வெளியில் உட்கார்ந்து இருந்தாயா..?” என்று கடிந்து கொண்டாள்.. வித்யாவிற்கு ‘அப்பாடி’ என்றிருந்தது..
‘ஆக பீச்சுக்குப் போனதை மறைக்கவில்லை.. இதற்குப் பொய் சொல்ல வேண்டாம்..’
“என்னடி செய்வது..? திடீர்ன்னு எதிரில் வந்து நிற்கிறார்.. பேசணும்னு வேற சொல்கிறார்..” என்று உண்மையைச் சொன்னாள்..
“வித்யா.. நீ பொய் சொல்ல மாட்டாய்..” பூர்ணிமாவின் விழி கொக்கி போட்டது.. வித்யா சுதாரித்தாள்..
“ஆமாம்..”
“இப்போது என் முகத்தைப் பார்த்துச் சொல்.. அண்ணன் சொல்வது உண்மையா..?”
மீண்டும் ‘அப்பாடி’ என்று இருந்தது வித்யாவிற்கு அண்ணன் என்ன சொன்னார் என்று சொல்லிக் கேட்க வில்லையே..
“உண்மைதான்..”
“நீ அண்ணனை விரும்புகிறாயா..?”
இப்போதும் தவிப்பு இல்லை.. அதுதானே உண்மை..?
“ஆமாம்..” என்றாள் வித்யா..
“வித்யா..” என்று பூர்ணிமா அவளைக் கட்டிக் கொண்டாள்.. வித்யா மௌனமாய் நின்றாள்..
“அண்ணன் சொன்னபோது நான் நம்பவேயில்லைடி அவருக்குத் தொழிலில் ஏதோ பிரச்சனையாம்.. ஒரு வருடம் கழித்துத்தான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தாராம்.. அதைச் சொல்லத்தான் என்னைத் தேடி வந்தாராம்.. வந்த இடத்தில் உன்னைப் பார்த்தாரம்.. பார்த்தவுடனே பிடித்து விட்டதாம்.. மணந்தால் உன்னைத் தான் மணப்பேன் என்று முடிவே பண்ணிவிட்டாராம்..” பூர்ணிமா உற்சாகமாய் நரேந்திரன் விட்ட சரடை சொல்லிக் கொண்டிருக்க வித்யாவின் இயத்தில் ரத்தம் வடிந்தது.. தோழிக்கு முகம் காட்டாமல் புறமுதுகு காட்டி ஜன்னலோரம் தோட்டத்தைப் பார்க்கும் சாக்கில் சென்று நின்று கொண்டாள்.. அங்கே உலவிக் கொண்டிருந்த நரேந்திரன் அவளைக் கண்டதும் கையிலிருந்த சிகரெட்டை அவசரமாய் காலில் போட்டு நசுக்கினான்.. அதே நேரம் வித்யாவை பின்னோடு அணைத்துக் கொண்ட பூர்ணிமா ஜன்னல் வழி நரேந்திரனைப் பார்த்தவள்..
“கள்ளி.. நான் இங்கே நிற்கும்போதே என் அண்ணனை சைட் அடிக்கிறாயா..? அண்ணன் சொன்னது உண்மைதான் போல.. பூர்ணி நான் கேட்டவுடன் உன் தோழி சம்மதித்து விட்டாள்ன்னார்.. நான் நம்பவில்லை.. வித்யா.. ஒரு வருடம் காத்திருக்கிறேன்னு சொன்னாயாமே.. இப்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா..?” என்று ஆர்ப்பரித்தாள்..
பூர்ணிமாவின் முகத்தில் மத்தாப்பூ ஒளிர்ந்தது.. இத்தனை வருடங்களில் இத்தனை மகிழ்வாய் தோழியை அவள் பார்த்ததே இல்லை.. வித்யாவின் மனம் லேசானது.. இந்தப் புன்னகைக்காக எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாமே.. பூர்ணிமாவின் கன்னம் தட்டிச் சிரித்தவள்.
“இப்போது சிரிப்பது போல் எப்போதும் நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்டி..” என்றாள் நெகிழ்ச்சியுடன்..
“சிரிக்காமலென்ன வித்யா.. என் அண்ணனுக்கு பொருத்தமான பெண் இந்த உலகிலேயே நீ ஒருத்திதான்னு நான் நினைத்துக் கொண்டிருந்தது இப்போது நடக்கப் போகிறதே..” என்று அவள் கூற வித்யாவுக்கு தூக்கி வாரிப் போட்டது..
“என்னடி சொல்கிறாய்..?”
“ஆமாம் வித்யா.. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் நீ பெரிய அண்ணாவைப் பற்றிப் பேசும் போதெல்லாம் நீயே என் பெரிய அண்ணனுக்கு மனைவியாக வேண்டுமென்று மனம் துடிக்கும்.. ஆனால் உன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் பேச எனக்குப் பயமாக இருந்தது.. என் அண்ணனைப் பார்த்தியா.. வந்தார்.. உன்னைப் பார்த்தார்.. நினைத்ததை நடத்தி முடித்தார்..” பூர்ணிமா பெருமையாக நகைத்தாள்.. வித்யாவால் சேர்ந்து நகைக்க முடியவில்லை.. ஒத்த மனதுடைய தோழிகளின் மனமும் ஒன்று போலதான் நினைத்திருக்கிறது.. ஆனால் வித்யாவின் துரதிர்ஷ்டம் வேறு ஒரு வழியை காட்டி இருக்கிறதே..
“சரி கீழே வா.. சாப்பிடலாம்..”
“இப்போதேவா..?”
“இப்போது மணி என்ன தெரியுமா இரண்டு.. மதியம் சாப்பிட வேண்டாமா..?”
தோழிகள் இருவரும் படியிறங்கிப் போனார்கள்.. நரேந்திரன் வந்துவிட பேசிக் கொண்டே சாப்பிட்டனர்..
மதிய உணவுக்குப் பின் பூர்ணிமாவின் அறைக்கு வந்த நரேந்திரன்.. வித்யாவையும் அவள் அறைக்கு அழைத்தான்.. அவள் வரவும் அங்கிருந்த சோபாக்களில் அமர்ந்தனர்.. பூர்ணிமா அறைக் கதவை அடைத்துவிட்டு வந்தாள்..
“பூர்ணிமா.. நான் ஊருக்குப் போனவுடன் பிரகாசின் வீட்டில் இருந்து தகவல் கேட்டு விடுவார்கள்.. அடுத்த மாதத்திலேயே முகூர்த்தம் வைத்து விடச் சொல்லி விடலாமா..?”
“அண்ணா.. என் படிப்பு முடிந்துவிட்டது.. பைனல் இயர் பரீட்சைதான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.. இந்த மாதக் கடைசியில் நான் சென்னையை விட்டுக் கிளம்பி விடலாம்..”
“அப்போ.. அடுத்த மாதமே முகூர்த்தம் வைத்துவிட லாம்ன்னு சொல்லிவிடுகிறேன்.. அப்பா.. எவ்வளவு மனநிம்மதியாக இருக்கிறது தெரியுமா..? அம்மா கேட்டால் சந்தோசப்படுவார்கள்..”
“பொறுங்கள் அண்ணா.. வித்யாவைப் பற்றி யோசிக்க வேண்டாமா..?”
“அவளைப் பற்றி என்ன யோசிக்க..?” என்று குழம்பினான் நரேந்திரன்..
“பூர்ணி.. டோன்ட் ஒர்ரி.. எனக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்திருப்பது உனக்குத் தெரியுமில்லை.. ரிசல்ட் வரும்வரை இந்த வேலை.. வந்தபின் ரிசைன் பண்ணிவிட்டு அந்த வேலையில் ஜாயின் பண்ணிவிடுவேன்.. லேடிஸ் ஹாஸ்டலில் ஏற்கெனவே இடம் பார்த்துவிட்டேன்..” என்றாள் வித்யா..
“என்னடி விளையாடுகிறாயா..? என் வருங்கால அண்ணி லேடிஸ் ஹாஸ்டலில் அநாதை போல் தங்குவதா..? எங்கேயோ கைகட்டி வேலை பார்ப்பதா..?” பூர்ணிமா பட படத்தாள்..
‘இது என்ன புது பூதம் கிளம்புகிறது..’ என்று திகைத்துப் போனாள் வித்யா.. நரேந்திரன் நிலையும் அதுதான்.. திணறிப் போனவனாய் வித்யாவைப் பார்த்தான்.. அவன் விழிகள் கெஞ்ச பூர்ணிமாவைப் பார்த்தாள் வித்யா..
“பூர்ணி.. என் படிப்பு வீணாகலாமா..? நான் வேலையில் ஜாயின் பண்ணியவுடன் அந்தப் பக்கம் டிரான்ஸ்பர் வாங்க முடியுமா என்று பார்க்கிறேன்..”
“எந்தப் பக்கம்..? எனக்கு ஏற்கெனவே காது குத்தியாகி விட்டது.. புதிதாய் நீ குத்தாதே.. நீ செலக்ட் ஆகியிருப்பது மல்ட்டி நேஷனல் கம்பெனி.. அதன் ஹெட் ஆபீஸ் நியுஸிலாந்தில் இருக்கிறது.. சென்னை.. பெங்களூர்.. மும்பை மூன்று இடங்களில் மட்டும்தான் இந்தியாவில் அதன் பிரான்ச் இருக்கிறது.. நீ வேலையில் சேர்ந்தவுடன் கொஞ்ச நாளிலேயே உன்னுடைய திறமைக்கு வெளிநாட்டிற்குப் பறந்து விடுவாய்.. அப்புறம் என் அண்ணன் திரும்பவும் தனிமரமாய் நிற்பார்.. பழைய குருடி கதவைத் திறடி கதைதான்..”
“இப்போதே எதற்கு இவ்வளவு கவலைப்படுகிறாய்.. முதலில் பரீட்சையைப் பற்றிக் கவலைப்படலாம்..”
“பரீட்சையைப் பற்றிக் கவலையா.. யாருக்கு.. உனக்கா..? ஏண்டி.. பரீட்சையை வைத்துக் கொண்டு லீவே போடாமல் நைட் டியூட்டிக்குப் போய் வருகிறாய்.. உனக்கு பரீட்சையைப் பற்றிக் கவலையா..?”
“இன்டர்வியூ அது இதென்று எல்லா லீவையும் எடுத்து விட்டேனே பூரணி.. அதனால்தான் லீவு போட முடியவில்லை.. அதனால் கவலையில்லைன்னு ஆகிவிடுமா..?”
“இப்போ நீ கவலைப்படவில்லைங்கிறது பிரச்சனை இல்லை வித்யா.. நீ மகாபுத்திசாலி.. யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கித்தான் பாஸ் பண்ணுவ.. ஆனால் பரீட்சை முடிந்தவுடன் நான் கிளம்பணும்னா நீயும் என்னுடன் கிளம்பிவரணும்..”
“அடிப்பாவி..”
“இதுக்கே அலறினால் எப்படிடி.. நான் பிரகாஷைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமானால் நீ செலக்ட் ஆன வேலையில் ஜாயின் பண்ணக்கூடாது.. இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையையும் விட்டுவிட வேண்டும்..”
“பூர்ணி.. இது ரொம்ப ஓவரா இருக்கு..” என்றாள் வித்யா..
“இல்லை கரெக்டாகத்தான் இருக்கு.. வித்யா.. நீ என்னை முட்டாளாக்க பார்க்கீறயோன்னு எனக்குள்ளே சந்தேகம் இருக்கு.. உண்மையிலேயே நீ அண்ணாவை லவ் பண்ணினால் அவர் எங்கே இருக்காரோ அங்கே தானே நீ இருக்க நினைக்கணும்.. அவர்தான் உன் வாழ்க்கைன்னா இந்த வேலைகள் உனக்கு எதுக்கு..? விட்டுவிட வேண்டியதுதானே..? அவரை விடவா உனக்கு வேலை பெரிது..”
வித்யா பொட்டில் அடிபட்டவளாய் நிமிர்ந்தாள்.. அவனைவிட அவளுக்கு எதுவும் பெரிதில்லைதான்.. ஆனால் அவன் பாதையே வேறாக இருக்கிறதே.. நரேந்திரனைப் பார்த்து ‘என்ன செய்வது’ என்று விழியால் கேட்டாள்.. நரேந்திரன் எழுந்து கொண்டான்..
“நான் நாளைக்குத்தான் ஊருக்குப் போவேன்.. போவதற்குள் ஒரு முடிவெடுக்கலாம்.. இப்போது நாளைய பரீட்சைக்குப் படியுங்கள்..” அவன் வெளியேறிவிட்டான்..
பூர்ணிமா எதையோ பேச முயல வித்யா புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டாள்.. மாலைக் காபி பலகாரம் முடித்த பின்னும் இருவரும் படிப்பில் மும்முரமாக இருக்க கண்ணம்மா மாடிக்கு வந்து அதட்டினாள்..
“மணி ஒன்பதாகப் போகுது.. காலாகாலத்தில் வயிற்றுக்குள் சாப்பாட்டைப் போட்டிங்கன்னாத்தானே படிக்க முடியும்.. வெறும் வயிறோடு எப்படிப் படிப்பீங்க..”
“வெறும் வயிறா.. சாயங்காலம் வயிற்றுக்குள்ள தள்ளிய உளுந்தவடையும்.. கேசரியும் கோவிச்சுக்காதா..?” என்று கிண்டலடித்தாலும் இருவரும் எழுந்து சாப்பிட வந்தனர்.
நரேந்திரன் வாயிற்புறம் தோட்டத்தில் இருந்தான்..
“அண்ணா எங்கே..?” என்று பூர்ணிமா கேட்டாள்..
“அதையேன் பாப்பா கேட்கிற.. மூனு மணி நேரமா ஐயா தோட்டத்திலேயே சேர் போட்டு உட்கார்ந்துக்கிட்டு யோசிக்கிறார்.. யோசிக்கிறார்.. அப்படி யோசிக்கிறார்.. நான் ஐந்து தடவை போய்க் கூப்பிட்டு விட்டேன்.. வரேன் சித்திங்கிறார்.. வர மாட்டேன்கிறார்.. எத்தனை பாக்கெட் சிகரெட் காலியோ.. சுற்றி ஒரே சிகரெட் துண்டுகளா கிடக்குது.. உடம்பைக் கெடுத்துக்கப் போறார்..” என்று கவலைப்பட்டாள் கண்ணம்மா..
வித்யாவின் மனம் பரிதாபப்பட்டது.. பிரச்சனையைத் தீர்க்க சிகரெட் பாக்கெட்டுகளை காலி செய்கிறான்.. பூர்ணிமா எழுந்து போய் தன் அண்ணனை அழைத்து வந்தாள்..
“உட்காருங்க அண்ணா.. சித்தி இன்றைக்கு என்ன ஸ்பெஷல்..”
“இடியாப்பம்.. தேங்காய்பால்.. குருமா..”
“சபாஷ் சித்தி.. அண்ணனுக்குப் பிடித்ததை சமைத்திருக்கிறீர்கள்..”
மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் பூர்ணிமா நரேந்திரனுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்க வித்யா எழுந்து கைகழுவச் சென்றாள்.. அதைக் கவனித்த நரேந்திரன் பூர்ணிமாவின் தட்டில் ஒரு இடியாப்பத்தை வைத்து..
“இதைச் சாப்பிட்டு முடி.. இளைத்துத் தெரிகிறாய்..” என்று மிரட்டல் போல் கூறிவிட்டு அவசரமாய் கைகழுவச் சென்றான்.. கை கழுவி திரும்பிய வித்யா அவன் மீது மோதிக் கொண்டாள்.. தன் ஒரு கரத்தால் அவள் தடுமாறாமல் பிடித்துக் கொண்ட நரேந்திரன்..
“பூர்ணிமா தூங்கியவுடன் மொட்டை மாடிக்கு வந்து விடுங்கள்.. பேசி முடிவு எடுக்க வேண்டும்..” என்றான்..
“இது வேறா..? ஏன் பால்கனியில் உட்கார்ந்து பேசினால் ஆகாதா..? மொட்டை மாடிக்கு எதற்குப் போக வேண்டும்..”
“நிச்சயமாய் கொஞ்சிக் குலாவ இல்லை.. என்னை நம்பலாம்.. பால்கனியில் என்றால் வாசலில் சதாசிவ பெரியப்பாவின் பார்வையில் பட்டு விடுவோம்.. இடையில் பூர்ணி எதற்காவது எழுந்து வந்தால்.. நாம் பேசுவதைக் கேட்டு விடுவாள்..”
அதற்குள் இடியாப்பத்தை காலி பண்ணிவிட்டு எழுந்து வந்த பூர்ணிமா அவர்கள் ரகசியம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்வாய் சிரித்தாள்.. ஒப்புக்கு பதிலுக்கு சிரித்த வித்யா அந்த இடத்தை விட்டு அகன்றாள்..
இரவு அறையை விட்டு வெளியே வந்து பூர்ணிமாவின் அறையைக் கடந்து ஹாலுக்கு வெளியேயிருந்த மாடிப் படிகளில் மொட்டை மாடிக்குப் போக பூனை போல் சத்தம் எழுப்பாமல் ஏறிய வித்யாவிற்கு சிரிப்பு வந்தது.. காதலே இல்லை.. ஆனால் காதலில் செய்கிற அத்தனை ரகசிய வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது.. மொட்டை மாடி இருட்டில் நரேந்திரன் நின்று கொண்டிருந்தான்..
Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.